Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.36க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
தேனார் பொழிலார் ஒற்றியில்வாழ் தேவர் இவர்வாய் திறவாராய்
மானார் கரத்தோர் நகம்தெறித்து வாளா நின்றார் நீளார்வம்
தானார் உளத்தோ டியாதென்றேன் தங்கைத் தலத்தில் தலையைஅடி
யேனாடுறவே காட்டுகின்றார் இதுதான் சேடி என்னேடீ.                       (இங்கிதமாலை)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

      இந்தப் பிறவியில்தான் ஆன்மாவுக்கு, அன்பு இன்பம் சேரலின் தேன் ஆர் பொழிலார் ஒற்றியின் அனுபவம் மொழியப்படுகின்றது. தேன் என்ற சொல், தேன்போலும் சுவை தரு இன்பத்தைச் சுட்டுவதோடு, வண்டு-அளி அன்பு என்ற பொருளும் படுவதாம். இதனால் ஒற்றிவாழ் ஆன்மாவுக்கு, சுத்த சுகானந்த வாழ்வு கிடைக்கவுள்ளதாம்.

     இங்கு இடக்கையிலே மான் ஏந்தி இருந்த விரலைக் காட்டி மெளனமாய் நிற்கின்றார். அப்படி இடக்கைச் சுட்டு விரலை மேனோக்கி நிமிர்த்திய வண்ணம் காட்டி நிற்பதின் பொருள் என்ன ? தலைவியை, அந்த உயர்நிலைக்கு வந்து சேருன்ம்படி ஆணியிடுவதைச் சுட்டுவது இக்குறி. தலைவியோ, சுத்தமனமாம், மறி (மான்) ஆக இருக்க வேண்டியவள், அசுத்த மனமாம் மறி (ஆடு) ஆக, ஆடி, ஓடிக் கொண்டிருக்கிறாளாம். இப்படி இருப்பவளைத்தான் மானாக்கித் தன் இடக்கையில் ஏற்று ஏந்தி, மன்னி விளங்கும் மனிதனாக மானிடனாக விளங்க உளம் கொண்டுள்ளார் என்பது பொருளாம்.

     இவ் அடையாளத்தின் மெய்ப் பொருளைத் தெளிந்து கொள்ளவே மிக ஆவலோடு, அந்த உயர்த்திய (நகக்) கை விரலைக் கருத்திற் கொள்ளுகிறாள். அப்போது, அவர், தம் கைத்தலத்து இல் தலையை அடியேன் நாடுறவே காட்டுகின்றார். அதாவது, அவரது கையிலுள்ளது, பிரமனின் மண்டையோடு, திருவோடு, அதில் என்ன இருக்கிறது ? சோறுதான் இருக்கிறது. அந்த முத்தியை “நா நாடும்படி, அதனைக் காட்டுகிறார்” என்று தெரிந்து கொள்ளுகிறார். அந்தப் பிரம்ம கபாலத்தில், காட்டப்பட்டது, ‘இல் தலை’ என்று சொல்லுகிறாள்: சோறு என்றோ அன்னம் என்றோ கூறவில்லை. எனினும் அந்த இல் தலையே சோறு எனவும் பொருள் தருவதாய் அமைந்திருக்கிறது. எப்படியெனில், இல், இல்லாத, உயிர் போன தலையாம். தலை என்பதைக் ‘கம்’ எனக் கொள்ளலாம்.உயிரின் அகங்கார போதம் போன தலைதான் போனகம் ஆம்; போனகம் என்றால் சோறு, உண்டி என்றே பொருள். ஜீவ போத அகங்காரம் போனால்தான் மேனிலை முத்தியுறலாம் என்று உணர்த்தப் படுவதாம். அருள் வந்தாலே அகங்கார போதம் போம், மனம் அருள் மயமான சுத்த நிலை அடைந்தாலதான், ஆண்டவர் திருவருள் பாலித்து, தான் எடுத்துக் காட்டிய இடக்கைச் சுட்டுவிரலில், இந்த மானாம் தலைவியை ஏந்திக் கொண்டு வாழ்விப்பார்.
vlcsnap-2018-02-27-17h00m11s234.png

vlcsnap-2018-02-27-17h00m11s234.png