Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Arutperunjothi Agaval Lines 1245-1246..Explanatory Note by Swami Saravanananda.
திரு அருட்பா..அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 1245-1246.

சுவாமி சரவணானந்தா அவர்கள் வரைந்த உரை விளக்கம்.

------------------------------------------------------------------------

1245. அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
1246. எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

உயிரினங்களை, இனம் பிரித்தறிவதற்கு, அந்த அறிவு விளக்க நிலையே படித்தரமாய் அமைந்துள்ளது. ஓரறிவுடைய தாவரம் முதல் ஆறறிவுடைய மக்கள் வரை குறிக்கப்பட்டுள்ளன. இந்த மனிதப் பிறவியில் வெளியாகியுள்ள பகுத்தறிவே உண்மையைத் திருவருளால் உணரவல்லதாயிருக்கின்றதாம். அவ்வறிவு, திருவருணிலை சேராதபோது பொறிபுலன் உணர்வோடு சேர்ந்து உலகிடையுழன்று கொண்டும், அவத்தைகள் பல பட்டுப்பட்டு, இன்பம் ஈதென அறியாது, இருளிலே பிறது, மருளிலே வளர்ந்து, மருளிலேயே மடிந்தும் போய்க் கொண்டிருக்கின்றதாம்.

பக்குவ மனிதன், திருவருள் ஞானம் அடைந்து, தன் அறிவுக்கு அறிவான அருளையே இன்று அறிகின்றான். அந்த அருளேதான் இதுகாறும் அகமிருந்து உயிரையும், உணர்வையும், உடலையும் வழங்கி வந்ததை இப்போதே நன்கு தெளிவாக அறிந்து கொள்ளுகின்றான். அந்த அருளேதான், அருவ சத்தாக ஆதிமுதல் இருந்து கொண்டும், சித்விளக்க உருவாகப் புறத்தே தோன்றித் தோன்றி மறைந்துகொண்டும், இப்போது இந்த சத் சித்திடையே உயிருணர்விலே அருவுருவ அருளின்பமாக வெளிப்பட்டுள்ளதாம். இதுவே ஈண்டு, அறிவுக்கு அறிவினில், அது அதுவாய்க் குறிக்கப்பட்டுள்ளதாகும். அருளால் விளங்குவதுதான் இந்தச் சத்து, சித்து, ஆனந்தம் என்ற குறிப்பு இந்த அடியில் காட்டப்பெற்றுள்ளது. அது அது அது என்பன, சத்து, சித்து ஆனந்தமேயாம்.

இந்த ஆனந்தம், இயற்கை இன்பமாக அன்று தொட்டே ஆன்மாவில் மறைந்து கிடந்துள்ளது. அவ்வின்ப வெளியீட்டின் பொருட்டே சூழ் ஒளிநிலை பலப்பலவாகத் தோன்றி, பரிணமித்துக் கொண்டே வந்துள்ளதாம். பொருள் நிலைத் தோற்றங்கள், கிரியா சக்தி இயக்கங்கள், ஞான சக்தி விளக்கங்கள், யோக சக்தி சித்திகள், அருட்சக்தி அனுபவங்கள் எல்லாமும் அச்சூழொளியின் பரிணாமங்களேயாம். ஈற்றிலுண்டாகிய இந்த அருட்சக்தி அன்பவத்தில்தான், இறை இயற்கை நிறை இன்பம் வெளியாகின்றதாம். இதுகாறும் அவ்வின்பம் அந்த அகமிருந்தே அனகமாக விரிவுற்றுள்ளதையே, எறிவற்று (நீங்குதலின்றி) ஓங்கியது என்கின்றார்.

 

vlcsnap-2018-02-27-17h00m11s234.png

vlcsnap-2018-02-27-17h00m11s234.png

Download: