சுத்த சன்மார்க்கம் பேசுகின்ற பெரியவர்கள் சன்மார்கத்தில் உள்ளவர்கள் திருநீறு பூசினாலோ ,வள்ளலார் உருவமோ படமோ வைத்து வணங்கினாலோ அவர்களைச் சாடுவதே நோக்கமாக இருக்கின்றார்கள். சமீபத்தில் வெளியாகின்ற அறிக்கைகள் அவ்வாறே உள்ளன. ஞான சபையிலே முதன் முதலாகப் பூஜை செய்த அன்பர் திரு ரத்னம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலே ஞான சபையிலே என்றைக்கும் திரையை நீக்கி ஜோதி காட்டியதே இல்லை என்றும் மக்கள் தரிசித்தது திரைக்கு வெளியே செய்த கற்பூர தரிசனம் மட்டுமே என்றும் பூஜை முடிந்தவுடன் அங்கே வந்திருந்த மக்களுக்குத் திருநீறு தரப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள். வள்ளலார் தோன்றும் துணையாக அப்போது இருந்தார். ஞான சபையில் பூஜை முடிந்து திருநீறு தரப்பட்டதை அவர் அறியாரா? வள்ளலார் திருநீற்றை சமயச் சின்னமாக உபயோகிக்கவில்லை. பாலு ரெட்டியாரின் குஷ்டம் போக்க திருநீறு அளித்தார். ரெட்டியார் குணமடைந்தார்.திருநீறு அங்கே சமயச் சின்னமல்ல. அருளைச் செலுத்தும் ஒரு கருவி , அவ்வளவே. சைவ சமயத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை நான். நான் சிவனையோ,கணபதியையோ,முருகனை யோ,அல்லது உமாதேவியையோ வணங்குபவன் அல்ல. நான் வள்ளலாரை மட்டுமே வணங்குபவன். ஏன் எனில் அவர்தான் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இன்றும் தன் உடம்புடன் நமக்கெல்லாம் துணையாக இருக்கின்றவர்.அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே. இது அகவல் தரும் விளக்கம். அருட்பெருஞ்சோதியை வள்ளலாருக்கு ஒருவர் அதாவது கடவுள் என்றே வைத்துக்கொள்ளலாம் அளித்திருக்கின்றார். அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே என்ற பாடலைப் பாருங்கள். இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவத்தை அடைய முயற்சி செய்யாமல் தவம் வேண்டாம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் வள்ளலார் பாடிய பாடியுள்ள பாடல்களை எல்லாம் என்ன செய்வது. அருட்பெருஞ்சோதி நடராஜ பதியே என்றாரே வள்ளலார். அருவுடைய பெரு வெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருட்பெருன்ஜோதியனே மருவுடையாள் சிவகாம வல்லி மணவாளா என்ற பாடலில் வரும் அருட்பெருஞ்சோதி யார். ஞானசபைக்கு வருவார் அழைத்து வாடி என்று யாரை அழைத்திருக்கின்றார். ஆறாம் திருமுறை அனுபவமாலையிலே வள்ளலார் காட்டியுள்ள அனுபவங்கள் நாம் அடையவேண்டாமா. தன்னை வணங்கவேண்டாம் என்று வள்ளலார் சொன்னதாக ஓர் அன்பர்தாம் குறித்து வைத்திருக்கின்றார். ஆனால் இகத்தும் பரத்தும் பெரும் என்ற பாடலில் ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோன் என எனை வைத்து என்று பாடியுள்ளார். அவரைத் துதிப்பது தவறா. மக்கள் துதிக்கத் தக்கவனாக என்னை இறைவன் வைத்துள்ளான் என்று வள்ளலாரே பாடியுள்ளார்.அவரை வணங்கவேண்டாம் என்றால் அவர் வாக்கு பொய்யா. இறைவனாக விளங்கும் வள்ளலாரை வணங்காமல் வேறு யாரை வணங்குவது. விளக்கை வைத்து வணங்கவேண்டும் என்று வள்ளலார் எங்கே கூறியுள்ளார். அல்லது அவர் தருமச்சாளையிலோ அல்லது வேறு எங்காவது விளக்கு பூஜை செய்தாரா. தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாகப் பாவிக்கத்தான் சொன்னார் என்பதை மறந்து விடக்கூடாது. முன்னிலை என்று சொன்னால் முந்நிலை வேறு தீபம் வேறு. ஒருவர் முன்னிலையில் ஒருவர் பேசுகின்றார் என்றால் முன்னிலை வகிப்பவர் வேறு பேசுபவர் வேறு என்பது குழந்தைக்கும் தெரியும். அனுபவமாலையிலே காலை விளக்கேற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமாய் ஏற்றுதலே என்றார். விளக்கு மங்கலச் சின்னமே தவிர கடவுள் ஆகாதே.என் மீதும் என் எழுத்தின் மீதும் வெறுப்பு கொள்ளாதீர்கள். இஸ்லாம்,கிறித்துவம், போன்ற சமயங்கள் உலக முழுதும் பரவி உள்ளான. சன்மார்க்கம் இப்போதுதான் வளரத் தொடங்கி உள்ளது. நெய்வேலியில் உள்ள ஒருவன் நாங்கள் பாத யாத்திரையாக வடலூர் வந்தபோது இந்த அம்மாள் யார் என்று வள்ளலார் படத்தைக் காட்டிக் கேட்டதை நாங்கள் மறக்கவில்லை. வள்ளலாரை நாம் அறிமுகம் செய்கின்ற நிலையில்தான் உள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஆரம்பத்திலேயே வள்ளலார் உருவத்தை மறைத்துவிட்டால் காலப்போக்கில் வள்ளலார் யார் என்றே தெரியாமல் போய்விடும். வள்ளலாரின் உண்மை உருவம் கிடைக்கவில்லை என்று வாதம் பேசலாம்.. சிவனுக்கும்,முருகனுக்கும் உண்மை உருவமா கிடைத்திருக்கின்றது.முக்காடிட்ட உருவத்தைக் காட்டி மக்ககளுக்கு வள்ளலார் இவ்வாறுதான் எளிமையாக இருந்தார் என்று காட்டினால் போதும். மக்கள் மத்தியில் வள்ளலாரை மறைத்துவிடாதீர்கள்.உங்கள் அறிவு விளக்கத்திற்கு நாங்கள் குறைந்தவர்கள்தான். மறுக்கவில்லை எங்களையும் சன்மார்கத்தில் இருக்க விடுங்கள். எங்களை சாடுவதே உங்கள் தொழிலாக இருக்கவேண்டாம். மரணமிலாப் பெரு வாழ்வு பெற வழி காட்டுங்கள். பிரசாதம் வேண்டாம் என்கிறீர்கள். வள்ளலாரே பிரசாத சாமான் வாங்க ஏழு ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பியதை அன்பரது கடிதத்தைப் பாருங்கள். மேட்டுக்குப்பத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் போனபோது பிரசாத சாமான் வைத்திருந்த பானையையே நான் பார்த்திருக்கின்றேன்.இவை எல்லாம் உண்மை. நாங்கள் எல்லாம் சமயம் சார்ந்து உள்ளவர்கள் என்று எள்ளி நகையாட வேண்டாம். எங்கள் வீட்டில் எந்த சமயத் தெய்வத்தின் படமும் கிடையாது. ஜாதி மதம் சமயம் என்று வள்ளலார் கூறியுள்ளதை நம்புபவன். என் மகனுக்கு வேறு மதம் சார்ந்த பெண்ணையே திருமணம் செய்துவைத்தவன் நான். இதை என் பெருமைக்கு எழுதவில்லை. இன்னும் எவ்வளவோ உண்டு.வள்ளலாரை மட்டுமே வணங்கி அவர் அருளை அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான். என் அனுபவங்களை எழுதினால் நீங்கள் அதிசயித்துபோவீர்கள். ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் மீது இச்சை போகாது என்றார். வள்ளலார் . நான் வள்ளலாரை மட்டும் வணங்கி எவ்வளவோ அனுபவங்களை அடைந்தவன்.உலகமே வள்ளலாரை வணங்கக் கூடாது என்றாலும் நான் ஒருவன் மட்டும் வள்ளலாரை வணங்குவேன். இதை விட வேறு வேலை எனக்கு இல்லை. உலகமே வள்ளலாரை ஏற்றுக்கொண்டு வணங்குகின்ற காலம் வரும். பார்ப்பீர்கள். இதை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. வள்ளலாரை வணங்காமல் மக்கள் ஏமாந்து போகின்றார்களே என்ற இரக்கத்தினால் மட்டுமே இதை எழுதியுள்ளேன். மன்னித்து விடுங்கள். நன்றி.
5 Comments
1)வள்ளலாரை வணங்கலாமா? வணங்கலாம். ஏன். அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவனாக விளங்குவதால் அவரை வணங்கலாம்.
2) திருநீறு சன்மார்கத்தில் அவசியமா? வள்ளல் பெருமானே பல நபர்களுக்கு திருநீரு அளித்துள்ளார். இறைவனிடமும் திருநீற்றினைத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். திருநீற்றில் விருப்பமில்லாதவர்கள் அதனை வாங்க வேண்டிய அவசியமில்லை. திருநீரு முழுவதும் ஒரு சமய சின்னம் அல்ல. (வள்ளல் பெருமான் பலருக்கு திருநீற்றினை கொடுத்து வியாதிகளை குணப்படுத்தியுள்ளதால்)
3)வள்ளலாருக்கு உருவச் சிலைகள் அவசியமா? இந்த காலத்து தலைமுறையினர் வள்ளல் பெருமான் எப்படி இருப்பார் என்ற ஒரு கருத்தினை உண்டாக்க உருவச் சிலைகள் அவசியமே. வள்ளல் பெருமான் உருவ வழிபாட்டிற்கு எதிரானவர் அல்ல. வள்ளல் பெருமான் உருவ வழிபாட்டினை ஆதரித்து சப்பேடு சீரிதர நாயக்கரிடம் வாதம் செய்து வென்றவர். ஆனால் உருவ வழிபாடுகள் மூடநம்பிக்கைகளுக்கு இடம்தரக் கூடாது.
இதற்கு எவ்வளவு ஆதாரங்களை அளித்தாலும் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. நமக்கு துணை வள்ளல் பெருமான் மட்டுமே. ஆன்மீகம் என்பது நமக்கும் நம்முடைய நாயகனிற்குமிடையே உள்ள உறவு மட்டுமே.
வேதங்களை முற்றுமுணர்ந்த வேதியர்கள் காலம் காலமாக ஆயிரமயிரமாண்டுகளாக உருவ வழிபாட்டை வழிநடத்தி வருகிறார்கள்.
சிலைவடித்து, அலங்காரங்கள் செய்து, மெருகூற்றி, பூமாலைகளும் தங்க நகைகளும் அணிவித்து, அந்த அழகில் மெய்மறந்து ஆரவாரத்துடன் ஆண்டவனை அனுபவித்ததாக பாவித்து பிரசாதமளித்து வருவதையே ஆன்மீகமாகவும், தெய்வ வழிபாடாகவும் இருந்து வருகிறார்கள்.
இந்த ஊறிப்போன அனுபவம் வள்ளலாரை வணங்கும்போதும் தொற்றிவிடும்.
பூ மாலைகள், பிரசாதங்கள், விளக்கின் வேலைப்பாடு, நெய் , எண்ணெய் என்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கொண்டு வரக்கூடும். வரும் நிச்சயம்.
இராமலிங்க ஸ்வாமிகளின் உருவப்படம் , ஒரு சிறு காற்றில் அலையாத விளக்கு இவற்றின் 'முன்னிலையில்' வள்ளலாரையே மனதில் இருத்தி தவம் இயற்றவும், ஜீவகாருண்யமும், ஆன்மநேயமுமே வாழ்க்கையின் முக்கியத்துவமாக அமைத்து வாழவும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்.
''பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.''
வள்ளல் பெருமான் பிறப்பிலேயே திரு உடையவர் என்பதை சுத்த சன்மார்க்கம் பேசும் ஒரு சிலர் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அவரது ஆறாம் திருமுறை மட்டுமே போதும் என்பவர்கள், அப்படி வள்ளல் பெருமான் நினைத்திருந்தால் மற்ற திருமுறைகளை வெளி வர சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. மேலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமய பாடல்கள் என்று நினைப்போர் அதனுள்ளே உள்ள மறைமுக அனுபவங்களை அறியாததனாலேயே இப்படி பேசுகின்றார்கள் என்று என்னத் தோன்றுகிறது. கந்தக்கோட்ட பாடல்களில் ஒருமையுடன் எனத் தொடங்குவதற்கு காரணம் ஒருமை என்பதே சன்மார்க்கத்தில் அடைய வேண்டிய நிலை என்பதை உணர்ந்தார்களா மேலும் மதிபாதம் அற்று என்னும் பாடலில் என்ன அனுபவம் ஏற்படும் என்பதை விளங்கிக் கொண்டார்களா என்பதும் கேள்விக்குறியே. வள்ளல் பெருமான் இறை தரிசனத்தின் போது இறைவனிடம் திருநீறு கேட்கும்போது உன்னுள்ளே காண்க என்னுற கூறுவதை அறிந்திருந்தால் இறை தரிசனம் பெறும் வரை வள்ளல் பெருமான் திருநீறை பயன்படுத்தினார் என்றுதானே அர்த்தம். அதே போல சித்தாந்தம் முதல் கலாந்தம் வரை உள்ள ஆறு அந்தங்களை கூறும்போது அது அநன்யமே அன்றி அந்நியமல்ல என்று கூறுவதிலிருந்து அந்தங்களின் கருத்துக்கள் தவறானவை அல்ல என்பததானே பொருள். சுத்த சன்மார்க்கம் பேசுவோர் ஆரம்ப கல்விக்கும், ஆய்வு கல்விக்கும் ஒரே அளவு கோளை பயன்படுத்துவது சரியானது அல்ல என்பதை உணர வேண்டும். அவரவது பக்குவத்திற்க தகுந்தாற்போல் முதல் திருமுறையா அல்லது ஆறாம் திருமுறையா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும். நான் சொல்லும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை என்று வள்ளல் பெருமான் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்தால் அவரது அனைத்து பாடல்களிலும் உண்மை பொருள் விளங்குவதை காணலாம்.
பிழை இருப்பின் மன்னிக்கவும்
அன்பன்
நக்கினம் சிவம்
சுத்த சன்மார்க்கம் என்பது வள்ளலார் வகுத்த நெறி - இதை யாரும் மறுக்க/மறைக்க முடியாது. தங்கள் கருத்தின்படி வள்ளலார் விபூதி கொடுத்தது, பற்பல தெய்வங்களை பாடியது.. அனைத்தும் உண்மையே ஆனால் வள்ளலார் முழுதும் முடிவுமாக சொல்லியது யாதெனில் "சுத்த சன்மார்க்கதிற்கு தடைகளாகிய 'ஆசாரங்களை' விட்டொழித்து தலைவனை தொழுவதையே கடமையாக கொள்ளல் வேண்டும்"- இங்கு வள்ளலாரே ஆசாரங்களை எல்லாம் விட்டு விட்டு "சுத்த சன்மார்க்க நிலை" அடைந்தார்கள் மற்றவர்களயும் விட சொன்னார்கள் - இதை தன் பாடல்களினாலும்/விண்ணபத்திலும் தெரிவித்துள்ளார் - இவை அனைத்தும் தாங்கள் அறிந்ததே , பிறகு எவ்வாறு "விபூதி" பற்றி எழுதுகிறிர்கள் - தயவு செய்து தாங்களும் குழம்ப வேண்டாம் மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
வள்ளலார் முழுதும் முடிவுமாக சொல்லிய வண்ணம் "சுத்த சன்மார்க்க நெறியை உள்ளது உள்ளபடி கடைபிடிப்போம் மற்றவர்களுக்கும்[உலகெலாம்] பரப்புவோம்" - இல்லையெனில் வள்ளலாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுவோம்.
நாம் அனைவரும் "சுத்த சன்மார்க்க சுகநிலை பெற்று மரணமிலா பெருவாழ்வு பெற" - ஆண்டவரிடம் விண்ணப்பிப்போம்- அவ்வாறே பெற முயலுவோமாக.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
யார் இதை மறுத்தார்கள்[வள்ளலார் விபூதி கொடுத்ததை], வள்ளலார் சைவ சமயத்திலே இருந்தார்கள், விபூதி பூசிக்கொண்டு இருந்தார்கள் மேலும் சைவ சமயத்தை சிறப்பித்து பேசினார்கள் பற்பல பாடல்களை பாடினார்கள் அதன்பின்பு தன்னை மற்றிகொண்டார்கள்
நிற்க நிற்க நிற்க நிற்க
-அதன்பின்பு அவர் வைத்திருந்த சமய லட்ச்சியத்தை முழுவதுமாக கைவிட்டார்கள் மேலும் உலகில் காணும் சமய மதம் யாவும் பொய் என எடுத்துரைத்தார்கள் பிறகு "புதிய கடவுளை கண்டுபிடித்தார்கள்(உண்மை கடவுள்) - புதிய வழியை கண்டார்(சுத்த சன்மார்க்க நெறி) - சுத்த சன்மார்க்க சுகநிலை பெற்றார்(மரணமிலபெருவாழ்வு).
-இப்பொழுது வள்ளலாரை மீண்டும் பழைய நிலையிலேயே வெளிபடுத்துவது(வெளிபடுத்தும் செயல்) எங்ஙனம் சரியாகும். விபூதி என்பது நெறி அல்ல - அது சைவ சமயத்தினுடைய அடையாளம் - இதை எதற்காக தாங்கள் இப்படி பேசுகிறிர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. அய்யா எங்களுக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லை.
நாம் அனைவரும் கருத்துஒருமித்து நம்பிக்கை கொள்வோம் வள்ளலாரின் - புதிய கொள்கையில்(சுத்த சன்மார்க்க நெறியில்) - துன்பம், பிணி, மூப்பு, மரணம் தவிர்த்து கொள்வோம்
சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.
ஆடாதீர் சற்று மசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் -- வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் -- விரைந்திநியிங்
கென் மார்கமு மொன்றாமே.