Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.5க்கு விளக்கவுரை...சுவாமி சரவணானந்தா.
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதுமிந்த உடம்பே
   இயற்கையுடம் பாகவருள் இன்னமுதம் அளித்தென்
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
   பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்திறந்து பொய்க்கதியைப் பெற நினைந்தே மாந்த
   பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.                                      (திரு அருட்பா)

(விளக்கம்)

     பெரிய திருக்கதவம் திறந்து அருளவும், புறமொடு அகமும் கலந்து கொண்டு, இறவா வரத்தோடு இனிது மகிழ்ந்து என்றென்றும் வாழ்ந்திட வேண்டப்படுகின்றது இப்பாடலில்.

       இதுகாறும் இந்த ஆன்மாவுக்குத்தான், எத்தனை எத்தனை பிறவிகள் சூழ்ந்து சூழ்ந்து வருந்திச் சென்றனவோ யான் அறியேன். அப்படிப் பட்டுப் பட்டு வருந்தி மாய்ந்து போனதை எண்ணிக் கலக்கமடைகின்றேன் இப்போது.   இனியும் அப்படிப் பிறக்கவும், அவத்தைப்பட்டு அழியவும் சிறிதும் இசையேன். போதும் போதும் அந்த அவலப் பிழைப்பு. எனவே, இப்போது யான் ஏற்றுள்ள இந்த உடம்பையே, இயற்கையுடம்பாக மாற்றி எழிலச் செய்திடல் வேண்டும் என்கிறார் எம்பெருமானார்.

         இவர் வேண்டும் இயற்கை உடம்பு என்பது எது?  இப்போது ஒருவன் ஏற்றுள்ள புற உடம்பு இயற்கை அல்ல; இத் தூல வடிவுக்குள் விளங்கும், சூக்கும நுண்ணுடலும் கூட இயற்கையுடம்பாகாது. இவை இரண்டுமே அழிவுறும் தன்மையனவாம். இயற்கையான ஒன்று அழிவற்றது. அது தெய்வீக இயல் கொண்டதாம். அதுவே காரண தேகம் எனவும், ஆன்மா எனவும் கூறப்படுவது. இக்காரண ஆன்ம சிற்றுரு, கடவுட் பேருருவின் உண்மையைக் கொண்டு இருக்கும் ஒன்றாகும். இவ் ஆன்மாவில் மறைந்து இருந்து, பக்குவ காலத்தே சுத்த அருள், அமுத ஜோதியாக வெளிப்பட்டு, சூழ் உருவையும், சுத்த உடம்பாக ஆக்கி விடுவதாம். இப்படி ஒருவன் சுத்த ஆன்ம காரண வடிவினன் ஆகி, அருள் அனுபவ வாழ்வு கொண்டு விளங்கும்போதுதான், உண்மை முத்தி நிலை எய்தியவன் ஆகின்றான். இதுதான் ஒருவன் இயற்கை எய்தினான் என்பதன் உண்மையாம். மற்றபடி, சாதாரணமாக இறந்து போன ஒருவனை இயற்கையை எய்தினான் என்று சொல்லுவது உண்மை அல்ல..

       மரணத்தையொழித்து, அமரத்துவம் அளிப்பது அமுதம் என்பர். அதுவும் அருட்பெருஞ்ஜோதி அமுதம், அகமிருந்து அனகம் உற்று அனுபவப்படுவதால் மட்டும் ஒருவன் திரிதேக சித்தியோடு பேரின்ப முத்தி வாழ்வு வாழ்கின்றவனாவான். ஈதல்லாது உலகியல் சித்த மார்க்கத்தில் கண்ட எந்த அமுதமும்  யோகானுபவத்தில் பெறப்படுகின்ற குண்டலிப்பால் அமுதும், மற்ற வகையால் கிடைக்கப்பெறும் கல்ப தேக சித்தி தரும் அமுதங்களும் நம் அருட்பெருஞ்ஜோதி அமுதுக்குச் சிறிதும் நிகராகாது.

          இந்த அருள் அமுதத்தைத் தான் நம் அருள் அடிகள் வேண்டுகின்றார். இவர் பாடும் சிற்சபை, முன்னோர் கண்ட பூர்வ ஞான சிதம்பர சிற்சபையினும் பெருமையுடையதாகும். அன்று “இறவா வரம் தரு நற்சபையே, என மறை புகழ்வது சிற்சபையே” எனப் போற்றப்பட்ட ஒன்றால், மனிதன், காரண தேக நிலையில் இருந்து கொண்டு பிறவாதே இறவாதே மறைந்து கிடப்பதே இறவா வரமாக எண்ணி இறுமாந்து போனான்.

       அப்படி ஆன்ம வடிவில் அருவமாய், இல்லாதே இருக்கும் வாழா நிலையை விரும்பிடவில்லை நம் வள்ளற் பெருமான். ஆகவேதான், அருட்பெருஞ்ஜோதி நடனபதி எழுந்தருளித் திகழ்கின்ற சத்திய ஞான சபையாம் சிற்சபை வாழ்வால் அழியாப் பேரின்பப் பெருவாழ்வை உலகுக்கு அறிமுகப் படுத்துகின்றார். இச் சிற்சபையின் வாயில் பெரிய திருக்கதவம் எனப்படுகின்றது. இதன் மூலம அடையப் பெறுவது பெரு முத்தி சித்திப் பெருவாழ்வு ஆகும்.

         இதனால், இதுவரை கொண்டிருந்த அருஞ்சமய மத நெறியெல்லாம், சுத்த சன்மார்க்கப் பெருநெறி முன், சிறு நெறிகளாகவே தோற்றுகின்றனவாம். இவ் அனகப் பெரு நெறியால், அகமிருந்து அருட் பூரண ஜோதி அமுதம், அவ்வக நிலை நின்று எழுந்து தேகநிலை எல்லாம் கடந்து அகண்டமாய் நிரம்பி விடுகின்றதாம். இதனையே, அகம் புணர்ந்து புறந்தழுவி கலந்து கொண்டு பூரணமாய் என்றும் விளங்கும் சிவபோக நிலையாக குறித்துள்ளார் இப்பாடலில்.

           இந்த மரணமில்லாப் பேரின்பப் பெரு வாழ்வு ஒன்றே இவரது முடிந்த குறிக்கோள். மற்ற மற்ற பலவாகிய சித்திப் பேறுகளைப் பெற்று முடிவில் பொய்த்து ஏமாந்து போவது பேதமை என்பதே இவருடைய கருத்தாகும்.

          ஆகவே, பெருநெறி ஒன்றையே கடைப்பிடித்து ஒழுகி, உலகவர் எல்லாம் உலவா இன்பில் தழைத்திடச் செய்யவே பெருநெறி வகுத்து வழங்கிப் பெரிய திருக்கதவமும் திறந்து வைத்துக் கொண்டு எல்லோரையும் வம்மின், வம்மின் பேரின்பப் பெருவாழ்வு பெற வம்மின் வம்மின் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றார். எங்கே ? நமது உடலூர் உள்வளர் உண்மைச் சத்திய ஞான சபைக்கே அழைக்கின்றார். தயா ஒழுக்கமும், தயா விசாரமும் கொண்டு அகம் அடைதல் வேண்டும். அடைந்து விட்டால், அங்கிருந்து அனகமாக வாழலாம் ஆனந்தப் பெருவாழ்வு.
New Doc 2018-05-03.jpg

New Doc 2018-05-03.jpg

Thangaraj Aru
நன்று, இயற்கை எய்துதல் பற்றியும் ஜோதி அமுதம் பற்றியும் பேரின்ப பிறப்பற்ற வாழ்வு பற்றியும் விளக்கம் மிக தெளிவு
Tuesday, May 22, 2018 at 11:51 am by Thangaraj Aru