திருநீறு-விபூதி-சமயக்குறியா?
திருநீறு-விபூதி-சைவ சமயக் குறியாக இக்கால உலகம் கருத நேர்ந்துள்ளது.சிவத்தை வழிபடும் சைவ
சமயத்தவர்களால் அணியப்பட்டு வருவதனால் சமயக் குறியென முத்திரைக் குத்தப்பட்டும் கருதப்பட்டும் வருகிறது.சைவ சமயத்தவர்களும் இக்கருத்தினை ஏற்று தமக்குரியதாகவேக் கருதி வருகின்றனர் போலும்.
நீறு எனும் சொல் சாம்பர்,சுண்ணம்,துகள்,விபூதி,புழுதி எனப் பலப் பொருள்களைக் கொண்டுள்ளது.வீடுககளில் நீருணவுப் பொருள்கள்(நீராகாரம்,கஞ்சி,பால்,பாயசம் முதலியன)கால நீடிப்பாலோ,தூய்மையின்மையாலோ நீற்றுப் போவதையும் அதன் தன்மையில் மாற்றமடைவதையுங் கண்டு வவருகிறோம்.நீர் ததன்னுள் கலந்துள்ள மற்றப் பொருள்களை விட்டுபப் பிரிந்து தன் இயல் நிலைக்குத் திரும்புவதை இது காட்டுகிறது.பல வடிவமும்,நிறமும் குணமும் உடையப் பருப்பொருள்கள் எரியுண்டுப் போனப்பின் வேற்றுமைகள் அனை்தும் அழிந்து ஒரு பொருளாகி விடுகிறது,சாம்பராகி விடுகிறது.சாம்பர் கிருமி நாசினி என்பது அறிவியல் அனுபவம்.இந்த அடிப்படையில்தான் பசுவின் சாணம் எரிக்கப்பட்டு நீறு(திருநீறு) தயாரிக்கப்படுகிறது.இங்கு 'திரு' என்னும் அடைமொழி நீறின் சிறப்புக் கருதிக் குறிக்கப்படுகிறது.திருக்குறள்,திருவாசகம்,திருவருட்பா எனும் சொற்ககள் இதற்குச் சான்றாம்.பசு சீவனையும் சாணம் சீவன் சார்ந்துள்ள மலங்களையும்(மும்மலம்) குறிப்பதாம்.இது ஆன்மீக நெறியில் நிலவி வருமம் கோட்பாடு என்பது அறிந்ததே.ஒரு பொருள் சுட்டெரிக்கப்படும்போது அதனிடமமுள்ள அசுத்தமும் பண்பியல் வேறுபாடுகளும் அழிக்கப்பட்டு ஒரு பொருளாகவும் தூய்மையுடையதாகவும் மாற்றமடைகிறது.அதாவது பேதங்கள் அழிக்கப்பட்டு அபேத நிலையை அடைகிறது ஒருமையுருவாகிறது.
அணுக்களின் சேர்க்கையே பருப்பொருள் தோற்றம்.பருப்பொருள் தீயாலோ மற்றெதனாலோ அழிய நேரிடின் தன் ஆதி நிலையை அடைகிறது.தோற்றமும் முடிவும் நடந்து கொண்டே இருக்ககின்றன.இதுதான் மாயை.ஆதி அந்தம்,அந்தம் ஆதி இது ஆன்மீக சங்கேத மொழி.
உலகில் உருவாகியுள்ள சமயங்களும், மதங்களும், மார்க்கங்களும்,இப்பிரபஞ்சமும் உயிர்,உடலாதிப் பொருள்களும் சடங்களாதலின் தாமேத் தோன்றி விளங்க,இயங்க,மாற்றம்பெற முடியாததாதலின் இதற்கு ஒரு முதல் இருக்க வேண்டுமென்றும் அது பேரறிவும், பேராற்றலும், நிறைவும், தோற்றமும் முடிவுமில்லாததோர் நித்தியத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டுமென்றும் நம்பி அதை கடவுள் என்னும் பேராலும்,வேறு பற்பல பெயர்களாலும் (மொழி வேறுபாட்டிற்கேற்ப) உருவகம் செய்து வழிபாடு செய்து வருகின்றன. இக்கோட்பாடே இவைகள் உருவாவதற்கு அடிப்படை ஆதாரமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மறுப்பு எழ முகாந்தரமிராது என்றேத் தோன்றுகிறது. உலகாயதமும் அதனைச் சார்ந்த மார்க்கங்களும் புறம்பானவை. இங்கு மேலே கூறியுள்ளபடி உயிர் சடமா எனின் அது எதையும் தானே அறியும் தன்மையிலதாதலாலும், அறிவித்தால் அறியும் தன்மையுடையதாதலாலும் 'சடசித்து' என வேதம் கூறுகிறது. 'அறிவித்தாலன்றி அறியாய் நீ' என்னும் ஒழிவிலொடுக்க நூல் கூற்றும் சான்றாகும்.
ஒன்றான கடவுளளுக்குபப் பற்பலப் பெயர்களும் உருவங்களும்,பக்குவ வேறுபாட்டாலும் இயற்கைச் சூழல் வேறுபாட்டாலும்,மொழி வேறுபாட்டாலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.இந்த உலகம் மடட்டுமல்ல இந்த அண்ட வெளியிலே உள்ள அனந்த உலகங்களுக்கும் கடவுள் ஒருவரே என்பது திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் வாக்கு.
"ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டமோ"
"தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"
-இவை திருவாசகம்
மேற்கூறிய பாடல் வரிகளுள் தென்னாடுடைய என்னும் சொற்றொடருக்கு குறுகிய நோக்கோடு பொருள் கா்பாருமுளர். தென்னாடு என்பது தமிழ்நாட்டையும் குறிக்கும் சொல்ஆக வழங்கப்படினும் ஞான நாடு என்பதே உண்மை சிறப்புப் பொருளாம்.இதனால் ஞான நாட்டினர்(ஞானியர்களால்) சிவனாகக் கண்டுப் போற்றிய கடவுளே எல்லா நாட்டினராலும் இறைவனாகக் கண்டுப் போற்றப்படுகிறார் என்பதே உண்மைப் பொருளாகும்.திருவாசகம் பாடியவர் மாணிக்கவாசகர்.அவர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அவனருளால் பாடிய திருவாசகத்தை இறைவனே எழுதியதாக வரலாறு.எனவேமேற்படி சொறறொடர் குறுகிய நோக்கங் கொண்டதாக இருக்க முடியாது.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் பாங்கில் பொருள் காண்போம்.
சிவன் உடை சாம்பரை பூசியருப்போன்(திருநீற்று மேனியன்) என்றும் சிவனை சுடுகாட்டு சாமி என்றும் கிராமிய மொழியில் குறிக்கப்படுகிறது.உயிர் பிறிந்தப் பின் உடல்,அரசன் முதல் ஆண்டி வரை செல்லுமிடம் சுடுகாடு-இடுகாடு-அங்கே பேதமில்லை,சுட்டப்பின் மிஞ்சுவது சாம்பர்.புதைக்கின் மண்ணோடு கலந்து விடுகிறது.ஒரு பொருளாகி விடுகிறது.இதனால் சிவன் பேதமற்றவன் ஒருமையுடையவன் என்பதாக அறிய வருகிறது.அன்பே சிவம்,கருணையே சிவம் என்னும் சொற்றொடர்களை நோக்குக.
அவ்வொன்றான கடவுள் தூயவர்(மலமில்லாதவர்),பேதமற்றவர்,விருப்பு வெறுப்பில்லாதவர் என்பதில் எச்சமய,மத,மார்க்கத்தவர்களுக்கும் மாறுபாடு இருக்க முடியாதன்றோ!அதனால் அத்தன்மையான கடவுளை அடைய மனித உயிர்களும்(இங்கு உயிர் என்பது சீவன்,ஆன்மா இரண்டையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாம்)அத்தன்மையினைப் பெற வேண்டும்.இது இயற்கை நியதியாக உள்ளது.பண்பியல் மாற்றமுடைய இரு பொருள்கள் சேர்ந்து ஒரு பொருளாவது இயற்கை நியதியாகயில்லை.இந்த ஒருமைத் தன்மையைக் குறிக்கும் அடையாளம்(சின்னம்) திருநீறு எனின் மிகையன்று.இவ்வாறிருக்க திருநீற்றை ஒரு சமயம் சார்ந்தக் குறியென வரையறை செய்து ஒதுக்குவது உண்மைக்கு மாறுபட்டதன்றோ.எதனாலோ இவ்விதம் நேர்ந்துள்ளது.பின்னால் தோன்றிய சம மத மார்க்கங்கள் தங்களுக்கென அடையாளம்(குறி) தோறற்றுவித்தபோது ஆதி சைவ சமயத்தவர் அணிந்து வந்த அறிவார்ந்த அடையாளமும்(திருநீறு)சமயக் குறியென முத்திரைக் குத்தப்பட்டிருக்கலாம்.
திருநீற்றை அணிந்து கொள்வதும் அணிந்து கொள்ளாததும் வேறுபட்டவை.அது எம்மனித உயிருக்குமுள்ள சுதந்திரம்.கடவுள் அருளைப் பெற,அடைய,தூய்மையும் அபேதமும் ஒவ்வொரு மனித உயிரும் பெற்றாக வேண்டுமென்பது நியதி.இவ்விரு பண்புகளையும் நாம் யாரிடம் காண முடிகிறது.உண்மை ஞானியரிடத்தில்தான் காணமுடிகிறது.
'தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்' எனும் திருவள்ளுவனார் மெய்மொழிப்படி,தூய்மை என்பது அவாவின்மை(ஆசையின்மை) வாய்மை எனும் இரு அகப் பண்புகளைத் தன்னுள் கொண்டுள்ளது.புறத் தூய்மை மட்டும் அதன் பொருளல்ல என்பதும் புலனாகிறது.இப்பண்புகள் எல்லா மனித உயிருக்கும் பொதுவானது.தனித்த எச்சமய,மத,மார்க்கத்தவர்களுக்கு மட்டும் உரியன அல்ல.ஆதலின் கடவுளை அடையய விழைவோர் அடையாளமமாக அணிந்து கொள்ளும் ஞானச் சின்னமே திருநீறு(விபூதி) என்பது தெளிவு.
திருநீறு,விபூதி என இரு சொல் வழக்குள்ளது.இரண்டும் ஒரு பொருளையேக் குறிப்பதாயினும் அணிந்து கொள்வதிலுள்ள வேறுபாடே இதற்குக் காரணம்.சீவன் தான் சார்ந்துள்ள மும்மலங்களைச் சுட்டெரிதத்ததன்,சுட்டெரிக்க வேண்டியதன் அடையாளத்தைக் குறிக்க மூன்று கோடுகளாக நெற்றியில் அணிந்து கொள்வது திரிநீறு.(திரி மூன்றைக் குறிக்கும் திரி சூலம் சான்று). மூன்று கோடுகளாக இல்லாமல் மொத்தமாக பரவலாக நெற்றியில் பூசிக்கொள்வது விபூதி.மும்மலங்களை சுட்டெரித்துக் கடந்த உயிர்(ஆன்மா) வெளி அனுபவம் பெற்றதைக் குறிப்பது.'வி' என்பது வெளி(ஆகாயம்) 'பூதி' என்பது பேறு,சித்தி,சுத்தம்,சாம்பர்,உடல் முதலிய பலப்பொருள்களைக் கொண்டுள்ளது.இவை படிநிலைகளைக் குறிப்பதாம்.
திருநீற்றை,விபூதியை நெற்றியில் அணிவது ஏன்,உடம்பிற்குத் தலை முதன்மை.தலைக்கு நெற்றி முதன்மை.மனோன்மணீயம் பேராசிரியர் சசுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்தில்
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்'
என்று கூறும் பாடலில் பிறைநுதல் என்று நெற்றியை சிறப்பித்துள்ளார்.நெறற்றியினுள் புருவ நடுவின் மேல் அறிவு விளங்குவதனால் அறிவுத்தானம் எனப் பெரியோர்களால் குறிக்கப்படுகிறது. பிறை மதியையும் மதி அறிவையும் குறிக்கும்.ஆன்மீகத்தில் அவ்விடம் மாமேரு,சிற்றம்பலம்,நெற்றிக்கண்,சிற்சபை முதலிய பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது.மேலும் அங்கு நாடிகள் மூன்றும்,கலைகள் மூன்றும் கூடுவதனால் முக்கூடல் என்றும் முச்சந்தி என்றும் குறிக்கப்படுகின்றன.அதனால் ஞானக்குறியான திருநீற்றை விபூதியை ஞானம் விளங்குமிடமான நெற்றியில் அணிவது அதன் சிறப்புக் கருதியே.உடலின் மற்ற அங்கங்களின் இன்றியமையாமையைக் கருதிக் குறிப்பிட்டச் சில இடங்களில் அணிதலும் வழக்கத்திலுள்ளது.'நீறில்லா நெற்றி பாழ்' என்னும் அவ்வை மூதாட்டியின் அமுதவாக்கும் நோக்கத்தக்கதாம்.
'வெட்ட வெளிதனை மெய்யென் றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்' என்பது சித்தர் பாடல்.
இன்று வருமோ நாளைக்கே வருமோமற்
றென்று வருமோ வறியே னெங்கோவே
துன்று மலவெம் மாயை யற்றுவெளிக்
குள்வெளி கடந்துசும் மாவிருக் கும்சுகம்' -திருவருட்பா
மலங்களைக் கடந்து(அழித்து) வெளியாகி சும்மா இருக்கும்(மோன நிலை) பேறுபெற்ற சீவனே ஆன்ம நிலைக்கு உயருகிறது.'சும்மா இரு என்றலுமே அம்மா பொருளொன்று மறிந்திலனே' அருணகிரிநாதர்.'சும்மா இரு என்றான் அதை அறியாது சுட்டி என் அறிவாலே பார்த்தேன் இருளானப் பொருள் கண்டேனேயல்லாது கண்ட என்னையுஉம் கண்டிலேன் தோழி' தாயுமானவர்.இப்பெரியோர்களின் அனுபவமொழிகளும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.சீவன்,ஆன்மா இரு சொல்லும் பொதுவான உயிரைக் குறிப்பதாயினும் சீவன் என்பது மலங்களைச் சார்ந்திருப்பது, ஆன்மா என்பது மலங்களைப் பொய்யென நீக்கிக் கடந்தது.பதியை (கடவுளை) நாடி நிற்பது.இவை மறை கூறும் உண்மைகளாம்.இதனால் சீவன் (மனித உயிர்)ஆன்ம நிலைக்கு உயராது கடவுள் பேற்றைப் பெறவோ அடையவோ முடியாது என்பது வெள்ளிடை மலை.
சீவன் ஆன்ம நிலைக்கு உயருவதற்காகவே இப்பிரபஞ்சமும் உடலாதிப்பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன என்பது மறை உண்மை,நடைமுறை அனுபவமுமாம்.மனித உடலைப் பெற்ற சீவன் இந்தப் பிரபஞ்சப் பொருள்களை நுகர்ந்து அதனால் இன்ப துன்ப அனுபவங்களைப் பெற்றும் எதிலும் நிறைவு பெற முடியாததையும் எதுவும் நிலையாக இல்லாமல் மாறியும் அழிந்தும் போவதைக் கண்டும் சோர்வடைந்த நிலையில் அவனுள் கடவுளருளால் தூண்டப்பட்ட எழுச்சியால் நிலையானதை நிறைவானதைத் தேட முற்பட்டான். அதுவே சமய,மத,மார்க்கங்களின் தோற்றுவாய் எனின் அது மீக்கூறலாகா. அனுமவம் முதிர முதிர மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பக்குவ நிலைக்கேற்ப அறிஞர்களும் சான்றோர்களும் ஞானியர்களும் அருளாளர்களும் தோன்றி மனித உயிர்களுக்கு வழிகாட்டி வந்துள்ளனர். எனினும் மனித உயிர்கள் கடவுள் ஒருவரே என்பதையும் அதை அறிந்து அடைவதற்கு வழிகாட்டத் தோன்றியவையே சமய,மத,மார்க்கங்கள் என்பதையும் அறிந்தும்,அறியாமலும்,மறந்தும் பேதமுற்றுப் பிணங்கிப் போரிட்டு அழிந்து வருகின்றன.புறப்பொருள் தேடலிலும் அறிந்து கொள்வதிலும் முனைந்து எவ்வளவு தான் உயர்ந்தாலும் அகப்பொருள் தேடலில்அறிந்து கொள்வதில் முனைப்பின்றி புறவேற்றுமைப் போட்டியில் மூழ்கியும் வாயளவில் ஒற்றுமை ஒருமைப்பாடு என்று பேசியும் தன்னையேத் தான் அறியாது அழிந்தும்,அழித்தும் தாழ்நிலைக்குப் போய் கொண்டிருக்கின்றன.சமய,மத,மார்க்கங்கள் எதற்காகத் தோன்றினவோ அதன் நோக்கங்கள் மறைந்து விட்டன,மண்மூடி விட்டன.
இவ்வுயிர்களை மீட்கவே கருணையே வடிவான கடவுள்,எல்லாச் சமய,மத,மார்க்கங்களின் கோட்பாடுகளையும் தன்னுள்ளடக்கி,அவைகள் இதுவரைக் காணாத,காணமுடியாதப் பேருண்மையை அறிந்து அதனை உள்ளவாறு அடைந்து இன்புறப் பொதுவான உயர்முடித் திருநெறியாம் சமரச சுத்த சிவ சன்மார்க்கத்தைப் போதிக்க திருவருட் பிரகாச வள்ளலாரை இம்மண்ணுலகில் ஞான பூமியாம் தமிழ் நாட்டில் வருவிக்கச் செய்து ஊன்றிய தமிழ் மாமறையாம் திருவருட்பாவினை அருளியுள்ளார். அப்பொது மறையும் அப்பெரியாரும் தமிழ்நாட்டில் தோன்றினாலும் இந்த உலகிற்கும் மற்ற எல்லா உலகங்களுக்கம் உரிமையாம். தமிழ் பழம் பெரும் நூல்கள் அனைத்தும் தமிழனையோ தமிழ்நாட்டையோ குறித்து மட்டும் பார்த்ததுமில்லை,பேசியதுமில்லை,உலகத்தையே பார்த்திருக்கிறது பேசியிருக்கிறது.இது வரலாற்றுண்மை.
இதனால் தான் பொதுவான ஒன்றான கடவுள் அப்பெரியாரையும் அம்மறையையும் தமிழ்நாட்டில் தோன்ற அருளினார் எனின் அது புகழ்ச்சியல்ல.இவ்வுண்மைக்குக் கீழ் வரும் அருட்பா பாடல் சான்றாக அமைந்துள்ளது.
பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்று அங்குமிங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்தியெல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றுமொளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே
எல்லா உலகங்களுக்கும் பொதுநெறி போதிக்க வந்த வள்ளல் பெருமானார் தாம் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்பாவில் பற்பல இடஙங்களில் 'நற்பூதி அணிந்த திருவடிவு', 'வான்பொடித் திருமேனியர்', 'பொடிஏறு வடிவுடையார்'(அனுபவ மாலை பாடல் 10,39,53) 'பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே'(திருவருட்பேறு) 'வெண்ணீறு பூத்த பொன்மேனியனே'(தனித்திரு அலங்கல் பாடல் 1690) 'நீறுடையீர் இங்கு வாரீர்'(அம்பலவாணர் வருகை பாடல் வரி 54) என்று,தாம் கண்ணுற்ற அருட்்பெருஞ்ஜோதி ஆண்டவரை திருநீற்று பேனியராகவும் கண்டுப்் போற்றிப் பாடிப் பணிந்துள்ளார்.எவ்வடிவும் கடவுளின் ஏகதேச வடிவமாயினும் பொதுவான ஞானவடிவம் அவனது இயல் உண்மை வடிவமன்றோ.இதனால் தெள்ளத் தெளிய மெய்யறிவுக்குப் புலனாவது திருநீறு(விபூதி) ஞானத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம் என்பதன்றோ.
மேலும் திருவருட்பா பதிகங்கள் ஒவ்வொன்றின் தலைப்பிலும் அடியிலும் 'திருச்சிற்றம்பலம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது.அச்சொல் சைவ சமயச் சொல் என்பதும் சிலர் கருத்தாம்.சமய,மதங்கடந்தப் பொதுநெறிபோதிக்க வந்தப் பெருமானார் அச்சொல் சமயங்குறிக்கும் சொல்லாக இருப்பின் குறித்திருப்பரோ.அச்சொல்லின் பொருளை நோக்கின் இவ்வுண்மைப் புலனாகும்.சிற்றம்பலம்(சித்து+அம்பலம்)அறிவாகாசம்(ஞானாகாசம்) என்பதனால் அச்சொல் ஞானக்குறியீடாம்."திரு" சிறப்பைக் குறிக்க வந்தது.இவ்வண்ணமே திருநீறும் ஞானக் குறியீடே.
எந்தவொன்றையும் குறிக்க ஓர் அடையாளம்(குறி) தேவையன்றோ.உடலின்றி ஒருவரை இன்னார் என்று குறிக்கக் கூடுமோ!உலக வாழ்வியலில் ஒவ்வொரு பொருளுக்கும் வடிவமுண்டு.அறிவியல் கணிதம் போன்றத் துறைகளிலும் குறியீடுகள் உண்டு.படை(ராணுவம்)யிலும் சங்கேதக் குறியுண்டு.அதனால் வடிவம்,அடையாளம்,குறி,இடமின்றி எதையும் அறிந்து அடைந்து பயனுற முடியாது என்பது நடைமுறை அனுபவம்.எந்தவுயர்வான ஒன்றையும் குறுகிய கண்ணோடு பார்க்கின் அதன் உண்மைத் தன்மை தோன்றாது.எந்த நோக்கோடு பார்க்கப்படுகின்றதோ அது மட்டுமேத் தோன்றும்."காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் நிறமாகத் தோன்றும்" என்னும் அனுபவ மொழியை இங்கு நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.
இதனால் ஒவ்வொரு மனிதனும் திருநீறு அணிந்து கொள்வதை விதியாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.எதையும் வலியுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, அடக்கியோ,சாதித்து விட்டதாக உலக வரலாறு கூறவில்லை.அவ்விதம் சாதிக்க வலிமையால் முற்படினும் அது வெறும் புறத்தோற்றமும் தற்காலிகமானதாகவும் முடியுமே தவிர நிலைப்பெற்றதாகா.
கடவுள் எப்படி எவ்வுயிருகு் பொதுவானவரோ,மனித உடலுறுப்பமைப்பு உலகம் முழுவதற்கும் எப்படிப் பொதுவாக அமைந்துள்ளதோ,திருக்குறள் நெறி எப்படி உலகம் முழுவதற்கும் பொதுவான நெறியாகவுள்ளதோ,ஞானம் எப்படி எம்மனிதருக்கும் பொதுவானதோ,அப்படியே திருநீறு(விபூதி) தூய்மையையும் அபேதத்தையும் தன்னுள் கொண்ட ஒரு பொதுவான ஞானச் சின்னமாம். இந்த உண்மையை உலகம் அறிந்து அது ஒரு சமயம் சார்ந்தவர்கள் குறி என்னும் குறுகிய கண்ணோட்டத்தை விட்டொழித்து அதைப் பேணிப் போற்றும் பாங்கினைப் பெறின் நிலவிவரு் பேதமும்,பிணக்கும்,போரும் செயலிழந்துபோம்.அப்போது தமிழன் கண்ட
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எனும் உயரிய கனவு நனவாகும் காலம் மலருமன்றோ!"எல்லா வுயிரும் இன்புற்று வாழ்க" எனும் வள்ளலாரின் பெருங்கருணை வாக்கும் நடைமுறைக்கு வருமன்றோ!அப்பெருமானார் காணவிழைந் ஆன்ம நேய ஒருமைப்பாடும் மணம் வீசுமன்றோ!இரக்கமே ஓருருவாகிவந்த அப்பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இறைஞ்சி
"கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
றோங்குதல் என்றுவந் துறுமோ"
என ஏங்கிய ஏக்கமும் தீருமன்றோ
உலகமே ஓருமின்!உயருமின்!
வள்ளலடியான்
சு.முத்துமாணிக்கம்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
திருநீறு ஒருகுறிப்பிட்ட சமயமதனிலே முடங்குமோ
பெருத்த ஓர்யானைதான் சிறுபானையில் அடங்குமோ
பொருத்தமில்லா வீணான விவாதத்தை விடுத்திடுவோம்
கருத்துமிகவே கனிந்த நற்கட்டுரையிது வாழ்த்துவோம்
சமயம் கடந்த சுத்த சிவசன்மார்க்கத்தை
சமயம் பார்த்து மதமாக்க நினைப்பவரே
சமயம் கடந்த திருநீற்றையும் புனைந்து
சமயக் குறியீடாக விவரிப்பர் சுயநலமே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்
அன்பன் துரை