Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
கஜேந்திர மோட்ச உண்மை...சுவாமி சரவணானந்தா.
அரச உலா, யானை அரசு கஜேந்திரன் என்பது நமது உண்மை உயிராம் ஆன்மாவே, சுயேச்சையாயிருந்து கொண்டு, சுகானந்தமாய் வாழ வேண்டிய இந்த ஆன்மாவாகிய யானை, இத் தேக பந்தத்தில் சிக்கி, மீள முடியாமல் தவிக்கின்றதாம். ஆன்மா அகப்பட்டு அல்லல் படுகின்ற இடம் சிரநடு கீழ் உள்ள ஓங்கார மூளையின்கண்ணாம். இந்த ஓங்கார முகுளமே ஒரு முதலையின் வடிவமாக இருக்கின்றதாம். இம் முதலையின் வாயில்தான், அந்த ஆனை நன்கு சிக்கிக் கொண்டிருக்கின்றதாம். ஆன்ம போதம் அழிந்து, அருள் அனுபவம் உண்டாகவே, அவ்வான்மா ஆதிமூலமாம் அருள் ஒளித் திருமாலை ஒலியிட்டு இறைஞ்சுகின்றதாம். அத் திருமாலும் தன் அருட்சுடராம் சக்கிராயுதத்தால் தேக பந்தமாகிய அம் முதலைப் பிடியிலிருந்து விடுவித்து இந்த ஆன்ம யானைக்கு விடுதலையாம் மோட்சம் வழங்குகின்றதாம்.

     இம் முதலைப் பிடியிலிருந்து வெளிப்பட்ட ஆன்ம உண்மையைச் சைவ பரத்தில் முதலையுண்ட பாலன் கதையாக வர்ணிக்கப்பட்டுள்ளதாம்.  ஐம்மல பாசத்தில் அழுந்திக் கிடக்கும் ஆன்மாவே முதலையால் விழுங்கப்பட்ட ஐந்து வயது அந்தணச் சிறுவனாம். கடவுளின் ஐந்தொழிற் செயலால் பக்குவமுறும் ஆன்மாவே யகர வண்ண பத்து ஆண்டு நிரம்பிய உபநயனம் பெறும் அந்தண மைந்தனாக உருவாக்கப் பெற்றுள்ளானாம். திருப்புக்கொளியூர் குளத்தில் மறைந்திருந்த அம்முதலையை, சுநதரர் தயா மாலையாகிய தேவாரப் பாசுரம் பாடி, கரைக்கு வரவழைத்து, அதன் உள்ளிருந்து அந்தண பாலனையும், நிறை வளர்ச்சியோடு வெளிப்படச் செய்கின்றார். பின்னர் அவனும், உபநயனம் செய்யப்பெற்று ஆனந்தம் உறுகின்றானாம்.

     கடவுள் படைப்பில் மிகச் சிறிய எறும்பும், மிகப் பெரிய யானையும், மற்ற ஒவ்வொரு உயிரும் பொருளும் கூட மனிதனுக்காகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளனவாம். மனிதனுக்காக என்றால் இவனுடைய சுக போக அற்ப வாழ்வுக்கு என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அப்படி எண்ணிக் கொண்டு தான் பலர் பிற ஜீவர்களையும் பொருள்களையும் வதைத்தும் சிதைத்தும் உண்டு களித்து கிடந்து, கடவுள் தயவுக்கு திருவருளுக்குப் பாத்திரராகாது அழிந்து போய்க் கொண்டிருக்கின்றனர். கடவுள் மனிதனுக்கு நல்ல அறிவும் அன்பும் கொடுத்து அவை கொண்டு அருளின்பப் பெருவாழ்வு அடைவதற்கன்றோ சூழுயிர் உலகெல்லாம் ஆக்கிக் கொடுத்திருக்கின்றார். இம் மனிதப் பிறப்பு தேகமும், உயிருலகப் பொருள்களும் இல்லாமல், அருள் அனுபவம் பெறுவது சாத்தியமல்ல என்ற காரணத்தினால்தான் அவைகளை நம் பொருட்டு, படைத்துக் கொடுத்துள்ளார் என்பது உண்மையாம்.  இந்த அருள் ஞானத்தாலே அருளனுபவ வாழ்வு பெறுவதே நம் பதியை வாழ்த்தி வணங்கி வாழ்தலாகும். இப்பேறு அடையாது, கடவுளை மதிப்பதும், துதிப்பதும், வாழ்த்துவதும் வணங்குவதும் உண்மை வழிபாடு ஆகாது.

        நாம் ஒவ்வொருவரும், கடவுளான்ம அணு வடிவிலிருந்து திருவருளாலே தனித்தனி ஒரு மனித தேகங்கொண்டு விளங்குகின்றோம். இப்படியே தான் எறும்பு முதல் யானை முடிய உள்ள ஒவ்வொரு உயிர் வடிவமும் கூட கடவுளணு வடிவத்திலிருந்து விரிவடைந்து தோற்றியுள்ளதாம். இவ் இறைவன் உண்மையை அருள் அறிவினாலே நாம் அறிந்து கொண்டு இருக்கின்றோம். மற்றெந்த ஜீவர்களுக்கும் இந்த மெய்யறிவு கிடையாது. இந்த அறிவு பெற்றுள்ள நாம், புறத்தேக நிலை கடந்த ஆன்ம உண்மை நிலையிலிருந்தே உணர்கின்றோம். இந்த மெய்ஞ்ஞான உணர்வு கெடாமல், உயிர்ச்சக்தி விளங்க, உடல் விளங்க இவ்வுலகில் அருளியல் வாழ்வு மேற்கொள்ள வேண்டும் நாம். பூரண அருள் பெறும்வரை புறத்தே தயவுக் காரியமே நிரம்பிடும்வரை சுத்த சத்துவ உணவு தேவைப்படுகின்றது. இதற்காக அசரவுயிராம் தாவர இனத்தில் இருந்தும், ஜடப்பொருளாம் திட, திரவ, வாயு, பதார்த்தங்களிலிருந்து சத்துப் பொருள்களை ஏற்க வேண்டியுள்ளதாம். இப்படி வாழ்வு நடத்தும்போது, அருள் அடைவதே லட்சியமாக இருப்பதால், நமது ஒவ்வொரு சிறு முயற்சியும், செயலும், அனுபவமும் அந்த அருட்பெரும் பதியின் தயவால் நிகழ்வதாகவே உணர்கின்றோம். ஆதலின் இந்த வாழ்வுச் செயற்பாட்டில் இந்திரிய, கரணங்களுக்குப் புலனாகா எத்தனையோ சிற்றுயிர் இனங்கள் மடிகின்றனவெல்லாம் திருவருளால் அவ்வுயிர்களின் ஆன்மாக்கள் மேனிலைக்கு ஏற்றப்படுகின்றனவாக அறிந்து கொள்ளப்படும். இவ்வுயிர்களை நாம் உண்பதற்காகவா அழிக்கின்றோம் ? இல்லையே மற்றபடி புலையுணவு ஏற்கின்றோர் கொலைப்பாவத்திற்கு ஆளாகி அருளடையாது அழிவுறுவது இயற்கையாய்க் காண்கின்றோம்.

     மனிதனுக்குத் துன்பத்தையும், நோயையும், அழிவையும் உண்டுபண்ணக்கூடிய சிற்றுயிர்ப் பிராணிகளையும், கான் விலங்குகளையும் அழிப்பது குற்றமா என்று வினவுகின்றனர், பலர்.   ஒரு செயல் குற்றமானது என்பதும் குற்றமல்ல என்பதும் ஒருவனது உள்ளத்துணர்வு நிலையைப் பொருந்திருக்கின்றதாம். உலகில் எத்தனையோ ஜீவர்கள் தினமும் இயற்கையாகவும், ஆபத்துக்களாலும், விபத்துக்களாலும், துன்புற்றும், அழிவடைந்து கொண்டேயிருக்கின்றன. இச் செயல்களுக்கெல்லாம் பொறுப்பு யார் ? எங்கும் என்றும் நிறைந்து யாவையும் நிகழ்த்துகின்ற ஆண்டவர் தானே இவ்ற்றிற்குப் பொறுப்பாவார் இல்லை. அந்தந்த உயிர்கள், தத்தம் முன் வினைப்படியும், நியதி விதிப்படியும் அப்படி அழிவுறுகின்றன. ஆதலின், அவைகளே தான் அச்சம்பவங்களுக்குப் பொறுப்பு என்று கூறலாம் என்கின்றனர் சிலர். இக்கூற்று சரியானதல்லவாம். ஏனெனில், கடவுள் தானே தன் அருளொடு எவ்வுயிர்க்கும் உள்ளும், புறமும் சூழ்ந்து நின்று யாவையும் நிகழ்த்துகின்றார் என்பது உண்மையாம். ஆகவே, அவரே தான் அச்செயல்களுக்கும் பொறுப்பு. அவரோ சர்வ ஜீவதயாபரர் கருணையே வடிவானவர் என்று பலராலும் பலகாலும் போற்றப்படுகின்றார்.  அப்படியிருந்தால் அவரது செயல்கள் எவ்விதத்தும், எப்பொழுதும் எவ்வகையிலும் தயவுக்கு அயலானதாய் கருணைக்குப் புறம்பானதாய் எப்படி இருக்க முடியும் ? ஆகையால், இந்த அழிவுச் செயல்களும் அவர் தம் தயவு அல்லது கருணைச் செயலே எனத் தெளிதல் வேண்டும்.  ஆண்டவ்ர், ஆருயிர்களை மேலான இன்ப வாழ்வுக்கு ஏற்றிவைக்கவே தமது கருணை ஐந்தொழிலை சதா புரிந்து கொண்டுள்ளார். உயிர்கள் அன்பும் அறிவும் நிறைந்த  அருளனுபவமுறுதற்கு ஏற்படுத்தப்பட்டவைகளே அசைக்க முடியாத விதிமுறைகள் எல்லாம். ஆகவே, உலகில் நிகழ்கின்ற அழிவுகள் ஆண்டவர், திருவுள்ளத்திற்கு மாறானதல்லவாம். இதனால், மனிதன் திருவருள் லட்சியத்தோடு வேண்டத்தகாதவற்றை அழித்தொழித்தல் திருவருட் சம்மதமே. ஆனால் ஒன்று மனிதன் புலபோக இச்சையற்றவனாய், திருவருள் நாட்டம் கொண்டவனாய், அகநிலை நின்று அனக வாழ்வு விருத்தி செய்கின்றனவானாய் இருக்க வேண்டும். அவனது செயல் எல்லாம், தயவு அடிப்படையானதாகவே இருக்கும். பழிபாவங்களுக்கு நிலையுற்று தயவோடு வாழாது, வேதாகமக் கலை நிலையுற்று, தாம் சுத்த ஆன்ம சொரூபிகள் என்றும் பாவமும் பழியும் தமக்கில்லை என்றும், வேண்டுதல், வேண்டாமையற்று கிடைத்ததையுண்டு ஜீவன் முக்தர்களாய் வாழ்கின்றோம் என்றும் கூறிக்கொண்டு, கொல்லாமையும், புலால் உண்ணாமையும் மேற்கொள்ளாதிருக்கின்றவர்கள் திருவருளைப் பெறாதவர்களேயாவர். ஆகையால், முதலில் சத்விசாரத்தால் ஆன்ம நிலைக்கு ஏறி நிற்றல் வேண்டும். அங்கிருந்து தயவோடு யாவையும் செய்தல் வேண்டும். சூழ் உயிர்களை வருபொருள்களைத் தாழ்வானதாகவோ அல்லது போற்றி வணங்கும் தெய்வ வடிவமாகவோ, கருதி மயங்கி செய்யத்தகாதன ஏதும் செய்தல் கூடாதாம். நமது அகமுடையானின் அருளாணைப்படிதான் எவரும், எதுவும் நம்மை வந்து சூழ்கின்றனவாக உள்ளூற உணர்ந்து கொண்டு, அவர்களையும், அவைகளையும், தயவுச் செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



     
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg