Thiru Arutprakasa Vallalar- Tamil
1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்
1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்

திருமுகம் 1

26-12-1866

சர்வஞ்ஞர்கள்

தாசில்தார் ஸ்ரீ நரசிம்மாச்சாரியார் எழுதியது

ஸ்ரீமச் சம்யத்த சத்குணபதி பூற்ன்னராய் கியானானுஷ்டான சம்பன்னராய் றாஜயோக சாம்பறாச்சி சிங்காசனா சீளராய் மஹான்களாயி யெழிந்தருளி இருக்கிற மகாறாஜறாஜஸ்ரீ றாமலிங்க பிள்ளை அவர்களுடைய சன்னிதானத்துக்கு.

கா. நரசிம்மாசாரியார் யெழிதிய விக்கியாபன பத்திரிகை. இவடம் குடியாத்தத்தில் குசலம். தங்களுடைய ஆத்துமானுபவானந்தாதிசெயங்களுக்கு யெழிதி அனுப்பிவைக்கக் கோருகிறேன். இப்பவும்- தாங்கள் சிற்காலத்துக்கு விசேஷானுக்கிறஹ பூற்வகமாய்யெழிதி அனுப்பிவைத்த ஆக்கியா பத்திரிகை சேர்ந்து மிகவும் ஆனந்த மடையலானேன். தங்களுடைய ஆக்கியா பிரகாரம் சறகை வெள்ளை தலை உருமாலை பியாங்கி துவாறா இத்துடன் அனுப்பிவைக்கலாச்சுது. சேர்ந்த சங்கதி தெரியப்படுத்தக் கோருகிறேன். இந்த உருமாலையினுடைய கிரயம் யெனக்கு சேற்குறதாக யெழிதிநீர்கள்.

தங்களுடைய ஆக்கியா பிறகாறம் நடப்பிவைக்க வேண்டியதேயென் வேலையே தவிற அதனுடைய கிரயம் வாங்குகிற வேலையென்னதல்ல. மஹான்கள் விஷயத்திலே கறணத் திறிய பூற்வகமாய் நடப்பி வைத்த கைங்கறியங்களை குறிச்சு தகுந்த விசேஷம் சுவாமியே குடுத்துக் கொண்டிருக்குற விஷயத்தில் அப்பேற் கொத்த கிறயத்தை விட்டுவிட்டு அல்ப்பமான திறவிய ரூப கிறயத்தை அபேக்ஷிக்குறது யெங்கையாவதுண்டோ. தாங்களே யோசிக்க வேண்டியது. கோவிந்தாசாறியறோடே சில சங்கதிகள் நான் சொன்னது தங்களுடைய தற்சனம் அப்பிடியாவது நேறிடுமென்னமோ வென்று தாத்பறியத்துனாலேயே தவிற வேரில்லை. இவடம் தாங்கள் யேளியெனக்கு தரிசனம் குடுக்கவேணு மென்று அபிசந்தி தங்களுக்கு இருந்தாலும் அதுக்கு பிறதிபாதகமாயி இருக்கப்பட்ட மஹா பாபங்களுக்கு ஆகறமான யென்னை தாங்கள் ரொம்பவும் ஸ்தோத்திறம் பண்ணதைக் குறித்து நான் மிகவும் அஞ்சிகுறேன். மஸ்தான் அவற்களுடன் தாங்கள் இவடம் யேளறதாய் யெழிதினீர்கள். அப்பிடி யேளறது தங்கத்துக்குப் பறிமளமுண்டாப் போல சந்தோஷ’க்க லாகுறது. தில்ல கோவிந்தறாசு சுவாமியாருடைய சன்னிதிக்கு வருஷா வருஷமும் கோஷ்ட்டி சேற்க்க தாங்கள் நினைச்சால் ஒரு அப்பியந்தறமும் இருக்க மாட்டாது. இஷ்டம் சம்பூற்ணமாகாமல் போனதைக் குறித்து வியாகுலம் காண வைத்தீர்கள். "காலோஹ’ துரதிக் கிரமணா" என்கிற சீதா பிறாட்டி வசனப் பிறகாரம் எல்லாம் காலத்துக்கு உள்பட்டிருக்கிறதில்லை. அதுக்கு சிந்திச்சி பிறயோஜனமும் இல்லையென்று சற்வக்கியற்களாகிய தங்களுக்கு கியாபகப் படுத்துகிறேன். மகாராஜராஜஸ்ரீ மஸ்தான் அவர்களுக்கு கோவிந்தாசாரியாற் அவர்களிடத்துக்கு ஒரு கடிதம் அதுக்குமுன் தபால் மூலமாய் ஒரு கடிதமும் யெழிதியிருக்கிறேன். அதற்கு வெகு னாள் ஆயும் ஜவாபு வறவில்லை. அதுவும் யென்னுடைய தோஷமாகவே நினைக்குறேன். "கதா திறக்ஷியா மஹேறாமம் ஜெகதச் சோக னாசனம்" யென்கிறபடி தங்களுடைய தற்சனத்துக்கு விசேஷமாய் அபிக்ஷித்து யிருக்கிறேன். இவ்வளவே சமாசாறம்.

1866 வருடம்
டிசம்பற் மாதம் 26ஆம் நாள்
குடியாத்தம் காய - நரசிம்ஹாசார்ய*
க்ஷேமம் - இவை
இந்தக் கடிதம் சிதம்பறத்தில் ஊ ஸ்ரீமான் தில்ல கோவிந்தராஜ சுவாமி சன்னிதி தற்மகர்த்தறாகிய கோமாண்டூர் கிற்ஷ்ணமாசாறியாற் அவர்கள் மேல் விலாசம் பார்த்துக்கொண்டு மஹாறாஜறாஜஸ்ரீ பிள்ளையவர்கள் றாமலிங்க பிள்ளையவர்கள் சன்னிதானத்தில் குடுக்கத் தகுந்தது. குடியாத்தத்தி லிருந்து.
* * *

திருமுகம் 2
இசை விருந்து
4-2-1867
ஓர் அன்பர் எழுதியது

ஐயா!
இன்று ராத்திரி நமது வீட்டில் 6 மணிக்கு நடக்கும் சிவகங்கை வயித்திநாதய்யர் பாட்டுக் கச்சேரிக்குத் தாங்கள் வந்திருந்து சிறப்பிக்கக் கோருகிறேன்.
1867 வருடம் பிப்பிரவரி மாதம் 4ஆம் தேதி
மகாராஜராஜஸ்ரீ கூடலூர் கருங்குழி ராமலிங்கம்
பிள்ளை யவர்களுக்கு. கருங்குழி.
* * *

திருமுகம் 3
அன்னதானத்து அடியார்கள்
கூடலூர் ஸ்ரீ துரைசாமி அவர்கள் எழுதியது


கடவுள் துணை

விண்ணப்பம்

அன்புந் தயவுமுள்ள அய்யா அவர்கள் திருவடிகளுக்கு........ தெண்டநிட்ட விண்ணப்பம்.

நானும் விசுவலிங்க வுபாத்தியாயரும் நாளது மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை 5 மணிக்கு மேல்பட்டு ஆபீசை விட்டு பிறையாணமாயி வடக்குனோக்கி ரெட்டிச்சாவடிக் கடுத்த ஓரூரில் தங்கி விடியர்க்காலம் அழசிப் பாக்கம் சிங்கிரிகோவிலுக்குப் போயிப் பகற்போது போசனஞ் செய்துக்கொண்டு 18 நாழிகைக்கு மேல்ப்பட்டு அவிடம்விட்டு பிறையாண மாகினோ மப்போது மாடுகளுக்கும் எங்களுக்கும் அருள் துணையாயி மந்தார மிட்டு தென்றல் வீசுவதுபோல் கொண்ட லடித்தது. செல்லஞ்சேரி தூக்கணாம்பாக்கம் வந்து ராவு கால மாகையால் ஜீவ காருண்ணியத்துக்குத் தகுதி யில்லாதவ ராயினா ரொருவர் வுள்ளேரிப் பட்டு வந்து தங்கி விடியர்க்காலை தெற்கு நோக்கி வருகையில் யெனக்கு நெஞ்சி கருத்து கொஞ்சம் பித்த ஜலமும் அஜீரணத்தால் சொர்ப்ப அன்னமும் வெளிப்பட்டுது. திருப்பணாம்பாக்கம்... ... அறிவானது தூண்டச் சீரகம் மிளகு பொடி செய்து சருக்கரை சேர்த்து நெய்யாலுண்டை செய்து நானும் உபாத்தியாயரும் பொசித்தோம். உடனே 9 மணிக்கு கூடலூர் வந்து சேர்ந்து குரு கிருபையால் அவாளவாள் அலுவலைப் பார்த்து வருகிறோம்.

வைகாசி மாதம் 11ஆம் நாள் நடக்கப்போகிற அன்னதானத்திற்கு சுமார் மூன்றுக்குமேல் நெல்லு வண்டிகளும் வொரு வண்டி காயிகரிகளுமாக நான்கு வண்டி தயாராகு மென்று நினைக்குறேன். ஆனால் அருள் கூட்டிவைக்கு மென்பதே அடியேன் துணிவு.

வருகிற சனிக்கிழமை சாயர€க்ஷ புறப்பட்டு திருமாணிக்குழி பாலூர் பக்கம் போகவேணு மென்கிற ஆசையிருக்கிறது. ஆனால் அடியேன் தேகம் அல்ப்ப பசியோடு கூடியதால் அளவுக்கு மேலிரண்டொரு கவளம் புசித்தால் முன் சொல்லிய பித்தாதிக்கம் அதிகப்படுமே யென்று யோசிக்குறேன். அதர்க்குத் தகுந்த மருந்து அல்லது விபூதிப் பிரசாதம் அனுக்கிரகம் செய்தால் அத் துணைப்பற்றி அன்னதானத்து அடியார்களில் யானொரு வடியேனாக மதிக்கப் பெறுவேன். அருளக் கூட்டி வைக்க வேண்டியது. வேணும் தெண்ட நிட்ட விண்ணப்பம்.

இப்படிக்கு
கூ. துரைசாமி.

பிராமண சுவாமிகள் சுவாமிகளை சதா சேவை செய்துகொண்டுயிருக்க யென்றைக்கி கிடைக்குமோ வென்று விண்ணப்பஞ் செய்தார்களிக் காகிதத்துடன் அறப்பொடி பலம் அனுப்பிவைத்து யிருக்கிறேன். நோட்டிசு ஆயிரங் காப்பி* தயாராகின்றது. அதில் புருபு காப்பி வொன்று சமுகத்துக்கு அனுப்பியிருக்குது.
* வைகாசி 11, தருமச்சாலைத் தொடக்க விழா அழைப்பாக இருக்கலாம்.
* * *

திருமுகம் 4

கதி அடையச் செய்யத் தக்க வழிகள்

14-5-1867

மற்றும் ஓர் அன்பர் எழுதியது

விற்த்தாஜலம்

பிரபவ வருடம். வைகாசி மாதம் 2ஆம் நாள்

எனதன்பிற் கடைக்கலமாகிய ஐயாவே!

தங்க ளனுக்கிறஹத்தினா லடியே னிவ் விற்த்தகாசியி லாடிய பாதத்தவ னாமத்தை சதா தங்கள் பாவினங்களால்ப் பன்னுதல் செய்து காலங்கழித்து வருகின்றேன். யினு மவனது கெண்டா ஓசையும் ஆராதிப்பவர்க ளினி தரிசனமு மில்லாதிருப்பதினாலேயே யேக்க முற்றிருக்குறே னென்பதை யுள்ளபடி அங் னரிந்துக் கொள்ளா தல்ல.

யென் வாழ்நாள் முழுவதிலு மிப்ப நானிருப்பது போல் முக்தி யேக்கத்திலையே யிருந்து நற்கதி யடைவே னென்கிற நம்பிக்கை யெவ்வளவேனு மில்லாதிருப்பதினாலிவ் வெளியேனை தங்களைவிட வேறே அக்கதியடையச் செய்யத்தக்கவர்க ளில்லை யென்றுங் கருதி இக்கடித மெழுதிக் கொள்ளத் துணிந்த யிவ்வேழையினிடத்தில் கிஞ்சித் திரக்கமு மனவூக்கமும் வைத்து தங்க ளருகி லிரித்தி யிவனுடக்களைக் கழிப்பித்துக் கடைத்தேற்றிவைக்க, ஐயா! ஆயிரந் தரமாக வந்தனஞ் செய்குன்கிறேன்.

அதாவது, தங்களா லியற்றப்படப் போகிற சமரச வேத தருமச் சாலையில் தகுதியுள்ள வொரு வூழியநாக்கிக் கொள்ளும்படிக்கித் தானிவனது கோறுதலா யிருக்குறது.

இதைத் தங்க ளாழ்ந்த கருத்தில் யோசித் துடனே விடை யனுகிரஹ’க்கவும். யெப்போது மெதிர்பார்த்திருக்கிற தங்க ளடிமைகளிலொருவ னானவனது அனேகவித வந்தனமும் சாஷ்டாங்க தண்டமும்.

இப்படிக்கு
. . . . . . .
இஃது
குறிஞ்சிப்பாடி தபாலாபீசில் பார்த்துக்கொண்டு
அடுத்த பார்வதிபுரத்தில் வீற்றிருக்குஞ் சமரச வேத
தருமச்சாலைத் தலைவராகிய சிதம்பரம் மஹான்
இராமலிங்கப் பிள்ளை அவர்க டிருச்சமுகத்திற்கு.
குறிஞ்சிப்பாடி.
* * *

திருமுகம் 5

சிருட்டி தொட்டு உள்ள வித்தியாசப் பிராந்தி நீக்கம்

20-5-1867

சென்னை ஸ்ரீ முத்துகிருஷ்ண பிரமம் எழுதியது
சுபமஸ்து

அருணாசலீஸ்வரன் பேட்டை
பிரபவ வருடம் வைகாசி மாதம் 8ஆம் நாள்

அகண்ட பரிபூரண சச்சிதானந்த சொரூப சாட்சாத்கார சிவ சுப்ரமண்யக் கடவுளினது வரப்பிரசாதத்தினால் திரு அவதாரஞ் செய்த என்னருமைக் கண்மணியாகிய சமரச உள்ளம் வாய்ந்த இராமலிங்கமே!

முதலாவது:- முன்னால் சித்திரை மாதம் முதல்தெய்தி எழுதிய கடிதத்திற்கு பதில் ஒன்றும் காணாமல், மேற்படி மாதம் 22 தேதியில் எழுதி வரவிட்ட சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டட முதலானதும் நாளது மாதம் 11ஆம் தேதி ரிஷப லக்னத்தில் ஆரம்பஞ் செய்வதற்கு இவனும் வரவேண்டுமென்று குறிப்பிட்ட பத்திரிகை நாளது மாதம் 7ஆம் தேதி பார்க்க சந்தோடமாயிற்று. ஆனால் இவன் வருவதற்கு நாளில்லாமல் போனதால் நின்றுவிடலாயிற்று. முந்தி தெரிந்தால் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியா ருடன் வந்துவிடுவேன். அல்லது தனித்தாவது வரலாம். அது என் பாக்கியம். அப்படிக் கிருந்தபோதிலும் என்னுடைய மங்கள வாழ்த்துத லானது மேற்படி மாதம் 11ஆம் தேதி முதலாய் மேற்படி கட்டட முதலாகியதும் நிர்விக்கினமாய் முடிந்தேறி நித்தியோச்சவமாய் தங்கள் உள்ளன்பிற் றோன்றிய சங்கல்ப்ப படி எல்லா தருமங்களும் அபிவிர்த்தியாய் சந்திராதித்தர் உள்ளவரையிலும் நடந்துவரும்படி நமது சிவானந்தக் கருணாசமுத்திரத்தை பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது:- இவ்வண்ணம் இக்காலத்தில் இச் சிவகடாக்ஷமிருந்து முடிப்பிக்குந் தன்மை யுடையது அவரது அடியார்களின் பக்தியின் மகிமையேயாம். அது இத்தன்மை யுடைய தென்று அளவிடப்படாதா தலாலும் ப்ரம்மத்தை நாடி துறந்தவர்களுக்கும் மற்றையோர்களுக்கும் இவ்வுலகத்தில் இப்போதுதான் இது நூதனமாக ஏற்படுகின்ற அன்னசாலையும் வித்தியானந்தமும் சமரச பக்குவங்களுமான பெரும்பாக்கியமான சிவானந்த செல்வத்தின் அருமையும், மேன்மையும், யோக்கியமும், சிலாக்கியமும் இவ்வள வென்று சொல்வதற்கு ஏடும் போதாது; நாவுமில்லை. இச்சிறந்த தெய்வத் தன்மையுள்ள கீர்த்தியானது ப்ரம்ம கியானம் அடையும் பொருட்டே இனி திரு அவதாரஞ் செய்யப் போகின்ற புமான்களுக்கும் உலக முள்ளளவும் உண் மகிட்சியை பூரணமாகச் செய்துவைக்கு மாதலாலும் இவ் விஷயத்தைக் குறித்து தனங் கொடுத்தவர்களுடைய புண்ணியமும் இதைக் குறித்து வாக்கு சகாயமும் சரீர சகாயமும் செய்தவர்களுடைய உள்ளன்பின் பெருமையும் எத்தன்மைத்தோ. வேதங்களாலும் அளவிடக்கூடாமை யென்று சகல சாஸ்திரமும் சொல்லுமாயின், ஒன்றுந் தெரியாதவனாகிய இவன் சொல்வ தென்னை யுள.

மூன்றாவது:- இவனது தேகம் பட்டணத்திலும் உயிர் தங்களிருதயத்திலும் அடியார்களுடைய அன்பிலும் நாளது மாதம் 11ஆம் தேதி முதல் உட்புகுந்து மேற்படி சிவ கைங்கரிய முடிந்தேறும் பொருட்டு நித்திய மங்கல வாழ்த்துதலோடு நிலைபெற்றிருக்கும். இனி யொருகால் அதைக் குறித்து மற்றவை ஆரம்பஞ் செய்யு நாளில் இரண்டு வாரத்துக்கு முன்னர் தெரிவிக்க சித்தமுண்டாயிருந்தால் இந்த தேகம் வந்து விடும். சித்த மறியவும். இதற்கு பதில் மேற்படி 11ஆம் தேதி மேற்படி கைங்கரியம் ஆரம்பித்து ஆனந்தங் கொண்டாடிய பின்னர் அச்செய்தியை இவனுக்கும் ஒரு வரி யெழுதக் கோருகின்றனம்.

சுருதிப் பிரமாணம்

ஞானவாசிட்டம்

அறிஞர்க் குலகா னந்தமய மறியா தவருக் கிடர்மயமாஞ்
செறிவு மிருளா மந்தகர்க்குச் செங்க ணுள்ளோர்க் கொளியாகும்
பிரிவில் பிரம மனைத்துமென நாடில் பிரம மவனேயாம்
நறிய வமுதுண் டவனமுத மயத்தை நண்ணா திரானன்றே.

சிருட்டி தொட்டு இந்நாள் பரியந்த முண்டாயிருக்கும் வித்தியாசப் பிராந்தியை நீக்கும்பொருட்டு தங்களா லேற்படும் வித்தியானந்தமும் அன்னசாலையும் வியாசபகவான் சுகருக்கு (ப்ரபஞ்சமதே ப்ரம்மோகமென்று) போதிச்சது போலவே பெத்தனும் முத்தனுமாகிய யாவருடைய அறிவின் கண்ணைத் திறந்து காட்டிவரு மென்று நம்புகிறேன். அதற்கு மேல் நாரதர் சுகருக்கு (ஏகமே வாத்வைதம் ப்ரம்மோகமென்று) போதித்தது போல் மேற் சொல்லிய பசி வுபாதி நீங்கி வித்தியானந்த முண்டாயிருக்கும் தருமச்சாலையில் நின்றும் சிவ புனிதர்கள் அப்பேறடைவார்கள் எனத் தோன்றுகின்றது. சுபமஸ்து.

சிவகடாக்ஷந்துணை

திருச்சிற்றம்பலம்
(மேல் விலாசம்)
சென்னைக் கடுத்த இங்ஙனம்
அருணாசலீஸ்வரன் பேட்டை தங்களன்பிற்
மேற்படி கோயிலுக்குஎதிர் கூழியன்
224 - வது கதவிலக்கமுள்ள திரு. முத்துகிருஷ்ணன்.
திருமடத்திலிருக்கும்
இன்னான்.

கூடலூரில் மகா ராஜராஜ ஸ்ரீ முத்துக் கிருஷ்ண
இராமசாமி செட்டியார் குமாரர் அப்பாசாமி
செட்டியார் மேல்... வையிட்டு மகானுபாவ ராகிய
சிதம்பரம் இராமலிங்க பிள்ளையார் சந்நிதானத்தில்
கொடுப்பது. அவ ரெங்கே யிருந்தாலும் தட்ச ணமே
அவரிடத்துக்கு அதிதீவிரமாய் அனுப்பிவிடவும்.
அவசரம். சறூர் சறூர். Cuddalore.
* * *


திருமுகம் 6

புத்திமதி தெரிவிக்க வேண்டல்

17-7-1867

புதுவை ஸ்ரீ துரைசாமி அவர்கள் எழுதியது

அன்புந் தயையு முடைய அய்யா அவர்கட் கனந் தானந்த வந்தன முற் றெழுதிக் கொண்டதி யாதெனின்.

அவிடத்திய சுபயோக க்ஷேமாதிசயத்தை அடிக்கடி கேழ்க்க ஆவலுள்ளவனாக யிருக்கிறேன். நீங்க ளனுப்பிய கடிதமும் ரூபாயும் வந்து சேர்ந்து அதிலுள்ள மிச்ச ரூ 9ஐயும் அனுப்பித்திருக்கிறேன். யென்னாலாகவேண்டியவைகளுக் குத்தரவாக பலவாறு பிரார்த்திக்கின்றனன். மகாராஜராஜஸ்ரீ வேலுமுதலியாருக்கும் மகாராஜராஜஸ்ரீ நாயினா ரெட்டியாருக்குந் தங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். மகாராஜராஜஸ்ரீ வேலுமுதலியார் நாளையதினம் காலமே பிரயாணப்பட்டுப் போரார்கள். நானும் ரெட்டியாரும் திண்டிவனம் வரையில் போய் வழி விட்டுவிட்டு வருகிறோம். யெனக்கு வேண்டிய புத்திமதிகளை அடிக்கடி தெரிவித்தனுக் கிரகிக்கும்படி தங்களுடைய சரணாரவிந்தங்களை அஷ்டாங்க பஞ்சாங்க யோகாங்கமாய் பிரார்த்திக்கின்றனன்.

பிரபவவருடம் இப்படிக்கு
ஆடிமாதம்3ஆம்நாள் தொண்டன்
கி. துரசாமி.
இவை கடலூரில் மகாகனம் பொருந்திய அய்யா அவர்கள் சமுகத்துக்குக் கொடுப்பது.
* * *

திருமுகம் 7

எண்ணம் ஈடேற அருள வேண்டல்

6-5-1869

ஸ்ரீ வாசுதேவன் அவர்கள் எழுதியது



சிவமயம்

என தாருயிர்க் கோர் பெருந்துணையாய தங்களழகிய திருவடிகளி லனேகமாய் வணங்கி செய்துக்கொள்ளும் விண்ணப்பமாவது.

எதிர் பார்த்துக்கொண்டிருந்த யேழையின் வினைவிலக விளங்கிய விளக்கமான தங்கள் கடிதம் கிடைத்தது அற்ப புத்திக் கனுகுணமாயடிக்கடி வாசித்து வாசித்து வணங்கா நிற்க்கின்றேன்.

கிருபை கூற்ந் தனேகம் தடைகளை அணுவாக்கிக் கொண்டடியே ணெண்ண மீடேற வருள பிறார்த்திக்கின்றேன்.
சித்திரை மாதம் 26ஆம் நாள் ப. வாசுதேவன்.

கூடலூரில் மகாராஜராஜஸ்ரீ... பிள்ளையவர்கள் மேல்
விலாசம் பார்த்துக்கொண்டு சுவாமி அவர்கள்
இராமலிங்க சுவாமி யவர்கள் சன்னிதியில்
கொடுப்பது. Cuddalore.
* * *