மெய்ஞானத்தை அடையும் வழி-34
சன்மார்க்க உணவு முறை
வள்ளல் பெருமான் அவர்கள் சன்மார்க்க உணவு முறைகளை நித்திய கரும விதியில் உறவறம் என்னும் இல்லறத்தார்க்கு தனியாகவும் துறவறத்தார்க்கு தனியாகவும் வகைபடுத்தி வழங்கியுள்ளார்.
சன்மார்க்க உறவறத்தார் எந்த வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொண்டால் நன்மை பயக்கும் என்பதை சிறிது காண்போம்.
நாம் சாதாரணமாக வள்ளல் பெருமான் கூறுவதைப்போல் நான்கு மடங்கு உப்பை உணவில் பயன்படுத்துகிறோம். அதில் பாதியாவது குறைத்துக் கொண்டு உப்பு, புளி, காரம் எந்த அளவு பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.
ஒரு யூனிட் உணவுப்பொடியை தயாரிக்க மிளகு-800 கிராம், சீரகம்-300 கிராம், வெந்தயம்-200 கிராம், புளி-50 கிராம், மிளகாய்-50 கிராம், உப்பு -100 கிராம். ஆக மொத்தம் 1+1/2 கிலோ கிராம் எடையுள்ள இந்தப் பொருட்களை தனித்தனியாக கல், மண், புறப்பொருள் நீக்கி சுத்தம் செய்து வாணலியில் பொன் வறுவலாக வறுத்துக் கொண்டு பிறகு ஒன்றிணைத்து மாவாக அரைத்து கொள்ளவும்.
இந்தப் பொடியை கொண்டு சாம்பார், இரசம், காரக்குழம்பு, பொரியல், கூட்டு ஆகியவைகளை தயாரித்து உணவு சமைக்க வேண்டியது. உப்பு, புளி, காரம் ஆகியவைகளுக்காக இந்தப் பொடியையே பயன்படுத்த வேண்டியது. வழக்கமாக 2 இரண்டு சிறு கரண்டிப்பொடி பயன்படுத்த வேண்டிய இடத்தில் இந்தப் பொடியை ஒரு சிறு கரண்டி பயன்படுத்தினால் போதுமானது நடைமுறை அனுபவத்தில் முதலில் சிறிது கடினமாக இருந்தாலும் பழக்கப் பட்டு விட்டால் சன்மார்க்க அன்பர்கள் இந்த உணவு ருசியை தவிர பிறவற்றை ஏற்க மாட்டார்கள்.
கடுமையான உடற்பிணி பாதிப்புள்ளவர்களுக்கும், சன்மார்க்க விரதம் மேற்கொள்ளுபவர்களுக்கும் இந்த உணவு பழக்கத்தை வாழ்க்கை இயல்பாக கொள்பவர்களுககும் வியாதிகள் நெருங்காது.
சன்மார்க்க அன்னதானங்களில் இந்த அடிப்படையில் உணவு அளிப்பது இன்னும் சிறப்பையளிக்கும் .
மேலும் ஒரு மனிதன் எத்தனை வேளை உணவு கொள்வது என்பதிலும் உள்ள நியாயத்தை காண்போம்.
ஒரு போது யோகியே
இரு போது போகியே
திரி போது ரோகியே
சதுர்போது ப்போகியே
யோக நிலை கைக்கொள்ளும் துறவியானவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கொள்ள வேண்டும்.
உறவறம் காணும் இல்லறத்தார் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கொள்ள வேண்டும்.
யாராக இருப்பினும் மூன்று வேளை உட்கொண்டால் வியாதியஸ்தனாகி விடுவான்.
யாராக இருப்பினும் நன்கு வேளை உட்கொண்டால் மரணமடையக்கூடும் என்பதே பெரியோர் வாக்கு.
துறவறத்தாருக்கான நியதிகளை துறவறத்தார் முறையாக பின்பற்ற வேண்டியது.
உறவறத்தாருக்கான நியதியை உறவறத்தார் முறையாக பின்பற்ற வேண்டியது என்பதே வள்ளல்பெருமானின் அருட்கட்டளை.
எனவேதான் உறவறத்தாராகிய, வள்ளல்பெருமானின் சீடர்களாகிய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களும், இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களும் , யோகிகளுக்குரிய ஒருவேளை உணவைதான் தாங்கள் திருமுறைகளை அச்சிடும் வரை உண்போம் என்று வள்ளல் பெருமானிடம் கூறி உபவாசம் இருந்ததால், வள்ளல் பெருமான் நியதி மாற வேண்டம் என்று வருந்தி திருவருட்பா பாடல்கள் அச்சிட அனுமதியளித்தார் என்பது வரலாறு.
மேலும் ஒரு மனிதன் ஒரு வேளைக்கு இவ்வளவு உணவுதான் உண்ணலாம் என்று நியதி உள்ளது. உணவானது கவளம் என்ற மனித அளவால் கணக்கிடப்படுகிறது. அதாவது அவரவர் கைகளில் சாதத்தை அள்ளி வாயிலிட்டால் இரண்டு உதடுகளும் ஒட்டும் அளவுக்கு வாயை மூடினால் எந்த அளவு வாயில் முழுமையாக உணவு கொள்ளுமோ அதுவே ஒரு கவளம் என்ற அளவாகும்.
ஒரு வேளைக்கு 32 கவளம் உண்பவர்கள் மனிதர்கள்
ஒரு வேளைக்கு 16 கவளம் உண்பவர்கள் முனிவர்கள்
ஒரு வேளைக்கு 8 கவளம் உண்பவர்கள் தேவர்கள்
என்பதே உணவு நியதி
ஒரு கவளம் அரிசி சாதம் எடைக்கு சமமான எடையுள்ள தண்ணீர், பச்சை காயகறிகள், பழங்கள் மற்றும் திரவ உணவுகள், மூலிகைகள் ஆகியவை ஒரு கவள உணவாக கணக்கிடப்படும்.
ஒரு கவளம் அரிசி சாத்திற்கு சம எடை உள்ள நீர் தன்மையால் வேக வைத்த மாவு உணவுகள் ( இட்லி, சேமியா, கொழுக்கட்டை,
போன்றவைகள்) இரண்டு கவளமாக கணக்கிட வேண்டும்.
ஒரு கவளம் அரிசி சாதத்திற்கு சம எடை உள்ள எண்ணையில் வேகவைத்த (பூரி, சப்பாத்தி, வடை, போண்டா, தோசை போன்றவை) மாவு உணவுகள் மூன்று கவளமாக கணக்கிட வேண்டும் அத்துடன் இந்த உணவுகள் ஜீரணமாக அருந்தும் தண்ணீர், காபி, டீ, போன்ற பானங்களும் கவளக் கணக்கில் சேரும்.
நல்ல ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து ஆன்ம ரீதியாகவும் உயர் நிலையடைய விரும்பும் மனிதர்கள் இந்த கணக்கீடுகளை மனதில் கொள்வது நன்மை பயக்கும்.
இந்த கணக்கீடுபடி கடின உழைப்பையும் உடல் உழைப்பையும் வாழ்க்கை நியதியாக கொண்டுள்ள சன்மாரக்க அன்பர்கள் ஒரு பகல், ஒரு இரவு சேர்ந்த, ஒரு நாள் என்றும், 24 மணி நேரம் என்றும் 60 நாழிகை என்றும் கூறப்படும் ஒரு நாளில் மொத்தம் 64 கவளங்களுக்கு மிகாமல் உணவு கொள்ள வேண்டும் (அதாவது ஒரு வேளைக்கு 32 கவளம் வீதம் 2 வேளைக்கான உணவை கணக்கிட்டு அவரவர் விருப்பப்படி வாழ்க்கை இயல்புபடி அந்தந்த வேளைக்கு பகிர்ந்துண்ண வேண்டும்) .
64 கவளம் என்பதை அவரவர் வாழக்கை இயல்பு, உடலுழைப்பு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு 32 கவளம் வரை குறைத்துக் கொள்ளலாம்
(அதாவது ஒரு வேளைக்கு 16 கவளம் வீதம் 2 வேளைக்கு 32 கவளம் ஆகிறது)
உடல் கடின உழைப்பு இல்லாதவர்களும் ஞான வாழ்க்கைக்கு முயற்சி செய்யும் சாதக நிலை அன்பர்களும் 32 கவளத்திலிருந்து படிப்படியாக குறைத்து 16 கவள உணவை பகிர்ந்துண்ணலாம்.
சாத்தியர்களும், மூலிகையையே உணவாக கொள்ளும் ஞானிகளும், ஆண்டவரிடம் அருளமுதம் பெறும் அருளாளர்களும் 16 கவளத்திலிருந்து 8 கவளமாக திட திரவ உணவை குறைத்துக் கொண்டு ஆன்ம சக்தியை பயன்படுத்தி அருளமுதத்தால் குறைவு உணவு தேவையை நிறைவு செய்யலாம்.
64 கவளங்கள் கணக்கீடுக்கு மேல் உண்பது வியாதியை உருவாக்கும்.
96 கவளங்கள் கணக்கீடுக்கு மேல் உண்பது மரண வாசலில் மனிதனை தள்ளும்.
மேலும் மதியம் உண்ணக்கூடிய உணவு கணக்கீட்டில் பாதியளவே இரவு உணவு கணக்கீடு அமைய வேண்டும்.
இயற்க உணவாகிய பச்சை காய்கறி, பழங்கள், மூலிகைகள் ஆகியவற்றை உண்பதற்கும், வேக வைத்த சமைத்த உணவுகளை உண்பதற்கும் இடையில் இரண்டு மணி நேரம் இடைவேளி இருக்க வேண்டும். ஏனெனில் இயற்கை உணவு இரண்டு மணி நேரத்தில் ஜீரணிக்கப்படும். சமைத்த உணவு ஜீரணமாக நான்கு மணி நேரம் ஆகும். இரண்டையும் ஒன்றாக உண்டால் இரண்டு மணி நேரத்தில் முழுதும் ஜீரணமாகாத தன்மையிலேயே இரைப்பையிலிருந்து உணவு வெளியேறும் தன்மை ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கும்.
சமைத்த மாவு உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து கண்டிப்பாக வெந்நீர் அருந்த வேண்டும். எந்த உணவாக் இருந்தாலும் வெந்நீர் அருந்துவது நல்லது.
மேலும் ஒரு ஜாமம் நேரமாகிய மூன்று மணி நேரம் தொடர்ந்து மகாமந்திரம் கூறினாலோ, அகவல் பாராயணம் அருட்பா பாராயணம் செய்தாலோ அல்லது சன்மார்க்க சத்விசாரம் செய்தலோ 24 மணி நேரத்திற்கு திட திரவ உணவு உட் கொள்ளாமலேயே உடலில் புத்துணர்ச்சியாக இருக்கும்.
ஆனால் வாழ்க்கை இயல்பை அடிப்படையாக கொண்டு சிறிது சிறிதாகத்தான் திட திரவ உணவுகளை குறைத்து ஆன்ம உணவை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உடனடியாக தொடர்ந்து செய்தால் ஸ்தூல உடல் பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஆன்ம உணவாகிய அருளமுதம் ஏற்கும்போது ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் விஷமும் , ஒரு மணி நேரம் மந்தமும், ஒரு மணி நேரம் அமுதமும் உருவாகும். தொடர்ந்து தினசரி மூன்று மணி நேரம் இறை சொற்களை கூறி வந்தால் படிப்படியாக விஷ மந்தம் நேரம் குறைந்து விடும், அதாவது விஷம் 6 நிமிடமும், மந்தம் 6 நிமிடமும் வெளியாகி மீதி நேரம் அனைத்தும் அமுதம் சுரக்கும் நேரமாக மாறும். அவ்வாறு நேரும்போதுதான் 8 கவள உணவையும் அதற்கு குறைவான உணவையும் உட்கொண்டு திருப்தி அடையலாம்.
ஜோதிமைந்தன் சோ.பழநி
மகாமந்திரபீடம்,திரியம்பல விண்ணகர திருமாளிகை
14,எஸ்.ஆர்.பி. நகர்,காரை,இராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு
பின் கோடு :632 404
ஈமெயில்: mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
செல்:9942062598,
04172-275071.
உணவு பற்றி மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.
நம்மை நழ்டப்படுத்தும் நான்கில் - உணவே நம்மை அதிகமாக நழ்டப்படுத்துவதாக சித்தர்களும், நமது வள்ளல் பெருன்மானும் கூறி இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
நக்கினம் சிவம்
வணக்கம்.வள்ளலாரின் உணவு முறையை எளிமையாக கடைபிடிக்கும் வழியை சொன்னதற்கு நன்றி.
நாகர்கோயிலில் உள்ள பல சன்மார்க்க அன்பர்கள் தங்கள் வீடுகளிலும் சரி,அன்னதானம் செய்யும் போதும் சரி
நல்ல மிளகு,சீரகம் இவைகளை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.தேங்காய்களும் சேர்ப்பார்கள்.
பல உணவு வகைகளில் புளிக்குப்பதிலாக எலுமிச்சை சாற்றை பயன்படுத்துகிறோம்.
சன்மார்க்க பெரியவர்கள் பலர் தம்மை நாடி வரும் அன்பர்களிடம்,உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வள்ளலார்
சொன்ன கீரை வகைகள் ஏதும் ஒன்று தினமும் வைத்து கொடுக்க சொல்லுகிறார்கள்.
ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளுக்கு உணவை பார்த்து,பார்த்து கொடுக்கிறார்களோ அது போல நாம் அனைவரும் உணவை உண்ணும் முறையை வள்ளலார் தாய் போல யடுத்து சொல்லி உள்ளார்.
வள்ளலார் சொன்ன உணவு முறை படி ஆண்,பெண் என இல்லை யாரும் தாமே சமைத்து உண்ணலாம்.பசிக்கிற பிற மனிதர்களுக்கும்,உயிர்களுக்கும் கொடுத்து மகிழலாம்.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.