Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
சுத்த சன்மார்க்கம்...சுவாமி சரவணானந்தா.
     எல்லா  உலகுயிர்ப் பொருள்களையும், ஆற்றல்களையும் விளங்கச் செய்து கொண்டுள்ள ஒன்றே நித்திய பரம்பொருளாகும். அதனை எப்பெயரிட்டழைத்தாலும் ஒன்றேதான், வேறாவதில்லை. பிறிது எதனாலும், எக்காலும் அழிக்கவோ, மாற்றவோ படுவதே இல்லை. என்றும் சுத்தமாகவே இருப்பது. சுத்தன் என உயர்திணையால் கொள்ளப்படுகின்றார்.

        அப்படியான சுத்த பரம் பொருள் தான், தனது தயா பேராற்றலால் எதுவுமாய், எவருமாய்த் தோற்றி விளங்குகின்றார். அகத்தே ஒன்றாயும், புறத்தே பலப்பலவாயும் விளங்கியும் மறைந்தும் கொண்டிருக்கக் காரணம் வெளியாக்கி, மனிதனில் அனுபவப்படுத்திடற்கேயாம். அந்த இறை உண்மை அனுபவம், பக்குவ மனித வாழ்வின் மூலம்தான் கண்டு கொள்ளப்படுவதாம். மனிதன் அல்லாத ஜடப்பொருள்களாலும், உயிர் அறிவாலும், எவ்விதத்தும் அறிந்து கொள்ளப்படுவதில்லை.

         நெடுங்கால மெய்யறிவு விளைவுக்குப் பின்பேதான், தன் மெய்ஞ்ஞானத்தால் எல்லாம் வல்ல ஒரு பரம்பொருளை ஒருவாறு உணர்ந்து கொண்டான்.

            உயர் பரத்தின் பெருமையும், அதனால் தோற்றுவிக்கப்பட்டு விளங்கும், தன் போன்றோர் சிறுமையும் எண்ணி, அம்மேல் நிலை அனுபவக் கடவுள் இன்ப வாழ்வு பெற எத்தனையோ வழி துறைகளை வகுத்து முயன்றுள்ளன. சமய மதக் கொள்கைகள், வந்தனை வழிபாட்டு முறைகள், யோக சாதனா பயிற்சிகள், மந்திர தந்திர உபாயங்கள் காய கற்ப மருந்துகள் யாவும் ஓரளவுக்குத்தான், குறிப்பிட்ட காலத்திற்கு உதவி மறைவுறச் செய்து விட்டன. நித்தியானந்த இறை இன்ப வாழ்வுக்கு உதவவில்லை...ஏன்?

          அந்த இறை பரம்பொருள், தன்னேரில்லா ஒன்றாதலின், பிற யாராலும், எக்காலும் அறிந்து அடைந்து விடவே முடியாது. அதனால் தான் இதுவரை எவரும் இறை மய வாழ்வு பெறாது போயினர்.

           உண்மைக் காரணம் இதுதான். அந்த மெய்ப்பொருள் ஒருவரே தான், அவ்வகத்தேஎ ஏகராக இருப்பதோடு புறத்தே தனது பொருட்சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, அருட்சக்தி வெளிப்பாட்டால் யாவுமாய் எவருமாய்த் தோற்றமாற்ற மறைவுமாய் விளங்கிக் கொண்டேயுள்ளார். ஆகையால், அவர் ஒருவரே அகத்தும் புறத்தும் இரு வேறு தன்மையோடு விளங்குதல் மெய்யாம் !

            இதனாலே தான் அயலிருந்து அடைய முயன்ற முயற்சி எல்லாம் முடியவில்லை.

           இன்று அவரே, மனிதனைத் தன் மயமாக்கி, அக நின்று புறம் வேறாக, அகத்தின் விரிவேயான அனகம் ஆகக் கண்டு கொள்ளச் செய்கின்றார். ஆகையால், அவரும் நாமும் இயல்பாகவே ஒன்றி அகமிருந்து வருவது இயற்கையே. இதையுணர்த்தவே எங்கும் நிறை தகராகாசக் கடவுள் தானே மனித உண்மை ஆன்ம வடிவான யகர வண்ணமாய்க் கூடாமற்கூடி தய எனத் திகழ்கின்றது உண்மை அனுபவ நிலை. அப்படி இருந்த வண்ணமே, உகர ஐஞ்சக்திச் செயலால் பிரபஞ்சத்து நாமாய் விளங்குகின்றதும் சத்தியமே. இதனால், அகமிருந்தபடியே, தயவு செய்; செய்தயவு என்று சொல்லிக் கொண்டேயும், செய்து கொண்டேயும் இருக்கின்றார் நம்பதி. ஆனால், நாமோ அவரோடு இருந்தும் அறியாமையால், அவரது ஆணையை ஏற்காமலும், தயவு செய்யாமலும், புறப்பொறி புலன் வாழ்வில் எப்படி எப்படியோ பிழைத்துக் கெட்டு அழிந்து கொண்டேயுள்ளோம்.

           இப்போது சுத்த தயா விசாரத்தால், அகநிலையுற்று அவர் மய வாழ்வு பெறத் தயவு செய்; செய் தயவு என எதிரொலித்து வேண்டியும் செயல் புரிந்து கொண்டும் இருப்பது தான் முறையாகும். எனவே, அகத்தே தயவு நிறைய நிறைய உள்ளத்துணர்விலும், உயிர் ஆற்றலிலும், உடற்செயலிலும் கொண்டு வாழ்வதால் அனக நிறைவு பெற்று இறை இயல் நித்திய தயானந்த வாழ்வும் உண்டாம் !

             இந்த அனக தயா வாழ்வு முறைதான், அனக நெறி என்றும், சுத்த சன்மார்க்கம் என்றும் மொழியப்படுகிறது.

              முன்னெறி முறை எல்லாம் புறமிர்நுது முயன்று அகமடங்கி ஒழியவே செய்தன.

              இந்த சுத்த சன்மார்க்கம் ஒன்றே நித்திய அக நிலை இருந்து, விரிந்து, தோற்ற மாற்ற மறைவாம் புற நிலையையே, அனகத் தன்மை பெற்று அழியாமை அடைந்து வாழ்வுறுகின்றதாம்.

             இதுவரை இறைவனே கூட, நித்திய வாழ்வோடு, ஒரு நாம ரூபத்துடன் நிலவாஅது, அருவ நிலையில் பிறவா யாக்கைப் பெரியோனாக இருந்து ஆண்டு வந்தார். இப்போது, அனக தயவுச் சுத்த சன்மார்க்க முறையால் ஒரு நிறை மனித வடிவோடு, இறவா யாக்கைச் சிறு மா மனிதனாய் விளங்க வந்து விட்டார். அந்த கடவுள் மனிதனே அருட்பிரகாச வள்ளலாவார். எனவே, இந்தச் சுத்த சன்மார்க்கம், பழநெறி போன்ற ஒன்றல்ல ! மக்கள் இனம் முழுமைக்கும், மெய் அன்பும் வழங்கி மெய் இன்பில் ஒத்துவாழ்ந்து தழைத்து ஓங்கச் செய்வது மெய்மெய் ஆம்.

             

                 

      
IMG_20171002_105627.jpg

IMG_20171002_105627.jpg

IMG_20170209_112402.jpg

IMG_20170209_112402.jpg