www.vallalarspace.com/durai
எது உயர்ந்தது?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

இன்றை நேரலையில் சுத்த சன்மார்க்கத்திற்கும் மேலானது முடிவானது சமரச சுத்த சன்மார்க்கம் என்று சொன்னபோது, அதை, இந்த அடியன் மறுத்து, சுத்த சன்மார்க்கம் என்பதும், சமரச சுத்த சன்மார்க்கம் என்பதும் ஒன்றுதான் என்றேன்.

அதற்கு, அப்படியல்ல,

1.சமய சன்மார்க்கம்,
2.மத சன்மார்க்கம்,
3. சுத்த சன்மார்க்கம்,
3. சமரச சுத்த சன்மார்க்கம்
- என்பதுதான் படிநிலைகள் என்றார்கள்.

அதை இந்தச் சிறுவன் மறுத்து,

1.சமய சன்மார்க்கம்,
2.மத சன்மார்க்கம்,
3.சடாந்த சன்மார்ககம்,
3. சமரச சன்மார்க்கம்,
4. சுத்த சமரச சன்மார்க்கம், அல்லது சமரச சுத்த சன்மார்க்கம், அல்லது சுத்தசிவ சன்மார்க்கம்,
அல்லது சுருக்கமாக
“சுத்த சன்மார்க்கம்” - என்றேன்.

ஆக, சுத்த சமரச சன்மார்க்கம் என்பதும்,
சமரச சுத்த சன்மார்க்கம் என்பதும்
அல்லது சுத்தசிவ சன்மார்க்கம் என்பதும்,
அல்லது சுருக்கமாக, “சுத்த சன்மார்க்கம்” - என்பதும் ஒன்றுதான் என்றேன்.

அந்தப் பொருளில்தான் ஆறாந்திருமுறையிலுள்ள அனைத்து அருட்பாக்களும் அருளப்பட்டுள்ளது என்றேன்.

இதோ, கீழேயுள்ள அருட்பாக்களை ஆய்ந்து நீங்களே அறிந்து கொள்க.
அதற்குமேல் உரைநடைப்பகுதி பக்கங்கள் 401 முதல் 411 வரை படித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி, வணக்கம், சுபம்!

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
உங்கள் அன்பன்
துரை சாத்தணன்

#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
o சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
o அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
o சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
• சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
o வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
• நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
o சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
o உத்தம னாகுக வோங்குக வென்றனை

#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு
o தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
o சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
o அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
o அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
o சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
o தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
o எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
o யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
o அழகனே ஞான அமுதனே என்றன்
o அப்பனே அம்பலத் தரசே
o குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
o கொழுநனே சுத்தசன் மார்க்கக்
o கழகநேர் நின்ற கருணைமா நிதியே
o கடவுளே கடவுளே எனநான்
o பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
o பழங்கணால் அழுங்குதல் அழகோ.

#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
o போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
o புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
o சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
o தூயர்கள் மனம்அது துளங்கித்
o தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
o தனிஅருட் சோதியால் அந்த
o வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
o வழங்குவித் தருளுக விரைந்தே.

#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
o தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
o தனிநெறி உலகெலாம் தழைப்பக்
o கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
o கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
o பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
o புண்ணியம் பொற்புற வயங்க
o அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
o அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
o வந்தருள் புரிக விரைந்திது தருணம்
o மாமணி மன்றிலே ஞான
o சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
o சுத்தசன் மார்க்கசற் குருவே
o தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
o தனிஅருட் சோதியை எனது
o சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
o செய்வித் தருள்கசெய் வகையே.

#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்
o தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
o சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
o துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
o அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.


#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்
o நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
o கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
o படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
o விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்
o தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
o கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
o புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
o கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.

#6-021 ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
o அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
o ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
o எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
o எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
o செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
o திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
o தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
o தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

#6-021 ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
o அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
o அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
o துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
o சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
o படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
o படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
o ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
o ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
o இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
o என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
o சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
o தந்தெனை யாவரும் வந்தனை செயவே
o நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
o நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
o அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
o அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
o இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
o எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
o மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
o வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
o தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
o சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
o அருளான வீதியில் ஆடச்செய் தீரே
o அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
o இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
o இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
o மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
o வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
o தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
o சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
o அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
o அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
o நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
o ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
o ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
o எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
o சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
o சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
o நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
o நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
o மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
o மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
o பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
o பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
o விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
o வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
o சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
o தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
o கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
o குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
o மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
o வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
o நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
o நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
o புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
o புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
o கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
o குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
o துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
o தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
o சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
o இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
o இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
o எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
o தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
o தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
o சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
o எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
o ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
o மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
o வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
o சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
o துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
o சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
o சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு
o ஆன்றானை அறிவானை அழிவி லானை
o அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
o மூன்றானை இரண்டானை ஒன்றானானை
o முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
o தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
o சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
o ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
o எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
o ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
o அறிவித்த அறிவைஎன் அன்பைச்
o சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
o சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
o நீதியை எல்லா நிலைகளும் கடந்த
o நிலையிலே நிறைந்தமா நிதியை
o ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
o ஒளிதனைக் கண்டுகொண் டேனே.

#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
o உத்தர ஞான சித்திமா புரத்தின்
o ஓங்கிய ஒருபெரும் பதியை
o உத்தர ஞான சிதம்பர ஒளியை
o உண்மையை ஒருதனி உணர்வை
o உத்தர ஞான நடம்புரி கின்ற
o ஒருவனை உலகெலாம் வழுத்தும்
o உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
o ஓதியைக் கண்டுகொண் டேனே.

#6-045 ஆறாம் திருமுறை / அச்சோப் பத்து
o சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
o விடுவித்தென் தன்னை ஞான
o நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
o நிலைதனிலே நிறுத்தி னானைப்
o பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
o பராபரனைப் பதிஅ னாதி
o ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
o தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்
o தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
o தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
o சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
o தனில்உறும் அனுபவம் என்கோ
o ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
o ஓங்கிய ஒருமையே என்கோ
o சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
o திருச்சிற்றம் பலத்தவ நினையே.

#6-051 ஆறாம் திருமுறை / பெறாப் பேறு
o ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
o அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
o ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
o ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
o பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
o படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
o தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
o சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.

#6-052 ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்
o அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
o அருள்வடி வெடுத்தெழுந் தருளி
o நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
o நிலைஎலாம் அளித்தமா நிதியே
o மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
o வயங்கநல் வரந்தந்த வாழ்வே
o பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
o பொதுநடம் புரிகின்ற பொருளே.

#6-053 ஆறாம் திருமுறை / திருவருட் பெருமை
o காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
o கற்பகத் தனிப்பெருந் தருவே
o தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
o சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
o சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
o சித்தியே சுத்தசன் மார்க்க
o வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
o வழங்கினை வாழிநின் மாண்பே.

#6-057 ஆறாம் திருமுறை / அனுபவ நிலை
o திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
o டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
o பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
o இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.

#6-059 ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்
o தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
o சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
o சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
o ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.

#6-059 ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்
o பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
o தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
o துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
o சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.

#6-063 ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி
o புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
o பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
o சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
o சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
o மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
o வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
o என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
o என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.

#6-063 ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி
o ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
o ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
o பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
o பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
o அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
o அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
o இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
o என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.

#6-067 ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி
o ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
o பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
o தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
o கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.

#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
o துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
o சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
o விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
o விழித்திருந் திடவும்நோ வாமே
o மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
o மன்றிலே வயங்கிய தலைமைப்
o பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
o பண்ணிய தவம்பலித் ததுவே.

#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
o புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
o புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
o கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
o கருத்தொடு வாழவும் கருத்தில்
o துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
o துலங்கவும் திருவருட் சோதிப்
o பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
o பண்ணிய தவம்பலித் ததுவே.

#6-072 ஆறாம் திருமுறை / சன்மார்க்க உலகின் ஒருமைநிலை
o செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
o இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
o சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
o துன்மார்க்கம் போக தொலைந்து.

#6-072 ஆறாம் திருமுறை / சன்மார்க்க உலகின் ஒருமைநிலை
o செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
o சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
o சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
o என்மார்க்கம் நின்மார்க்க மே.

#6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு
o மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
o சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
o இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
o கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.

#6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு
o தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
o சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
o நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
o இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.

#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை
o இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
o துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
o அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
o திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.

#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை
o உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
o இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
o கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
o திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.

#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை
o கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
o சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
o கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
o செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.

#6-085 ஆறாம் திருமுறை / திருவருட்பேறு
o சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
o பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
o வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
o எந்தாய்நின் உள்ளமறி யேன்.

#6-090 ஆறாம் திருமுறை / உற்ற துரைத்தல்
o நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
o வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
o குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
o நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
#6-095 ஆறாம் திருமுறை / பேரருள் வாய்மையை வியத்தல்
o வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
o வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
o வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
o வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.

#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
o அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
o சுகாதீத வெளிநடுவிலே
o அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
o அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
o பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
o பொற்பொடுவி ளங்கிஓங்கப்
o புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
o பூரணா காரமாகித்
o தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
o சிறப்பமுதல் அந்தம்இன்றித்
o திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
o தெளிந்திட வயங்குசுடரே
o சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
o சுந்தரிக் கினியதுணையே
o சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
o சோதிநட ராஜபதியே.
o
#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
o பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
o பவநெறி இதுவரை பரவிய திதனால்
o செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
o செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
o புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
o புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
o தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
o தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

#6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி
o அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
o அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
o செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
o திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
o இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
o இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
o சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
o சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
o துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
o சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
o நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
o மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
o பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
o பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
o துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
o துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
o தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
o சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
o கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
o காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.

#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
o உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
o உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
o எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
o என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
o தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
o சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
o கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
o கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
o
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
o பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
o புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
o மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
o மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
o பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
o பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
o அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
o அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.

#6-109 ஆறாம் திருமுறை / உலகப்பேறு
o மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
o வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
o பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
o நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.

#6-109 ஆறாம் திருமுறை / உலகப்பேறு
o முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
o மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
o பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
o என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
o தம்உயிர்போல் கண்டு ஞானத்
o தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
o பெருநீதி செலுத்தா நின்ற
o பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
o திருவாயால் புகன்ற வார்த்தை
o அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
o வார்த்தைகள்என் றறைவ ராலோ.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
o புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
o தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
o செல்வமே நான்பெற்ற சிறப்பே
o மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
o வாழ்வித்த என்பெரு வாழ்வே
o அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
o அம்மையே அப்பனே அபயம்.
#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
o சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
o மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
o மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
o சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
o நித்திய மாகியே நிகழும் என்பது
o சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
o ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
o சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
o இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
o ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
o செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
o சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
o மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
o மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
o பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
o பாடுகின் றேன்பொதுப் பாட்டே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
o ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
o அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
o நீதியில் கலந்து நிறைந்தது நானும்
o நித்தியன் ஆயினேன் உலகீர்
o சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
o சத்தியச் சுத்தசன் மார்க்க
o வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
o விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு
o சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
o சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
o சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
o சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o இசையாமல் போனவர் எல்லாரும் நாண
o இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
o வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
o வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
o நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
o நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
o அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
o இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
o தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
o திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
o துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
o சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
o அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
o சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
o விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
o வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
o பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
o பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
o அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
o தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
o எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
o என்தோழி வாழிநீ என்னொடு கூடி
o துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
o சோதிஎன் றோதிய வீதியை விட்டே
o அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
o சூழலில் உண்டது சொல்லள வன்றே
o எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
o இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
o விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
o வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
o அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
o துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
o சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
o பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
o பாரிடை வானிடைப் பற்பல காலம்
o விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
o மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
o அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
o ஆடேடி பந்து ஆடேடி பந்து
o அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து
o சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
o சோதி மலையில் துலங்கு மருந்து
o சித்துரு வான மருந்து - என்னைச்
o சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான

#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து
o மேலை வெளியா மருந்து - நான்
o வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
o சாலை விளக்கு மருந்து - சுத்த
o சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
#6-119 ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
o தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
o சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
o திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
o சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
o பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
o பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
o அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
o யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
o பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
o பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
o துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
o சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.

#6-149 ஆறாம் திருமுறை / சத்திய அறிவிப்பு
o சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
o சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
o இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
o இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
o சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
o தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
o செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
o திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே