Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பூசமும் நாமும்..சுவாமி சரவணானந்தா.(21.1.1962ல் வெளியிடப்பட்டது.)
(21.1.1962) வெளியிடப்பட்டது...பிலவ ஆண்டு..தைப் பூசம்..8ந் தேதி..ஞாயிறு.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

ஈசன்அரு ளாற்கடலில் ஏற்றதொரு ஓடம்
   ஏறிக்கரை யேறினே னிருந்ததொரு மாடம்
தேசுறுமம் மாடநடுத் தெய்வமணிப் பீடம்
   தீபவொளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்... (திரு அருட்பா)

=0==0==0==0==0==0==0==0==0=0=0=0=0==0==0==0==0==0==0=

     இவ்வுலகில் தோன்றியுள்ள நமக்குத் திருவருள் ஞானம் கிடைக்கப் பெறும் வாய்ப்பு இது சமயம் இயகையாகவே உண்டாகியுள்ளது. அகத்தே இவ்வுண்மை விளக்கம் மலர்ந்து மணக்க, அகப்புற விளக்கத் தத்துவ நூல் முதலிய கருவிகளும், புற அண்டக் கோள் நிலைகளும், உதவ நேர்ந்துள்ளன.  தயவோடு கூடிய சத்விசாரத்தினால் எல்லா உண்மையும் ஒருவாறு தெளியலாம். இவ்விசார ஞான நிலையே முடிவான நம் குறிக்கோளல்ல. இந்த ஞானம் அடைந்து விட்டால் மட்டும் இறையின்ப வாழ்வு எய்திவிட மாட்டோம். இந்நிலைக் கண்ணின்று அருள் வண்ணமாய் உலகியலை நடத்தினால்தான், அதில் வரும் இன்பம் உண்மை யின்பமாக நிலவும்.

     இப் பிலவ என்னும் ஆண்டு, நம் பிறவிக் கடலைக் கடத்தற்கு ஓர் ஓடமாக வழங்கப் பட்டுள்ளோம்நாம். இவ்வோடத்தில் ஏறி, அருள் நன்முயற்சியால் கரையை நோக்கிச் செலுத்துகின்றோம். இவ்வாண்டின் பத்தாம் திங்களாகிய தை மாதத்திலே ஆன்ம ஜோதி நாட்டின் கரை அடைவதாகவுள்ளது. அக்கரை யேறி, அங்குள்ள தெய்வ மணிக்கோயிலின் தைப்பூசம் என்னும் ஈசனைக் காண்போம். அவ்வீசனே அருட்பெருஞ்ஜோதியாகி, அருளாலே அதுவே நாமாகி, நமது உயிர், உணர்வு, உடல் ஆகியும் நம்மைச் சூழுகின்ற உலகெல்லாமாகியும் கண்டு கொண்டு அருட்பெரு நலவாழ்வு வாழக் கருணை பாலிக்கின்றார். “அருட்பெருஞ்ஜோதியைக் கண்டேனே..ஆனந்தத் தெள்ளமுதுண்டேனே” என நமது திருவருட் பிரகாச வள்ளலார் குதூகலிக்கின்றார்.

     நமது தலையுள் நடுவிருக்கும் கடவுள் ஒளி நிலையம், இன்று படகாகக் கண்டு கொள்ளுகின்றோம். சத்விசார சித்த சுத்த சங்கற்பத்தால் அப்படகின் கண்ணே பூச உருவாய் அமைந்து ஒளிர்கின்றோம். திருவருள் பெருகப் பெருகப் பேரின்ப வடிவமுறுகின்றோம்.  இப் பேரின்ப நிலைபெற்று உய்யத்தான் இப்பிலவ பூசம் பல்வேறு சிறப்புகளோடு திருவருளால் வருவிக்கப் பட்டுள்ளதாகும். ஆதலின், இச்சிறு நூலும், ஒரு உண்மை விளக்கும் கருவியாக வெளிப்படத் திருவருள் கூட்டி வைத்துள்ளதாம்.

     இதில் அருள் உண்மை விளக்கம் பற்றியும், பூச நாள் தத்துவங்குறித்தும், தற்கால நிலையோடு கோள்களின் சூழல் குறித்தும், மதச் சின்னங்கள், கற்பனைப் புனைவுகள் பற்றியும், மதாதீத உண்மை பற்றியும், விஞ்ஞான மெய்ஞ்ஞான, அணு ஆன்ம விளக்கம் குறித்தும் சிறிது சிறிது எடுத்திசைக்கப்பட்டுள்ளன. இவற்றாலெல்லாம் மக்கள் யாவரும் உண்மை தெளிந்து அருளுரிமைப் பொதுநல வாழ்வு ஏற்று உய்யவெண்டுமென்பது திருவருட் குறிப்பாகும்.

     பயங்கர அழிவு சூழுகின்ற இன்றைய உலகில், நமக்கு அபயந்தந்து ஆட்கொள்ளவே நமது அருட்ஜோதி ஈசன் பூச உடுவாய், காற்குளமாய் எழுந்தருளியுள்ளார் நமது அகப்பெருங்கொயிலில். அருள் உடையார்க்கு அபயமுண்டு. இது ஆண்டவர் ஆணை.

அன்பன்,
சரவணானந்தா.

பிலவ, தை, 1ம் நாள். 

(21.1.1962)


20140713_221310.jpg

20140713_221310.jpg