SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இன்றும் என்னுடன் வள்ளலார் 6

1 4. நான் துணை இருக்கப் பயம் ஏன்? 1 9 8 4

வடலூர் பாத யாத்திரை புறப்படுமுன் காலை,பகல்,இரவு ஆகிய மூன்று வேளை உணவிற்கு ஒவ்வொரு ஊரில் உள்ள அன்பர்களுக்குக் கடிதம் முன்னதாகவே எழுதிவிடுவோம். அப்படித்தான் கரிக்கம்பட்டு என்று கிராமத்தில் இருந்த இராமலிங்க ஆசிரியர் வீட்டிற்கும் நாங்கள் வரும் தேதியைக் குறித்துக் கடிதம் எழுதி இருந்தோம். அந்த ஆசிரியர் தன் மனைவியுடன் திருப்பதி சென்றிருந்தார்.தபால்காரன் நாங்கள் எழுதிய கடிதத்தை வீட்டுக் கதவில் சொருகி விட்டு சென்றுவிட்டார். எங்களுக்கு அவர்கள் வீட்டில் இல்லை என்பது தெரியாது. நாங்கள் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தோம்.கரிக்கம்பட்டு கிராமத்திற்கும் சென்றோம் . இராமலிங்கம் ஆசிரியரின் மனைவி எங்களை வரவேற்று உணவும் அளித்தார்கள். சாப்பிட்டவுடன் கதறிக் கதறி அழுதார்கள். காரணம் புரியாமல் நாங்கள் திகைத்தோம். அழுதுகொண்டே அவர்கள் சொன்னது. ஐயா நாங்கள் திருப்பதிக்குப் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. நீங்கள் எழுதிய கடிதத்தை நாங்கள் பார்க்கவே இல்லை. இன்று விடியற்காலை என்னுடைய கனவில் ஒருவர் வந்து உடனே நீ ஊருக்குப் போ என்று வேகமாகச் சொன்னார்.அதைக் கனவுதானே என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. என்மனதில் ஏதோ ஒரு உந்தல் ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று. இருந்துபோகலாம் என்று சொன்ன என் கணவரின் சொல்லையும் மீறி நான் புறப்பட்டு வந்துவிட்டேன். தொழுவூர் வந்தபோதுதான் உங்கள் பாத யாத்திரையைப் பார்த்தேன். இதற்குத்தான் என்னை ஊருக்குப் போகச் சொன்னார் என்று புரிந்துகொண்டேன்.நான் வராமல் இருந்திருந்தால் நீங்கள் இந்த ஊரில் என்ன செய்வீர்கள்.ஒரு டீக்கடைகூட இந்த ஊரில் இல்லையே. நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் வள்ளலார் என்னை உடனே ஊருக்குப்போ என்று சொல்லி இருப்பார்.அன்னதான வள்ளல் எங்களைப் பட்டினி போடுவாரா? வல்ளலார் எங்கள்மீது கொண்டிருக்கும் அன்பை நினைத்து நினைத்து மகிழ்கிறோம்.

15. அங்கே உங்களுக்கு உணவு இல்லை. நான் இங்கேயே தருகிறேன்;;
1 9 9 0
பாத யாத்திரையில் சென்டூர் என்ற ஊரில் இரவு தங்கவும் உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். பகல் உணவு கூட்டேரிப்பட்டு என்ற ஊரில். பகல் உணவு முடித்துக்கொண்டு செண்டூர் கிளம்பினோம். கூட்டேரிப்பட்டு எல்லையைத் தாண்டும் சமயம் ஒருவர் வந்து நான் உங்களுக்கெல்லாம் நிறைய டிபன் வாங்கித்தருவேன். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் புறப்படவேண்டும் என்றார்.நாங்கள் இப்போதுதான் சாப்பிட்டோம் .எங்களால் இப்போது சாப்பிட முடியாது என்றோம். அவர் என்னைத்தாண்டி எப்படிப் போவீர்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லி பாத யாத்திரை ரதத்தின் முன் சாலையில் படுத்துக் கொண்டார். அவரது ஆழ்ந்த மனத்தைக் கண்டு நானும் இரங்கி அவருக்கு ஒரு வழி சொன்னேன். அதாவது நீங்கள் என்ன தருகிறீர்களோ அதை வாங்கித் தந்து விடுங்கள். நாங்கள் எடுத்துச் சென்று சாப்பிடுகிறோம் என்றேன். அவரும் மகிழ்ந்து உணவு வாங்கிக் கொடுத்தார்.நாங்கள் அதை எடுத்துக் கொண்டு செண்டூர் சென்றோம். மணி ஒன்பது ஆகிவிட்டது. யாரையும் காணவில்லை. எனவே தொலை பேசியில் அந்த ஊரில் எங்களுக்கு உணவு அளிக்க வேண்டியவரைத் தொடர்பு கொண்டோம்.நாங்கள் ஒரு ஏற்பாடும் செய்யவில்லையே நீங்கள் நாளைக்குத்தானே வரவேண்டும் இன்றே வந்துவிட்டீர்களே என்றார் .நாங்கள் சரியாகத்தான் வந்திருக்கின்றோம். கடிதத்தைப் பாருங்கள் என்றேன். பார்த்துவிட்டு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார். நான் தவறு செய்துவிட்டேன் என்று புலம்பினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கூட்டேரிப் பட்டில் வாங்கிக் கொடுத்த உணவை உண்டோம் .உறங்கினோம். எங்களுக்கு செண்டூரில் உணவு ஏற்பாடு செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது. வள்ளலாருக்குத் தெரியும். செண்டூரில் எந்தக் கடையும் கிடையாது. எனவே கூட்டேரிப்பட்டிலேயே முன்னதாகவே உணவை ஒருவர் மூலம் வாங்கித்தந்து விட்டார். வள்ளலாரையே நம்பி இருக்கும் எங்களை வள்ளலார் பட்டினி போடுவாரா? அவர் எங்களுடனேயே இருக்கின்றார்.