SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்
வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்

இந்த உலகத்து மக்கள் அனைவரும் ஜாதி,மதம், சமயம் என்ற பிளவுகளால் பேதப்பட்டே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.எல்லோரும் மனிதர்கள்தாம். யாரும் இந்த ஜாதியில்தான், இந்த சமயத்தில்தான், இந்த மதத்தில்தான் பிறக்கவேண்டும் என்று தவம் செய்து இறைவனிடம் வரம் வாங்கிக்கொண்டு பிறக்கவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்தபின்னர் தன் ஜாதிதான் உயர்ந்தது,தன்னுடைய சமயம்தான், உயர்ந்தது, தன்னுடைய மதம்தான் உயர்ந்தது என்று வாதம் பேசிக்கொண்டு மற்ற ஜாதிக்காரர்,மற்ற சமயத்தவர், மற்ற மதத்தவர் அனைவரும் தாழ்ந்தவரே என்று கருதுகிறார்கள். ஜாதிச் சண்டை, சமயச் சண்டை ,மதச் சண்டைஇவற்றால் மாண்டுபோன மக்கள் தொகை கணக்கில் அடங்காது.. எல்லா ஜீவன் களையும் விட மனிதனே அறிவில் உயர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இந்த உலகில் உள்ள சமய,மத நெறிஎலாம் பேய் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உலக மக்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போருற்று இறந்து வீண் போகின்றார்கள். அவர்களுக்குப் புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம் ஏறுற்ற சுக நிலை அறிந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலினால் இவ்வேலை புரிக என்று இட்டனம் மனதில் வேறு எண்ணற்க என்று வள்ளலாரை இந்த உலகிற்கு அனுப்பிவைத்தான்.
இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வள்ளலார் தெய்வத்தைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்று விளக்கவே இந்தப் புத்தகம் வெளி வருகிறது.ஒவ்வொரு சமயமும் தனக்கெனக் கடவுளை ஏற்படுத்திக் கொண்டு ,அந்தக் கடவுளுக்கு உருவத்தையும் அமைத்து ,அதற்கென வரலாறு,சடங்குகள் முதலியவற்றையும் உண்டாக்கி மக்களை நம்ப வைத்துள்ளது. உலக மக்களனைவரும் சமயம் சார்ந்தே வாழ்கிறார்கள்.
சமயங்கள் மட்டுமல்ல சமயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வங்களும் வெறும் கற்பனையே தவிர உண்மை அல்ல என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றார். ஞானிகளின் கற்பனையில் உருவாக்கப்பட்ட தெய்வங்களை வணங்கவேண்டிய அவசியமே இல்லை என்கிறார் வள்ளலார். இந்த உடம்பிலே உயிர் எப்படி ஒன்றுதான் இருக்க முடியுமோ அதுபோல் இந்த உலகிலும் மக்கள் அனைவர்க்கும் பொதுவாக ஒரே ஒரு இறைவன்தான் இருக்க முடியும் என்கிறார். தெய்வங்கள் பல பல உண்டென்று அவற்றை வணங்குகின்றோரும்,நாம் அடையும் கதி கைலாயம்,வைகுண்டம் போன்று பல பல உண்டென்று சொல்வோரும்,பொய்யாக வந்த அதாவது எழுதப்பட்ட புராணகள் போன்ற கலைகளைப் புகழ்வோரும், பொய்ச் சமயங்கள் முதலியவற்றை பாராட்டுவோரும் உண்மையான இறைவனின் திருவருள் விளக்கம் இல்லாதவர்கள் என்றும் அவர்கட்கு இறைவா நல்லறிவு விளக்கம் தரவேண்டும் என்று இறைவனை வள்ளலார் வேண்டுகின்றார்.
தெய்வங்கள் பல பல சிந்தை செய்வோரும், சேர்கதி பல பல செப்புகின்றோரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவோரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றோரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார் மேல்விளைவு அறிகிலார் வீண்
கழிக்கின்றார்.
எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவருள்வீர் எனைப் பள்ளி எழுப்பி மெய்
இன்பம் தந்தீரே. (திரு அருட்பா)
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்றும்,இறைவன் ஒருவன்தான் என்றும், அந்த இறைவனை யாராலும் வெளியே காணமுடியாது என்றும், நம்முள்ளே தான் அனுபவிக்க முடியும் என்றும் ,அந்த அனுபவம் எப்படி இருக்கும், என்றும் , அந்த இறைவனை இறந்த பிறகு அடையமுடியாது என்றும், இந்த உடம்பிலே உயிர் உள்ளபோதே அடையவேண்டும் என்றும் வள்ளலார் எடுத்துக் கூறியுள்ள விளக்கமே வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்..
இறைவனை நம்முள்ளே காணுவோம் அதற்குரிய செயல் அனைத்தையும் செய்வோம்.
வந்தனம் முபா

2 Comments
manohar kuppusamy
CAN YOU EXPLAIN IN DETAIL OF YOUR CONCLUSION STATEMENT.
Wednesday, December 5, 2018 at 07:26 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
RESPECTED SIR .VANDHANAM. IS NOT LAST PARAGRAPH OF MY ABOVE ESSAY ENOUGH. OTHERWISE MAY I KNOW ON WHAT POINT I AM ASKED TO CONCLUDE.I AM AGAIN THANKFUL TO YOU SIR BECAUSE ATLEAST YOU ARE THE ONLY ONE TO READ MY ESSAY.THANKS AGAIN. MUPAA.
Sunday, December 23, 2018 at 09:46 am by Muthukumaaraswamy Balasubramanian