Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.41க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
கொடையா ஒற்றி வாணர் இவர் கூறா மெளனர் ஆகி நின்றார்
தொடையார் இதழி மதிச்சடைஎன் துரையே விழைவே(து) உமக்கென்றேன்
உடையார் துன்னல் கந்தைதனை உற்று நோக்கி நகைசெய்தே
இடையாக் கழுமுன் காடுகின்றார் இதுதான் சேடி என்னேடீ.......       (இங்கிதமாலை)

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    எல்லாம் கொடுத்து ஆனந்த வாழ்வு நல்கும் பரம்பொருள், ஒற்றியிலே வாழ்ந்து கொண்டிருப்பவர் தற்சமயம் மெளனமாய் வந்து முன் நிற்கின்றார், “ஆத்திமாலையும், கொன்றையும் சந்திரனும் சடாபாரத்தில் கொண்ட பெரியீர், உங்களுக்கு என்ன வேண்டும் ? என தலைவி கேட்கின்றாள்.

     அவரோ எல்லாம் கொடுக்க வல்ல கொடை வள்ளலாய் இருப்பவர். அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசுப் பொருளை அடையாளம் காட்டவே, தொடுக்கப்பட்ட திரு ஆத்திமாலையும், பொற்கொன்றையும், குளிர்மதியும் தலையில் அணிந்து கண்டு கொள்ளச் செய்துள்ளார். அவர் நமக்கு அருள உள்ள முப்பரிசு யாவை எனில்:

--------------------------------------------------------------------------------------------------------------------

1. ஆத்திமலர் மாலையால் சுட்டப்படுவது அருள் வண்ணப் பிரணவ தேகமாம்.
2. கொன்றை-பொற்கொன்றை, பொன் வண்ண சுத்த தேகமாகும்.
3. குளிர் வெண்மதி..நல்ல ஞான தேகம் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

     இப்படியான திரிதேக சித்திப் பேரின்ப வாழ்வையே நமக்கு அருள இருக்கும் நம் பதிபால் சென்று, அவர் தமது உண்மையை வெளிப்படையாய்க் காட்டிக் கொள்ளாது, பிச்சை எடுக்கும் கோலத்தில் இருப்பதைக் கண்டு, அவரிடம் யாது வேண்டும் என்று கேட்டால், அவருக்கு உண்மைத் தேவை மற்றெதுவுமில்லை ! நம்முடைய அறியாமையைப் போக்கி அறிவால் உண்மையை காணச் செய்வதும், அப்படி கண்டதை ஏற்று இன்புறச் செய்வதும்தான் அவருக்குத் தேவை ! ஆகவேதான், அந்தப் பக்குவ ஆன்மி கேட்டதற்கு விடையை யுணர்த்த முப்பொருளைக் குறிக்கிறார். முதலில் அவர் கட்டியுள்ள பழைய கந்தல் துணியைப் பார்க்கிறார், பார்த்துவிட்டு தன் பல்லைக் காட்டி நகைக்கிறார். இவைகளின் மெய்க் குறிப்பு: பழைய துணி பழமையாயிருக்கும் ஆகாச நிலை. வானிலே பிரிவறக் கலந்திருப்பது கால் ஆம் காற்று. பரமாகாச சொரூபியாம் கடவுளிடத்தில் கலந்து நிற்கும் அவரது அருட்சக்தியாம் பெண்...தையல் பொருந்தி இருப்பதால் தையல் கந்தை - அருட்ஜோதி வான்பொருளேயாம். அந்தப் பரந்த ஜோதிப் பரம்பொருளை முழுமையாகக் காண வேண்டுமானால், சிர நடு திகழ் திரயோதசாம்சக்கல்லை, அல்லது அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணையுண்மையைக் கண்டு விட்டால், அதுவே இறைநிறை  அனுபவத்தைத் தரும்.

     எங்கும் நிறை இறைஜோதிக் கனகாம்பரம், பொன்னம்பலமாகவும், அதன் நடு ஒளிரவரு ஆன்ம சிற்சபையாம் சிற்றம்பலம், அருள் ஒளியாம் நகை காட்டி சுகப் பெரும் வாழ்விற் கூட்டிவைப்பதாகவும் இருக்கின்றன.

       மேல், இடையாக் கழுமுள் காட்டுதல் ஆவது. அம்பலவாணன் பல் ஆகிய நகைக் காட்சியால், திரிமல திரிபுரம் அழிபட்டுத் திரிதேக அனுபவம் சித்திப்பதையுணர்த்துவதாம். இதனால் கழுமுன் ஆகிய சூலம், மும்முனை கொண்ட திரிசூலமாய் வழங்கப் பெற்றுள்ளது.

          ஆண்டவரை வாழ்த்தும் வாழ்த்து நம்மையே வாழ்விப்பது போல, அவர் தேவை நம் தேவையே ஆகி, நமக்கே பெறுவிக்கும் இன்ப வாவுதான் எவ்வளவு இங்கிதமாக இவ்வொரு செய்யுளில் அமைந்துள்ளது. அறியாமையால் புலப்பொருள் கண்டு உலப்புறல் (அழிபடுதல்) வேண்டாம். அருட்ஜோதியாகவே அருள் இன்ப வாழ்வு பெற இந்த அருட்பொருள் வெளியாக்கப் பெறுகின்றது.
IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg