Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.37க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர்வாய் திறவாராய்
மெச்சும் ஒருகாற் கரம்தொட்டு மீண்டும் மிடற்றக் கரம்வைத்தார்
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றே தமைக்காட்டி
இச்சைஎனையும் குறிக்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.                   (இங்கிதமாலை)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

      நம் பதி அருட்ஜோதி அழகராவர். இவரைத்தான் இங்கு செச்சை அழகர் என்கின்றார். செச்சை என்றால், நீறு, சிவப்பு எனப் பொருள்படலின், அருளையும் ஜோதியையும் சுட்ட வந்த ஒரு சொல்லாகக் கொள்ளலாம். திருவொற்றிப் பெருமான், நம் ஆன்ம வடிவில் அருட்ஜோதியராய்ப் பண்டே தொட்டு மறைந்திருந்து, பக்குவத்தே நாமும் தாமுமாகப் பிரிந்தாற்போல் காட்டி, மறுபடியும் கூடினாற்போல் கூட்டி அனுபவிக்கச் செய்கின்றார். இந்த ஒற்றித் தியாகர், உலகியற் புலனிச்சை வசப்பட்டவர் அல்லர்; அருளியற் பேரின்ப நிலையில் இருப்பவர், மக்களையும் பக்குவப்படுத்தித் தம் நிலைக்கு ஏற்றித் தம்மையே தியாகமாய் வழங்கி வாழ்விப்பவர். இவர் பிச்சாண்டியாகத் தோற்றி வாய் பேசா மெளனியாய் இர்ந்ஹ்டு கொண்டு, ஒரு காலைக் கையால் தொட்டுக் காட்டுகிறார். பின்னர், அக்கையைக் கழுத்தில் வைத்துக் காட்டுகிறார். அவர் தொட்டுக் காட்டிய கால், ‘மெச்சும் ஒரு கால்’ எனப்படுகிறது. அதாவது எமனை உதைத்த, மரணத்தை மரணமடையச் செய்த அருள் வண்ண இடது பதமாகும். இதுதான் மெச்சப்படும் ஒப்பற்ற திருவடியாம். இதனைச் சுட்டுவதின் கருத்து, மரணத்தை மாய்த்து விடுவேன் என்பதாம். மரணத்தை மட்டும் ஒழித்து விட்டால் போதுமா ? அமுதம் அளித்து, ஆனந்தமாக வாழ்விக்கவே, பாற்கடலில் எழுந்த விடத்தை, அண்டத்தும், பிண்டத்தும் இல்லாதபடி, இந்தக் கண்டத்திலே அடக்கி வைத்திருக்கிறேன்..பார் இந்த நீலகண்டத்தை என்று பேசாத பேச்சால் சுட்டிக் காட்டுகிறார். அப்படிக் காட்டிவிட்டு தம்மையும், இந்நிலை பெற விழைந்து நிற்கும் இவளையும் குறித்துக் காட்டுகின்றார். நித்தியராய் இருந்து கொண்டு, ஆனந்த நடம் ஆடிக்கொண்டிருக்கும் தன்னைப் போல் அவளையும் ஒரு படித்தாய் விளங்கச் செய்வேன் என்ற கருத்தை அப்படி இங்கிதக் குறிப்பால் உணர்த்துகின்றார்.

       கையைப் பற்றுவதும், கழுத்தைத் தொட்டுக் காட்டுவதும். பாணிக் கிரகணம் என்றும், திருமாங்கல்யம் சூட்டி மணந்து கொள்ளலையுணர்த்தும் என்றும் உலகியலார் கூறுவர்.

     சுத்த சத்விசாரத்தில், கடவுளும், ஆன்மாவும், இயற்கையிலே இரண்டற்று ஒன்றாய் இருக்கிறதையுணர்ந்து கொண்டு, இங்ஙனம் பிரிவற அகநின்றே அனகமாக வாழ வேண்டியது நம் கடமை. ஊடலும், கூடலும் உடற் பற்றுடையோர் உபாய நெறியின் கூற்றே. உபாயத்தை விடுத்து, உண்மையைக் கொள்வது திருவாணை.
New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg