Thiru Arutprakasa Vallalar- Tamil
1. சாலைத் தொடக்கவிழா அழைப்பு:
(1)



கடவுள் துணை

சாந்த சித்தமுடைய சாமியவர்களுக்கு வந்தனம்.1

சிதம்பர தலத்துக்குச் சுமார் இருகாத வழிநடை யெல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூ ரென்றும் பார்வதிபுரமென்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுரத்தில் சென்ன நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பெரிய பாட்டை 125வது மயிலில் மஞ்சக் குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை 23ஆவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள்2 குரு வாரம் உதயகாலம் சிங்கலக்கினத்தில் சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டடங்களுக்கு அஸ்தி வாரங்களும் கிணறு குளம் கேணி முதலிய நீர்நிலை யெடுப்புகளுந் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன்மேய்ந்த மண்கட்டடச் சாலையில் ஒரு சார் ஆகார தரும விருத்தியுந் துவக்கஞ் செய்யும்படி நிச்சயித்திருக்கின்றது.

ஆதலால் அந்தத் தினத்தில் அவ்விடத்தில் அன்பர்களுடன் எழுந்தருளி அனுக்கிரகிக்க வேண்டு மென்று பிரார்த்திக்கின்றேன்.

(2)



கடவுள் துணை!

அன்புந் தயையுமுடைய ஐயா வந்தனம்.3

சிதம்பர தலத்துக்குச் சுமார் இருகாத வழிநடை யெல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூ ரென்றும் பார்வதிபுர மென்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுரத்தில் சென்ன நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பெரிய பாட்டை 125ஆவது மயிலில் மஞ்சக் குப்பத்திலிருந்து விருத்தாச்சலம் போகின்ற பாட்டை 23ஆவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள் குரு வாரம் உதயகாலம் ருஷப லக்கினத்தில்4 சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டடங்களுக்கு அஸ்திவாரங்களும் கிணறு குளம் கேணி முதலிய நீர்நிலை யெடுப்புகளுந் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன்மேய்ந்த மண்கட்டடச் சாலையில் ஒரு சார் ஆகார தரும விருத்தியுந் துவக்கஞ் செய்யும்படி நிச்சயித்திருக்கின்றது.

ஆகலில் அந்தத் தினத்தில் தாங்கள் தங்கள் மனைவியர் புத்திரர் துணைவர் தந்தையர் தாயர் உறவினர் சிநேகர் முதலியவர்களோடும் வந்திருந்து அந்தத் தரும விசேஷ விருத்தியை விபவமாக நடத்துவிப்பீர்க ளென்று நம்புகின்றோம்.

பிரபவ வருடம்

சித்திரை மாதம் 14ஆம் நாள்5

சமரச வேதத் தருமச்சாலைத் தலைவராகிய சிதம்பரம் இராமலிங்க பிள்ளை யவர்கள் கட்டளைப்படி மேற்படி தருமச்சாலையை நடத்துகின்ற சமரச வேத சன்மார்க்க சங்கத்தாரில்
ஒருவராகிய

மு. அப்பாசாமி செட்டி.

***************
1. அடிகளின் பெயரால் துறவிகளுக்கு அனுப்பப்பெற்றது.
2. 23-5-1867
3. சங்கத்தார் பெயரால் மற்ற அன்பர்களுக்கு அனுப்பப்பெற்றது.
4. லக்கின மாற்றம் பிரதி பேதம் போலும்.
5. 25-4-1867 வியாழன்.
2. சாலை விளம்பரம்
23 - 5 - 1867
****************
=============