Anandha Barathi
திருஅருட்பாவை படிக்கும் முறை - சீனி. சட்டையப்பன் & இராம. பாண்டுரங்கன்

திருஅருட்பாவை படிக்கும் முறை

1. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வள்ளல் பெருமானார், " எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றி தலைவ, வேறு எண்ணியது உண்டோ?" என வினவுகின்றார்.

"நீ எம்பிள்ளை ஆதலால், அவ்வாறு எண்ணவில்லை" என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விடை அளிக்கின்றார்.

ஆதலின் பெருமானார், முருகன், விநாயகர், நடராஜர், இராமர், பெரியநாயகி எனப் பல தெய்வங்களை முன்னிட்டுப் பாடியிருந்தாலும், அத்தனையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே குறிக்கும் என்னும் உயரிய உணர்வோடு திருஅருட்பாவைப் படிக்க வேண்டும். (சமய, மத உணர்வுகள் கூடாது).

அடியர் நெஞ்சத்து அருட்பெருஞ்ஜோதி ஓர்
படிவ மாகும் படம் பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடிய னேன் அருள் மேவ விரும்பி ரோ.
(திருஅருட்பா - இரண்டாம் திருமுறை, அருள்விடை வேட்கை பதிகம்) என்பதே அதற்குச் சான்றாகும்.

2. "வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்"

"தீமை நாளும் புரிகின்றேன்"

"எட்டி தனை ஒத்தேன்"

"புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்"

"பாவியேன் நான் கொடியேன்"

என்பன போன்ற சொற்கள் பலவற்றைத் திருஅருட்பாவில் காணலாம்.

"உண்மையில் வள்ளல் பெருமானார் இதுபோன்ற குற்றம் குறைபாடுகளுக்கு உரியவர்களா?" இதற்குப் பெருமானாரே பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்.

"குற்றம் ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
குறை அதனால் சில புகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
சற்றுமனம் வேறுபட்டதில்லை கண்டீர் எனது
சாமி உம்மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்தறியேன்"
(திருஅருட்பா - நான்காம் திருமுறை, தலைமகளின் முன்ன முடிபு)

என மக்களிடம் காணப்படும் அனைத்துக் குற்றம், குறைகளையும் தன்னுடையதாக, உயிர் இரக்கத்தால் ஆன்மநேயத்தால் பெருமானார் பாடுகின்றார்களே தவிர அவர்களிடம் குறை
ஏதும் இல்லை என்னும் உன்னத உணர்வோடு திருஅருட்பாவை படிக்க வேண்டும்.

3. பெண்கள் பற்றி எழுந்த பாடல்களும் இரக்கத்தால் அருளியதே அன்றி ஏளனத்தால் அல்ல என்னும் உணர்வோடு திருஅருட்பாவைப் படிக்கவேண்டும்.

4. "தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன்நா ஒன்றோ
ஊண் படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம் காண் தனிக்கருணைப் பெருந்தகையே"

(திருஅருட்பா - நான்காம் திருமுறை, ஆளுடையநம்பிகள் அருண்மாலை)

என்பதால் திருஅருட்பாவை நா ஒன்றினால் மட்டும் படித்தால் போதாது.

ஊண் படிக்க வேண்டும் (இந்திரிய ஒழுக்கம்)

உள்ளம் படிக்க வேண்டும் (கரண ஒழுக்கம்)

உயிர் படிக்க வேண்டும் (ஜீவ ஒழுக்கம்)

உயிர்க்கு உயிராம் ஆன்மாவும் படிக்க வேண்டும் (ஆன்மா ஒழுக்கம்)

அத்துடன் அருட்பெருஞ்ஜோதி மீது காதலாகி படிக்க வேண்டும்.

நினைந்து நினைந்து படிக்க வேண்டும்.

உணர்ந்து உணர்ந்து படிக்க வேண்டும்.

நெகிழ்ந்து நெகிழ்ந்து படிக்க வேண்டும்.

ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

நனைந்து நனைந்து நிற்கும் நிலையில் திருஅருட்பாவை படிக்க வேண்டும்.

உடல், உள்ளம், உயிர், ஆன்மா ஆகிய நான்கும் ஒருங்கிணைந்து உன்னத நிலையில் அருட்பெருஞ்ஜோதி மீது காதலாகிக் கசிந்து உருகித் திருஅருட்பாவை தொடர்ந்து படித்து வந்தால் உயிர் அனுபவம், அருள் அனுபவம், அருட்பெருஞ்ஜோதி அனுபவம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.

ஆசிரிய வந்தனம்

வள்ளல் பெருமானாரின் மாணாக்கர்

புராணிகர் பொன்னேரி சுந்தரம் பிள்ளை

இயற்றியது

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தாய்மலர்ந்த பெருங்கருணைத் தத்துவனார் எங்கள்
சனிப்பிறப்பை ஒறுத்துவினைத் தனித்தொடக்கை அறுக்க
ஏய்மலர்ந்த கருணைதிரு மேனிகொண்ட காலத்(து)
எண்தோளோ இருதோளோ முக்கண்னோ இருமை
ஆய்மலர்ந்த அருட்கண்னோ நாமம் எழுத்(து) ஐந்தோ
அன்றிஅருள் இராமலிங்க அற்புதப்பொற் பெயரோ
வாய்மலர்ந்த(து) ஈரிரண்டு மறையோமூ விரண்டு
மாமுறையோ வகுத்துரையீர்? மயக்கொழிமா தவரே!

நூற்சிறப்பு

மதிரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனம்
சிதம்பர சுவாமிகள் அருளியது

நேரிசை வெண்பா

தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோன் மாந்தர்கள்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் - கண்மணியாம்
நங்கள் இராமலிங்கன் நல்லஅருட் பாமுறையைத்
துங்கமுற மாணா தொழு.

 

2 Comments
Badhey Venkatesh
எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றி தலைவ, வேறு எண்ணியது உண்டோ?

the process - sadhana - practice - technique of seeing " ALL

as ONE is SATCHUMATHI VIDHYA " , an ancient practice

followed by our saints /rishis
Saturday, February 15, 2014 at 03:24 am by Badhey Venkatesh
Durai Sathanan
Thank you Mr.Bharathi. Great Article!
Today, the modern spiritual world name this great practice as "INTERFAITH'. The World Interfaith week (Feb 1-7)adopted by UN follows Our Peruman's transfiguration day of Holy Light on January 30 every year. All are evolving well by His Grace.
"Being at its focus, I only conduct Sanmargam forever" - ArutPerumJothi Vallalar
Saturday, March 28, 2015 at 12:11 pm by Durai Sathanan