SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்
வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்

\ இந்த உடம்பில் உயிர் எப்படி ஒன்றுதான் இருக்க முடியுமோ அப்படி இந்த உலகத்தில் இறைவனும் ஒருவனாகத்தான் இருக்கமுடியும். பலப்பல தெய்வங்கள் உண்டு என்றால் இந்த உடம்பிலும் உயிர் இரண்டு மூன்று என்று சொல்லலாமே என்கிறார். அவரது பாடலைப் பாருங்கள்)


உருவராகியும் அருவின ராகியும் உரு அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள்
என்றும்
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று
எனலாமே. .(பாடல் எண் 1627 )1

இறைவன் ஒருவன்தான் என்று உணராமல் பலப்பல தெய்வங்களைச் சிந்தனை செய்கின்றவர்களும் ,கைலாயம் ,வைகுண்டம் போன்ற பலப் பல கதிகள் உண்டென்று சொல்வோரும், பொய்யாக வந்த கலைகளாகிய இதிகாசங்கள், புராணங்கள் போன்ற கலைகளைச் சொல்வோரும், பொய்யான சமயங்களை மெச்சுகின்றோரும் உண்மையான திருவருள் விளக்கம் இல்லாதவர்கள் என்றும் அவர்கட்கெல்லாம் அறிவு விளக்கம் தரவேண்டும் என்றும் இறைவனை வள்ளலார் வேண்டுகின்றார்

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பல பல செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார்
மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே . (பாடல் எண் 961)2


ஜாதியும்,மதமும்,சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி 212 )3

ஜாதி, மதம்,சமயம் அத்தனையும் பொய் என்றால் அவற்றில் கூறப்பட்டுள்ள சம்பவங்களும் தெய்வங்களும் மட்டும் எப்படி உண்மையானதாக இருக்க முடியும்.?

1873 வது ஆண்டு ஐப்பசி மாதம் ஏழாம் தேதி காலை எட்டு மணி அளவில் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் செய்த பேருபதேசத்தின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்;
\
\"நாம்,நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம் ,இதிகாசம், முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம் .ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழு உக் குறியன்றி தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் ,வைகுண்டபதி என்றும்,சத்ய லோகா திபதி என்றும் பெயரிட்டு , இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம், முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றார்கள். தெய்வத்திற்குக் கை கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவற்குப்i பதில் சொல்லத்தெரியாது விழிக்கின்றார்கள்.இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது ,அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள்.ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை .அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை.
இதுவரையிலும் இப்பொழுதும் கோடிக்கணக்கான மக்கள் சமயம் சார்ந்த தெய்வங்கள் அந்தந்த வடிவத்திலும் அந்தந்தப் பெயர்களிலும் உண்மையிலேயே இருப்பதாகவே நம்பி வழிபட்டு வருகிறார்கள். தெய்வத்திற்குக் கை கால் முதலியன இருக்குமா.?என்று யாரும் சிந்தித்ததே இல்லை. வள்ளலார் கூறியுள்ள ஒவ்வொரு வரியையும் நன்கு படித்து ஊன்றிச் திந்திக்க வேண்டும். கைலாசபதி, வைகுண்டபதி என்றெல்லாம் பெயர் வைத்தும்,இடம், வாகனம், ஆயுதம், வடிவம் , ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு இருப்பதுபோல் அமைத்தும் உண்மையாக இருப்பதாகவே சொல்லியிருக்கின்றார்கள் என்றார் வள்ளலார். .இதைச் சொல்வதற்கு வள்ளலாருக்கு எந்த அளவு ஞானம் இருந்தது என்று சிந்திக்கவேண்டும். பெரியவர்கள் என்று பெயர் இட்டுக்கொண்டவர்களும் உண்மை அறியாது பாமர மக்களைப் போலவே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள். என்றார் .. சமயத் தெய்வங்களை நாம் எப்படி நம்புகிறோமே அப்படித்தான் நமது முன்னோர்களும் நம்பி வழிபாடு செய்து நம்மையும் நம்ப வைத்து விட்டார்கள் .வள்ளலாரைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத யாருக்கும் இந்த உண்மை தெரியப் போவதில்லை. யாருக்கும் தெரியாத இறை உண்மை வள்ளலாருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது .

வள்ளலார் கூறியுள்ள வாசகங்களின் உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் எவ்வளவு பேருக்கு வரும்.? வள்ளலார் இப்படிப்பட்ட வாசகங்களை ஏன் சொல்லவேண்டும்? இதுவரை மக்கள் ஏமாந்தது போதும்.வருங்காலத்து மக்களாவது இறைவனின் உண்மையைத் தெரிந்து, அவனை இந்தப் பிறவியிலேயே அடைந்து இறவாமல் வாழமாட்டார்களா என்ற ஆதங்கம்,அளவற்ற இரக்கம் நம்மீது கொண்ட கருணையினால் சொன்னார். .. i
இறைவனைப் பற்றிய உண்மையைக் கூற வல்லவர்கள் இந்த மண்ணுலகத்திலோ வானுலகத்திலோ, அல்லது வேறெங்குமோ இல்லை என்கிறார் வள்ளலார். .
எய்ப்பந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும்
இணையில் ஒளி உருவர் என்றும்
இயல் அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுவதன்றி உண்மை சொலவல்லார்
மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
காய்ப்பந்த மரமென்று கண்டு சொல்வதன்றிக்
காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டு
கொள மாட்டத்
தாய்ப் பந்த உணர்வுடையேன் யானோ சிற்சபையில்
தனி முதல்வர் திருவண்ணம் சாற்ற
வல்லேன்தோழி. ( பாடல் எண் 1120)5
ஏய்ப் பந்தி வண்ணர் என்றதும், அந்தி வண்ணர் என்றதும் உருவங்களைக் குறிக்கும்.அடுத்ததாக இணையே இல்லாத ஒளி வடிவம்தான் இறைவடிவம் எனச் சில சமயங்களும், கூற., சில சமயங்கள் இறைவனை அருவம் என்றே கூறுகின்றன இறைவன் உருவமா, அருவமா அல்லது ஒளியா ? உண்மை எது
சில சமயங்கள் இறைவனை உருவமாகவும்,சில சமயங்கள் அருவமாகவும், மற்றும் சில உருஅருவம் என்றும் விளக்கி இருக்கின்றன. சமயங்கள் கூறும் அத்தனை தெய்வ விளக்கங்களையும் உருவம், அருவம், உருஅருவம் என்ற மூன்று கட்டங்களுக்குள் அடக்கிவிடலாம்.ஆனால் வள்ளலார் இறைவன் உருவமும் அல்ல,அருவமும் அல்ல,அருவுருவமும் அல்ல,என்கிறார் .
உருவாய், அருவாய் உருஅருவாய் இவை ஒன்றும் அல்லீர் வாரீர் என்று பாடுகிறார் இதே கருத்தைத்,.தான் பாடிய அருட்பெருஞ்சோதி அகவலில் கூட
ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்று என விளங்கிய அருட்பெருஞ்சோதி என்றார்.
அடுத்து ஒளிவடிவம் பற்றிய வள்ளலார் கருத்து என்ன என்று பார்ப்போம்.
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்றது ஒளி ஒன்றே எல்லாம் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே என்று பாடினாரே என்றால் அடுத்த பாடலிலேயே அவர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.
இரண்டு பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன.
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டமெலாம் விளங்கி
ஓங்குகின்றதன்றி அண்ட பகிரண்டங்களிலும்
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
விளம்பும் அகப்புறத்டுதினொடு புறப்புறத்தும் நிறைந்தே
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை
உலகறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி
தளிநின்ற ஒளிமயமே வேறிலை எல்லாமும்
தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே........1163
எல்லாமே ஒளி மயம்தான் என்ற கருத்தை வள்ளலார் மறுப்பதைக் காணலாம்.இதோ பாடல்

ஏற்றிடு வேதாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
என்ற மொழி தனை நினைத்தே இரவில் இருட்டறையில்
சாற்றிடு மண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளைத்
தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள் பற்பலரைச்
செப்பிய அவ்விருட்டறையில் தனித்தனி சேர்த்தாலும்
ஊற்றும் இருள் நீங்கி ஒளி காண்பதுளதோ
உளதேல் நீ உரைத்த மொழி உளதாகும் தோழி ..........1164
ஒளி மயமே எல்லாம் என்று வேதாகமங்கள் சொல்வது உண்மையானால் இரவிலே இருட்டு அறையிலே மண் பாத்திரங்கள், மரவட்டில் போன்ற சில பல கருவிகளை வைத்தால் ஒளி வரவேண்டுமே வந்தால் நீ சொல்வது உண்மை என்றார்.இல்லை என்றால் வேதாகமங்கள் சொன்னது உண்மையல்ல.'ஆக இறைவன் உருவமும் அல்ல, அருவமும் அல்ல, உருவருவமும் அல்ல,ஒளியும் அல்ல என்றால் இறைவனின் வடிவம்தான் என்ன ?
சித்தர் பாடலும் ஒளியை நாடி மக்கள் மாண்டுதான் போனார்கள் என்கிறது.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடிகோடி கோடி எண்ணிறந்த கோடியே

. கடவுளைப் பற்றிய உண்மையை யாராலும் சொல்லமுடியாது என்பதே வள்ளலாரின் முடிந்த முடிபான கருத்து.
இறைவனின் வடிவத்தை இதுவரை வந்த அருளாளர்கள் உருவாய் ,அருவாய்,உருஅருவாய் ,ஒளிமயமாய் என்றல்லாம் விளக்கி உள்ளார்களே ஒன்றும் புரியவில்லையே என்று வள்ளலாரைக் கேட்டால் இவை அனைத்தும் இறை வடிவம் அல்ல எல்லாமே வாய்ப் பந்தல்தான் என்றும் . அவனது உண்மையான நிலையைச் சொல்லக்கூடியவர்கள் இந்தப் பூமியிலும் இல்லை வானுலகத்திலும் இல்லை என்றும் வள்ளலார் கூறியுள்ளதை ஏய்ப்பந்தி வண்ணர் என்று தொடங்கிய பாடலில் முன்பே கண்டோம்.ஒளி வடிவமும் அல்ல என்ற கருத்தையும் ஒளி ஒன்றே என்ற தொடக்கமுடைய பாடலில் வள்ளலார் கூறியுள்ளதையும் கண்டோம்.இறைவன் மனிதர்களின் மன உணர்வு செல்லாத் தலத்தாடும் பெருமான் என்றும் அதனால் அவனது வடிவத்தை யாராலும் சொல்ல முடியாது என்றும் கூறுகிறார்.
காற்றுருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார்
காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர் அதை வேறொன்றால் மறுத்தால்
விழித்து விழித்து எம்போல்வார் மிகவும் மருள்கின்றார்
தோற்றும் அந்தத் தத்துவமும் தோற்றாத் தத்துவமும்
துரிசாக அவை கடந்த சுக சொரூபமாகி
மாற்ற மன உணர்வு செல்லாத் தலத்தாடும் பெருமான்
வடிவுரைக்க வல்லவர் யார் வழுத்தாய் என் தோழி
(1124)6
சிறு தெய்வ வழிபாடு

வள்ளலார் காலத்திற்கு முன்பும் பின்பும் இப்போதும் சிறு தெய்வங்களுக்கு உயிர்ப் பலி இடும் வழக்கம் உள்ளது எருமை, ஆடு, கோழி,முதலிய வீட்டு
விலங்குகளும், பறவைகளுமே பலியாயின .இவை பலி இடுவோருக்கு அடங்கியவை மட்டும் அல்ல அவர்கள் உணவாகக் கொள்ளுவதும் ஆகும்.
பிடாரி கோயில்களிலும், காளி கோயில்களிலும் கருப்பு கோயில்களிலும் நூற்றுக் கணக்கான எருமைகள் ,ஆடுகள், கோழிகள், பன்றிகள் முதலியவை பலியாகும் .இந்தத் தெய்வங்களை நலி தரும் சிறு தெய்வங்கள் என்பார் வள்ளலார். இந்தக் கோயில்களைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் பயந்தார்
நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே
பல பெயர் நாட்டிப்
பலி தர ஆடு பன்றி குக்குடங்கள் பலிக்கடா
முதலிய உயிரைப்
பொலியுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி
நொந்து உள நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்ட
காலத்தும் பயந்தேன் (275)25

கல்வி அறிவு மிகுந்து இருக்கும் இந்தக் காலத்தும் அநேகமாக எல்லா அம்மன் கோயில்களிலேயும் ஆயிரக் கணக்கான ஆடுகள், மாடுகள், கோழிகள்,பன்றிகள் முதலியவைகள் பலி யிடப்பட்டேவருகின்றன .மாமிசம் உண்போர் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களையும் விட்டு வைப்பதில்லை .அந்த நாட்களிலும் உயிர்ப் பலி ஏராளமாக நடைபெறுகிறது .குழந்தைகட்குக்
காது குத்தல் போன்ற வீட்டுச் சடங்குகளிலும் இந்தச் சிறு தெய்வங்கள் பெயரால் உயிர்ப் பலி இன்றும் தொடர்கிறது. இந்தக் கோயில்களில் வள்ளலார் வணங்கவில்லை. மாறாக பயந்தார் .இந்தச் சிறு தெய்வங்கள் உண்மையில் இல்லை இல்லை என்று நமக்கு மற்றவர்கள் கூறாத உண்மையை வள்ளலார் கூறினார் .
திரு அருட்பா முழுவதையும் ஊன்றிப் படித்தால்தான் வள்ளலாரின் உண்மையான கருத்தைப் புரிந்து கொள்ளமுடியும் .அவரும் எல்லாத் தெய்வங்களையும் நன்றாகவே பாடி இருக்கின்றார். இறைவன் ஒருவனே என்றும் அவன் அருட்பெருஞ்சோதி என்றும் வள்ளலார் கூறியுள்ளார் .இறைவன் ஒருவனே என்றால் இத்தனை தெய்வங்களையும் வள்ளலார் ஏன் பாடவேண்டும் என்ற வினா எழுகிறது. அதற்கும் வள்ளலார் விடை தருகிறார்.

அவர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய
உண்மை ஒன்றென்றே
எண்ணியதல்லால் சச்சிதானந்து இறையும் வேறு
எண்ணியதுண்டோ
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனிச்
சிறிதும் இங்காற்றேன்
திண்ணமே நின் மேல் ஆணை எந்தன்னைத் தெளிவித்துக்
காப்பது உன் கடனே (பாடல் எண் 977 )7
வண்ணங்கள் வேறு வேறாக இருக்கலாம். வடிவங்கள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அதிலே நிலையான உண்மை ஒன்று உள்ளது என்கிறார். அது என்ன உண்மை. ?
சைவம் முதலாக நாட்டும்-பல
சமயங்கள் எல்லாம் தனித் தனிக் காட்டும்
தெய்வம் இது வந்து பாரீர் –திருச்
சிற்றம்பலத்தே திரு நட ஜோதி (பாடல் எண் 2078 ) 8
திருச் சிற்றம்பலத்தே உள்ள ஜோதியைத்தான் எல்லாச் சமயங்களும் தனித் தனியாகத் தங்கள் தங்கள் தெய்வமாகக் காட்டுகின்றன என்கிறார் வள்ளலார். அருகர் ,புத்தர், அயன் ,நாராயணன்,அரன் ஆதி சிவன் ,சதாசிவன், சக்திசிவன் போன்ற எல்லாப் பெயர்களும் ஒருவனாகிய அந்த இறைவன் பெயரே என்கிறார் வள்ளலார்.
பெருகிய பேரருள் உடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணன் என்பேன் அரன் என்பேன் ஆதி சிவன் என்பேன்
பருகு சதா சிவம் என்பேன் சக்தி சிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன்
சுத்த சிவம் என்பேன் இவை சித்து விளையாட்டே(2532 ) 9
இந்தப் பாடல் மூலமாக வள்ளலார் நமக்கு என்ன சொல்ல விழைகிறார். வண்ணங்களும், பெயர்களும் மாறுபடுவதால் உண்மையிலேயே அத்தனை தெய்வங்களும் இருப்பதாக நம்பிவிடவேண்டா.ம். ஒரே ஒரு தெய்வம்தான் உள்ளது .எல்லாப் பெயர்களும், எல்லா வடிவங்களும் அந்த ஒரு இறைவனைத்தான் குறிக்கின்றன என்ற உண்மையைத்தான் இந்தப் பாடல் சொல்கிறது.
இந்த உலகைப் படைத்தவன் பிரம்மா என்று இந்துக்கள் சொல்லுகிறார்கள். அல்லாதான் படைத்தார் என்று இஸ்லாமியர் சொல்லுகின்றார்கள். இல்லை இல்லை எங்கள் பரம பிதாதான் படைத்தார் என்று கிருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.மூன்று பேரும் தனித் தனியாகப் படைத்திருந்தால் மூன்று உலகங்கள் அல்லவா இருக்கவேண்டும். அவர்கள் சொன்னதெல்லாம் நாம் வாழ்கின்ற இந்த உலகம்தான் .. இந்த உலகத்தை யாரோ ஒருவர்தான் படைத்திருக்க வேன்டும் அந்த ஒருவரை இந்துக்கள் பிரம்மா என்றும், முகம்மதியர்கள் அல்லா என்றும், கிருத்துவர்கள் பரம பிதா என்றும் சொல்லுவதுதான் உண்மை. இந்த உண்மையை ஒவ்வொரு சமயத்தவரும் உணர்ந்துகொண்டால் நாம் அனைவரும் ஒரே ஒரு கடவுளைத்தான் வெவ்வேறு பெயர்களில் வணங்குகிறோம் என்ற பேருண்மை நமக்கு வெளிப்படும். சமயச் சண்டையும், மதச் சண்டையும் அடியோடு ஒழிந்துவிடும்.இவ்வளவு உருவங்களும் அதற்கேற்ற கதைகளும் எவ்வாறு வந்தன என்றுக் வள்ளலார் விளக்குகின்றார்.

நாடுகின்ற பலகோடி அண்ட பகிரண்ட
நாட்டார்கள் யாவரும் அந் நாட்டாண்மை வேண்டி
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
நித்தியர்கள் என்றும் ஆங்கே நிலைத்ததெலாம் மன்றில்
ஆடுகின்ற திருவடிக்கே தங்கள் தங்கள் தரத்துக்கு
ஆனவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
பாட்கின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
பலப்பாட்டே திருச்சிற்றம்பலப் பாட்டே தோழி ..........2524
இதுவரை வந்த சமயத்தலைவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் தரத்துக்கு என்ன தோன்றியதோ விளங்கியதோ அதை இறை விளக்கம் எனத் தந்தார்கள் என்பதே வள்ளலார் தரும் விளக்கம்.
வடிவங்கள் வேறு வேறாய் இருந்தாலும், பெயர்களும் வேறு வேறாய் இருந்தாலும் எல்லா வடிவங்களும் ,எல்லாப் பெயர்களும் ஒரே ஒரு இறைவனைத்தான் குறிக்கின்றன.

சமயத் தெய்வங்களைப் போற்றிப் போற்றிப் பாடி அவைகள் அத்தனையும் இருப்பதாகவே மக்களை நம்பவைத்த அருளாளர்கள் மத்தியில் வள்ளலார் துணிவுடன் சைவம்,வைணவம், சமணம் ,பவுத்தம் முதலாகப் பலப் பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும் கற்பனையே என்றும் இறைவனே தனக்கு அறிவித்ததாக வள்ளலார் கூறுகிறார்
.(உரை நடை பக்கம் 452 )10
இப்படிப்பட்ட விளக்கங்களை இறைவனே வள்ளலாருக்கு மட்டுமே விளக்கினான் என்பதே உண்மை ஆதாரம்
வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்றறிகின்றமெய் அறிவை விளக்குவித்து அருளினீர்.வாலிபப் பருவம் தோன்றியபோதே,சைவம்,வைணவம், சமணம்,பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச்சமையங்களில் குறித்த சாதனங்களும் ,தெய்வங்களும் ,கதிகளும்,தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் அவ்வச்சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயா சாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர். அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் ,நாதாந்தம் ,யோகாந்தம்,கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்.(சமரச சுத்த சன்மார்கச் சத்தியப் பெரு விண்ணப்பம் பக்கம் 570)