Thiru Arutprakasa Vallalar- Tamil
2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:
2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:

திருச்சிற்றம்பலம்

இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ வெளியில், இயற்கைவிளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி செரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச்செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக்கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!

அறிவு என்பது ஒரு சிறிதுந் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம் சிற்றணுப்பசுவாகி அருகிக்கிடந்த அடியேனுக்கு உள்ளொளியாகி இருந்து அப் பாசந்தகாரத்தின்றும் எடுத்து எல்லாப் பிறப் புடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரதுதிருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்ஙனம் அறிவேன்! எவ்வாறு கருதுவேன்! என்னென்று சொல்வேன்!

எல்லாம் உடைய இயற்கை விளக்க கடவுளே! தாய் கருப்பையில் சோணிதத் திரளில் சேர்த்து என்னை ஓர் பூதப் பேரணு உருவில் பெருகி வெளிப்பட இருத்திய காலத்திலும் எனக்குள் உள்ளொலியாகியிருந்து அப் பூதப் பேரணு உருவைச் சிருட்டித் தருளினீர். அன்றிப் புறத்தில் எவராலும் சிறிதும் சகிக்கப்படாத அதன் அசுத்தம் அருவருப்பு துற்கந்தம் முதலியவற்றைப் பொறுத்து அச்சோணிதத் திரளில் ஓர் ஆவி உருவாகியிருந்து அத்திரளினுள்ள பல்வகை விரோத தத்துவங்களால் சிறிதும் தடைபடாமல் என்னுருவைக் காத்தருளினீர்.

அன்றியும் அவ்விடத்து எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்தருளினீர். அன்றி அங்ஙனம் பூத்த ஆன்ம சத்திக் கலைகள் வாட்டமடையாது வெளிப்பட்டு விளங்க வளர்த்தருளினீர். அன்றியும் தாய் கருப்பையினிடத்துப் பூதப் பேரணு உருவில் கிடந்த என்னை அக்கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் இருத்தும் வரையில் நச்சுக்கிருமி நச்சுக்காற்று நச்சுச்சுவாலை முதலிய உற்பாத வகைகளால் எனது பூதப்பேரணு உருச்சிதறி வேறுபடாமலும் காத்தருளினீர்.

அன்றியும் தாய் கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் என்னை இருத்திய காலத்திலும் எனது இச்சை ஞானக் கிரியைகளை வெளிப்படுத்துதல் முதலிய உபகரிப்பு அதிகரிப்புகளுக்கு உரிய உபயோக தத்துவ உறுப்புகள் எல்லாவற்றையும் குறைவின்றி வகுத்தமைத்து வளர்த்துக் காத்தருளினீர்.

அன்றியும் அடியேன் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்த காலத்து இரும்பில் பெரிதும் கடினமுடையதாய் இருட்குகையில் பெரிதும் இருளுடையதாய் மிகவும் சிற்றளவுடையதாய் அசுத்தம் முதலியவற்றால் நிரம்பிய அக்கருப்பையினுள் நெருக்கத்தாலும் வெப்பத்தாலும் புழுங்கிய புழுக்கத்தினால் வருந்தி வருந்திக் களைத்தபோ தெல்லாம் அங்ஙனம் அமுதக் காற்றை அடிக்கடி மெல்லென வீசுவித்து அவ்வருத்தமும் களைப்பும் தவிர்த்துக் காத்தருளினீர்.

அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பசியினால் பரதவித்து மூர்ச்சித்த போதெல்லாம் பூதகாரிய அமுதத்தை எனக்கு ஊட்டுவித்துப் பசியை நீக்கி மூர்ச்சை தெளிவித் தருளினீர்.

அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பேய்வெருட்டாலும் பேரிருட்டாலும் பயந்த போதெல்லாம் நாத ஒலியால் பேய் வெருட்டையும் விந்து விளக்கத்தால் பேரிருட்டையும் தவிர்த்து என் பயத்தை நீக்கியருளினீர், அன்றி தாய் கருப்பையிங்கண் நேரிட்ட பெருந்தீ பெருக்காற்று பேரோசை பெருவெள்ளம் பெரும்புழு முதலிய உற்பாத துரிசுகள் அனைத்தையும் தவித்துக் காத்து அப்பிண்ட வடிவில் எனக்கு ஓரறிவையும் விளக்கி அருளினீர்.

அன்றியும் உலகனிடத்தே பிறந்து அனுபவிப்பதற்குரிய சுபஅனுபவப் பெருக்கம் ஆயுட் பெருக்கம் முதலிய நன்மைகளையும் எனக்கு அப்பிண்ட வடிவின்கண்னே அமைத்தருளினீர்.

அன்றியும் சோணிதக்காற்றின் அடிபடல் யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமற் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்தருளினீர்.

எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே! தந்தை என்பவனது சுக்கிலப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போதிற்கு முன்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடி ஒன்பது லஷத்து அறுபதினாயிரம் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவிற்கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும் அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட்பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் ஒருவாறு ஒருகணப்போது பாதுகாத்தலில் சலிப்படைந்தும் தளர்ச்சியடைந்தும் அருவருப்புற்றும் சுதந்தரமற்றும் பாராக்கிலிருந்தும் தடைபடுகின்ற தந்தை முதலிய ஜீவர்கள் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்விதத்தினும் சிறிதாயினும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன். ஆகலில் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!

அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுளே! தாய் என்பவளது சோணிதப் பையிங்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முன்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஆறுகோடி நாற்பத்தெட்டு லஷங் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் ஆபத்துகளும் வாராதபடி பூதப்பேரணு உருவிலும் பிண்டப் பெரு வடிவிலும் கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றிப் பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் பரதந்திரித்தும் பராக்கடைந்தும் தடைபடுகின்ற தாய் முதலிய ஜீவர் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்வகையினும் எத்துணையும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன்.

ஆகலின் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்! யாவராலும் பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்தகாரத்தில் யான் அது என்னும் பேதந் தோன்றாது அருகிக் கலந்து அளவிறந்த காலம் முன்பின் என்பதின்றி மூர்ச்சித்துக் கிடந்த என்னை அம்மகாந்தகாரத்தி னின்றும் ஒரு கணப்பொழுதினுள் அதிகாரணக் கிரியையால் அதிகாரணப் பகுதி உருவில் பிரித்தெடுத்தருளிய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

சத்திய ஞானானந்தத் தனித்தலைமைக் கடவுளே! காரணக் கிரியையால் காரணப்பகுதி உருவினும், அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்கும பகுதி உருவினும், சூக்குமக் கிரியால் சூக்குமப்பகுதி உருவினும், பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும், அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவினும் ஒரு கணப்போதினுள் என்னை செலுத்திய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அகண்ட பூரணானந்தராகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே! ஜீவனை ஆதரிப்பிக்கும் பூதப் பிருதிவித் தோற்றமும், ஜீவனை விருத்தி செய்விக்கும் பூத நீர்த் தோற்றமும், ஜீவனை விளக்கஞ் செய்விக்கும் பூதாக்கினித் தோற்றமும், ஜீவனை அதிகரிப்பிக்கும் பூத வாயுத் தோற்றமும், ஜீவனை வியாபகஞ் செய்விக்கும் பூத வெளித் தோற்றமும், உபப்பிருதிவி உபநீர் உபாக்கினி உபவாயு முதலிய தோற்றங்களும், அவைகள் இருக்கும் இடங்களும், தொழிலிடம் முதலிய இடங்களும், ஒலி அறிவு, உருவ அறிவு, சுவை அறிவு, நாற்ற அறிவு, பரிச அறிவு, என்னும் ஐவகைக் குணஅறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய செவி கண் நாக்கு மூக்கு மெய் என்னும் உள்ளிடப் பொறிகளும், அவைகள் உத்தியோகித்தற்குரிய வெளியிடப் பொறிகளும், வசனித்தறிதல் நடந்தறிதல் கொடுத்தெடுத் தறிதல் மலம் விடுத்தறிதல் சலம் விடுத்தறிதல் என்னும் ஐவகைத் தொழிலறிவுகளும், அவைகள் இருத்தற்குரிய வாக்கு பாதம் கை நீர்வாயில் அபானவாயில் என்னும் கரும உள்ளிடப் பொறிகளும், அவைகள் தொழிற்படற் குரிய கருமப் புறவிடப்பொறிகளும்,

நினைத்தல் விசாரித்தல் நிச்சயித்தல் அகங்கரித்தல் என்னும் சூக்குமக் கரணத் தொழில்களும், அவைகளை இயற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் சூக்கும கரணங்களும், அவைகளை இயற்றுவிக்கும் அதிசூக்கும கரணங்களும் அக்கரணங்களின் உபகரணங்களாகிப் பலபல பேதப்பட்டு விரிந்த சத்துவம், ராஜசம், தாமச முதலிய குணங்களும், பருவஞ்செய்தல் தகுதிசெய்தல் இச்சைசெய்தல் தெரிவுசெய்தல் அதிகாராஞ்செய்தல் காரணஞ்செய்தல் காரியஞ்செய்தல் முதலிய இடைப்பாட்டுத் தொழில்களும், அவைகளை இயற்றும்பொழுது இயையு இச்சை அறிவு முதலிய கருவிகளும், அக்கருவிகளுக்குரிய இடங்களும், அவைகள் உத்தியோகித்தற்குரிய இடங்களும், துரிசு நீக்குவித்தல் சுகம் விழைவித்தல் தூய்மை செவித்தல் இன்பமடைதற்கு வழியாயிருத்தல் துணையாயிருத்தல் முதலிய பரத்துவத் தொழில்களும், அவைகளை இயற்றுதற்குரிய தத்துவங்களும், அவைகளிருத்தற்குரிய இடங்களும், பிரேரித்தற்குரிய இடங்களும்,

அறிதல் அறிவித்தல் அனுபவித்தல் அனுபவிப்பித்தல் முதலிய முக்கியத் தொழில்களும், அவைகளை இயற்றுகின்ற சத்தி சத்தர்களும், அவர்கள் இருத்தற்குரிய இடங்களும், அவர்கள் அதிகரித்தற்குரிய இடங்களும், வாதவிருத்தி பித்தவிருத்தி சிலேட்டும விருத்திகளும், அவைகள் இருக்குமிடங்களும், உத்தியேகிக்குமிடங்களும், சூரியசத்தி சந்திரசத்தி அக்கினிசத்தி தாரகைசத்தி பிரமசத்தி மாயாசத்தி ருத்திரசத்தி முதலிய சத்திகளும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், அச்சத்திகளை நடத்தும் சத்தர்களும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், நனவு கனவு சுழுத்தி முதலிய அவத்தைகளும் அவைகள் இருத்தற்குரிய இடங்களும் இங்ஙனம் இன்னும் பற்பல அக உறுப்புகளும் அகப்புற உறுப்புகளும்,

மீத்தோல் புடைத்தோல் வந்தோல் மென்தோல் தோல்வகைகளும் வெண்ணரம்பு செந்நரம்பு பசுநரம்பு சிறுநரம்பு பெருநரம்பு முதலிய நரம்பின் வகைகளும், பேரென்பு சிற்றென்பு நீட்டென்பு முடக்கென்பு முதலிய என்பின் வகைகளும், நல்லிரத்தம் புல்லிரத்தம் கலவையிரத்தம் கபிலையிரத்தம் முதலிய இரத்த வகைகளும் மெல்லிறைச்சி கல்லிறைச்சி மண்ணிறைச்சி நீரிறைச்சி முதலிய இறைச்சி வகைகளும், மேல்நிலைச்சுக்கிலம் கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும், ஓங்காரமூளை ஆங்காரமூளை முதலிய மூளைவகைகளும், தலையமுதம் இடையமுதம் முதலிய அமுதவகைகளும், வெண்மை செம்மை பசுமை கருமை பொன்மை என்னும் வண்ண வகைகளும், வெண்மையிற்செம்மை வெண்மையிற்பசுமை வெண்மையிற்கருமை வெண்மையிற்பொன்மை, செம்மையின் வெண்மை, செம்மையிற்பசுமை செம்மையிற்கருமை செம்மையிற்பொன்மை, பசுமையின் வெண்மை பசுமையிற்பொன்மை பசுமையிற்கருமை, கருமையின்வெண்மை, கருமையிற்செம்மை கருமையிற்பசுமை கருமையிற்பொன்மை, பொன்மையின்வெண்மை பொன்மையிற் செம்மை பொன்மையிற்பசுமை பொன்மையிற்கருமை என்னும் வண்ண பேதவகைகளும், இவைகள் இவைகள் இருத்தற்குரிய இடங்களும் செயல்வகைகளும் பயன் வகைகளும் இங்ஙனம் இன்னும் பற்பல புறஉறுப்புகளும் புறப்புறஉறுப்புகளும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பவுதிக வடிவின்கண் ஒருங்கே உள்நின்று தோன்ற உள்நின்று தோற்றாது தோற்றவித்து தேவரீரது திருவருட் பேராற்றலை எங்ஙனம் அறிந்து எவ்வாறு கருதி என்னென்று துதிப்பேன்!
சுத்த சன்மார்க்க லக்ஷிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்தறியப்படாத பெரிய உலகின்கண்ணே, பேராசை பெருங்கோபம் பெருமோகம் பெருமதம் பெருலோபம் பேரழுக்காறு பேரகங்காரம் பெருவயிரம் பெருமடம் பெருமயக்கம் முதலிய முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய மற்றை இடங்களிற் பிறப்பியாமல், குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய இவ்விடத்தே, உறுப்பில் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னை பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அருட்பெரு வெளியின்கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவராகி விகற்பமில்லது விளங்குகின்ற மெய்ப்பொருட் கடவுளே! சிசுப் பருவந் தொடங்கிக் குமாரப் பருவம் வரையில் பேய்வெருட்டல் தோஷந்தாங்கல் பால் எதிரெடுத்தல் சவலைக்குருந்தாதல் நோய்ப் பிணிப்புண்டல் பசியால் அரற்றல் பயத்தால் உலம்புதல் உண்டி உவட்டல் உடம்பொடுநேர்தல் முதலிய எவ்வகைத் தடைகளாலும் தடைபடாமல் எனது அகத்தும் புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

அறிவார் அறியும் வண்ணங்களெல்லாம் உடைய பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே! குமாரப் பருவத்திற்றானே உலகில் சிறுவர்களுடன் கூடி சிறுவிளையாட்டியற்றல் சிற்றுண்டிவிழைதல் சித்திரம்பயிறல் அதிசயம்பார்த்தல் அசங்கியம் பேசல் அவலித்தழுதல் சிறுசண்டை செய்தல் சிறுகுறும்பியற்றல் தன்வசத்துழலல் தாய்வயிற் சலித்தல் முதலிய குற்றங்களில் என்னை சிறிதும் செலுத்தாமல் ஒரு சிறிய அறிவு விளங்கப் புரிந்து இடந்தனித்திருத்தல் இச்சையின்றி நுகர்தல் ஜெபதபஞ்செய்தல் தெய்வம்பராவல் பிறவுயிர்க்கிரங்கல் பெருங்குணம்பற்றல் பாடிப்பணிதல் பத்திசெய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.
வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர். வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.

இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!


இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்