Thiru Arutprakasa Vallalar- Tamil
2. ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம்:


திருச்சிற்றம்பலம்

ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம்:

கல்வி கேள்விகளாற் பகுத்தறியத் தக்க அறிவையுடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்க ளனைவர்க்கும் வந்நதனஞ் செய்தறிவிக்கை.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்களிந்தப் பிறப்பினா லடையத் தக்க பிரயோசனத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

அந்தப் பிரயோசனம் யாதோ வெனில்: எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லாப் பயன்களையும் தமது பரிபூரண இயற்கைவிளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவின ராகிய கடவுளின் பூரண இயற்கையின்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோசனமென் றறியவேண்டும்.

இயற்கையின்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையவேண்டு மெனில்: கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டுமென்றறிய வேண்டும்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடுமெனில்: ஜீவகாருணிய ஒழுக்கத்தினாற் கடவுளருளைப் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாதென்று உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவகாருண்யத்தின் முக்கிய லக்ஷியமாவதெது எனில்: எந்த வகையாலும் ஆதாரமில்லாத ஏழைகளுக் குண்டாகின்ற பசியென்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லக்ஷியமென்றறிய வேண்டும்.

ஆகலில் அந்த ஜீவகாருணிய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கூடலூர் தாலுக்காவைச் சார்ந்த வடலூ ரென்கின்ற பார்வதிபுரத்தில் சமரச வேத தருமச்சாலை யென்றொரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அது பலர் சகாயத்தாலேயே நிலைபெற வேண்டுமாதலால், ஜீவதயை யுடைய புண்ணியர்கள் தங்கள் தங்களாற் கூடியவரையில் பொருண் முதலிய உதவி செய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டு மென்பது எங்கள் கோரிக்கை.

உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனுக்கும் உலக முழுதும் ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் மூன்றாசைகளையும் ஒழித்து உண்மையறிந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும் பசி நேரிட்டபோது மன மிளைத்தும் வலி குலைந்தும் அனுபவந் தடைபட்டும் வருந்துகின்றார்க ளென்றால், எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடுபடார்கள்! பசி அதிகரித்த காலத்தில் முகம் புலர்ந்து போகின்றது, உச்சி வெதும்புகின்றது, பிரமரந்திரம் அடைபடுகின்றது. காது கும்மென்று செவிடுபடுகின்றது, கண் பஞ்சடைந்து எரிந்து நீருலர்ந்து குழிந்து போகின்றது, நாசி அழன்று கலைமாறி பெருமூச்சு விடுகின்றது, நாக்கு நீருலர்ந்து தடிப்பேறுகின்றது, மெய் முழுதும் கருகி சக்தியற்று ஸ்மரணை கெடுகின்றது, வாக்கு குழறித் தொனி மாறுகின்றது, கைகளும் கால்களும் தடதடத்துச் சோர்ந்து தடுமாறுகின்றது, மலசல வழி வெதும்பி வேறுபடுகின்றது, உரோமம் வெறிக்கின்றது, பற்கள் கருகித் தளர்கின்றது, இரத்தமுஞ் சலமும் சுவறுகின்றது, சுக்கிலம் தன்மை மாறி வறளுகின்றது, எலும்புகள் குழைந்து நோக்கா டுண்டாகின்றது, நாடி நரம்புகள் வலியிழந்து மெலிந்து கட்டு விடுகின்றது. வயிறு பகீரென்கின்றது, மனசு தளர்ந்து நினைவு மாறுகின்றது, புத்தி கெட்டு நிலை மாறுகின்றது. சித்தம் கலங்கித் திகைப் பேறுகின்றது, அகங்காரம் குலைந்து அச்ச முண்டாகின்றது, பிரகிருதி சுருங்குகின்றது, கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது, தாப சோபங்கள் மேன்மே லுண்டாகின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஏககாலத்தி லுண்டாகின்றது எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே யிருக்கின்றது. ஆகாரமுண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்க ளெல்லாம் தழைந்து கடவுள் விளக்கமும் ஆன்மவிளக்கமும் அகத்திலும் முகத்திலும் வெளிப்பட்டு, திருத்தியின்ப முண்டாகின்றது. ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணையுள்ளவர்களாகி நம்மாற் கூடியமட்டில் அந்தப் பசியென்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்மலாப மென்று அவசியம் அறியவேண்டும்.

பிரபவ வருடம் இங்ஙனம்

வைகாசி மாதம் 11ஆம் நாள் சமரச வேத

பார்வதிபுரம் சமரச சன்மார்க்க சங்கத்தார் வேத தருமச்சாலை

* * *