Thiru Arutprakasa Vallalar- Tamil
4. திருமுகக் குறிப்புகள்
4. திருமுகக் குறிப்புகள்

1. நமது நேயம்

தேக முதலிய கருவிகளைச் செவ்வையாக நிறுத்தி... பஞ்சாக்ஷரியும் திருவடியும் ஒன்றே நமது நேயம்.
2. தியான மயம்

தியான மயமானால் பொசிப்பு மாறும்.
3. இறைவனது எண்ணம்

கல்வி கேள்விகளாற் சிறந்து மெய்யுணர்வோடு விளங்கியதாக. . . . என் எண்ணமொன்று இறைவன் எண்ணமொன்றானால் அறிவறிந்த உமக்கு இவ் விஷயத்தில் இன்னும் விரிக்க வேண்டுவதென்ன. இருப்பது எண் எண்ணம். கருத்தன் எண்ணம் எவ்வண்ணமோ தெரிந்ததில்லை. தாம் தேகமுதலிய கருவிகளை இயற்பட நடத்தல் வேண்டும். சிவத்தியானத்தோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் அவசியம் திருவருளை முன்னிட்டு சில காலத்தில் அங்ஙனம் வருவேன் ...துணிவு...திண்ணம்.

4 தேகபக்குவமும் சிவத்தியானமும்

என் கண்மணி போன்று என்னுள்ளிருந்த தமக்கு.....உண்டாவதாகவும், தேகத்தைப் பக்குவமாக வைத்துக்கொண்டு சிவத்தியானஞ் செய்து கொண்டு வரவேண்டியது.
5. வாழ்த்து

கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலும் சிறந்து நமது நற்றுணையாய் விளங்கிய தங்கட்கு குருகடாக்ஷத்தால் ... தாக.
6. திருவடித்துணை

சற்குண சிரோமணியாகிய நமது கண்மணி போன்று விளங்கிய ... சிவக்கியானமும் .... வனவாக. ... விடுத்த லிகிதம் அங்ஙனம் வரப்பெற்றதும் பெறாததும் புலப்பட்டே மின்று. புலப்படுதற்கு அவாவுகின்றோம். தேக முதலிய கருவிகளைக் கடைக்கணித்து வருக. சிவபெருமான் திருவடித் துணையன்றி வேறு துணையின்மையின் அவற்றை யிடைவிடாது நினைக.
7. நன்னெறி

செல்லும் போது செலுத்தவேன் சிந்தையை
வெல்லும் போது விடுவேன் வெகுளியை*
* செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல வரனெறி நாடுமீ னீரே.* வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவுஞ் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினாற்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே. __ திருமந்திரம் 2103; 2303

8. திடதேகமும் தியானமும்

தேகதிட முண்டாகும்படி உபசரித்துக்கொண்டு ஜாக்கிரதையோடு தியானித்துக்கொண்டிருக்க.

9. முத்திநிலையும் தேகசாதனமும்
அநித்திய மென்பது அரிபிரமாதிகளுக்கு முள்ளது. முத்தியடையும் வரையில் தேகம் வேண்டும்.

10. ஜாக்கிரதை
இங்கு வந்திருக்கிறவர்க ளெல்லாம் அதிகாரம்பண்ண வந்திருக்கின்றார்கள். நீ என்னைப்போல் ஏழை. தனிமையாய் ஜாக்கிரதையாய் இரு.

11. சுக்கிலம் மேலேறல்
சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்குப் பத்தியம் தூக்கம் சோம்பல் ஆகாது.*

* சுக்கிலம் மேலேறுவதாவது: கீழே சுக்கிலப்பையில் சேர்வது குறைந்து மேலே பிரமரந்திரத்தில் சேர்வது மிகுதிப்படுதலாம். சப்த தாதுக்களுள் அஸ்தி மூலாதாரத்திற்கும், மேதை சுவாதிட்டானத்திற்கும், மாமிசம் மணிபூரகத்திற்கும், உதிரம் அனாகதத்துக்கும், துவக்கு விசுத்திக்கும், மச்சை ஆக்ஞைக்கும், சுக்கிலம் சகஸ்ராரத்திற்கும் உரியன. உற்பத்தியாகும் சுக்கிலத்தில் இரண்டரை வராகனெடைக்கு ஒரு வராகனெடை கோசநுனியிலும், ஒரு வராகனெடை நாபியிலும், அரை வராகனெடை பிரமரந்திரத்திலும் சேர்கின்ற தென்பது அடிகளின் உபதேசக் குறிப்பு. கோசத்திற் சேர்வது புணர்ச்சியில் வெளிப்பட்டுக் கருத்தரிக்கச் செய்வது. பிரமரந்திரத்திற் சேர்வது அமுதமாவது. சத்தியப் பெருவிண்ணப்பத்தில் 'மேனிலைச்சுக்கிலம், கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும்' என்று அடிகள் கூறுவதில் கீழ்நிலைச்சுக்கிலம் கீழே விந்துப்பையில் சேர்வதையும் மேனிலைச் சுக்கிலம் சகஸ்ராரத்திற் சேர்வதையும் குறிப்பதா யிருக்கலாம். சிவபெருமான் ஊர்த்துவரேதஸ் உடையவர். விந்து மேலேறுவதே ஊர்த்துவ ரேதஸாம் காமத்தால் விந்து கீழிறங்கும், ஞானத்தால் மேலேறும்.

தூக்கத்தைப்பற்றி அடிகளின் உபதேசக்குறிப்பில் காண்க. 'தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே' என்பது அடிகள் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் (1113-4). "நெடுநீர் மறவி மடி துயில் நான்கும் கெடு நீரார் காமக்கலன்" என்பது திருக்குறள் (605). நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு என்று அடிகள் கூறும் ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்னும் நான்கும், இந்நான்குடன் சோம்பலும் சேர ஆக இவ்வைந்தும் தத்துவந் தொண்ணூற்றில் பூதகாரியம் இருபத்தைந்தில் தேயுவின் காரியங்களாம். ஆகாரம் 1/2, நித்திரை 1/8, மைதுனம்1/16 பயம் 0 என்று அடிகள் வரையறுத்திருத்தல் அருமையானது (நித்திய கருமவிதி).

12. சிவானந்த மேலீடு

ஹ’தமஹ’தம் கெட - திரோதானம் கெடும்.
இருவினை யொப்பால் - மாமாயை பஞ்சகிருத்தியம் போம்,
முன்னிலையான அவன் அவள் அது நீங்கிப் பரமாகக் கண்டால் - கர்மம் கெடும்.
வடிவின் வாசனை கெட - மாயை நீங்கும்.
சிவானுபவம் மேலிட - ஆணவம் கெடும்.

13. தசகாரியம்

தத்துவரூபம் - பூதமுதல் நாததத்துவமீறாக உள்ளவெல்லாம் நாமல்லவென்று அறியும் போதம்.
தத்துவதரிசனம் - தத்துவம், சடம், சடம் நம்மையறியாது, நாம் சித்துருவென்று அறியும் போதம்.
தத்துவசுத்தி - சித்துருவினை மறைத்தது இஃதென்றோர்தல்.
ஆன்மரூபம் - ஆணவமகன்று ஆசாரியனருளால் தன்னையடைதல்.
ஆன்மதரிசனம் - நாம் சித்துருவன் என்று மகிழ்தல்.
ஆன்மசுத்தி - செயலற்று ஈசனருள் அடைதல்.
சிவரூபம் - சிவமாகத் தரிசித்தல்.
சிவதரிசனம் - உயிர் ஆனந்திப்பது.
சிவயோகம் - எல்லாந்தானாக யோகு செய்தல்.
சிவபோகம் - சிவத்தோடு அத்துவிதமாகி நிற்றல்.

திருமுகக் குறிப்புகள் முற்றிற்று