palani  moorthy
வள்ளலார் சொன்ன இறை வழிபாட்டு முறைக்கான உத்தியைச் சொல்லும் ஒரு குட்டிக் கதை.
அருட்பெருஞ்சோதி                                                                                                            அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை                                                                                                        அருட்பெருஞ்சோதி

                                               கோயில் தேரும், குப்பை வண்டியும்

திருவாரூரில் ஆழித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்த மறுநாள் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்ததால் தேரோடிய தெருக்களில் குப்பைகளின் அளவு வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே தென்பட்டது. இருட்டை ஒழிக்கப் புறப்படும் கதிரவன் தோன்றுங்காலை ஊரைச் சுத்தம் செய்ய தன் சகாக்களுடன் புறப்பட்டது குப்பைவண்டி. நான்கு தெருவில் அள்ளி முடித்த குப்பையோடு ஐந்தாவது தெருவாகிய தேர் நிலை இருந்த தெருவிற்கு வந்தது. தன் ஊழியர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, தானும் ஓய்வெடுக்க முற்பட்டபோது அங்கே எதிரே நிலையடியில் நின்றிருந்த தேரை தரிசித்தது. உடனே தன் சிந்தனை ஓட்டம் சிறகடிக்க ஆரம்பித்தது. அச்சிந்தனையின் விளைவாக ஏன் இந்தத் தேருக்கு மட்டும் இப்படி ஒரு கொண்டாட்டம் எனும் எண்ணம் எழுந்தது. அந்த குப்பைவண்டி தன்னை தேருடன் ஒப்பிட்டுப் பார்த்தது. உடனே அதற்கு தன்னுடைய அயராத உழைப்பினை எண்ணி ஆணவம் ஏற்பட்டது. அந்த ஆணவத்தின் வெளிப்பாட்டால் தேருடன் விவாதிக்க ஆரம்பித்தது. அந்த விவாதத்தின் உரையாடல் இதோ :

குப்பை வண்டி : ஏ, சோம்பேறித் தேரே! ஏன் இப்படி பல்லிளித்துக் கொண்டிருக்கின்றாய். உனக்கு ஏன் இத்தனை அலங்காரம், இதென்ன ஜாலம்.

தேர் : இவையனைத்தும் ஜாலமல்ல. மக்களுடைய பக்தியின் வெளிப்பாடாகும்.

கு வ : வருடம் 365 நாட்களும் இவ்வூரிலுள்ள தெருக்கள் அனைத்திலும் சேரும் தேவையற்ற குப்பகைளை அகற்றி சுமந்து சுத்தம் செய்து மக்கள் சுகாதாரமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ வழி செய்கிறேன். அவர்கள் எனக்கு ஒரே ஒரு நாள் கூட சிறு நன்றியையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நீயோ ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் சில மணி நேரங்களே வெளியே வருகிறாய். அதுமட்டுமில்லாமல் உன்னால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடையாது. அப்படியிருக்க மக்கள் உனக்கு வர்ணம் தீட்டி, அலங்காரம் செய்து பூமாலைகள், பட்டாடைகள், குடை இவையெல்லாம் கொண்டு உன்னை சிறப்பிக்கின்றார்கள். இவ்வளவும் ஒரு நாள் கூத்துக்குத் தானே என்றது.

தேர் : ஏ, அன்பான குப்பை வண்டியே, நீ சொல்வது உண்மைதான். உன்னுடைய உழைப்பை நான் மெச்சுகிறேன். உனக்கு என்னுடைய நன்றியை தெரிவத்துக்கொள்கிறேன். ஆனால் நீ ஒன்றை புரிந்துகொள். வருடம் 365 நாட்களும் நீ உழைத்தாலும் நீ சுமந்து செல்வது என்னவோ தேவையற்ற குப்பபைகளைத் தான். இதனால் மக்களுக்கு உடல் ஆரோக்கியமும், சுகாதாரமும், பிணிவராமல் தடுக்கலாமே ஒழிய அவர்கள் மனதிற்கு ஏதும் சந்தோடம் ஏற்படுமா? அவர்கள் மனம் லயிக்குமா? லயிக்காது. நீர் கூறியது போலவே நான் என்னை வருடத்திற்கு ஒரு முறைதான் அதுவும் சில மணிநேரங்கள் தான் வெளியே வந்தாலும் மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். இதற்கான காரணம் உனக்குப்புரிந்ததா? புரியவில்லையென்றால் சொல்கிறேன் கேள். நான் சுமந்து வருவது குப்பைகளை அல்ல, மக்கள் வணங்கும் தெய்வத்தின் திருவுருவச்சிலைய. அதுதான் காரணம் என்றது. இறைவன் பால் அவர்கள் கொண்டுள்ள பக்தியினால் என்னை இவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்றது.

கு வ : தன் நிலைமையை எண்ணி வருந்தி அடுத்தபிறவியில் தானும் தேராக பிறப்பெடுக்க இறைவனிடம் பிரார்த்தித்தது.

கருத்து
திருவாரூர் - ஆறறிவு படைத்த மனித தேகம்
தேர், குப்பை வண்டி - மனம்
குப்பை - உலக சிந்தனை (மனம் போன போக்கு)
திருவுருவச்சிலை - இறை சிந்தனை ( அறிவுடன் பயணிப்பது)

ஆறறிவு படைத்த நாம் ஒரு நாளல்ல. ஒவ்வொரு நாளும் நம்முள் சுடர்விடும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருவடியில் மனதை செலுத்தியும், திருவருட்பிரகாச வள்ளலார் கூறிய சசச என்ற வாக்கிற்கிணங்க சத்சங்கம், சத்விசாரம், சகஜ நிஷ்டை என்பதன் பொருளுணர்ந்து பயணிப்போமானால் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று ஈடேறலாம்.

அருட்பெருஞ்சோதி                                                                                                            அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை                                                                                                         அருட்பெருஞ்சோதி
                                                                    திருச்சிற்றம்பலம்

Praveen Vijayaraghavan
Nice analogy and a great message. Arutperunjothi Thaniperungarunai
Thursday, October 17, 2019 at 00:14 am by Praveen Vijayaraghavan