Thiru Arutprakasa Vallalar- Tamil
2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்
2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்:

திருமுகம் 1

இறைவன் அருள் நோக்கம்

கூடலூர் ஸ்ரீ அய்யசாமி பிள்ளை எழுதியது

கற்றற்பாலன கற்றுங் கேட்டற்பாலன கேட்டு முளங்கொள விளங்கு முணர்ச்சியுஞ் செயற்தற்பாலன செய்தும் விடுத்தற்பாலன விடுத்து முறுபயனொடு கெழீ இய வொழுக்கமும் பெறீஇ நிலைத்தலை யமைந்த நேயர்க்கு பல்கால் வந்தனம்.

ஆண்டிறைவ ரருணேக்காற் சிறப்புடைத் திருவோ டுவப்புறல் வண்ண முற்பாடு வழக்கா னெப்புடை வருந்தோ றுணர்ந் துணர்ந்தத் தலை யுவகை சால்கிற்று மதனா னிடைக்கிடை வருமா றடுத்திவண் புரிகவன்றிப் பேருருக் காட்சியா னெடுஞ்சேய்மைக்கட் பிளவுபட்டமையினுற்ற வுறுகட் குட்டஞ் சிற்றுருக் காட்சியானண்மைக்கட் பலகாற்கூடு நேயத்தினுற்ற வுவகைப் பெருநீர் நிலையாற் புடைபெயர்ப்பின்றி யடங்கலிற் சிறிதமைதி பெற்றாம்.

வந்தனம்.



* * *
திருமுகம் 2

அடிகளார்க்கு உரிய திருமுகங்கள்

சென்னை ஸ்ரீ ரத்தின செட்டியார்

கூடலூர் ஸ்ரீ அப்பாசாமி செட்டியார்க்கு எழுதியது
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அப்பாசாமி செட்டியார் அவர்கள் சமுகத்துக்கு அநேக நமஸ்காரஞ் செய்து எழுதிக்கொண்ட விண்ணப்ப மென்னவெனில்:

இவ்விடத்தில் யான் க்ஷேமம். அவிடத்தில் தங்களுடைய க்ஷேமங்களை விரும்புகின்றனன்.

இப்பவும் அவ்விடத்திலிருக்கும் மகாராஜராஜஸ்ரீ பிள்ளை அவர்கள் இராமலிங்க பிள்ளை அவர்கள் பேரால் இத்துடன் மூன்று கடிதம் தங்களைப் பார்வையிட்டு கொடுக்கும்படி எழுதியிருந்தே னல்லவா. அக்கடிதங்கள் மூன்றும் அவாளிடத்தில் கொடுத்திருப்பீர்களே. அந்த சேதியை யடியேன் அறியும்படி தாங்க ளொரு கடித மென் பேராலனுப்ப வேண்டியது. மேலு மவாள் கூடலூரிலே யிருக்கிறார்களோ அல்லது கருங்குழியி லிருக்கிறார்களோ அல்லது இன்னமெவ்விடத்திற் காகவது போயிருக்கிறார்களோ. . . . . . . . . . . . . தங்களைப் பிரார்த்திக்கிறேன்.

மேலு மவா ளெவ்விடத்தி லிருக்கும்போது என் கடிதங்களைக் கொடுத்தீர்களோ அதையுஞ் சேர்த்து எழுத வேண்டும்.

எனக்கு மேல் விலாசம்:

சென்னப் பட்டணம் பெத்துநாயக்கன் பேட்டைக் குசிலி சவுளி ஊ - தஞ்சா செட்டி மேல் விலாசம் பார்வையிட்டு சை. இரத்தின செட்டிக்குக் கொடுப்பது என்று நட்பேட்டாக* வே தபால் மூலமாயனுப்ப வேண்டியது.

இந்தக் காகிதம் பார்த்த வுடனே தயை செய்து கடித மெழுத மன்றாடுகிறேன். வேணு மனேக நமஸ்காரம். மேலும் பிள்ளை அவர்கள் தற்காலத்தில் வேறொரு இடத்தி லிருந்தால் அவ்விடத்திற்கு தபால் எழுதவேண்டிய மேல் விலாசமும் எழுதியனுப்ப வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

இக்கடிதம் அவாளிடத்திலேயே நேராய் கொடுக்கவேண்டியது.

இது
கூடலூரில் கடைத்தெருவுக் கடுத்த மகாராஜராஜஸ்ரீ முத்து கிருஷ்ண அப்பாசாமி செட்டியார் அவர்களுக்குக் கொடுப்பது.
* நட்பேட்டாக - Not Paid ஆக
* * *

திருமுகம் 3

சாலை அபிமானிகள்

கூடலூர் ஸ்ரீ அப்பாசாமி செட்டியார்

சாலை அபிமானிகளுக்கு எழுதியது



அன்புந் தயவுமுள்ள ஐயா வந்தனம்.

நாம் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளு நிமித்தம் கடவுள் சம்மதப்படி யேற்படுத்திக்கொண்ட சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டடங்களின் அஸ்திவாரங்களும் கிணறு குளம் கேணி முதலிய நீர்நிலை யெடுப்புகளும் தற்காலம் இலேசிலே நம்மாற் கட்டுவித்துக்கொண்ட விழன் மேய்ந்த மணி கட்டடச் சாலையில் ஒரு சார் ஆகார தரும விருத்தியும் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள் குருவாரம் உதயகாலம் சிங்க லக்கினத்தில் துவக்கஞ் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டபடி அன்றையதினத்தில் துவக்கும்போது மூவாயிரம் சனங்களுக்குக் குறையாமல் கூடுமென்று தோற்றுகின்றது. ஆகையால் அத்தினத்தில் செல்லுகின்ற செலவு முழுவதும் இந்தத் தருமச் சாலையை யபிமானித்த நாமனைவரும் பாகஞ் செய்துகொண்டு செலுத்துவோமாக.

பிரபவ வருடம்

சமரச வேத தருமச்சாலைத் தலைவராகிய சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளையவர்கள் அனுமதிப்படி மேற்படி தருமச் சாலையை நடத்துகின்ற சமரச வேத சன்மார்க்க சங்கத் தாரில் ஒருவராகிய மு. அப்பாசாமி செட்டி
* * *


திருமுகம் 4

திருக்கூட்ட சமேதர்

கூடலூர் ஸ்ரீ அய்யாசாமி பிள்ளை

தருமச்சாலை ஸ்ரீ நமசிவாயப் பிள்ளைக்கு எழுதியது

என தன்புள்ள நண்பரா மெந்தனந் தங்கட்குப் பன்முறை வந்தனம்.

இங்ஙனம் விடையேற்று தின மிராத்திரி எ மணிக்குக் கிரகத்திற்கு வந்து சேர்ந்தனன். மகாராஜராஜஸ்ரீ சதாசிவ செட்டியா ரவர்கள் கொடுத்த ரூ 10-க்கும் ரூ 1-க்கு கூ 5? ஆக சில்லரை மாத்தித் தயார் செய்து வைத்திருக்கின்றேன். அவ்விடத்தில் சந்நிதானந் திருக்கூட்ட சமேதராய் தக்கண மடி பெயர்த்ததாய் கேழ்வியாகின்றேன். இதனால் சாலையில் விசேஷ கும்பலிராது பற்றியும் விசேஷ செலவிராது பற்றியும் காசாக அதிக துகை யிருக்கில் விரளமா யிருக்குமானது பற்றியும் ரூ 25 - க்கு வட்டக்காசுகள் பைசுகள் அனுப்பி வைத்திருக்கின்றேன். வரப் பார்த்துக்கொள்வதன்றி உப்பும் சில சில்லரை சாமான்களும் அனுப்பியிருப்பதை வரப்பெறுவீர்களாக. அதில் சில்லரை சாமான்களை சதாசிவ செட்டியார் பெரிய தங்கையார் வசம் சேர்ப்பிக்க.
அரிசி 4 - 5 தினத்தில் அனுப்புகின்றேன்.

புதவாரம் அன்புள்ள நண்பன்
கூடலூர் வந்தனம்
கா. அய்யாசாமி.

வடலூரில் சமரச வேத தருமச்சாலையில்
மகா ராஜராஜ ஸ்ரீ பிள்ளையவர் நமச்சிவாயப்
பிள்ளையவர்கள் இடம் கொடுப்பது
* * *


திருமுகம் 5

திரு அருட்பாவின் திருத்தொண்டர்கள்

ஸ்ரீ இரத்தின முதலியார்

ஸ்ரீசண்முக பிள்ளைக்கு எழுதியது



சிவமயம்

சமரச வேத சன்மார்க்க சங்கத்தாரி லொருவராகிய மகாராஜராஜஸ்ரீ சண்முக பிள்ளையவர்களுக்கு அனந்தஞ் சரணம்.

இவ்விடத்தி லின்றை வரையில் குருகடாக்ஷத்தால் யானும் மற்றவர்களும் க்ஷேமம். அவ்விடத்தில் தங்களுடைய சுப சரித்திரங்களையும் சாலையிலுள்ள மற்றவர்களுடைய க்ஷேமங்களையும் அடிக்கடி தெரிந்து கொள்ள ஆவலுடையவனாக விருக்கின்றேன்.

தாங்கள் இந்த மாதம் 22ஆம் தேதி வரைந்தனுப்பிய கடிதம் 25ஆம் தேதி வந்து சேர்ந்து எல்லா சேதிகளும் தெரிய வந்தது. மேலும் சன்னிதானம் கூடலூரிலிருந்து 20ஆம் தேதி சனிவாரம் மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியாருக்கு மர விஷயத்தைக் குறித்து வரைந்து விடுத்த திருமுகத்தாலும் க்ஷேமங்கள் தெரிந்துகொண்டேன். சந்நிதானம் தருமச்சாலைக்கு 23ஆம் தேதி எழுந்தருளுவதாக அதில் குறித்திருந்தது. இது நிற்க. கூடலூரிலிருந்து மகாராஜராஜஸ்ரீ விசுவலிங்க வாத்தியார் அனுப்பிய பிரார்த்தனை பத்திரிகைகள் 20-ம் வந்து சேர்ந்து மதுரை இராமனாதபுரம் திருவாவடுதுறை பெங்குளூர் முதலிய வூர்களுக்கும் தபாலிலனுப்பிவிட்டு சென்னையிலும் வித்துவான்கள் பிரபுக்கள் பண்டிதர்கள் முதலியோர்க்கும் சேர்ப்பித்தேன். எல்லோரும் அதிக வியப்பையும் சந்தோஷத்தையும் அடைந்திருக்கின்றார்கள். ஆனால் தாமோதரம் பிள்ளைக்கும் ஆறுமுக நாவலருக்கும் அவரைச் சார்ந்த மற்றைச் சிலபேர்க்கு மாத்திரம் வெறுப்பையும் கோபத்தையும் துக்கத்தையு முண்டு பண்ணிற் றென்று கேழ்விப்படுகிறேன். மகாராஜராஜஸ்ரீ வீராசாமி வாத்தியார் எழுதிய விஞ்ஞாபன பத்திரிகைக்கு பதிலுத்தரமாக "நல்லறிவுச் சுடர் கொளுத்தல்" எழுதி சென்னையிலுள்ள வொரு சிறுவன் பெயரா லதை வெளிப்படுத்தினார். அதில் வீராசாமி வாத்தியாரை விசேஷந் தூஷணை செய்திருக்கின்றது. இதைத்தான் சிதம்பரத்திற்கு அனுப்பியிருப்பார்கள். உங்களுக்கு அந்த புத்தகத்தை யனுப்புகிறேன் பாருங்கள். நான் தருமச்சாலைக்கு வந்திருந்தபோது இவ்விடத்தில் ஆறுமுக நாவலர் பிரசங்கஞ் செய்தபோது திருவருட்பாவை தூஷணை செய்தார்.

அந்த சமயத்தில் அந்த பிரசங்கத்தை கேட்க . . . ஒருவர் இதைக் கேட்டு சகியாதவராய் சிலநாள் பொறுத்து "திருவருட்பா தூஷணை பரிகாரம்" என்று ஒரு பத்திரிகையை யெழுதி வெளிப்படுத்தினார். அதை அவ்விடம் அனுப்ப சம்மதியில்லாதவனா யிருந்தேன். ஏனெனில் நாவலர் செய்த தூக்ஷணையை அந்த பத்திரிகையில் அவர் எழுதியிருக்கிறார். அது பற்றிதான் சம்மதியில்லை. ஆனால் தாங்கள் நாவலர் கொடிய செய்கையிப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு பத்திரிகையையும் அனுப்புகிறேன். மகாராஜராஜஸ்ரீ தொ. வேலாயுத முதலியார் நாவலரை லக்ஷியஞ் செய்து இதுவரையிலும் ஒன்றும் எழுதாம லிருந்தார். வீராசாமி வாத்தியார் தொந்திரவைக் குறித்து "நல்லறிவுச் சுடர் கொளுத்தல்" என்னும் பத்திரிகைக்கு பதிலெழுத ஆரம்பித்து எழுதிக் கொண்டு வரும்போது பெங்களூரில் முதலியாருடைய மைத்துனர் இறந்துவிட்ட சமாசாரம் கேழ்விப்பட்டு மேற்படியா ருடைய கர்மம் காரியத்திற்கு முதலியார் பெங்களூருக்குப் போயிருக்கிறார். 2-3 தினத்துக்குள் வந்துவிடுவார். வந்தவுடனே அதை யெழுதி முடித்து அச்சிட்டு வெளிப்படுத்துவதாக வீராசாமி வாத்தியார் யோசித்திருக்கிறார். தாங்கள் கேட்டபடி தெய்வமணி மாலை மாத்திரம் 20 புத்தகம் தற்காலம் அனுப்புகிறேன். மனு முறைகண்ட வாசகம் காப்பியாயிருப்பதால் பயிண்டுசெய்து அனுப்பிவைக்க கொஞ்சநாளாகும். திருத்தணிகைப் பதிகத்தில் 30 யார் வீட்டில் விசாரித்தேன் கிடைக்கவில்லை. இது சேதி தாங்களறியவும். மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியார் பல்லாரிக்குப் போயிருக்கிறார். மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக பிள்ளை சுந்தரம்மாள் முதலானவர்களும் க்ஷேமமாக விருக்கின்றார்கள். ஜீவகாருணிய வொழுக்கம் எழுதி முடிந்த சங்கதி —. . . . . . . இந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி தபால் கடிதங்கள் சேர்த்து எழுதி 2 அணா தலை ஒட்டி யனுப்பக்கூடும். 2ரூபா இடை வரையில் 2 அணா தலை. 2 ரூபா முதல் 1 ரூபா இடைவரையில் 1 அணா தலை ஒட்ட வேண்டியது. மகாராஜராஜஸ்ரீ வீராசாமி முதலியாரைக் கண்டு விஞ்ஞாபனப் பத்திரிகையை வாங்கி பங்கியில் அனுப்புகிறேன். என் க்ஷேமத்தையும் வந்தனத்தையும் எல்லாருக்கும் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன். சந்நிதானம் எழுந்தருளுகிற தேதியை அவசியம் தெரிவிக்க வேண்டும்.

விபவ வருடம்
பங்குனி மாதம் 20ஆம் நாள்
சோமவாரம். இங்ஙனம்
இறுக்கம் - இரத்தினம்.
* * *


திருமுகம் 6

அடியார் விளைவுகள்

11-5-1869

ஸ்ரீ இரத்தின முதலியார் ஸ்ரீ சண்முக பிள்ளைக்கு எழுதியது



சிவமயம்

சமரச வேத சன்மார்க்க சங்கத்தார்களி லொருவராகிய மகாராஜராஜஸ்ரீ சண்முக பிள்ளையவர்களுக்கு வந்தனம். இவ்விடத்தில் குருகடாக்ஷத்தால் இன்றை வரையில் யானும் மேற்படி சங்கத்தை யபிமானித்த மற்றவர்களும் க்ஷேமம். அவ்விடத்தில் தங்களுடைய க்ஷேமங்களையும் சாலையைச் சார்ந்த மற்றவர்களுடைய சுபசரித்திரங்களையும் அடிக்கடி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் விருத்தாசலத்திலிருந்து சித்திரை மாதம் . . . அனுப்பிய கடிதம் . . . . . . . . . . முடித்தார். இன்னம் அச் . . . வேறே சுத்த பிரதியாக இன்னம் எழுதவில்லை, எழு . . . . . ளவர்கள் இ . . . . . . . செய்துக் கொள்வதற்கு யாதொரு தடையுமில்லை. மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியார் . . . . . ‘ன் எழுதிக் குறித்து விட்டார் . . . திருக்கிறார். . . . . அவருடன் நானும் வருவேன். மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியார் பல்லாரியிலிருந்து இன்னம் வரவில்லை. எனக்கு வைகாசி மாதம் 10ஆம் தேதி முதல் ஆனி மாதம் 12 வரையில் சுமார் 32 நாளைக்கு விடுமுறை . . . . ஆறுமுக முதலியார் வந்தால் அவருடன் அவசியம் வந்துவிடுவேன். நாவலருக்கு சூலை நோய் லகுவாயிருப்பதாக சமாசாரம். அது எப்போதோ ஒரு . . . . . கிறார் . . . மாதத்துக் கொருவிசை அந்த . . . . . கஞ்செய்கிறது வழக்கம். அவருக்கு . . . . ருந்த பல . . . . . . . . . கட்டுக்கோப்புக்காக பிரித்த நிலத் . . . . ய மரங்கள் சேர்ந்திருக்கிறதா. ரோட்டுவரையில் தெருவின் நீளம் . . . ருக்கிறதா. அந்தக் கட்டடங்கள் சத்திரங்கள் . . . . . தெரியப்படுத்தவும். மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியாருக்கு அவ்விடத்தில் தானே சமுசாரத்தோடு இன்னஞ் சில தினங்களுக்குள்ளாக வந்து விடவேண்டுமென்கிற கருத்திருக்கிறது. ஆகையால் அவருக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் நல்ல கட்டடம் செய்து கொள்வார். அதற்கு தடையிராது. மகாராஜராஜஸ்ரீ அப்பாசாமி செட்டியாரவர்கள் தவிர மற்றவர்களின்னாரென்று விபரமாய் தெரிவிக்கவும். வீடு கட்ட உத்தேசஞ் செய்தவர்களாவர்.

இவ்விடத்திலும் மழையில்லாமல் அதிக வெப்பமாகவிருக்கின்றது. இது வரையில் எவ்வளவு தொகைக்கு கையொப்பமா யிருக்கிறது. அது விபரத்தை தெரிவிக்கவும். ஜீவகாருணிய வொழுக்கம் எழுதி முடிந்ததும் முடியாததும் தெரிவிக்காமல் மறந்து விட்டீர்கள். மறவாமல் அவசியம் தெரிவிக்கவும். இந்த விசை மறக்க . . . மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக பிள்ளை சுந்தரம்மாள் இவர்கள் க்ஷேமமாக விருக்கின்றார்கள். என் வந்தனத்தையும் க்ஷேமத்தையும் எல்லாருக்கும் குறிப்பிக்கவும்.

சுக்கில வருடம் இங்ஙனம்

சித்திரை மாதம் 31ஆம் நாள் இறுக்கம் - இரத்தினம்.
* * *


திருமுகம் 7

நம்பெருமான் எங்குளார் எனல்

8-6-1870

ஸ்ரீ வேலாயுத முதலியார்

ஸ்ரீ ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதியது



பொன்னாரு மணிமன்றுட் புலிமுனியும்
பதஞ்சலியும் போற்றா நிற்ப
மின்னாரு மிடைக்கயற்கண் மெல்லியல்வெற்
பரையன்மடப் பாவை காண
இன்னாமை யகன்றுலக முயவெடுத்த
திருவடிக்கே யெழிலா ரன்பு
பன்னாளும் பிரிவறிய வானந்த
நாதவருட் பண்ப போற்றி.

இவ்விடத்தில் அனைவரும் இட்ட பணிக்கணிருக்கின்றோம். அவ்விடத்தில் இப்போ திருக்கும் க்ஷேமாதிசயங்களைப் பற்றி யடிக்கடி திருமுகம் கட்டளையாக வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

அடிமையினுடைய தேகம் வந்தது தொட்டு சீத நோயான் மிக வருந்தி யிப்போது 15, 20 தினமாகச் சிறிது திருவருட் டுணையால் சுகமாக வருகின்றது. ஆயினும் தேகத்தில் தக்க வலி போதவில்லை, யதுவும் திருவருளால் உடனே கூடுமென்று நினைக்கின்றேன். அது காரணம் பற்றி தங்களுக்கு அடிக்கடி விண்ணப்பம் எழுதத் தடைப்பட்டது. ஆயினும் தங்களையொத்த தாயினும் பெருங்கருணை யுடையவர்களே சேயினுடைய வழுக்குற்றங்களைக் கண்டு சினந்து முகம் பாராதொழியின் பின்பு அக்குழவி என்னை பயன்பெறும். அதுபோல ஏழை நாயடியேனது பெருங்குற்றங்களை யெண்ணி இது வரையிலும் ஒரு திருமுகமும் கருணை செய்யாது விட்டால் என் செய்வது 'பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி என்பதைச் சிந்தித்திருக்கு மெளியேனுடைய நெஞ்சம் அடுத்த பொழுதில் எந்தாயே நின்னருட்டிருமுகம் வரப்பெறுவே னென்னுந் துணிவு கொண்ட வென் கருத்தை முடிப்பித்தருள வேண்டுவது.

அது நிற்க. நம் பெருமான் இப்போது எவ்விடத்தெழுந்தருளி யிருக்கின்றது. சாலை என்ன ஸ்திதியி லிருக்கின்றது. அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றனர்கள். இது விபரங்களை யுடனே கட்டளையிடும்படி கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுதோறு மனந் துடிக்கின்றது. ஆதலால் உண்மை விடயங்களை யுணரவருள் செய்தல் வேண்டும். முதலியாரவர்கள் 5,6 விசை பிரயானப்பட்டு தெய்விகத் தடையால் நிற்கும்படி நேரிட்டது. அதன் விவரத்தை நாம் நேரிற் காணும்போது தெரிந்து கொள்ளலாம். அப்படியிருக்க முதலியாரவர்கள் நகை விஷயமாக நமது புதுவையி லிருக்கும் மகாராஜராஜஸ்ரீ சூ. சதாசிவ செட்டியாரவர்களுக்கு இரண்டு கடிதம் சந்நிதானத்திற்குத் தெரியாதபடியாய் எழுதியிருந்தும் நாளது வரையில் அதற்கு அவர் பதில் எழுதாமலே யிருக்கின்றார். அது விஷயத்தில் நம்முடைய முதலியாரவர்களுக்கு கொஞ்சம் தொந்தரையா யிருக்கிறது. ஆதலால் தாங்க ளிதுவிஷயத்தை யோரணுவளவும் சந்நிதானத்திற்குத் தெரியப்படுத்தாமற்படிக்கு வெளியிலும் சங்கதி தெரியாமற்படி கூடுமாயிருந்தால் சதாசிவ செட்டியாரை எவ்விதத்திலாவது கண்டு மேற்படி நகைகள் என்ன என்ன நகை எவ்வளவு யாரிடத்தி லிருக்கிறது, வட்டி எவ்வளவு ஆயிற்று என்று விவரம் தெரியப்படுத்தும்படி தங்களுக்கு விண்ணப்பித்து சங்கதி தருவிக்கும்படி யுத்தரவு செய்திருப்பதால் இது விவரங்களையுடனே தெரிவிக்க வேண்டியது மறந்து விடாம லவசியம் தெரிவிக்க வேண்டும். சாலையிலுள்ள பெரியோர்கள் அனைவர்க்கும் அடிமை வந்தனத்தைக் குறிப்பிக்க வேண்டும். மற்ற சங்கதி பின்னால் தெரிவிக்கிறேன். வேணும் விண்ணப்பம்.

சென்னப்பட்டணம் இங்ஙனம்
1870 வருடம் அடிமை
சூன் மாதம் 8ஆம் நாள் தொ. வேலன்.
இந்தக் கடிதத்தை வெளிப்படுத்தாமல் தாங்களே பார்த்து கொண்டு பதில் உடனே எழுதும்படி கோருகிறேன்.
கூடலூர் ஜில்லா குறிஞ்சிப்பாடி குப்பத்தி லிருக்கும்
தபால் ரயிட்டர் மேல் விலாசம் பார்வையிட்டு
அடுத்த வடலூர் பார்வதிபுரம் சமரச வேதத் தருமச்
சாலையி லிருக்கும் ஸ்ரீமது ஆநந்த நாத ஷண்முக
சரணாலய சுவாமிகள் சமுகத்திற் சேர்ப்பிக்க
வேண்டியது.
* * *

திருமுகம் 8

ஆளுடையார் திரு ஆணை அமுத விருந்து

11-4-1871

ஸ்ரீ வேலாயுத முதலியார் முதலிய நால்வர் ஸ்ரீ ஆநந்தநாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதியது.



பொன்னவிருந் திருமார்பன் புதல்வ னோடும் போற்றிசெயு
மம்பலத்தெம் புனிதன் பொற்றாள்
மன்னிவளர் திருநெஞ்சத் தென்றனாவி மாதவமே
மகிழிருகண் மணியே என்றுந்
தன்னிகரா நந்தநாதப்பேர் சீர்த்த சண்முகநற்
சரணால யத்தெந் தாயே
நின்னிருதாண் மலர்க்கன்றி நீசனேன்புன் னெஞ்சிடங்கொண்
டுறுமேயோ நிலத்தின் பாலே

இவ்விடத் தனைவரு நங்குருமணி திருவருட் டுணையா லிட்ட கட்டளை யினிது புரிந்து வாழ்கின்றோம். அவ்விடத்தி னமரங்களுடைய வருலீலைகளும் ஆளுடையார் திருவாணை யமுத விருந்தும் அமைந்த வாற்றலுக் கடியரேம் பலகாலு மடுத்தடுத் தறிய உள்ளுணர் வின்மையா லுழிதரா நின்றேமாக நற்றுணையாயினாய்க் கற்றறி கல்வியின் அற்றமுறாமை யாங்காங் கருள்க.

ஏழை யோர்க ளினிதுயு மாறு
மேவர விடுத்தவிம் மீன ரவியோர்
பதினெட் டாந்தேதிய வாய தெய்வத்
திருமுகச் சைவ மாமந் திரவின்
னமுதுபெற் றளவி னெம்மறி யாத
வாரா வின்பத் தளவின் மகிழ்ச்சி
பேராக் காதல் பெரிது விளை(ய)
பேறு பெற்றன மவ்வழிப்
பெறுபணி யதுவே யுற்றன முயலுபு
நற்றிற(க்) காட்சி யாகுநா மனத்தேம்
புன்மைநோக் காதுயா மொழுகு றும்வகைத்
தோமறமற்று நற்றிறம் பலவுநல் குமதி
பெற்ற பேற்றிற் பெருந்தவத் தோயே.
வேணும் தெண்டனிட்ட விண்ணப்பம்.

இங்ஙனம்
ஏழையடிமைகள்
சென்னை தொ. வேலன்.
பிரமோதூத வருடம் இ. இரத்தினம்.
மீன ரவி 30 ஆம் நாள் சி. செல்வராயன்.
ச. ஆறுமுகம்.
* * *

திருமுகம் 9
ஞானசபை வழிபாட்டுத் திருநிலைக் கண்ணாடி
22-10-1871
கூடலூர் ஸ்ரீ அப்பாசாமி செட்டியார்
புதுவை ஸ்ரீ இரத்தின செட்டியார்க்கு எழுதியது

சற்குரவேநம

மகாராஜராஜஸ்ரீ செட்டியா ரவர்கள் இரத்தின செட்டியா ரவர்கட்கு பல முறை வந்தனம். தாங்கள் நாளது மாதம் 5ஆம் தேதி கடைசியாக யெழுதிய கடிதத்தால் சகல சங்கதியும் தெரியலானேன். ஆனால் தாங்க ளெழுதியபடி நானிப்போது வரக்கூடுமாயில்லை. ஏனெனில் எனக்குக் கண்ணோயாயிருக்கிறது. சவுக்கியமான பிறகு வர சித்தமா யிருக்கிறேன். ஒரு வேளை வர்த்தகாள் அதுவரைக்கும் கார்க்க . . . . தில்லையென்று சொல்லும்பட்செத்தில் இப்போது தீர்ந்தபேரஞ் சரியல்ல வென்றும் உடையவர்கள் சொல்லுவதாக அவாள் முத்திரையை உடைத்து விட்டு நகையை தங்கள் கைவசப்படுத்திக் கொண்டால் நான் வந்த பிறகாவது அல்லது எப்படியாவது ஓர் முடிவு செய்துக் கொள்ளலாம். தாங்கள் இதற்காக கார்ப்பதாக விருந்தால் உடனே வரும்படிக் கோருகிறேன். தங்கள் பெண்டுகளுக்கு சவுக்கியமாயிருக்கும். ஆதலால் அவாளையும் இட்டுக் கொண்டு வந்தால் சந்நிதானத்தை தெரிசித்துக் கொண்டு எல்லாரும் அவடம் மறுபடியும் போய் மேற்படி காரியத்தை முடிவுசெய்து கொள்ளலாம். மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியார் நாளை யல்லது 2 நாள் பொறுத்து கண்ணாடி முதலியது வாங்க வருவதாக உத்தேசித்திருக்கிறார். எல்லாம் அவாளைக் கேட்டால் தெரிய வரும். வேணும் பலமுறை வந்தனம்.

பிரஜோற்பத்தி வருடம்
அர்ப்பிசி மாதம் 7ஆம் தேதி
தரிமச்சாலை மு. அப்பாசாமி செட்டி.
* * *


திருமுகம் 10

ஞானசபை வழிபாட்டுத் திருநிலைப் பெட்டகம்
புதுரை ஸ்ரீ இரத்தின செட்டியார் கூடலூர் ஸ்ரீ
அப்பாசாமி செட்டியார்க்கு எழுதியது

சற்குருவே நம:

ஸ்ரீமது மகாராஜராஜஸ்ரீ செட்டியா ரவர்கள் கூ.மு அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு பல முறையாய் வந்தனம் வந்தனம்.

இப்பவும் இவ்விடத்தில் யாவத்திறாளும் க்ஷேமம். அவிடத்தில் நம்மிட சகோதராள் யாவத்திறாளுடைய க்ஷேமங்களை அடிக்கடி அறிய விரும்புகின்றேன். தாங்கள் நாளது மாதம் * நாள் யெழுதிய கடிதம் 22ம் பார்க்க சகலமும் தெரியலானேன். தங்களுக்கு திரேக அசௌக்கியமா யிருந்ததை கேழ்விப்பட்டு மகாராஜராஜஸ்ரீ ஆறுமுக முதலியாரவர்கள் கடுதாசியில் எழுதி யிருந்தேன். அதற்கு நம்மிட குருநாதர் கிருபையினால் சவுக்கியமா யிருக்கு தென்கிற விபறம் தெரியலானேன். நான் பெட்டி வேலையை முன்னிட்டு தச்சன் வீட்டிலேயே இருந்து பெட்டி வேலையை முடித்தேன் அப்படி யிராமல் சாலைக்கு வந்துவிடுவேனே யானால் பெட்டி வேலை இவ்வளவு சீக்கிரத்தில் முடியமாட்டாது. பெட்டியை எடுத்துக்கொண்டு சாலைக்கி இன்றைய தினம் காலையில் பிரயாணப்பட்டு வருகிறதா யிருந்தேன். தங்கள் கடிதம் பார்த்த பின்பு பிரயாணம் தாமதப்பட்டது. அதேனெனில் முதலியார் இவ்விடம் வந்தபோது ரூ 50 தயார் செய்து வைக்கவேண்டு மென்று சொன்னார். அது போல நான் உடனே தயார் செய்து வைத்துக்கொண்டு முதலியா ரவர்களுக்கு பல தண்டகம் சேதி தெரிவித்து வெகு நாள் காத்துக்கொண்டு இருந்து ஒன்றும் பதிலில்லாததினால் அச்சமயம் தங்களுக்கு பணம் அவசரமில்லை போல தோன்றி இவிடத்தில் சிலவாகிவிட்டது. இப்போது அவசரமென்று தாங்களெழுதி யிருப்பதைப் பற்றி இவிடத்தில் பணம் றொம்பவும் கசாலா யிருப்பதுந் தவிர தாங்கள் எழுதிய அவசரத்தை முன்னிட்டு எவ்வித பிரயாசையாவது பட்டு ரூ 50 தயார் செய்துக்கொண்டும் பெட்டியை யெடுத்துக்கொண்டும் நாளது மாதம் 5ஆம் தேதி யிவிடம் திங்கட்கிழமை தினம் பிரயாணப்பட்டு வந்து சேர முஸ்திப்பா யிருக்கிறேன். சாலையில் திருடர் வந்ததாகவும் சிலபேருக்குக் காயம் பட்டதாகவும் புதுவையில் வெகு குபாராய் பேசிக் கொள்ளுகிறார்கள். கூடுமாயிருந்தால் முதலியார் குதிரை குதிரை வண்டியை 6ஆம் தேதி யாகிற செவ்வாய்க்கிழமை காலையில் குள்ளஞ் சாவடியில் அனுப்பி வைத்தால் சல்தியில் வந்து சேரக்கூடும். ரூபாயும் பெட்டியும் வருவதை முன்னிட்டு மேற்படி வண்டி வரும்படி எழுதலாயிற்று. மற்றபடி சேதிக்கும் வேண்டிய காரியங்களுக்கும் அடிக்கடி யெழுதியனுப்பி வைக்கக்கோறுகிறேன் . . . . . . . வந்தனம் வந்தனம்.
இப்படிக்கு
புதுவை. சு. றத்தன செட்டி
இஃது கூடலூர் துக்குடி குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த
சமரச வேத சன்மார்க்க சங்க தருமச் சாலையி
லிருக்கும் மகாராஜராஜஸ்ரீ செட்டியா ரவர்கள்
மு. அப்பாசாமி செட்டியா ரவர் களுக்குக் கொடுப்பது.
* * *


திருமுகம் 11
ஞானசபைத் திருப்பணி
9-2-1872
புதுவை ஸ்ரீ இரத்தின செட்டியார்
கூடலூர் ஸ்ரீ அப்பாசாமி செட்டியார்க்கு எழுதியது.

மகாராஜராஜஸ்ரீ செட்டியாரவர்கள் மு. அப்பாசாமி செட்டியாரவர்கட்கு புதுவை தூ.சு. இரத்தின செட்டி யெழுதிக் கொள்ளும் வந்தனம் வந்தனம்.

இப்பவும் இவடத்தில் யாவத்திறாளும் க்ஷேமம், அவடத்தில் யாவத்திறாளுடைய க்ஷேமங்களை யறிய விரும்புகிறேன். கூடலூர் அமராவதி செட்டி சங்கதி அன்றைய தினம் ராத்திரிக்குள் பைசல் செய்து விட்டு பாரிக்கித்து வாங்கி ஸ்ரீ கோனேரி செட்டியாரிடத்தில் கொடுத்து விட்டு புதுவைக்கு வந்து விட்டேன். மேற்படியார் முதலுக்கு 1 ஆக வட்டிக்கு தீர்மானம் பெற்றிருப்பதை 3/4 ஆக வட்டி போட்டு முதலும் வட்டி சிலவு ரூ. 1.1.90 கொடுத்து விட்டது. இருளக்குரிச்சியான் மகனருணாசல செட்டி இவர்கள் சங்கதிகளை பைசல் செய்து சாட்டி யெங்கள் மூலமாய் விட்டுவிட வேண்டுமென்று சொன்னதற்கு இருளக்குறிச்சியானுக்கு ரூ.150 தம்பி ஐயாசாமி செட்டியார் யேந்துக் கொண்டிருக்கிறதா ரென்றும் அதையும் யேந்துக் கொண்டால் தங்கள் மூலமாய் சாட்டிவிடுகிறேனென்று அமராவதி செட்டியார் சொன்னார். மாணிக்க செட்டியார் முதலான பேரும் அது சறிதானென்றும் சொன்னார்கள். நான் தங்களை ஆலோசித்து யொழுங்கு செய்து கொள்ளுகிறேனென்று வந்து விட்டேன். இந்த சேதிகளெல்லாம் கோனேரி செட்டியாரையும் ஐயரையும் தங்களுக்கு கடிதம் யெழுதும்படி ஜாக்கிறதை செய்து விட்டு வந்தேன். கோனேரி செட்டியார் சிலவு தொகை ரூ.10 எடுத்துக்கொண்டு மற்ற ரூபாயை யென்னிடத்தில் கொடுத்துவிட்டார். கிருஷ்ணயா துரைசாமி பிள்ளைசங்கதி முதல் ரூ. 150 வட்டி ரூ. 7? நிலமை ரூ. 9... படி ரசீது படி சேர வேண்டியதாயிருந்தது. அதை அவருக்கு வேண்டிய ஞாயங்களைச் சொல்லி வட்டியிலும் லாபத்தையும் தள்ளி ரூ. 5 வட்டிக்குக் கொடுத்து ரசீதை பெற்றுக்கொண்டேன். இது சேதி மேற்படியாருக்கு தெரிவிக்கவும். மகாராஜராஜ ஆறுமுக முதலியாரவர்கள் சென்னப்பட்டணமிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். மேற்படியார் புதுவை வந்து ரூபில்* பேசிக்கொண்டு போவதாய் எழுதியிருந்தார். மேற்படியார் இதுவரையில் வரவில்லை. பண்ணுருட்டி மார்க்கமாய் போவதாயும் கேழ்விப்பட்டேன். மேற்படியார் அவரிடம் வந்து சேர்ந்தவுடன் மேற்படியார்கள் சேதி தெரிவிக்கும்படி நான் ரொம்பவும் க்ஷேமத்தை யறிய விருப்பமுடையவனாயிருக்கிறேனென்று சொல்லவும். சபைக்கி வாங்கின சாமான்கள் போக அவசியம் வாங்கவேண்டிய சமான்கள் இருந்தாலுடனே சேதி தெரிவித்தால் வாங்கி யனுப்புகிறேன். தேக்க மரம் 2 வண்டியிலேத்தி வரதராஜபிள்ளை அனுப்பி யிருக்கிறார். மற்ற சேதிகளெல்லாம் நான் ரூபில் வந்து பேசிக்கொள்ளுகிறேன். வேணும் வந்தனம் வந்தனம்.

* ரூபில் - நேரில்
பிரசோத்பத்தி வருடம் இப்படிக்கு
தைமாதம்28ஆம்நாள் புதுவை
சு. றத்தன செட்டி.
கூடலூர் துக்குடி குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சமரச
சங்க தருமச்சாலையி லிருக்கும் மகாராஜராஜஸ்ரீ
செட்டியாரவர்கள் மு. அப்பாசாமி
செட்டியாரவர்கட்கு கொடுப்பது.
* * *


திருமுகம் 12

பஞ்சாமுத நிவேதனம்

கூடலூர் ஸ்ரீ அய்யாசாமி பிள்ளை

கூடலூர் ஸ்ரீ அப்பாசாமி செட்டியார்க்கு எழுதியது


திருச்சிற்றம்பலம்

என தன்பரா மெந்தனந் தங்கட்கு வந்தனம்.

சந்நிதானம் நேத்திய தினம் ரூ. 7 கொடுத்து பஞ்சாமுதம் செய்ய சமான் வாங்கிவர சந்தைக்கு அனுப்பி யிருக்கிறார்கள். சந்நிதானம் சாலைக்கு எழுந்தருளும் அதி சமீபம் விரைவில் வந்து சேர வேண்டியது. அண்ணா அவர்கள் உத்தரவுப்படிக்கு.

திங்கட்கிழமை. கா. அய்யாசாமி
தங்களை காலைச் சுற்றிய பாம்பு என்று சந்நிதானம் கட்டளை யிட்டது. இந்த வார்த்தை உங்களுக்கு விசேஷ நன்மை யுண்டு பண்ணு மென்று தோற்றுகிறது. கா.அ கூடலூரில் மகாராஜராஜஸ்ரீ செட்டியார் அவர்கள்
மு. அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு
கொடுப்பது.
* * *