Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.44க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
பொதுநின்(று) அருள்வீர் ஒற்றியுளீர் பூவுந்தியது என் விழி என்றேன்
இதுஎன்று அறிநாம் ஏறுகின்ற(து) என்றார் ஏறு கின்றதுதான்
எதுஎன்று உரைத்தேன் ஏதுநடு ஓர் எழுத்திட் டறிநீ என்றுசொலி
எதிர்நின் றுவந்து நகைக்கின்றார் இதுதான் சேடி என்னேடி...                       (இங்கிதமாலை).

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
   
     எங்கும் நிரம்பிப் பொற் பொதுவிலே இருந்து கொண்டு, யாவையும் தோற்றுவித்துக் கொண்டுள்ளார். அப்படி எங்கும் பொதுவில் திகழ்பவரே சிறப்பாகத் திருவொற்றியிலே எழுந்தருளியுள்ளார். இவரைப் பார்த்துப் பார்த்துப் பார்த்துக் கொண்டே இருந்ததாலே, தலைவியின் கண் பூத்துப் போயிற்றாம், இது தலைவியின் கூற்றாகக் கொண்டுதான் பொருள் காண வேண்டும். ஆன்மத் தலைவி கண்ட இறையொளி அனுபவம்தான், சிவஜோதிக் காட்சி, அரன் விந்தம், அரவிந்தக் காட்சியால் நிரம்பிவிட்டது அவள்விழி. இதுதான் அவள் கண் பூத்தது எனப்பட்டது. அவள் கண் அரவிந்தக் கண்ணாய், தாமரைக் கண்ணாய் இருந்து எங்கும் அதுவாகவே காண்கின்றதாம். தாமரைக் கண்ணி, பதுமாட்சி, வனஜாட்சி முதலியனவாகக் கொள்ளும் உலகம்.

     இப்படி, தன்னையே தாமரைக் கண்ணியாக, தலைவரிடம் சொல்லிக் கொண்டபோது, அவர் சொல்லுகின்றார், அது, தாம் ஏறியது அன்று ! பின்னர், தலைவி சந்தேகம் தெளிதற் பொருட்டி. அது எது ? என்று கேட்கிறாள். அப்படி கேட்ட அவளுக்கு விடையாக “எது” என்றதற்கு நடுவிலே ஓர் எழுத்து சேர்த்து அறிவாயாக”, என்றார். அதாவது “எது” என்பதற்கு நடுவே ரு-என்ற எழுத்தைச் சேர்த்தால் எருது என்றாகும். ஆம், அந்த எருதுதான் விடையாம் ரிஷபம். இந்த ரிஷபம் உண்மையில் திருமாலே. அவர் கண்தான், அந்தத் தாமரையாகப் பூத்தது என்று குறித்தார். இதன் குறிப்பு உண்மையை விரிவாக சிந்தனை செய்து தெளிவாம்.

     எங்கும் நிறை பொற்ஜோதியே, சிவஜோதி-அரன்விந்தம் ஆம் தாமரை. அந்த அரவிந்தமே இப்போது இந்த மனிதனில் ஆன்ம சிற்றணுவாக இருக்கிறது. இதுவே, நமது மெய்யுருவும் கடவுட் சிற்றுருவும் ஆம். இதில்தான், தாமரையாய் நாமரையாய்க் கூடாமற் கூடி இருந்து கொண்டு, எங்கும், இறைஜோதிக் காட்சியைக் கண்டு கொண்டுள்ளது இந்த ஆன்மா.

     ஆன்மாவே, அரியாக அகமிருந்து, ஐம்பூத உடலாம் அரனைத் தாங்கி இருப்பதை அறிவோம். இதுதான், திருமால் ரிஷபம் சிவனுக்கு வாகனமாகக் கற்பனை. மேலும், ஆன்மாவே அகத்திலே அருள் ஒளியாக, அரி அரனாக, அரவிந்தமாக விளங்குகின்றது. இந்த அரிக்குக் (கண்+அவன்), கணவன், அரனே, அதனையே, ‘அரனுக்கு அரியலால் தேவி இலை’ என்பர். மேலும் அரியைச் சூரியநாராயணன் எனவும், அரனைச் சந்திரசேகரன் என்றும் கூறற்குக் காரணம், ஆன்மாவிடத்திருந்து சக்தி பெற்று உடல் விளங்குவதே போல், பன்னிரு சூரிய கலையில் ஒன்றைக் கொண்டுதான் உடல் வாழ்வு நிகழ்கின்றது. அன்றியும், அரியை, ஓணத்தான் எனவும், அரனை ஆதிரையான் எனவும் கொண்டு., இறை இயல் விளங்க, அவ்விரு நட்சத்திரங்களுக்கு மட்டும் திரு என்ற அடைமொழி கூட்டித் திருவோணம், திருவாதிரை என்றுள்ளனர். வானத்து உடுக்கணத்திலும், திருவோணமுதல், திருவாதிரை உட்பட பன்னிரு நட்சத்திரங்கள் இருப்பதும், அதில் ஈற்றுத் திருவாதிரையே உடல் வளர்ச்சியில் பதினாறு கலைச் சந்திரன் அம்சமாக வளர்கின்றதும், இந்த ஆதிரை முதல் பதினாறு நட்சத்திரங்களின் முடிவிலே தான் ஓணம் காணப்படுவதாகவும் அறிகிறோம்.

     அன்றியும் உடலியல் தத்துவ முடிவும், ஆன்ம இயல் தத்துவ அடிநிலையும் ஒன்றியுள்ள இடம் நம் தலை நடுவுள்ளதாம். இந்த அனுபவத் தலையிடமே, கங்கை எனப்படுவது, யாதெனில், கங்கை, கம்+கை எனப்பிரிந்து திகழும். கம்-என்றால் தலை, கை-அனுபவ நிலையைச் சுட்டுவது, ஆகவேதான் கங்கை நம் தலைநடு அனுபவ நிலையாகக் கொள்ளப்படுவது. இதுவே தாடலை, (தாள்+தலை) என்றும் கூறப்படும்.

     அன்றியும், இந்தக் கங்கை, அரியின் திருவடிக் கீழும், அரனின் திருமுடி மேலும் உள்ளதாகச் சொல்லப்படும். இவ்வுண்மையை அறியாமல், அரியின் அடிக்கீழ் கிடக்கும் கங்கை ஆற்றினை, அரன் தலை முடிமேல் தாங்கிக் கொண்டிருக்கின்றான் என்று உயர்வு தாழ்வு பேசுவது அறியாமையே.

     அன்றியும், நம் இறை ஜோதி விளங்கும் தலைநடு ஒளிநிலை ஆயிரம் இதழ்த் தாமரையாகக் கூறப்படும். நமது உயிர்க் காற்றாகிய வாசி முடிவில் சிவமாவது போல அவ்வாசியோடு கலந்து ஓடிக் கொண்டிருக்கிற நம் எண் (எண்ணம்) முதலிலிருந்து ஒவ்வொரு எண்ணிறுதியிலும் உகரமாய் (அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று..)  உ....வாகவே வந்து ஆயிரம் எனும் போது  ம்  என வாய் மூடிக் கொள்ளுகிறது. அப்போது அந்த ம் - இன் உண்மை மோன ஜோதியாக உள் விளங்குவதாம். எனவே இந்த மகர மெய் ஒளி நிலை ஆயிரம் இதழ் தாமரையாக இசைக்கப்பட்டுள்ளது. அக ஆன்ம விழிப்பு உண்டாகாத நிலை, ஆயிரத்தில் ஒன்று குறைபட்ட நிலையாகும். இக்குறைவு நிறைவேறும் போது அவ் ஆன்மாவே சிவ ஜோதியைக் கண்டுள்ள அரவிந்தனாக விளங்குவதாம்.

      இந்த ஆன்மா கண்டிருக்கும் அரவிந்த ஜோதி நிலை, நம், ஆன்ம நடுவைச் சூழத் திகழும் சுழல் ஒளியாக, சக்கர ஜோதியாக, சுதர்சனமாக மொழியப்படும். இந்த சுதர்சனக் கண்ணனே பூ உந்தியவன் (பதுமநாபன்.) சுதர்சனம் என்பது, சக்கராயுதம் என்று வழங்கப்படுகிறது. உண்மையில், இது தன்னையே, தம் அக ஆன்ம வடிவத்தையே கண்டிருத்தலாம், தற்காட்சி ஆகும். அது பெற்றுள்ள ஆந்த ரிஷப ஜோதிக் கண்ணனே இப்போது இந்தப் பல்தெரிய நகை செய்திருத்தலை எதிர் கண்டிருக்கும் இவ் ஆன்மத் தலைவி என்பது குறிப்பு.

     அந்த அந்த ஆன்ம அரிக்கு, அரவிந்தக் கண் வழங்கி எங்கும் அரவிந்த ஜோதி கண்டு பூத்த கண்காட்சியிலே மயங்கிக் கிடக்கின்றானம். சிதம்பராயலத்தில்,  அங்கே அப்படியே பூத்த கண் வளர, சுத்த சுக நித்திரையில் அறிதுயில் புரிந்து கொண்டுள்ளார் அந்த அரி.

     இன்று, அந்த அன்மத் தலைவிக்கோ, பூவுந்திய கண் மூடாமே, விழிப்போடு என்றும் இருந்து கொண்டே திரிதேக சித்தியோடு அருட் ஜோதி ஆட்சி புரிந்து கொண்டே இருக்க அருள் பாலிக்கின்றார்.
vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png