Thiru Arutprakasa Vallalar- Tamil
ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்த சிறப்புப் பாயிரம்
1. ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்த சிறப்புப் பாயிரம்

நேரிசை வெண்பா

திருச்சிற்றம்பலம்

வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத்
தழிவிலடுக் குந்தேனை யன்பரெலா முண்ண
வொழிவி லொடுக்கநூ லோர்ந்து.

இச்செய்யுள் கருதிற்று யாதோ எனின், இந்நூன்முகத்து ஆசிரியர் பெயர் முதலியவற்றைக் குறித்து நிற்றலின் சிறப்புப் பாயிர ஒழுக்கம் உணர்த்தல் கருதிற்று என்க.

வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த் தாடலைமேல் வைத்து என்பது:- வள்ளலார் என்னும் திருப்பெயருடையவர். ஞானாசாரிய நிருபராகிச் சமயவாதிகள் தருக்கச் செருக்குகள் பிற்பட்டொழியப் பேரருள் நெறியா வெற்றிகொண்டு சீகாழி என்னும் திருநகர்க்கண்ணே மெய்ந்நெறி விளங்க வீற்றிருந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வள்ளற்றன்மையுடைய மலர்போலும் திருவடிகளைத் தமது நன்முடிக்கண் ஓர் பொன்முடியாக அணிந்து,

ஓர்ந்து உள்ளத் தழிவி லடுக்குந் தேனை யன்ப ரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லுரைத்தான் என்பது:- அத் திருவடிகளின் அருட்டுணையால் தத்துவங்க ளனைத்தும் சடமென்று ஓர்ந்துணர்ந்து அவற்றைக் கடந்து தற்காட்சியோடு திருவருட்காட்சியும் செய்து, அங்ஙனம் வாதனையால் அசைந்தெழும் போதந்தோற்றாது அதனை அத்திருவருள் ஒளியில் அடக்கி ஆண்டு மேன்மேலும் எழாநின்ற சிவானந்தத்தேனைத் தாம் அனுபவஞ் செய்தவாறு அதன் கண் அன்புள்ள பக்குவரும் செய்தற்பொருட்டு, அச் சிவானந்தானுபவ அந்தரங்க மெல்லாம் வெளிப்பட்டு விளங்க, ஒழிவிலொடுக்கம் என்று ஓர் உபதேச முறையை உரைத்தருளினார் என்றவாறு.

வள்ளல் என்னும் பெயர் ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியா சாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப் பெயர் என்க. அல்லதூஉம், பின்னர் ஞானாசாரிய நிலைக்கண் தமது அருள்ஞான நோக்கால் இயைந்த கண்ணுடைய என்னும் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ளலென்னும் பெயர் ஈண்டு அவ்விசேடணம் இசையெச்ச நிலையில் நிற்ப நின்றது எனினும் அமையும் என்க.

இஃது வினை பண்பு முதலிய அடுத்த தொகைநிலைச் சொற்றொடராகாது தொகாநிலையாய்த் தனைத் தொடர் பயனிலை அண்மைப் பொருளுணர்ச்சியின்றி இடையிட்டு நிற்கத் தான் செய்யுள் முதற்கண் தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோ எனின், அற்றன்று. கொடை மடங்குறித்த குணங் காரணமாக வந்த இவ்வள்ளல் எனும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழ், அழகு, வளம் என்னும் நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மை என்னும் முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலின் பொருளாற்றல் உண்டென்க. அல்லதூஉம், இப்பெயர் உயர்பொருட்கிடனாய் உடனிலைக்கூட்டாய் ஒருநெறியசைத்தாய் ஓரினந்தழுவிப் பல்வகைக்குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலின் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடை கடைகளில் ஒன்றின் நிறுத்தாது முதலடி முதற்சீர் எதுகைத் தொடைக்கண் நிறுத்ததிற் குறித்தது யாதோஎனின், ஒன்றிரண்டெனக் கொண்டுறும் மறை ஆகம நன்றிரு முடிபின் நடுநிலை நடாஅய்ப் புலம்பெறு தத்துவ நியதியிற் போந்து உண்மலந்தெறும் அறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையில் தலைமையாய உத்தம சன்மார்க்கத்தினர் என்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினர் என்பதை ஆசிரியர் கூறிய "இதுவென்ற தெல்லாம் பொய்யென்றான்"1 என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப் பெயராய் நின்று, ஓதி உணர்ந்து பன்னாள் பலசாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத்தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப்பெற்றும் ஓரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்றும் உணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானாசாரிய அருளிலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஓதி உணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின் கண் அருளுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனர் என்பதூஉம், திருநோக்கஞ்செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையாலும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்று உணர்க. இங்ஙனம் ஓதாமல் வேதாகமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய "தன்மையு முன்னிலையும்"2 என்னும் திருவெண்பாவாற் காண்க.

அல்லதூஉம், குருராயன் என்பது வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்த விதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்திலும் குமாரசற்குருவாய் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர்.

தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்
தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.3

என்றதனால் பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க.

கல்லாடம்,

உழன்மதிற் சுட்ட தழனகைப் பெருமான்
வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்4
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்.4

சித்தியார்,

அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த
அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை5

என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க.

ஆயின், குருவேந்தன் என்னாது குருராயன் என்றது எது குறித்தற்கோ எனின், நான்கன் வேற்றமையால் அடுத்து மிக்குயர் நெறிப் பொருண்மையின் வந்த காரகச் சிறப் பொருதலைத் தொடர் மொழிப் பெயராய இக் குருராயன் என்பதன்கண் குரு என்பதன் முதனிலை யெழுத்துத் தமிழியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், ராயன் என்பதன் முதனிலை யெழுத்து தமிழியல் விதியின்றி ஆரியவியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும் வந்து இருவகை இயலுங் கோடலின், இதனைத் தம் பெயராகவுடைய பிள்ளையாரும் தமிழ்நூல் வடநூல் என்னும் இருவகை நூற்கும் உரியார் என்பது குறித்தற்கு என்க. ஆசிரியர் "மறைப்புலவன் தமிழ்க்குரிசில் சீகாழிச் சம்பந்தன்"6 என்றதனால் இருவகை நூற்கும் உரியர் என்பது காண்க என்க. அல்லதூஉம், பொருள் வேறுபடாது சிறிதே வடிவு வேறுபட்டு நின்ற குருராயன் என்பது தன்னை உள்ளூன்றி நோக்கினர்க்கு இலைமறைக்காய்போல் ஐ என்னும் உயிர்மெய்யோடிருந்த தன் முன்வடிவ முட்கொண்டு விளங்கக்காட்டி நிற்கின்றதாகலின், இதனையுடைய பிள்ளையாரும் தமது கடவுட்டன்மை வேறுபடாது உத்தமபுருட உருவங்கொண்டு நின்ற தம்மை அன்பால் உள்ளூன்றி நோக்கினார்க்குக் குமாரசற்குரு என்னும் பெயர் கொண்டு அளவிகந்த சூரியர் உதயம் போன்று ஒளி வீசும் தம் முன்னுருவாய் தெய்த் திருவுரு வுட்கொண்டு விளங்கக் காட்டி நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. ஆளுடைய பிள்ளையார் புராணம்,

மறையவர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடனருள் தரஎய் தினையென்பார்.7

என்று மூவாண்டிற் பிள்ளையார் திருவருள் வடிவைக் கண்டு சீகாழி யுள்ளார் வியந்து கூறிய வாறாய இச்செய்யுளால் உள்ளூன்றி நோக்கினர்க்குத் தம் முன்னுருவைக் காட்டி நின்றனர் என்பது காண்க என்க. இனி இன்றியமையாக் காட்டுளதேற் காட்டுவதன்றி மற்றைய விரிக்கிற் பெருகும் என்க.

அல்லதூஉம், குரு என்பதன் ஈற்று உயிர்மெய்யோடு ராயன் என்பதின் முதலுயிர்மெய்ப் புணராப்புணர்க்கையாய் நின்றதாகலின், இங்ஙனம் ஆனந்த வடிவராகிய பிள்ளையாரும் தாம் கொண்டருளி மானிடத் திருவுருவோடு புணராப்புணர்க்கையாய் நின்றனர் எனக் குறித்தற் கென்பதுமாம் என்க.

அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறில் எண்­டாக நிற்பவும் ஈற்றில் அவ்வெண்­டின்றி ஒற்று நிற்பவும் தொடர்ந்த மொழியாகலின் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும் அதிபக்குவர்க்கு அனுபவப்பொருளாயும் இவ்விரண்டிலும் கலவாது அதீதப் பொருளாயும் நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. இங்ஙனம் குருராயன் என்பதில் குவ்வென்பது இருள், ரு வ்வென்பது அருள், ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம். இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்க என்க.

எழுத்தாதிப் பல்வகைக் குறிப்பிற் பொருள்நெறி பற்றி நின்ற நோக்கம் செறிவு நுட்பம் இங்கிதம் இன்பம் கம்பீரம் சிறப்பு உறுதி முதலிய நற்குணந் தழீஇய சொற்புண ரீதென்றே, ஆசிரியரும் "சரிதாதி நான்கினுக்கும்"8 என்னும் திருவெண்பாவின் இடைக்கண் குருராயன் என்று இதன் பெருமை தோன்றவைத்தனர் என்க. இஃது இன்னும் விரிக்கிற் பெருகு மென்க.

வாது வென்ற சம்பந்தன் என்பதில் பொதுவானே வாதுவென்ற என்றது என்குறித்தோ எனின், எண்வகைக் குன்றத்து எண்ணாயிரவராய பயுடுக்கைப் பறிதலைச் சமணர்கள் ஒருங்கே கூடித் தென்மதுரைக்கண் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற் செய்த சுரவாதம் அனல்வாதம் புனல்வாதங்கள் பிற்படத் திருநீற்றானும் திருவாக்கானும் வென்று திறல்கொண்டமை யன்றியும், பரசமய கோளரி என்று தானே ஒலித்த திருச்சின்னத்தின் தெய்வப்பேரொலி கேட்டு உளம்பொறாது எதிரிட்டுமறித்த போதமங்கைப் புத்தநந்தியின் பொய்த்தருக்கமும் புழுத்தலையும் பொடிபட்டழியவும், பின்னர் உள்ளது போன் றில்லதைப் பற்றிச் சாக்கியக் குழுவுள் தலைவனாய சாரிப்புத்தன் சிற்சில வகையாற் செய்த சமயவாதந் தலைதடுமாறவும், செந்தமிழ் வேதத் திருமுறை தாங்கி மேம்படும் அறிஞரான் வெற்றிகொண்டமையும், திருவோத்தூரின்கண் அரனுக்கிடுபனை ஆண்பனையாயிற்றே என்று அசதியாடிய அமணக்குழூஉக்களின் வாய்வாதங்கள் மண்பட்டொழியத் தாம் திருவாய்மலர்ந்த திருக்கடைக்காப்புள் ஓர்மொழியானே அவ்வாண்பனை பெண்பனையாகச் செய்து விறல்கொண்டமையும் குறித்ததென்க.

அல்லதூஉம், வாது என்பது இலக்கணையாகக் கொண்டு பெருமண நல்லூரின்கண் திருமண நல்விழாவைத் தரிசிப்பான் வந்த மக்கட்கெல்லாம் தொன்றுதொட்டு இடைவிடாது உடல்நிழல் போல் சூழ்ந்துள பிறவிப் பெருவாதுகள் அனைத்தும் வென்றதூஉம், திருப்பாச்சில் ஆச்சிராமத்தின்கண் மழவன் மகளார்க்கு அடுத்த முயலக வாது வென்றதூஉம், மருகற்கண் ஓர் வைசியனுக்கு அடுத்த விடவாது வென்றதூஉம், இவை முதலியவும் குறித்த தெனினுமாம் என்க.

வெற்றிகொண்ட பொருட்டிறன் முதலியவற்றுள் ஒன்றேனும் தோன்றக் கூறாது இலேசானே வாது என்றது என்குறித்தோ எனின், பிறர்க்கு இங்ஙனம் வேறல் தம்மானும் துணைமையானும் பற்பல நாள் பற்பல வகையில் முயற்சி செயினும் முற்றாதெனினும், பிள்ளையார்க்குச் செந்தமிழ் பொழியும் திருவாக்கானே ஆண்டாண்டு அவ்வேறல் முற்றியதென்பது குறித்தென்க. வாது என்பது குருராயன் என்பதனோடும் சம்பந்தன் என்பதனோடும் சாராது நடுநின்றமையின், அத்துவித நெறியினும் சேராது துவிதநெறியினும் சாராதுநின்ற பதிதவாதிகளது பயனில்வாதம் எனினும் அமையும் என்க.

எதிரேற்கப்பட்டு எதிர்வினைக் கீழ்ப்பட மேற்கொள் வினையெழுச்சிப் பொருளின் வந்த வெல் என்னும் பிறவினைப் பகுதியால் அடுத்த வென்ற என்னும் பெயரெச்சம் �