Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - தாலப் பருவம் - பாடல் 6 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - தாலப் பருவம் - பாடல் 6 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - மா.க. காமாட்சிநாதன்

எளிய உரை: ஆனந்தபாரதி


தாலப் பருவம்:


பாடல் 6:

முன்னர்நி னைப்பது பின்னர்வி னைப்பய
னாகமு ளைத்திடுமால்
மொழிசெய லெல்லாம் அவரவர் வினையாய்
மூண்டெதிர் நின்றிடுமால்
நன்ன ருளத்தொரு பின்னம தில்லா
நம்பனை எண்ணிடுவோர்
ஞானிக ளாமவர் ஏவலி னால்வரு
ஞாலம் நடந்திடுமால்
உன்னிடும் உயிருடல் உளவகை ஏதஃ
தொன்றுதல் எவனெனவே
உன்னியு சாவுதல் நின்னிலை தருவதொ
ருயர்வழி யாமெனவே
தன்னிகர் தமிழ்கொடு சாற்றிடு பெரும!
தாலே தாலேலோ!
சமரச சத்திய சங்கத் தலைவ
தாலே தாலேலோ.

எளிய உரை:

நாம் முன்னர் நினைப்பது, பின் ஒரு வினையாய் முளைத்து நம்மை பிறவிக்கடலில் சேர்க்கின்றது, அதுமட்டுமின்றி நாம் செய்கின்ற செயல், பேசுகின்ற பேச்சு முதலியவையே நல்வினை, தீவினை ஆகி நம் முன் வந்து நிற்கின்றன என்றும்,

நல்லவர் திரு உளத்தில் என்றும் நீக்கமில்லாது நிறைந்து விளங்குகின்ற இறைவனின் திருவருளை என்றும் சிந்தித்து இருக்கின்ற ஞானிகளின் ஏவலினால் தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றும்,

நினைக்கபடுகின்ற உடல், உயிர், உளம் ஆகிய மூன்றும் ஒன்றி இறைவன் மாட்டு அன்பும், உயிர்களிடத்தில் கருணையும் செய்வதே உயர்ந்த வழி என்றும், (முதலிய கருத்துக்களை)

தனக்கு ஓர் ஒப்பின்றி இருக்கின்ற உயர் தமிழ் மொழியில் எங்களுக்கு அருட்பாக்களாகவும், உபதேசங்களாக‌வும் சாற்றிய பெருமானே!

சமரச சத்திய சங்கத் தலைவா! உனக்கு தாலே தாலேலோ!