SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் வாழ்கிறார்
..வஞ்சமிலா நாம் வருந்திடில் அப்போதே அஞ்சல் என்பார் இதோ அம்பலத்திருக்கின்றார்.:

1977ம் ஆண்டு முதல் தைப்பூச ஜோதி தரிசனம் காணச் சென்னையிலிருந்து வடலூருக்குப் பாத யாத்திரையாக ப் போனோம் . 1979ம் ஆண்டு. நாங்கள் 82 பேர் வந்துகொண்டு இருந்தோம். ஒரு மாட்டு வண்டி ஏற்பாடு செய்து வண்டியின் முன் பக்கத்தில் ஒரு நாற்காலி வைத்து அதன்மேல் ஐயா படம் வைத்தோம்.அதிக வயதால் நடக்கச் சிரமப்படுபவர்களை வண்டியின் பின் பக்கத்தில் உட்கார வைத்து மற்றவர்கள் அருட்பா பாராயணத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தோம். சீக்கிரம் போகவேண்டும் என்பதால் வேகமாக நடக்கச் சொன்னார்கள். அதன் விளைவு எனக்கு இரண்டு கால்களிலும் கொப்புளங்கள் வந்து விட்டது. என்னால் நடக்கவும் முடியவில்லை. அந்த வண்டிக்காரன் நான் சிரமப்படுவதைப் பார்த்து ஐயா இந்த வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் என்றார். பாத யாத்திரை என்று வந்துவிட்டு வண்டியில் ஏறுவது தப்பு என்றேன். நல்லவர்கள் யாருமே எனக்குத் தெரிந்து இந்த வண்டியில் ஏறியதே இல்லை. நீங்களாவது சற்று நேரம் உட்காருங்கள் என்றான். நானும் கால் வலி பொறுக்க முடியாததால் வண்டியில் ஏறினேன். பத்து மீட்டர் தூரம்கூட வண்டி போயிருக்காது. என் மனதில் ஏதோ ஓர் எண்ணம். வண்டிக்காரனை அழைத்து அப்பா பின் சக்கரம் சரியாக இருக்கின்றதா என்று போய்ப் பார் என்றேன்.அவனும் போய்ப் பார்த்தான்.,சக்கரத்தில் இருந்த ஐந்து நட்டுகளில் நான்கு நட்டுகள் எங்கோ விழுந்துவிட்டன.இருக்கின்ற ஒன்றும் விழுந்துவிடும் நிலையில்தான் உள்ளது.எல்லோரும் இறங்குங்கள் என்று கூறிவிட்டான்.எல்லோரும் கீழே இறங்கி விட்டார்கள்.அப்போது இரவு மணி 9-30, திண்டிவனம் போனால்தான் எங்களுக்கு இரவு உணவு கிடைக்கும்.நான் சாலையின் ஓரத்தில் உட்கார்ந்தேன். என்னைச் சுற்றிச் சிலர் உட்கார்ந்தார்கள்.அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் என்ற பாடலைப் பாடிக்கொண்டு இருந்தோம்.AKB என்று எங்களால் அழைக்கப்படுபவர் மகா மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஒவ்வொரு லாரியையும் நிறுத்தும்படிக் கையைக் காட்டிக் கொண்டிருந்தார். எந்த லாரிக்காரனும் நிற்கவில்லை.இந்த நிலையில் நாங்கள் பாடிக்கொண்டு இருந்தது அவருக்குத் தாளமுடியாத எரிச்சலைத் தந்தது. அவர் என்னிடம் வந்தார். ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். அதுபோல இருக்கிறது நீ பாடிக்கொண்டு இருப்பது.இந்தக் கிழமெல்லாம் திண்டிவனம் எப்போது போய்ச் சேர்ந்து எப்போது சாப்பிடப்போகிறது என்ற கவலை உனக்குச் சிறிதாவது இருக்கிறதா என்றார். நீங்கள் கடவுளை அழைத்தீர்கள். பலன் இதுவரை இல்லை. எங்கள் வள்ளலாரை அழைத்துப் பாருங்கள் என்று சொன்னேன்.நீதான் கூப்பிடேன் என்றார். ஐயா நாங்கள் நடுரோட்டில் நிற்கின்றோம் ஏதாவது செய்யுங்களேன் என்று உரக்கச் சொன்னேன். இரண்டு நிமிடங்கள்கூட ஆகவில்லை. இரண்டு ட்ரைலர் வண்டிகள் வந்து நின்றன. டிரைவர் தமிழ் பேசவில்லை. வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் என்று ஜாடை காட்டினார். எல்லோரும் ஏறினார்கள். நான் ஒரு வார்த்தை சொன்னவுடன் இரண்டு ட்ரைலர்கள் வந்து நின்றதே.லாரிகள் நின்று இருந்தால் கூட இரண்டு அல்லது மூன்று பேர்தான் ஒவ்வொரு லாரியிலும் போகமுடியும். வயதானவர்கள் எங்கே இறங்கி எங்கே இருப்பார்கள்? ஆனால் இப்போது எல்லோரும் ஒரே சமயத்தில் போகும்படி இரண்டு ட்ரைலர் வண்டிகள் வந்தனவே . பெருமானின் கருணை என்னே என்னே !நான் உங்களை அழைக்கவேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தீர்களா என்றெல்லாம் நானே பேசிக்கொண்டு அழுது கொண்டிருந்தேன். எல்லோரும் ஏறியபிறகு நான் அந்த மாட்டு வண்டியில் இருந்த வள்ளலாரின் உருவப் படத்தை எடுத்துக் கொண்டு கடைசியாக வண்டியில் ஏறினேன்.நான் உட்கார்ந்த இடத்திற்கு எதிரே முக்காடிட்டுக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஐயாவின் அருளை நினைத்து அழுது கொண்டிருந்தேன்.திண்டிவனம் வந்தது.வண்டிகள் நின்றன. எல்லோரும் இறங்கினார்கள். ஒருவர் மட்டும் இறங்கவும் இல்லை காணவும் இல்லை. அவர்தான் அந்த முக்காடு இட்டிருந்த பெரியவர். எல்லோரும் அவர் எங்கே எங்கே என்று தேடினார்கள். அவர் எங்கே? அவர் யார்? ஒரே ஒரு குரல் கூப்பிட்டவுடன் 82 பேரும் ஏறிப் போக வழி செய்த அவர் யார் ? இந்த அனுபவத்தை  மறக்க முடியுமா?

DXR.png

DXR.png

newdesign4b_20.gif

newdesign4b_20.gif

newdesign4b_03.gif

newdesign4b_03.gif

newdesign4b_03.gif

newdesign4b_03.gif