Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருத்தொண்டர் புராணம்..சுவாமி சரவணானந்தா.
தியானமும் தியாகமும் என்ற நூலில், ஒரு தலைப்பில், திருத்தொண்டர் புராணத்தின் உண்மையினை சுவாமி சரவணானந்தா அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000

திருத்தொண்டர் புராணம்.

     தொண்டர் தொண்டனாம் இறைவனை, உலகெலாம் உணர்ந்து ஓதிப் பேரின்ப நலம் பெற வேண்டும் என்ற உட்கோளோடுதான், சேக்கிழார் என்ற அருட்பெரியாரால் இத்திருத்தொண்டர் வரலாற்றுக் குறிப்பு நூல் ஆக்கி வழங்கப் பெற்றதாம். இது தோற்றுவிக்கப்படுமுன் இறையருள் விளக்கும் வரலாறு முறைபடத் தெரிந்து கொள்ள வழியற்றிருந்தது. ஜீவக சிந்தாமணி என்ற புலன் விருந்து வரலாற்றுக் கதை நூலே பரவிக் கொண்டிருந்ததாம். அதனைத் தடுத்து உண்மை வெளிப்பட இத்தெய்வ நூல் வகுக்கப்பட்டது. இதில் குறிக்கப்பட்ட தொண்டர்கள் அல்லது நாயன்மார்கள் இறைபக்தி நெறியை வலியுறுத்தி, இறை இன்பநிலையை அடைவிக்க வந்தனராம். இது அக்காலத்திய தேவையாகவும், பொருத்தமானதாகவும் இருந்து வந்துள்ளது. பக்தியின் தீவிர சக்தியால் இறை இன்பம் அடைந்திடலாம் என்பது குறிப்பு. இதை வைத்தே சேக்கிழார் திருச்சிற்றம்பலச் சந்நிதியிலிருந்து தொழுது நின்று “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” அருள் மொழியைப் பெற்றுத் தொண்டர்தம் வரலாற்றை விரித்துப் பாடலானார். மனோ வாக்குக்கு எட்டாத பரம்பொருளை உணரும் மெய்யறிவுணர்வுதான் இங்கு கடவுள் அருளாகக் கொள்ளப்படுகின்றது. இந்த அருள் உணர்வைத்தான் அவர் பெற்றார். அதுவே உள்ளிருந்து இறையருள் வாக்காய் வெளிப்பட்டு விட்டதாம். அவர் தம் தொழுகையின் பயன் அவ் அருண் மொழி பெற்றதே என்னலாம். அதனாலே பின்னர் அவர் அருண்மொழித் தேவர் என்ற பெயரைய்ம் பெற்றுவிட்டாராம். அலகில் சோதியன் மலர் சிலம்படியை அம்பலத்தே கண்டு வாழ்த்தி வணங்கினார். அப்போது அம்பலவன் திருமுடியில் நிலவும், நீரும், கண்டு கொண்டார். இந்த நிலவும், நீரும், சோதியும், இறைவனின் அறிவு அன்பு, இன்பம் ஆகிய திரிதேகத்துவ நிலையைச் சுட்டுவனவாம். இந்த இறைநிலைப் பேற்றினை உலகவர் கண்டடைய என்றே இப்பக்திக் காவியத்தை இயற்றினார் என்ப. இதில் பக்திப் பெருக்கே முதலிடம் பெற்றுள்ளதால் சுத்த அருள் நிலைக்கு இடம் காணவில்லை போலும். இதனால், உயிரிரக்க, சுத்த தயவு நெறி இதில் விளங்குகின்றதில்லையாம். இதனால் இத் தொண்டர் நெறியைப் பற்றியொழுகி முத்தி பெறுதலிற் சுத்த சன்மார்க்க சித்தி வாழ்வு வந்தெய்தாது என்பது இன்று தெளிவாகின்றது. ஆகையால் தொழுகையும், தொண்டும் நிறைவுபெற்று வாழ்வு நிலை ஏற்பதற்கு சுத்த சன்மார்க்கத்தை அடைந்து தொழுகையும், தொண்டும் புரிதல் வேண்டியிருக்கின்றது.

     உண்மைத் தொழுகைக்கும், தொண்டுக்கும் உதவ வந்துள்ள வடலூர் சத்திய ஞான சபையும், தர்மச் சாலையையும், கலா நிலையத்தையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். புற நிலையிற் கண்டு கொள்ளுவதோடு அகத்தேயும் ஞானசபையையும் அதில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியையும் கண்டு, அடைதல் வேண்டுமென்பதே நம் வள்ளற் பெருமானின் திருவுள்ளமாகும். அக ஞான சபையில் தொழுது அடையும் அருட்பெருஞ்ஜோதி நிலைதான் முதன்மையானது. அந்த ஜோதி நிலை நின்றே அருளாலே வாழ்வதுதான் உண்மைத் தொண்டு புரிதல் ஆகும். இங்கு அருட்ஜோதி அம்பலவனை வாழ்த்தி வணங்குவது மட்டும் அல்லாது வாழ்த்தி வணங்கி வாழ்தலும் சேர்ந்து கொள்ளுகின்றதாம். இந்த அருளம்பலவன், தொண்டர் நாதனாய் எக்காலும், அருளின்பப் பெருவாழ்வை, உலகில் வரு தொண்டர் குழாத்திற்கெல்லாம் வழங்கிக் கொண்டேயிருப்பவராவார். அவருடைய அருள் அடைவாலே இன்று மனிதன், அவரையே சத்திய ஞானமன்றிலே கண்டு தொழுது அவர் மயமாகி நின்று உலகில் அழிவற இருந்து அருட்பெருந்தொண்டு புரியவும் வல்லவனாகி விடுகின்றான். இத்தொண்டால் உலகம் எல்லாம் உய்வு பெறுவது சாத்தியமாம். அதுவே ஆண்டவரின் திருவுள்ளக் கிடக்கையாகவும் இருக்கின்றது. உலக மக்கள் சமுதாயத்தில் இந்தத் தொழுகையும் தொண்டும் ஓங்குவனவாக.

20150520_154927.jpg

20150520_154927.jpg