Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.29க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
இங்கிதமாலை எண்.29 உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000

திருத்த மிகுஞ்சீர் ஒற்றியில்வாழ் தேவரே இங்(கு) எதுவேண்டி
வருத்த மலர்க்கால் உறநடந்து வந்தீர் என்றேன் மாதேநீ
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆகவுன்தன் அகத்தருட்கண்
இருத்த அடைந்தேம் என்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000

சீரும் சிறப்பும் நேர்மையும் நிறைவும் கொண்டது திருவொற்றியாம், அங்கே வாழும் கடவுள், “இங்கே எதற்கு கால் கடுக்க, மலர் பாதம் வருந்த நடந்து வந்துள்ளீர்கள்என்று தலைவி கேட்கிறாள்; ஒற்றிவாணர் நடன சபேசர், எவ்வளவோ காலமாக இந்த ஆன்மாவைத் தொடர்ந்து, கால் வருந்த நடந்தே வந்து சேர்ந்திருக்கின்றார் ஆம். எதற்காக இப்படி இவ்வளவு காலம் நடந்து நடந்து இந்த ஆன்மாவைத் தேடி வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அவருடைய தனிப்பெருந்தயவு. தன்னையே பிறர்க்கு வழங்கு தியாக இயல்பே இப்படி வரச்செய்திருக்கின்றதாம். இந்த ஆன்மாவுக்கு அருட்கண் வழங்கி, மெய்ப் பொருளைக் கண்டு தெளிந்து கொள்ளச் செய்து முடிவில் பற்றற்ற பரானந்த நிலையை அடைவிக்கவே இப்படி இங்கு வந்திருக்கின்றார் ஆம்.

“உனக்கு அருள் ஞானக் கண் கொடுத்து, உண்மையைக் கண்டு கொள்ளச் செய்ய வேண்டி, நீ பிரித்தறியப்படா மண்ணொடு மண்ணாய்க் கிடந்த காலம் போக, ஓர் அறிவுத் தாவர வடிவில் செலுத்தப்பட்டது முதல், அறிவு அனுபவ வளர்ச்சியின் பொருட்டு, எத்தனை எத்தனையோ தேகத்தையும், ஜீவனையும், போகப் பொருள்களை வழங்கிடச் சூழ்ந்து சூழ்ந்து தொடர்ந்து வந்தேன். நீயோ ஒன்றையும் அறியாமல், அறிந்து கொள்ளற்கான அகப்புற கருடி கரணங்கள் குறைவால், பிறந்து பிறந்து இறந்து இறந்து திருவருளாலே மேல் ஏற்றப்பட்டு இன்று இந்நிலைக்கு வந்துள்ளாய். இன்று ஏற்பட்டுள்ள அறிவு, அன்புசேர் அருட் பக்குவ விளைவால் உண்மை கண்டு தெளியக் கூடியவளாய் இருக்கின்றாய். அதனால் உனக்கு அருட்கண் அளிக்கின்றேன். நீயும் இது கொண்டு உண்மையை நன்கு தெளிந்து உயர் முட்தி பேறு அடைவாயாக என்று, உய்வித்தற்குத்தான் இப்படி இந்த ஆன்மாவைத் தொடர்ந்து நடந்து வந்துள்ளார் என்பது சத்தியம்

நிர்வாணம் என்பதின் உண்மை.

நிர்வாணம் என்றால், ஆடையில்லா அம்மண நிலை என்று, சாதாரணமாகப் பொருள் கொள்ளுவர் புலனெறியாளர் பலரும். ஆன்மார்த்த அருட்பொருள் மேலான ஒன்றாம்.

பரிபக்குவம் அடைந்துள்ள ஓர் ஆன்மா, தான் ஆதி முதல் இதுவரையில் அறியாமையால் எண்ணற்ற பிறவிகளில், பொய்யான மாயா இன்ப துன்பங்களில் பட்டுப் பட்டு உழன்று கொண்டிருந்ததை எல்லாம் அருள் அறிவால் அதுவே உண்ணின்று உணர்த்த உணர்ந்து கொண்டிருக்கின்றதாம். சத்திய ஞான சபையிலே, அருட்பெருஞ்ஜோதிச் சந்நிதிமுன் நிற்கும் தருணம் தான் இந்த மாயா திரைகள் ஒவ்வொன்றாய் விலக்கப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு ஏற்படுகிறது. ஆறு வண்ணத் திரை கடந்து, இறை ஜோதிக் காட்சி முன் நிற்கும் நிலையே இறைமய மாவதற்கு முன் உள்ள பரிபக்குவ நிலை ஆகும். ஏழாவது திரையும் நீக்கப்பட்டால், அந்தத் திரை அற்ற நிலை நாம் என்றும், அது என்றும் இருநிலையற்று, அதுவாம் ஒருநிலையுற்று விளங்க நேரும். தன்னை மறந்து நிற்கும் ஆறாம் நிலையே நிர்வாணம் என்றும், தான் போய் அதுவான நிலையே பரி நிர்வாணம் என்றும் பகரப்படும்.

திரைச் சீலை சூழாத சுத்த ஆன்ம நிலையே, நிர்வாண பதவி என்றும், அந்நிலையுற்றோர், மேல் மாயா இறப்பும் பிறப்பும் அடையார் என்றும் சொல்லப்படும். இம்மாயா திரைகளைக் குறித்து, இன்றைய உலகம் உண்மையை அறியாதிருக்கின்றது, கடவுள் எங்கும் நிறைந்துள்ளார் என்று சொல்லும் மக்கள், அக்கடவுளை எங்கே காண்கின்றார்கள் ! எங்கும் காண முடியவில்லையே ! அக்கடவுளுக்கும் இம்மனிதனுக்கும் இடையில் ஏதோ பெரும் மறைப்பாகிய திரை இருந்து வருவதாக நினைக்கின்றான். கடவுளைக் காண முடியாதபடி மறைத்துக் கொண்டிருக்கும் அந்தத் திரையைக் கூட காண முடியவில்லை ! என்ன மகா மாயா திரையாய் இருக்கிறது இது ! ஆம், மெய்யறிவை அறியாமை என்னும் மூடம் தான் மூடிக் கொண்டிருக்கிறது. இந்த அறியாமை தான் மகா மாயா திரை ஆகும். இவ் அறியாமைத் திரை விலகிவிட்டால் மற்ற எல்லா மறைப்புத் திரைகளும் விரைவில் நீங்கி விடும். அப்போது எங்கும் நீக்கமற நிறைந்திலங்கும் நித்தியானந்தப்பரம் பொருளையே கண்டிருப்போம்.

முன்னோர் இத் திரையைப் பற்றி, கரும்பிறப்பு, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம் பிறப்பு, பொன் பிறப்பு, கழிவெண்பிறப்பு என்றும் கிருஷ்ண ‘லேஸ்யைமுதலியனவாகவும் பெளத்த நூல்களில் குறித்துள்ளனர். இவர்கள் எல்லாம் பிறப்பை துன்பக் கடலாக, துக்க சாகரமாகக் கூறி பிறவா நிலையுற்று இருப்பதே பரிநிர்வாணப் பேறு என்று பேசினர்.

இன்றைய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளின் தனிப்பெருங்கருணையுடன், தீண்டாத வெளியான சத்திய ஞான அம்பலத்திலே இருந்து கொண்டு உலகை எல்லாம் இன்பநிலைக்கே ஏற்றுகின்ற அருட்பேராட்சி புரிந்து கொண்டுள்ளார். பக்குவிகளை, ஏழ்திரை அற்ற நிலையில் தன்மயமாய் ஆக்கிக் கொண்டு, தனிப்பெருங்கருணையால் ஏழ்வுலகும் போற்றும் இன்ப வாழ்வில் என்றும் திகழவைக்கின்றார். இந்த நித்திய இன்பவாழ்வு தான், பரிநிர்வாண நிலைக்கு மேற்பட்ட இறை இயல் பேறு ஆகும் இங்கித வாழ்வு இதுவாம்.

New Doc 2018-07-06 (3)_1.jpg

New Doc 2018-07-06 (3)_1.jpg

IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg