Thiru Arutprakasa Vallalar- Tamil
14. சபை வழிபாட்டு விதி 18 - 7 - 1872
14. சபை வழிபாட்டு விதி 18 - 7 - 1872


திருச்சிற்றம்பலம்

ஞானசபை விளக்க விபவ பத்திரிகை

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்க மென்றும் திருப்பெயர் வழங்குதல்வேண்டும்
.
இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றாற் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தி யுடையவர்களாய் திருவாயிற்படிப் புறத்தி லிருந்துகொண்டு விளக்கேற்றி, பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையிற் கொடுத்தாவது, உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்கவேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்கவேண்டும். தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்கா லிட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்விக்கவேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்ஙனமே செய்விக்கவேண்டும். விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்புடையவர்களாயிருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும் போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட விருக்கப்படாது. அத் திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப் பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப் பெட்டித் திறவு கோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியா யிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.

ஆங்கிரச வருடம் ஆடி மாதம் 5ஆம் நாள்

இங்ஙனம்,

சிதம்பரம்
இராமலிங்கம்
* * *