Badhey Venkatesh
மெய்யருள் வியப்பு – விளக்கம் ( meaning for 12 songs )
மெய்யருள் வியப்பு – விளக்கம் ( meaning for 12 songs )
BG Venkatesh / September 5, 2015
மெய்யருள் வியப்பு – விளக்கம் ( meaning for 12 songs )

1 ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ
மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ ( பாடல் 18 )

ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே – சுழிமுனை நாடியில் உள்ளேயும் மேலேயும் வேகமாக தன் உணர்வு பாய்ந்த அனுபவம் பற்றிக் கூறுகின்றார்

இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – தூக்கம் மற்றும் இதர அவஸ்தைகளால் தன் உணர்வு கீழே இறங்கா வண்ணம் அருள் உதவியது என்று கூறுகிறார்

மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ – அருள் தன் மீது கருணை மழை பொழிந்தது பற்றி வியந்து போகின்றார் வள்ளல் பெருமான்

மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ – இந்த அருள் கிடைக்க தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்று கூறுகின்றார்

( தற்கால சன்மார்க்கத்தவர்கள் கவனிக்க : ஜீவகாருண்யம் என்று கூறிக்கொண்டு வெறும் சோறு மட்டும் போட்டுக்கொண்டிருக்கவில்லை வள்ளல் பெருமான் , கூடவே தவமும் செய்தார் )

திரண்ட கருத்து :

அருள் தனக்கு எவ்வாறெல்லாம் உதவி செய்தது பற்றி வியந்து பாடி – அது தன் உணர்வு கீழே இறங்காமல் பார்துக் கொண்டது முதல் , அது தனக்கு செய்த உதவிகளை எண்ணி வியந்து போகின்றார் – அதற்கு தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்கிறார்

2 நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே
நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை நாட்டியே
நடு நாடிய நின் அருளுக்கென்மேல் என்ன நாட்டமோ
நாய்க்கு தவிசிட்டனை நிந்தனக்கிங்கோர் ஆட்டமோ ( 13 )

நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே – பல காலம் கடின தவம் இயற்றினும் எட்ட முடியாத ஏற முடியாத சுழிமுனை அனுபவத்தை அடையச் செய்து

நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை நாட்டியே – சுழிமுனை அனுபவத்திற்கு அகத்தும் புறத்தும் நின்று அருள் ஒளி தனக்கு வழி காட்டியது

நடு நாடிய நின் அருளுக்கென்மேல் என்ன நாட்டமோ – நடு நாடியாம் சுழிமுனையில் திகழும் அருளுக்கு என் மீது என்ன விருப்பமோ இஷ்டமோ ? என்று வினவுகின்றார்

நாய்க்கு தவிசிட்டனை நிந்தனக்கிங்கோர் ஆட்டமோ = மௌனத்திற்கும் ஆன்ம அனுபவத்துக்கும் இட்டுச் சென்று அங்கு என்னை நிலை நிறுத்தினை என்று தன் ஆன்ம அனுபவம் குறித்தும் அதற்கு உதவிய அருள் பற்றியும் பாடுகின்றார்

திரண்ட கருத்து :

அருள் தன்னை மௌனத்துக்கும் ஆன்ம அனுபவத்துக்கும் கூட்டிச் சென்று நிலை நிறுத்தியதைப் பற்றி இப்பாடலில் குறிப்பிடுகின்றார்

3 அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றின் செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசி பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே ( பாடல் 93 )

அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே = வள்ளல் பெருமானின் கண்களில் மாய இருள் விலகிவிட்டபடியால் , அவர் தம் கண்களுக்கு உலகத்தின் விரிவை காணும் சக்தி உண்டு -அதனைத்தான் இங்கு தெரியப் படுத்துகிறார்

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றின் செய்தியே – எல்லா அண்டங்களின் உள்ள ரகசியங்களை உள்ளங்கை கனி போல் தான் அறிந்து கொண்டதை தெரியப்படுத்துகிறார்

பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே – எப்படி புறத்திலே அண்ட ரகசியம் விளங்கியதோ, அவ்வாறே அகத்தின் – பிண்ட ரகசியம்களஒயும் , அதாவது உடல் இயக்க ரகசியத்தையும் தான் பார்த்ததாக இங்கு கூறுகிறார்

திரண்ட கருத்து :

கண்களில் உள்ள இருள் ஒழிந்து விட்டால் , அண்டத்தின் விரிவையும் , பிண்டத்தின் விரிவையும் காண கண்களுக்கு பூரண சக்தி வந்து விடும் – அது தனக்கு சித்தி ஆனதை இங்கு விளக்குகிறார்

மாயா மலம் நீங்கினதை இங்கு விரித்துரைக்கின்றார்

தன் ஜீவன் இரு மலம் நீங்கி ஆன்ம நிலை அடைந்ததை இங்கு மல நீக்கம் மூலம் தெரிவிக்கின்றார்

4 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன்
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 )

புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார்

பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை ஆகிவிட்டேன் என்கிறார்

தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மாவின் தயவினால் கருணையினால் சுழிமுனை நாடி மீதேறினேன்

தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மா நிலை என்னும் தவள மாடத்தை அடைந்தேன்

திரண்ட கருத்து :

ஆன்மாவுக்கு அடிமை ஆனதால் – அதனால் கிடைத்த ஆன்மாவின் தயவினால் கருணையினால் ஆன்ம நிலை என்னும் தவள மாடம் அடைந்ததை இங்கு வள்ளல் பெருமான் விரித்துரைக்கின்றார்

5 எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே
தூண்டாது என்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றியே ( பாடல் 48 )

எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே – எட்டும் இரண்டும் இது தான் என்று கையினால் சுட்டி விளக்கி ( எட்டிரண்டு பற்றி தனிக் கட்டுரையில் விளக்கப் பட்டிருக்கின்றது )

எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே – யாரும் ஏறா நிலையாகிய 36தத்துவங்களைக் கடந்த நிலையில், ஆன்ம நிலையில் என்னை கூட்டிச் சென்று

துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே – ஆன்ம ஜோதியை ஏற்றி கன்ம மலம் தனை தீர்த்து

திரண்ட கருத்து :

36 தத்துவங்களையும் கடக்கச் செய்து ஏறா நிலை ஏற்றி , ஆன்ம ஜோதியை ஏற்றி , கன்ம மலத்தை தீர்த்து வைத்தான்

6 வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே
மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே
இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே ( பாடல் 69 )

வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே – ஆன்மாவின் திருஷ்டி / பார்வை / ஒளி தன் ஜீவன் மீது பதிந்ததை இவ்வாறு வள்ளல் பாடுகின்றார்

மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே – ஆன்ம தரிசனத்தால் மாயை மற்றும் கன்ம மலங்கள் அழிந்ததை குறிப்பிடுகின்றார்

இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே – தன் பூதமயமாகிய அசுத்த தேகம் வாதமாகி, மாறி, சாயை விழா சுத்த தேகம் தனக்கு கிட்டியது என்று தன் சாதனையை இவ்வுலகிற்கு விரித்துரைக்கின்றார்

திரண்ட கருத்து :

ஆன்ம தரிசனத்தால் மலங்கள் கழிந்து தான் ஆன்ம தேகமாகிய சுத்த தேகம் பெற்றதை இங்கு விளக்குகின்றார்

7 அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார்
அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார்
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68)

அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் – பிரம்மாவும் விஷ்ணுவும் சிவத்தை – APJ ஆண்டவரைத் தேடி தேடி காணாது திகைக்கின்றனர்

அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் – தேவர்கள் நாமெல்லாம் காண முடியாத போது இவன் சிவத்தை காண முடிகிறதென்றால் , இவன் செய்த தவம் தான் என்ன என்று வினவினர்

மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – இங்கு தவள மாடம் என்பது ஆன்ம அனுபவத்தைக் குறிக்கின்ற வெள்ளை மாளிகை

தவளம்= வெள்ளை – சாம்பல் பூத்த வெண்மை

திரண்ட கருத்து :

மூவரும் காண முடியாத ஆன்மாவையும்/ சிவத்தை தன் தவத்தால் கண்ட அனுபவத்தை இப்பாடல் மூலம் வள்ளல் பெருமான் விளக்குகிறார்.அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே

8 ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே ( பாடல் 53 )

அப்பா நின்னை = என்று இங்கே வள்ளலார் தன் ஆன்மாவை

நான் என் ஆன்மாவைத் தரிசித்து அடைந்துவிட்டேன் = எனக்கு ஈடு இணை யார் ??? என்று வினவுகின்றார்

ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே – 36 தத்துவங்களை கடந்த நிலை – 36 வரையும் விட்டகன்ற நிலை தான் அடைந்து விட்டதை வள்ளல் பெருமான் உறுதி செய்து , இது ஏறா நிலை மிசை , இது தான் ஆன்ம நிலை என்று பாடுகின்றார்

திரண்ட கருத்து :

வள்ளல் 36 தத்துவங்களைக் கடந்து தான் ஆன்ம நிலை மற்றும் அனுபவம் பெற்றுவிட்டத்தை இங்கு உறுதிபடுத்தி பாடுகின்றார்

9 கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ( பாடல் 55 )

மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவங்களைக் குறிக்கின்ற பாடல்களாகும்

கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ = வள்ளலார் கண்பார்வையும் மனமும் ஆன்மா விளங்குகின்ற நடு நெற்றியிலேயே இருக்கின்றதே அல்லாமல் உலகத்தை நோக்கவில்லை என்று கூறுகின்றார்

கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ = மும்மலம் தீர்ந்து நான் ஆன்மாவை தரிசித்து விட்டேன் , அதனிடத்து மாயை கன்ம மலங்கள் இல்லையாகையால், தன்னை மாயையால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாடுகின்றார்

வள்ளலார் தான் ஆன்ம நிலை அடைந்துவிட்டதை உறுதிப் படுத்துகின்றார்

10 பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே ( 31 )

இந்தப் பாடலில் சாககல்வி தனக்கு APJ ஆண்டவர் தெரிவித்ததை விளக்குகிறார்

பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் – உயிரை உடம்பில் சேர்க்கும் வழியையும்

பிண்டம் தன்னையே பிரியும் வகையும் – உடலை விட்டு உயிர் பிரியும் வழியும்

பிரியா வகையும் – உடலை விட்டு உயிர் பிரியாதிருக்கும் வழியும் தனக்கு ஆண்டவர் தெரிவித்தார் என்று பாடுகின்றார்.

இதில் சாககல்வி அடங்கி இருக்கின்றது

11 என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே
பொன்னைக் காட்டி பொன்னே நினது புகழைப் பாடியே
புந்தி கழிக்க வைத்தாய் அழியாதென்னை நாடியே ( பாடல் 92 )

மெய்யருள் வியப்பு பாடல்கள் முழுதும் ஆன்ம அனுபவப் பாடல்கள் ஆகும்

என்னைக் காட்டி = ஆன்மாவாகிய என்னை தரிசிக்க வைத்து ( 36 தத்துவங்களை கடக்கச் செய்து )

என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே – ஆன்மாவிற்குள் இருக்கும் சிவத்தைக் காண்பிக்க வைத்து

இறங்கா நிலையில் ஏற்றி – அவரது உணர்வு கீழே நோக்காதவாறு எப்போதும் மேலேயே நோக்கச் செய்து – இது எப்படி சாத்தியம் எனில்
சுழிமுனை – பிரமரந்திரம் திறந்து விட்டால் நம் உணர்வு கீழே எப்போதும் நோக்காது

ஞான அமுதம் ஊட்டியே – ஆகாய கங்கையை சுரக்க வைத்து என்று பொருள்

இப்பாடலின் திரண்ட கருத்து :

36 தத்துவங்களை கடந்து ஆன்மாவை தரிசிக்க வைத்து , அதனுள் சிவத்தை காண்பித்து , உணர்வு எப்போதும் மேல் நிலையிலே இருக்க வைக்க பிரமரந்திரத்தை திறக்கச் செய்து , பின்னர் அமுதமாம் ஆகாய கங்கையை உண்ண வைத்தார் என்று தன் ஆன்ம அனுபவத்தைப் பாடுகின்றார் வள்ளல் பெருமான்

12 பனிரெண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே
துனியாத அந்தப் பாடு சுகமதாயிற்றே
துரை நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 78 )

ஈறாறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 79 )

இந்தப் பாடலில் வள்ளலார் தான் 12 அகவை முதல் சன்மார்க்கச் சாதனமாகிய கண்களைக் கொண்டு செய்யும் தவம் மேற்கொண்டு – அதில் பல அனுபவங்களை பெற்று, அதனை நன்கு பற்றி உச்ச அனுபவங்களுக்கெல்லாம் சென்றார்.

கண்களை கொண்டு செய்யும் தவம் என்பது கண்களை உள்ளே திருப்பி உலக காட்சிகளை நோக்காமல் அகத்தை மட்டும் பார்க்குமாறு செய்தல் ஆகும்

தன் உணர்வு சுழிமுனை வருவதற்கு பட்ட பாட்டை தான் இப்பாடலில் உரைக்கின்றார்

கண்மணிகளை திருப்புவது அவ்வளவு சுலபம் அல்ல – இந்தக் துயரங்களைத் தான்

ஈறாறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே என்று பாடுகின்றார்

ஒவ்வொரு அனுபவமும் நடைமுறைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல – ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் தொடர்பும் சம்பந்தமும் உண்டு –

கீழ் நிலை அனுபவம் சித்தி அடைந்து முழுமை அடைந்தால் தான் மேல் நிலை அனுபவத்துக்கு செல்ல முடியும் –

கீழ் நிலை அனுபவம் கைகூடினால் தான் மேல் நிலை அனுபவங்கள் சித்தி ஆகும்

மேல் நிலை அனுபவங்கள் சித்தி ஆவதற்குள் காலம் விரயமாகி விடுகின்றது

பகல் என்று உரைப்பதன் காரணம் – அவரின் உணர்வு இரவு பகலற்ற துவாதசாந்த பெருவெளி அடைந்துவிட்டதை, தனக்கு இரவு என்பது கிடையாது என்பது உலகிற்கு அறிவிக்கவே பகலென்றே உரைக்கின்றார்

ஆனால் அந்த துயரங்கள் – கஷ்டங்கள் – பாடு எல்லாம் இறுதியில் அவருக்கு பேரின்பச் சுகத்தை தந்தன என்பது உண்மை

வள்ளலார் தவம் செய்து தான் இந்த பேரின்ப பெருவாழ்வு அடைந்தார் என்பதை சன்மார்க்க சங்கத்தவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்

வெங்கடேஷ்

 

IMG-20210225-WA0006.jpg

IMG-20210225-WA0006.jpg