கவிஞர். கங்கைமணிமாறன்
உலகரைத் திருத்தவந்த உரிமைக்குரல்
*ஒரு பானை சோற்றுக்கு... பல பானைகள் செய்கிறான் குயவன்! * என்று ஒரு புதுக்கவிதை எப்போதோ படித்த ஞாபகம்.
உழைப்பாளிகளின் வியர்வைத் துளிகளை அர்ச்சித்து உள்ளுக்குள்ளேயே அழும் கவிதை இது.
உழைப்பவன் ஓய்வின்றி உழைத்துக்கொண்டேதான் இருக்கிறான். அதில் மாற்றமெதுவும் இல்லை.
அவனை ஏய்த்துப் பிழைப்பவர்கள் எண்ணிக்கை எப்போதும் ஏறுமுகத்திலேயே இருக்கிறது.இதிலும் மாற்றம் எள்ளளவும் இல்லை.
    வள்ளலார் இந்தக் கொடுமை கண்டு கொதித்தார்.
*பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்..பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்! *-என்ற வேதனைக்குரலில் வெடிக்கும் சோகம் எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அந்த நூற்றாண்டின் அவலத்தைப் பிழிந்த அருட்பா அல்லவா இது!
இன்றும் தீர்ந்துவிட்டதா இந்தக் கேள்வியில் மையங்கொண்ட வேதனை!
*ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.*.என்று நெக்குருகி அழுதாரே அந்த அழுகைக்கு இந்த நூற்றாண்டாவது பதில் வைத்திருக்கிறதா!
ஒரு துறவியின் உச்சபட்ச உரிமைக்குரல்- அப்பர் பெருமானுக்குப் பிறகு இப்படி அண்டம் அதிரக் கேட்டது அப்போதுதானே!
           இந்தக் கோணத்தில் இளைஞர் சமூகத்தின் முன் வள்ளலாரை அதிரடியாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிற சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறேன்- மேடைகள்தொறும் யான்.
  
*அருட்பா -பஜனைப் பாடல்களின் தொகுப்பல்ல* 
என்பதை நெருப்பாய் நிமிர்ந்து
பொறுப்பாய்ச் சொல்லவே
எம் சன்மார்க்கப் பயணம் ...
எழுத்திலும் மேடையிலும்!