Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - செங்கீரைப்பருவம் - பாடல் 2 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ்
அல்லது
வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

மா.க. காமாட்சிநாதன்

(எளிய உரை - ‍ ஆனந்தபாரதி)





1. செங்கீரைப்பருவம்:

பிள்ளைத்தமிழ்ப் பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாம் மாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி செங்கீரைப் பருவம் ஆகும், வள்ளலார் பிள்ளைத்தமிழில் பத்து பாட்டுகள் இப்பகுதியில் அமைந்துள்ளது,


பாடல் 2:

நன்றிய தில்லா நவையுடை யுலகர்
நட்பினை யுள்ளாமே
நகையொளிர் முத்தம் பொன்மணி பொருள்மேல்
நசையது கொள்ளாமே
குன்றையெ றிந்து கொன்றவன் அடியைக்
கூடிப் பிரியாமே
குலவுத மிழ்க்கவி கூறும் இலக்கணக்
கோடது கோடாமே
கொன்றை அணிந்து நின்றதோர் குன்றக்
குவடது வெம்பாமே
கொண்டலெழுந்து கொட்டுவ தென்னக்
கொட்டும் அருட்கவியே!
அன்றொடு மின்றும் என்றும் இருப்பவன்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தருமணியே
ஆடுக செங்கீரை.

கோடாது கோடாமே = வாம்பு கடவாமல்
நசை = விருப்பம்

எளிய உரை:

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் இருக்கும் படியான அழிவில்லாத மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று என்றும் வாழ்பவரே!

அருளைத் தருகின்ற வடலூர் பதியினை ஆளுகின்ற அருள் அரசரே! அருட்பிரகாசரே!

செய் நன்றி இல்லாத குற்றமுடைய உலகவர் நட்பினை அடையாமலும், ஒளிபொருந்திய முத்து, பொன் முதலிய பொருள்கள் மீது ஆசை இல்லாமலும், கிரவுஞ்ச கிரி என்னும் மலையைத் தன் கை வேலினால் பொடி செய்த குமரக் கடவுளின் திருவடியை கூடி என்றும் பிறியாமலும், கொன்றை மலரை மாலையாக அணிந்த சிவபெருமானின் நினைவு அகலாமலும், மேகமானது ஆர்பரித்து எழுந்து மழையைக் கொட்டுவது போல அருள் மழையன திருஅருட்பாவினை தன் கருணையால் உலக மக்களுக்கு வழங்கிய அருட்கவிஞரே!

செங்கீரை ஆடி அருள்வாயாக! செங்கீரை ஆடி அருள்வாயாக!