Thiru Arutprakasa Vallalar- Tamil
13. சன்மார்க்கப் பிரார்த்தனை 12 - 5 - 1872
13. சன்மார்க்கப் பிரார்த்தனை 12 - 5 - 1872

                                                                    உ


ஸ்ரீ பார்வதிபுரம் என்னும் உத்தரஞானசிதம்பரத் திருப்பதிக் கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீ சமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ் சோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யானெனும் போத நாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்.எம்மிறையவரே!

இது பரியந்தம் யானாகத் தேடியதோர் பொரு ளென்ப தில்லையாகவே, தேவரீர் பெருங்கருணையால் என்னை உய்யக்கொள்ள உபகரித்தருளிய உடல் பொருளாவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது என்று கொண்ட தோர் சுதந்தரமானது துன்பவின்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில் என்னைப் பற்றி இருந்த தொன்றை யான் பெரும் பொருளாக வெண்ணி நின்றனன். ஆதலால் அச்சமரச சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் சமுகத்து நிற்கப்பெற்ற விசேடத்தால் அத் தற்சுதந்தரப் பொருளைத் தேவரீர் பெருங் கருணைச் சந்நிதி முன்னே அர்ப்பித்தனன். இனி, தேவரீர் அதனை அருள் வசமாக்கி ஏழையாகிய என்னையும் என்னை யடுத்த சுற்றம் என்னோடு பழகிய நட்பின ராதியரையும் உய்யக் கொண்டருளுக.

ஆங்கிரச வருடம்  வைகாசி மாதம் முதல் உ

இங்ஙனம்,
 அடிமை
க. இராமலிங்கம், மேட்டுக்குப்பம்
* * *