அருள்பாவலர் சக்திவேல் .வே
வள்ளல் பெருமனார் கூறும் உணவு பழக்க வழக்கம் :
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் ; வள்ளல் பெருமனாரின் பெருந்தயவாலும்
"வள்ளலார் ஞான நெறி" எனும் வாட்ஸாப் குழு இயங்கி வருகின்றது.

இக்குழுவில் வாரந்தோறும் வியாழன் முதல் புதன் வரை சன்மார்க்கச் சத்விசாரம் நடைபெறுகின்றது.

இக்குழுவில், 2018 மார்ச் 21 முதல் 28 - ஆம் தேதி வரை வள்ளலார் கூறியுள்ள உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் சத்விசாரம் நடைபெற்றது.

அச் சத்விசாரத்தில் அன்பர்கள் பலர் கலந்துகொண்டு கருத்துக்களைப் பதிவு செய்தனர். அவற்றுள் முக்கியமான தகவல்கள் வருமாறு ;

வாரம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட கருத்துகளின் செறிவு அடிப்படையில் ....

★சன்மார்க்கத்திற்கு ஏற்ற உணவுகள்,

★உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை,

★உணவில் ஓரளவு (எப்பொழுதாவது) சேர்த்துக்கொள்ள வேண்டியவை,

★உணவில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை,

★உணவு பற்றிய பொதுவான தகவல்கள்,

எனும் உள்தலைப்புகளில் பகுத்துக் காண்போமே...!

*சன்மார்க்கத்திற்கு ஏற்ற உணவுகள்:*
--------------------------------------------------------------
வாட்ஸாப் வழியே சத்விசாரம் தொடங்கிய பொழுது , தயவுத்திரு திருநாவுக்கரசு ஐயா அவர்கள் ஒலி (ஆடியோ) வடிவில் முதல் கருத்தைப் பதிவுசெய்தார்கள். அப்பதிவின் வரிவடிவம் வருமாறு ;

"சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கின்ற வஸ்துவைக் கொள்ள வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாதெனில் ; சர்க்கரை , தேன் , கற்கண்டு , வெல்லம் , அயம் முதலிய செந்தூரம் , தாமிரம் அயம் முதலிய பஸ்பம் ஆதலால் அவசியம் ஆகாரத்துதிற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை.. "

என்று வள்ளல் பெருமனார் உபதேசப் பகுதியில் (பக்கம் : 430) கூறியுள்ள கருத்தைத் தயவுத்திரு திருநாவுக்கரசு ஐயா பகிர்ந்தார்கள்.

● வள்ளல் பெருமனாரின் மேற்கண்ட உபதேசக் குறிப்பிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவெனில்....?

★ புழு புழுக்காத உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது என புரிந்துகொள்ளலாம் .

தேன் , வெல்லம் சர்க்கரை முதலிய இனிப்பு வகைகளே சன்மார்க்கத்தார்க்கு ஏற்ற உணவுகளாகும். இவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வள்ளல் பெருமனார் அருளிய உரைநடைப் பகுதியில் "நித்திய கரும விதி "என்ற தலைப்பில் மனிதர்களின் உணவுமுறை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்கள். அவற்றுள் முக்கியமான தகவல்களை இனி வரும் பகுதியில் காணலாம்...;

★கிழங்கு வகைகளுள் கருணை கிழங்கை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்ற கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

★பழ வகைகளுள் ரஸ்தாளி வாழைப் பழமும் , பேயன் வாழைப் பழமும் உட்கொள்ளலாம். மற்ற பழ வகைகளைத் தவிர்க வேண்டும்.

★புளி , மிளகாயைக் சிறிதே சேர்க்க வேண்டும்.

★மிளகு , சீரகத்தை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

★உப்பைக் குறைவாகவே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

★தாளிக்க பசு வெண்ணையைப் பயன்படுத்தலாம்... பசு வெண்ணெய் கிடைக்காத பொழுது நல்லெண்ணையைக் குறைவாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

★வெங்காயம் , வெள்ளைப் பூண்டு.. ஆகியவற்றைச் சிறிதளவே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

★முருங்கை , கத்திரி , பேயன் வாழைக்காய் , தூதுளை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

★அவரைக்காய் , பீர்க்கங்காய் , கல்யாணப் பூசுணைக்காய் , புடலங்காய் , கொத்தவரங்காய் ஆகிவற்றை எப்பொழுதாவது சேர்த்துக்கொள்ளலாம்.

★கரிசலாங்கண்ணிக்கீரை , தூதுளைக்கீரை , பசலைக் கீரை , முருங்கைக்கீரை , முன்னைக் கீரை ... இவைகளைப் பருப்போடு சேர்த்தும் , மிளகோடு சேர்த்தும் , புளியிட்டும் , தனித்தும் கறிசெய்தும் சாப்பிடலாம்.

★ பருப்பு வகைகளுள் முளைகட்டாத துவரம்பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்புடன் மிளகு சேர்த்துக் கடைதல் - துவட்டல் - துவையல் - குழம்பிடல் - வேறொன்றுடன் கூட்டல் முதலியன செய்து ; நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.அவ் நெய்யை மிகுதியாகச் சேர்க்கக்கூடாது.
.....

என்று வள்ளல் பெருமனார் சன்மார்க்கத்தார்க்கு ஏற்ற உணவுமுறைகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்கள். (கூடுதலான தகவல் வேண்டுவோர் ... வள்ளல் பெருமனார் அருளிய உரைநடைப் பகுதியில்...(பக்கம் : 332 முதல் 344 வரை ) நித்திய கரும விதி என்ற தலைப்பின் கீழ் கூறியுள்ள தகவல்களைப் பார்க்கவும் .

*உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை :*
------------------------------------------------------------------
"கரிசாலையைத் தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து , எவ்வித தந்திரித்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால் , தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீங்கி , தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும்."

-என்று வள்ளல் பெருமனார் உபதேசப் பகுதியில் (பக்கம் 432) கூறியுள்ளார்கள்.

பெருமனாரின் இக்குறிப்பிலிருந்து கரிசாலங்கண்ணியை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என தெரியவருகின்றது...

மேற்கண்ட குறிப்பின் ... தொடர்ச்சியாக .... கரிசலாங்கண்ணி கிடைக்காத சூழலில் தூதுளையை அவசியம் பயன்படுக்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்கள்.

★புளியோரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று என்று பெருமனார் கூறியுள்ளார்கள்.

*உணவில் எப்பொழுதாவது சேர்த்துகொள்ள வேண்டியவை :*
----------------------------------------------------------------

★வடை , அதிரசம் , தோசை , மோதகம் முதலிய அப்பவர்க்கங்களை கொள்ளப்படாது ; ஏகதேசத்தில் (எப்பொழுதாவது) சிறிது உடகொள்ளலாம்.

★சர்க்கரைப் பொங்கல் , ததியோதனம் (தயிர்சாதம்) , புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது ; எப்பொழுதாவது சிறிது உட்கொள்ளலாம் என்று பெருமனார் கூறியுள்ளார்கள்.

உணவு பற்றிய பெருமனாரின் பொதுவான தகவல்கள்...:
-----------------------------------------------------------------

"சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா , பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில் : வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது ; தாமச குணம் உண்டாகும்...."

என்று வள்ளல் பெருமனார் , உபதேசப் பகுதியில் (பக்கம் 431) கூறியுள்ளார்கள்.

ஆம்....

சாதத்தை வடித்துச் சாப்பிடுவதே நன்மை தரும். இன்றைய காலக்கட்டத்தில் ப்ரஷர் குக்கரில் வைத்துப் பெரும்பாலும் சமைக்கின்றனர். இதைத் தவிர்த்துவிட்டுப் பெருமனார் கூறிய வழியில் வடித்தே சாப்பிடுவோம்.

★உணவை உண்ட பின்பு , ஒரு தரமாக இளஞ்சூடுள்ள வெந்நீரைக் தாகத்துக்கு உடகொள்ள வேண்டும . குளிர்ந்த நீரைச் சிறிதும் உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் - என்று பெருமனார் உபதேசப் பகுதியில் (பக்கம் 344) கூறியுள்ளார்கள்.

★"எந்த காலத்திலும் பசித்தால் மட்டுமே உணவை உட்கொள்ள வேண்டும் " -என்று பெருமனார்.உபதேசப் பகுதியில் (பக்கம் 336) கூறியுள்ளார்கள்.

'சன்மார்க்கத்தார்கள் உணவிற்கு முக்கியத்துவம் கொடக்ககூடாது' எனும் கருத்தினை ஈரோட்டைச் சார்ந்த சன்மார்க்கச் சான்றோர் - பெருந்தகையாளர் தயவுத்திரு ஆன்மநேயர் செ. கதிர்வேல் ஐயா அவர்கள் திருஅருட்பா மேற்கோளுடன் விளக்கி பதிவிட்டார்கள். ஈரோட்டு ஐயா பதவிட்ட அருட்பா பாடல் வருமாறு..;

"சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாஞ் சுருங்கி

ஆற்றிலே கரைத்த புளி எனப் போ(கு)ம்..."

என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் (107) அவா அறுத்தல் என்ற பதிகத்தில் பாடியுள்ளார்கள்.

ஆம்...

சன்மார்க்கத்தார்கள் உணவின் சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது... உணவின் சுவைக்கு ஆசைப்பட்டால் ஞானம் கைக்கூடாது...

வள்ளல் பெருமனார் , நித்தியக் கரும விதியின் நிறைவில் ;

"ஆகாரம் அரை ; நித்திரை அரைக்கால் ; மைதுனம் வீசம் ; பயம் பூஜ்ஜியம் ஆகப் பெறுதல்.."
- என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆம்...

சன்மார்க்கத்தார்கள் அரை வயிற்றிற்கே உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வயறு முட்ட உணவு உட்கொள்வது ஞான மார்க்கத்திற்கு ஏற்றதல்ல.

*உணவில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை ...*
----------------------------------------------------------------
புலால் உணவை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுமென வள்ளல் பெருமனார் வலியுறுத்துகின்றார்.

"கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே"

-என்ற வள்ளல் பெருமனாரின் அகவல் வரிகளைச் சென்னையைச் சார்ந்த தீபம் அறக்கட்டளையின் தவத்திரு ஜோதிசதுரகிரியார் ஐயா அவர்கள் பதிவுசெய்தார்கள்.

இவ்வரிகளால் புலால் தவிர்த்தலே குருவருளைப் பெறுவதற்கான வழி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும்...

வடலூரில் பெருமனார் அமைத்த சத்திய ஞானசபையின் நுழைவு வாயிலில் " புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே நுழையவும் "என்ற அறிவிப்பு உள்ளது. இதன் மூலம் வள்ளல் பெருமனாரின் ஞான மார்க்கத்திற்குப் புலால் தவிர்த்தல் அடிப்படை தகுதி என்பது உறுதியாகின்றது.

*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் ; அவர் புற இனத்தார். அவர்களுக்குப்

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக; பரிந்து மற்றைப் பண்பு உரையேல்....*

என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 607 -ஆம் பாடலில் பாடியுள்ளார்கள்.

பெருமனாரின் இவ்வரிகளால் நாம் புரிந்துகொள்ளவதென்ன...?.

★பிற உயிரினங்களைக் கொலை செய்து , அவற்றின் உடலை உண்பவர்கள் சன்மார்க்கத்திற்கு உறவினர்கள் அல்லர். ;

★அசைவ உணவு உண்பவர்கள் சன்மார்க்கத்திற்குப் புறவினத்தார் ஆவார். சன்மார்க்கத்திற்கு உறவு ஆகார்.

★அசைவ உணவை உண்பவர்களுக்குப் பசிதவிர்த்தல் (அன்னதானம் ) மட்டும் செய்யலாம். மற்ற செயல்களைத் (ஞானம் போதிப்பது... போன்றவற்றைத்...) தவிர்க்க வேண்டும்.

என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

மேலும்...;

*மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்

உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்

கருவாணையுற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்..

எம்குருவாணை எமது சிவக் கொழுந்தாணை ஞானி எனக் கூறொணாதே.*

-என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா இரண்டாம் திருமுறையில் அறநிலை விளக்கம் என்ற பதிகத்தில் பாடியுள்ளார்கள். (அருட்பா : 1761)

இப்பாடல் வரிகளால் நாம் புரிந்துகொள்வதென்ன...?

★ஒருவன் ஆணைப் பெண்ணாக மாற்றியும்...

பெண்ணை ஆணாக மாற்றியும்....

★இறந்தவரை உயிரோடு எழுப்பும் வலிமை பெற்று இருந்தாலும்...

★அவன் , புலால் உண்ணக் கருதுபவன் எனில்... அவன் ஞானியாகமாட்டான்.....

★இது என் குருவின் மீதும் , சிவத்தின் மீதும் ஆணை....

என்று வள்ளல் பெருமனார் கூறுகிறார்...

அன்பர்களே..... இப்பாடல் வரிகளின் பொருளாழத்தைச் சற்று எண்ணிப்பாருங்களே....!

புலால் உண்ண நினைத்தாலே .... ஞானியாக முடியாதாம்....

ஆம்...

மனதளவில் ...புலால் உண்ண ஆசைப்பட்டாலே ... ஞானயாக முடியாதாம்..... .. புலால் உண்ண நினைப்பவர்கள் ஞான மார்க்கத்திற்கு உரியவர் ஆகார்.

மேலும்...

மற்றொரு பாடலின் மூலம் பெருமனாரின் மனநிலையைக் கொஞ்சம் கேளுங்களே...!

"புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்

என்பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி , உள் நடுங்கி, ஆற்றாமல்

என்பெலாம் கருக , இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்."

என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் (253) பிள்ளைப்பெரு விண்ணப்பம் என்ற பதிகத்தில் பாடியுள்ளார்கள்.

ஆம்..

புலால் உண்ணும் மனிதர்களைக் கண்ட பொழுது வள்ளல் பெருமனாரின் மனம் நடுங்கியதாம் , ஆற்றுப்படுத்த முடியாமல் - பெருமனாரின் எலும்பெல்லாம் கருகி இளைத்ததாம் , ......

ஆதலால் .... வள்ளல் பெருமனார் காட்டிய ஞான வழியில் பயணிக்க விரும்புவோர்... 'புலாலைத் தவித்தலே முதல் தகுதியாகும்'.. என்று தெளியலாம்.

"ஒரு ஜீவனைக் வதைத்து , அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறிய வேண்டும்..."

-என்று வள்ளல் பெருமனார் உரைநடைப் பகுதியில் (பக்கம் 114) ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் கூறியுள்ளார்கள்.

ஒத்தக் கருத்து :
----------------------

வள்ளல் பெருமனார் புலால் மறுத்தலை வலியுறுத்தியதைப் போன்று பற்பல தமிழிலக்கியங்களும் புலால் மறுத்தலை வலியுறுத்துகின்றன.

தன் ஊன் பெருக்கத்திற்குத் தான் பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

என்று தமிழ்மறை தந்த திருவள்ளுவர் பாடியுள்ளார் ( குறள் : 251)

ஆம்...

தன்னுடைய உடலைப் பெருக்க வைப்பதற்காகப் பிற உயிரினத்தைக் கொலைசெய்து , அவற்றின் உடலை உண்பவர்களுக்கு எவ்வகையில் அருள் கிடைக்கும்...? -என்று திருவள்ளுவப் பெருந்தகை கேள்வி கேட்கின்றார்.

மேலும். ....

"கொல்லான் புலாலை மறத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் "

ஆம்...

புலால் உண்ணாதவரைத் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வணங்கும் என்பது திருவள்ளுவரின் கருத்து.

திருவள்ளுவரின் (குறள் 260) கருத்து இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

புலால் மறுத்தல் மற்றும் கொல்லாமை எனும் இரண்டு அதிகாரங்களில் திருவள்ளுவர் புலால் உண்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார் .

" பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே"

என்று திருமூலர் (திருமந்திரம் பாடல் : 199) புலால் மறுத்தலை வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆம்.... புலால் உண்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பது திருமூலரின் கருத்து.

இவ்வாறாக தமிழில் உள்ள பற்பல இலக்கியங்கள் புலால் மறுத்தலை வலியுறுத்துகின்றன.

சிந்தனைக்கு....
-------------------------
தமிழகத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்படும் பல்வேறு ஆன்மிகச் செயல்பாடுகளில் புலால் உண்ணாமை கடைபிடிக்கப்படுகின்றது...

குறிப்பாக ..பௌர்ணமி , அம்மாவசை , கார்த்திகை ...முதலிய நாட்களில் விருதம் கடைபிடிப்பது இயல்பாகப் பின்பற்றப்படுகின்றது.

மேலும்... புராட்டாசி மாதம் முழுவதும் புலாலைத் தவித்து... பலர் வேங்கட மலையின் பதியை வணங்கச் செல்கின்றனர்....

கார்த்திகை மாதம் முழுவதும் புலாலைத் தவர்த்து விருதமிருந்து சபரி மலையின் அப்பனை வணங்கச் செல்கின்றனர்.

பௌர்ணமி நாளில் புலால் தவிர்த்து திருவண்ணாமலையை வலம் வந்து நாதரைத் தரிசிக்கின்றனர்...

அன்பர்களே...இந்நிகழ்வுகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன...?

★ஆன்மிக அனுபவத்தைப் பெற புலால் மறுத்தல் அடிப்படை என்பது தெளிவாகுகின்றது....

★சிற்சில வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக... சிற்சில நாட்கள் மட்டுமே புலாலைத் தவிர்க்கும் அன்பர்களே... ! வாழ்நாள் முழுவதும் புலாலைத் தவிர்த்தால் பேரின்ப பெருவாழ்வில் வாழலாமே. ...!

★ஒருமாத காலம் மட்டும் புலாலைத் தவிர்க்கும் அன்பர்களே...! வாழ்நாள் முழுவதும் புலாலைத் தவிர்த்தால்....

◆உங்கள் கடத்துள் (உடலுள்) இருக்கும் பதியை உணர்ந்து அனுபவிக்கலாமே...!

◆உங்கள் சபரி(முடி) மலையாம்... தலைக்குள் அப்பனைக் கண்டு தரிசிக்கலாமே.. !

◆உங்கள் திரு அண்ணா (உள் நாக்கிற்கு மேலே) மலையில் நாதரைத் தரிசிக்கலாமே...!

சத்து நிறைந்த உணவு :
-----------------------------------------
அசைவ உணவுகளில் தான் சத்துகள் நிறைந்தள்ளன என்றும் ; சைவ உணவுகளில் சத்துகள் குறைவாக உள்ளன என்றும் பலர் கருதுகின்றனர்.
ஆனால்....அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் கூறுவதுதான் என்ன...? (சற்றே சிந்திப்போமே..!)

நூறு கிராம் ஆட்டிறைச்சியும் ; நூறு கிராம் சோயாபீன்ஸும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் ஆயவறிக்கையை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியுட்டுள்ளது ...அவ்வாய்வு அறிக்கையின் சுருக்கம் மட்டும் வருமாறு...;

★சோயாவில் புரதச்சத்து 43.2 % உள்ளது. ஆனால் ஆட்டிறைச்சியில் புரதம் 18.5 % மட்டுமே உள்ளது.

★ சோயாவில் இரும்புச்சத்து 11.5% உள்ளது. ஆனால் ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து 2.5%மட்டுமே உள்ளது.

★தாது பொருள்கள் எனப்படும் மினரல் சத்துகள் சோயாவில் 4.6 % உள்ளது. ஆனால் ; ஆட்டிறைச்சியில் 1.3 % மட்டுமே உள்ளது.

★சோயாவில் பாஸ்பரஸ் 0.69% உள்ளது. ஆனால் ஆட்டிறைச்சியில் பாஸ்பரஸ் 0.15 % மட்டுமே உள்ளது.

★சோயாவில் கால்சியம் 0.24 % உள்ளது. ஆனால் ஆட்டிறைச்சியில் கால்சியம் 0.15 % மட்டுமே உள்ளது.

இவ்வாய்வு அறிக்கையானது அசைவத்தைவிட சைவத்திலே சத்துகள் நிரம்ப உள்ளன என்று மெய்ப்பிக்கின்றது..

வேர்க்கடலையில் புரதச் சத்து 26 7 % உள்ளது. பாசிப் பயிறில் புரதச்சத்து 24.0 %உள்ளது.

கேழ்வயகில் கால்சியம் 0.34 % உள்ளது. எள்ளில் கால்சியம் 1 45 % உள்ளது.

பேரிச்சம்பழத்தில் பாஸ்பரஸ் 0.56 % உள்ளது. கோஸில் பாஸ்பரஸ் 0.72 % உள்ளது.

கேழ்வரகில் இரும்புச்சத்து 6.40 %உள்ளது. வெந்தயத்தில் இரும்புச்சத்து 14.1 % உள்ளது

எள்ளில் தாதுப்பொருட்கள் 5 2 %உள்ளது. துவரம் பருப்பில் தாதுப்பொருட்கள் 3 6 %உள்ளது.

அன்பர்களே. ! இப்பொழுது சொல்லுங்கள் சத்து நிறைந்த உணவு சைவமா...? அசைவமா...?

அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பார்த்தாலும் சத்து நிறைந்த உணவு சைவமே என்பது உறுதியாகின்றது.

நிறைவுரை :
---------------------
வள்ளல் பெருமனாரின் ஞான வழியில் பயணிக்க விரும்புவோர் புலாலை எக்காலத்திலும் தவிர்க்க வேண்டும்.

கார வகைகளைத் தவர்தது வெல்லம் , கறகண்டு , சர்க்கரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்

கரிசாலங்கண்ணியையும் , தூதுளையையும் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்...

சென்னையைச் சார்ந்த சன்மார்க்க அன்பர் தயவுத்திரு முத்துக்குமார் அவர்கள் நெகிழி (பிலாஸ்டிக் - பாலிதின்) பொருட்களைச் சன்மார்க்க பசிதவிர்த்தல் - அன்னதான நிதழ்வுகளில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுமனும் கருத்தை வலியுறுத்தினார்கள். காலத்திற்கேற்ற இக்கருத்துடன் இந்த வார சத்விசார தொகுப்பை நிறைவுசெய்கிறோம்...!

வள்ளல் பெருமனாரின் திருஅருட்பாவையும் உபதேசங்களையும் கசடறக் கற்போம்... வள்ளல் பெருமனாரின் ஞான மார்க்கத்தைப் புரிந்துகொள்வோம்...!

(கட்டுரை ஆக்கம் : அருள்பாவலர் சக்திவேல் . வே)

-----------------------------------------------------------
வள்ளலார் ஞான நெறி வாட்ஸாப் குழுவில் 2018 மாரச் 29 முதல் ஏப்ரல் 4 - ஆம் தேதி வரையிலான வார சத்விசார தலைப்பு : வள்ளலார் கூறும் உடல் நலம் பேணல்