கவிஞர். கங்கைமணிமாறன்
ஆணையிட்டார்..அவர்!
தெய்வமணி மாலையின் சிகரமாய் அமைந்த பாடல்..அனைவர் நாவிலும் அறிவமுதாய் அமர்ந்த பாடல்... ஒருமையுடன் எனத்தொடங்கி உயிர்வருடும் ஒரு பாடல்.
நால்வர் பாடல் வரிசையில் நாடெங்கும் உலாவரும் நற்றமிழ்ப்பாடல்.
நாவாரத் தேவாரம் பாடும் நல்லோர் அனைவரும் இந்தப் பாவாரம் அணியாமல் பரம்பொருளை வேண்டார் என்பது வெள்ளிடைமலை.
பதின்பருவத்தில் சுரந்த பக்திப் பாசுரங்களின் மகுடம் இது.
அதில் ஒரு வரி.. நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் என்பது.
இது மேம்போக்காய்த் தன்னை முன்னிலைப் படுத்தி நோயில்லாத வாழ்வை எளியேற்குத் தா ..என்பதான விண்ணப்பமாகத்தான் எல்லோரும் நினைத்திருக்கிறோம்.
உச்சரிப்பார் ஒவ்வொருவருக்குமான சுய ஆரோக்கிய விருப்பம் சார்ந்த வேண்டுகோள் என்பதைத் தாண்டி...இவ் வரியில் இருக்கிறது ஒரு பொறி.
எனைச்சூழ்ந்த இந்தச் சமூகமே நோய் நொடியற்று வாழவேண்டும். உடலால் உள்ளத்தால் ஒருபிணியும் இன்றி நலமே வாய்க்கப்பெற்ற யாக்கை யாவர்க்கும் அமையவேண்டும்.
தங்குதடையின்றி எங்கும் நிலவும் அந்த நோயற்ற வாழ்வினிடையே ...யான் மனமகிழ்ந்து வாழவேண்டும் என்பதே அவர்தம் இதயமார்ந்த பிரார்த்தனை.
எல்லாம் அமைந்த நோயற்ற வாழ்வுடைய மனிதர்களின் திருக்கூட்டத்தில் நான்வாழவேண்டும்...என்பதே பெருமானின் விழைவும் விண்ணப்பமும் ஆகும்.
*எனை அடுத்தார் தமக்கெல்லாம்  இன்புதரல் வேண்டும்*
*எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும்* என்பதன்றோ அவர்தம்  சுத்த சன்மார்க்க வேண்டுகோள்.
அதையும் 
இதையும்
கூட்டிப் பார்த்தால் கிடைக்கும் விடையில்
மின்னி மிளிர்கிறார் வள்ளலார்.