Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
கடவுள் உண்மையே மனித உண்மை...(மெய்ப் பொருள் என்ற நூலிலிருந்து) சுவாமி சரவணானந்தா.
     நம் அருட்பெருங்கடவுள் ஒருவரே. ஒவ்வொரு மனிதனின் கருப்பிண்ட சிருஷ்டி தொடங்கி சிரநடு சிற் ஜோதியாய் விளங்கி நின்று, அக்கருப்பிண்ட வளர்ச்சிக்குக் காரணமாயும், உயிர் உணர்வுக்கு ஆதாரமாயும், உலகில் பிறந்தது முதல் அறிவனுபவத்திற்கு வேண்டியனவெல்லாம் புறத்திருந்து வருவித்துக் கொள்ளுகின்றதாயும் உள்ளாராம் அந்த அகம் ஒளிர் அருட் ஜோதி சிற்சபேசர். ஆகவே, அந்தக் கடவுள் தானே, இந்த யாவுமாய் விளங்கும் மனிதப் பிறப்புரு கொண்டுள்ளதை உணர்கின்றோம். உண்மையில் அவ்வொன்றான கடவுளைத் தவிர, அவருக்கு, அன்னியமாக மனிதன் என்ற ஒருவன் எங்கே ! ஆதலின் உண்மையில் கடவுள் உண்மையும், மனிதனின் உண்மையும் ஒன்றே எனத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

     மனிதன், இதுகாறும், கடவுள் வண்ணமான தனது உண்மையை சிறிதும் அறிந்து கொள்ளாமல்தான், பொறியுடம்பின் பற்றாலும், புலனின்ப வேட்கையாலும், தன்னைத் தேக வடிவினனாகக் கருதிக் கொண்டு, உலக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கின்றான். இதனால்தான், ‘தான்’ கடவுளிடத்திருந்து பிரிந்து கீழ் நிலைக்கு வந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தான். கடவுள் எங்கோ இருப்பதாகவும், அவரைப் பயபக்தொயோடு வேண்டிப் பிரார்த்தித்து, இந்த அசுத்த அநித்திய தேகத்தை மண்ணில் கிடத்திவிட்டுச் சென்று தான், அவரை அடைய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளான்.

     இம் மாதிரி கடவுளை அடையும் மார்க்கங்களே உலகில் இதுவரை வகுத்து வழங்கியிருந்தனர் முன்னோர்கள். அவர்களின் மார்க்கமெல்லாம் அப்படி இருக்க, அகமுணர்ந்த ஆன்ம ஞானிகளின் மார்க்கம் எப்படியிருக்கின்றது என்பதையும் பார்ப்போம். சைவம், சிவபதியையும், ஆன்மப் பசுவையும், திரிமல பாசத்தையும் கற்பித்து, மனிதன் ஆன்மப்பசு வடிவினன் எனவும், அவன் தற்சுதந்திரமற்ற சடசித்துவடிவினன் எனவும், சிவபதியின் திருவருளை வேண்டிப் பெற்று, சடமாகிய மலபாசத்தை அறுத்து, எரிந்து விட்டு, அச்சிவபதியோடு இரண்டறக் கலந்து மறைந்து போவதே, ஆன்மப் பசுவுக்கு சிவானந்த வாழ்வு என்று குறித்து விட்டனர். அவ்வான்மாவே தன்னை முற்றிலும் இழந்து விட்ட பின் சிவானந்த அனுபவத்திற்கும், அந்நிலை வாழ்வு நித்தியமாய்த் திகழ்வதற்கும் இடம் எங்கே ?

     இதுபோல், வேதாதியும் தன்னை ஜீவான்மாவாகவும், கடவுளைப் பரமான்மாவாகவும், தேகாதி பிரபஞ்சத்தை மாயை அல்லது மித்தை எனவும் கண்டான். மேலும், இந்த ஆன்மா மாயா தேக பந்தத்திற் பட்டிருப்பதால் ஜீவான்மாவாயுள்ளது என்றும், இத்தேகப்பற்றற்று, பரமான்ம ஐக்கிய பாவனையில் இருந்து ஜீவன் முத்தனாய் விளங்குகின்றான் எனவும், இத்தேக ஒழிவிலே, அந்த ஐக்கியானுபவம் சித்தித்து விட்டதாகவும், விதேக முக்தன் ஆகிவிட்டதாகவும் கொள்ளப்பட்டதாம்.

     மேலும், இவ்வேதாந்திகள் ஆன்மாவும், பிரம்மாவும் ஒன்றே எனவும், அது மாயா தேக சம்பந்தத்தாலே தான் தனியொரு ஆன்மாவாய்த் தோற்றுகின்றது எனவும், பிரம்மானுபவம் உறாதவரை, மாயையின் தொடர்பு நீங்காது, மேன்மேலும் தேகப் பிறப்பு தொடர்ந்து வந்து கொண்டே தானிருக்கும் எனவும், ஆகையால் பிரம்ம பாவனையில் மூழ்கி நின்று, தேகாதியை விட்டு விடுதலே பிரம்மானுபவ சித்திநிலை எனவும் தீர்மானித்து விட்டனர்.

     தேகாதித் தொடர்பற்ற பிரம்மான்ம சொரூபத்திற்கு நித்தியானந்த அனுபவம் எப்படியிருக்க முடியும் ? 

     ஆகவே, முன்னெறிகள் எல்லாமே தேக நிலையைக் கடந்து சென்று, கடவுளுடன் வாழ வேண்டும் என்ற கருத்தோடு தான் வகுக்கப்பட்டனவாக ஐயம் திரிபு இல்லாமல் அறிகின்றோம். இவற்றில் மெய்யின்ப வாழ்வு நிலைப்பதாய் இல்லை என்பதே தெளிவு.  ஆனால் ஏன் இந்த முடிவுக்கே வந்தனர், அவர்கள் என்றால், தேக நிலையிலிருந்து கடவுள் நிலைக்குச் செல்ல முயன்றதால்தான் என்று அறிகின்றோம். மேலும், கடவுள் உண்மையைத் தேகத் தொடர்பு கடந்ததாகக் கண்டிருந்தனர். ஆதலின், அந்தக் கடவுள் நிலையிற் பதிந்து நின்று விட்டாலே அக் கடவுளை அடைந்து விட்டதாகக் கருதியதலும், தேக அந்நியத்தில்தான், அந்த ஆன்மா பரமான்ம ஐக்கியத்தில் ஆனந்தமாய் வாழக்கூடும் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டிருந்தனர். அந்தச் சூன்ய முடிவு நிலைக்கு மேல் ஒரு நிலை இருக்க முடியாது என்பது அன்னோர் முடிவாம். முடிவில், அவர்கள் கலந்து கொண்ட ஒழிவு நிலையே கடவுள் மய வாழ்வின் பேறு என்றும் அந்நிலை அடிந்து விட்டால் மேல் இம்மண்ணுலகில் வந்து பிறக்க மாட்டார்கள் என்றும் கருதி விட்டனராம். இந்த முடிவுகளும், லட்சியங்களும், கடவுள் அருள் நிலையில் நின்று நோக்கும்போது, பொய்த்துப் போகின்றனவாம். முன்னோர் கண்ட மார்க்கங்களும்,  அவற்றால் பெறப்பட்ட லட்சியங்களும் பூரணமாகத்தான் விளங்கிய அன்று. இன்றும் கூட, தேக நிலையிலிருந்து நோக்கும் அறிவு உணர்வுக்கு அப்பழையவே சரி எனத் தோற்ரும். யாரேனும் அவை சரி இல்லை என்று கூறினால் ஒப்பவே மாட்டார்கள். முதலில், முன்னோர் கண்ட வேதாகம நெறிகள், கடவுளே வழங்கினதாகவும். அவற்றில் எக்காலும் குற்றம் குறை இருக்கவே முடியாது ! ஆகையால் அவற்றை நம்பிக் கொள்ள வேண்டும். மறுத்துக் கூறுவது, அபசாரம் அறியாமை, நாத்திகம் என்று படபடப்போடும், பதட்டத்தோடும் அலறுவது சகசம். அவர்களை எல்லாம் தயவோடும் பணிவோடும் வேண்டிக் கொள்ளுகின்றேம். சற்றே நிதானமாக, மன அமைதியோடு இருந்து கொண்டு, ஒன்றான அருட் பெருங்கடவுளைப் பற்றியும், அதுவே தன் அருளால் யாவுமாய் எவருமாய்த் தோற்றிக் கொண்டிருக்கும் இயல் உண்மை குறித்தும் நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அப்படிப் பார்ப்பின், கடவுளும் மனிதனும் உண்மையில் இரண்டல்ல என்பது தெளிவாம். இத் தெளிவு பெற்றால், வேதகமங்களின் மூலாதாரக் கடவுட் கொள்கையில் மாறுபாடு ஒன்றுமில்லை என்பதும் விளங்கும்.  வேதாந்த மகா வாக்கியங்களின்படி, “நான் பிரம்மான்ம சொரூபி...என்பதும், “நான் பிதாவோடு கூட இருக்கின்றேன்” என்ற இயேசு வாசகம் உண்மையே என்பது தெளிவு. “சர்வம் பிரம்மம் சத்தியம் .. என்பதும் சத்தியமே ! கடவுள் இந்த உண்மையைத்தான் அந்நாளில் வெளிப்படுத்தினார். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அம் முன்னோர் தேக நிலையிலிருந்து கடவுளான்ம நிலையையோர்ந்து கொண்டிருந்ததே அவர்களின் கடவுட்பேறு, உடல் இழப்பால் தான் வருவதாய் உறுதி செய்யப்படு விட்டிருந்ததாம். இத்தருணம், திருவருளாலே, அந்தக் கடவுள் உண்மையும், நமது உண்மையும் வேறல்ல..என்றதையுணர்த்தப்பட்டு உண்ணின்று ஒளிருகின்றோம் நாம் ஒவ்வொருவரும். இந்நிலை நின்றே அருளியம் வாழ்வு வாழ ஆணை செய்யப்படுகின்றோம்.

     அகத்தே அருள் வடிவாய் இருக்கின்றவர் நமது ஒன்றான கடவுள். நாமும் அவரும் அந்த ஒன்றான ஒன்றாய்த் தான் இருந்து கொண்டு என்றென்றும் இருக்கின்றோம். எவ்விடத்து எவ்வுயிர்க்கும், எப்பொருட்கும் அகத்திலிருந்துதான் அது அதுவாக விளங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த எங்கும் விளங்கும் கடவுள் உண்மையை நம் அருளகத்திலிருந்து கண்டாலன்றி, பிறிது எதனாலும் எவ்விடத்தும், எக்காலத்தும் காணவே முடியாது என்பது உண்மையாம். இந்த அகக் கடவுள் நிலையிலிருந்து நோக்கும் நாம், யாவுமாய், எவருமாய்ப் பூரண நிறைவாய் இருக்கக் காண்டலால், எதையும், எவரையும், வேண்டுமென்று பற்றுக் கொள்ளாமலும், வேண்டாமென்று வெறுப்பு அடையாமலும், உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் உண்டு பண்ணும் அருட் செயல் புரிந்து கொண்டிருத்தலே நம் கடமையாம். அகமிருந்து நீங்காது, அனக சுத்த அருள் வாழ்வு மேற்கொள்ளுவார்க்கு, அந்த அருளே உள்ளிருந்து நிரம்பி, அசுத்த அநித்திய தேகத்தன்மைகளை முற்றிலும், அவ்வருள், வண்ணமாய் மாற்றி என்றும் விளங்கச் செய்வதாம். இதுதான் சுத்த சன்மார்க்கமும், அதன் பயனுமாம். இதுவே அருட்பெரு நெறியாகவும், அனக மார்க்கமாகவும் குறிக்கப்படுவது. இம்மார்க்கம் ஒன்றே பிற எம் மார்க்கத்தின் முடிவையும் தன் அகத்திற் கொண்டும், அதற்கு மேற்போந்தும் யாவருக்கும் இறவா இன்பப் பெருவாழ்வை நல்குவதாம். ஆகையால் இந்த சுத்த சன்மார்க்கத்தை, எல்லோரும் தத்தமக்கு உரியதாய் ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளுதல் திருவருட் சம்மதமாம். இதனை அலட்சியப் படுத்திக் கொண்டிருத்தலும், அன்னியமாய்க் கருதிக் கொண்டிருத்தலும் கூடாது. அருட்பெருங்கடவுள் தானே இந்தச் சுத்த நெறியை அகமிருந்து தோற்றுவித்து, யாவருக்கும் வழங்குகின்றதால், அவரது திருவுள்ளப்படி, எப்படியும் இது வெளிப்பட்டு விளங்கப்போவது சத்தியம். மற்ற மார்க்கங்கள், இதுவரை எவ்வளவோ நன்மைகளை விளைவித்திருக்கலாம். உலக வாழ்வுக்குத் துணையாக உதவியிருக்கலாம்.

     எவ்வளவோ காலமாக நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம். என்றாலும் அவைகளாலெல்லாம் ஒன்றான அருட்பெருங்கடவுள் உண்மை வெளிப்படாத காரணத்தால், பல தெய்வக் கொள்கைகளும், பன்மத மார்க்கங்களும் மக்களினத்தைப் பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றதையும் காண்கின்றோம். அவற்ரால் அனைத்துலக மக்கள் அன்பில் ஒன்றுபட முடியாமலும், அருளியல் வாழ்வு தழைக்காமலும் போய் விட்டிருக்கின்றதையும் காண்கின்றோம். இவற்றை எல்லாம் மாற்றிச் சரிப்படுத்தி, மக்கள் இனம் ஒன்றுபட்டு தயா இன்பில் ஓங்கவே இச்சுத்த சன்மார்க்கம், ஒவ்வொருவரின் அகத்திருந்தும் வெளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது இது முதல்.   ஆகையால் இந்நெறியைப் புறத்திலிருந்து வருவதாக நினைக்க வேண்டாம். நம் ஒவ்வொருவரின் அகத்திருந்து அகமுடையானின் அருள் ஆணையாக வருகின்றதாக உணர்ந்து கொண்டு, ஏற்றுப் பயன் காண்போமாக. இந்த நெறியால் கிடைக்கப்பெறும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு சுத்த சன்மார்க்க உலகில் நன்கு விளங்கும். அது குறித்து இப்பொழுது விரித்துக் கூற வேண்டியதில்லையாம்.
IMG_20170210_220050.jpg

IMG_20170210_220050.jpg