அருள்பாவலர் சக்திவேல் .வே
வள்ளலாரியத்தின் நான்கு தூண்கள்....!
வள்ளலாரியத்தின் நான்கு தூண்கள்....!

வள்ளல் பெருமானாரின் இருநூறாம் ஆண்டு அவதாரத் திருநாள் திருவிழாவைத் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள வள்ளலார் நேயர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இச் சூழலில் வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சமயம் கடந்த சன்மார்க்க கொள்கைகளைப் பற்றி இளையோர் முதல் முதியோர் வரை விரும்பி கற்கின்றனர்.

வள்ளல் பெருமானாரின் கொள்கைகள் பற்றிப் பேசுவோரும் எழுதுவோரும் ... அவரவர்கள் சார்ந்திருக்கும் பின்புலத்திற்கு ஏற்ப... கலர் கண்ணாடிகளை அணிந்துகொண்டு நோக்குகின்றனர்.

ஆதலால்.... வள்ளலார் வலியுறுத்திய கொள்கைகள் பெரும்பாலானோர்க்குத் தெரியாமலே போய்விடுகின்றது.

வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சமயம் கடந்த சன்மார்க்கத்தின் அஸ்திவாரமாக அமைவது உயிரிரக்கக் கோட்பாடு ஆகும்.

”உலகினில் உயிர்களுக்கு உறும் இடையுறு எல்லாம் நீ அடைந்து விலக்குமகிழ்க”... என்ற அகவலின் நிறைவுரை இக்கருத்தை உறுதி செய்கின்றது.

சன்மார்க்கச் சங்கத்தின் முதன்மையான முழக்கம் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க'" என்பதாகும்.

ஆதலால், வள்ளலாரியத்தின் அஸ்திவாரம்.... உலகினில் உள்ள உயிர்களுக்கு நம்மால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் வாழ்வதோடு...... கூடியவரை அவ்வுயிர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்து இன்பம் செய்வித்து வாழ்வதேயாகும் என்று நாம் தெளிவடையலாம்.

அதேபோல்... வள்ளலாரியத்தின் நிறைவான உச்சியென்பது "கடவுள் நிலையறிந்து அம்மயம் ஆகுதலாகும்".

உயிர்க்கத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, கடவுள் நிலையை அடைதல் எனும் உச்சியை அடைய வேண்டுமெனில்... நான்கு புறமும் தாங்கி நிற்கும் தூண்கள் போல நான்கு நெறிகளை அறிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

சன்மார்க்கத்தின் அந்நான்கு நெறிகளின் முதன்மை கருதியே... இன்றளவிலும் வடலூர் சத்திய தருமச் சாலையின் உள்புறம் அமைந்துள்ள வழிபாட்டிடத்தின் உட்புற சுவர்களில் அந்நான்கு நெறிகளும் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.

வள்ளல் பெருமானார் வகுத்துள்ளித்த சன்மார்க்கத்தில் பின்பற்ற விரும்புவோர் இந்நான்கு ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகின்றது.

வள்ளலாரியத்தின் நான்கு தூண்களாகுவன….!

1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்
என்பதாகும். இவற்றைப் பற்றி தெளிவுறுத்த இக்கட்டுரை முற்படுகின்றது.

இந்திரிய ஒழுக்கம் என்றால் என்ன?

இந்திரியம் என்பது நம் உடலில் உள்ள ஐம்புலன்களைக் குறிக்கின்றது.
ஐம்புலன்கள் என்றால்…. மெய்(உடம்பு), வாய், கண், காது, மூக்கு என்பதாகும்.

இந்த ஐந்து இந்திரியங்களையும் அவற்றிற்கான செயல்பாட்டு வழிமுறைகளை நெறிபடுத்துவதே 'இந்திரிய ஒழுக்கம்' என்பதாகும்.

"ஒருமையுள் ஆமைப் போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"
என்று வள்ளுவர் சொல்வது போல் ... தனக்கு ஆபத்து வருகின்ற போது ஆமையானது தன் நான்கு கால் மற்றும் தலை உள்ளிட்ட ஐந்தனையும் தம் ஓட்டினுள் இழுத்துப் பாதுகாத்துக் கொள்கின்றதோ ‌.. அதே போல்.... மனிதர்களாகிய நாமும் நம் ஐந்து உறுப்புகளையும் (புலன்களையும) அடக்கி ஆள வேண்டும்.

இனி...
இந்திரிய ஒழுக்கமாவது யாது? என்ற வினாவிற்கு வள்ளல் பெருமானார் உரைநடைப் பகுதியில் தரும் விளக்கங்களைப் பார்ப்போம்...!

1. கொடிய சொல் செவிபுகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டால்...
(தீயவற்றைக் கேட்காமல் நல்லவற்றைக் கேட்டல்)

2. அசுத்த பரிசமில்லாது தயா வண்ணமாக பரிசித்தல்.
(சக மனிதர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல்)

3.குரூரமாகப் பாராதிருத்தல்.
(பிறரைக் சினக் கண் கொண்டு கொடுடராமாகப் பார்க்காமல் .... அன்பாகப் பழகுதல்)

4. உருசி விரும்பாதிலிருத்தல்.
(வாய்ச் சுவைக்கு அடிமை ஆகாமல் இருத்தல்.)

5. சுகந்தம் விரும்பாதிருத்தல்
(நற்மணத்தைத் தரக்கூடிய வாசனைத் திரவியங்களை விரும்பாது இருத்தல்... ஸெண்ட் & பாடி ஸ்பிரே விரும்பாதிருத்தல்)

6. இன்சொல்லாடல்
(பிறருடன் பேசும் போது இனிய சொற்களைப் பேசுதல்)

7. பொய் சொல்லாதிருத்தல்.
(எக்காரணம் கொண்டும்.. நம் வாழ்நாள் முழுவதும் பொய் பேசாமல் இருக்க வேண்டும்..)

8. ஜீவஹிம்சை நேரிடும் காலத்தில் எவ்வித தந்தரத்தினாலாவது தடை செய்தல்.
( நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்ளுக்கு ஏதேனும் இடையூறு / தீங்கு ஏற்படும் பொழுது, எந்தவித தந்திரத்திலாவது நற்முயற்சியலாவது அதனை நீக்க நாம் முற்பட வேண்டும்.)

9. பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்.
(சுத்த ஞானிகள் மற்றும் கற்றுணர்ந்த சான்றோர் பெருமக்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் சென்று வர வேண்டும்.)

10. ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தலங்களிலும் திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல்.
( நம் ஜீவனுக்கு உதவும் வகையில் சாதுக்கள் இருக்கும் இடங்களுக்கும் ஞானசித்திப் பெற்ற சித்தர் தலங்களுக்கும் சென்று வருதல் வேண்டும்)

11. நன்முயற்சியிற் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல் .
(கொடுத்தல் எடுத்தல்.... என்பதனை நம்பெருமானார் என்ன பொருளுடன் எழுதியுள்ளார் என்று என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை ... எனினும்.... இப்படி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.... கொடுத்தல் என்பதற்குச் செலவு செய்தல் என்றும் எடுத்தல் என்பதற்கு வருமானம் ஈட்டுவது என்றும் பொருள்கொள்ள தோன்றுகின்றது. அதாவது, நம் வரவும் செலவும் நல்வழியில் இருக்க வேண்டும்.)

12. மித ஆகாரம் செய்தல்
(வயிறு முட்ட உண்ணாமலும்.... மிகக் குறைவான அளவு உண்ணாமலும் இடைப்பட்டளவு..... மிதமாக உணவு உட்கொள்ள வேண்டும்)

13. மித போகம் செய்தல்
(இது இல்லறத்தாருக்கானது...மிதமான அளவே போகம் செய்ய வேண்டும்)

14.மல ஜல உபாதிகளை அக்கிரமம் அதிகிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்.
(மலம், சிறுநீர் போன்ற கழிவுகளை அடக்கி வைக்காமலும் அடிக்கடி போகாமலும் நியாயமாக வெளியேற்றுதல் வேண்டும்.)

15. கால பேதத்தாலும் உஷ்ண ஆபசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும் பெளதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரமத்தாலும் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்
(ஒஷதி என்றால் ’மூலிகை மருந்து’ என்று பொருள், பெளதிக மூலங்கள் என்றால் பூமியிலிருந்து - மண் மூலக்கூறுகளிலிருந்து கிடைக்கக் கூடிய மருந்துகள் என்று பொருள், (உதாரணம் தங்க பஸ்பம்.) சரபேத அஸ்தபரிச தந்திரம் என்பதற்கு எனக்கு சரியாகப் பொருள் தெரியவில்லை. .. எனினும் ... அச்சொல்லாக்கத்திற்குப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம். சரம் = மூச்சோட்டம், பேதம் = வேறுபாடு, அஸ்த = மறைந்து, பரிச = உணர்ச்சி, தந்திரம் = முறை.... என்று பொருள் கொண்டு. வெளிமூச்சு உள்மூச்சு வேறுபாட்டை உணர்ந்து ஒன்றி நிற்றல் என்று பொருள் கொள்ளத் தோன்றுகின்றது...

கால வேறுபாட்டாலும், உடல் உள்சூட்டாலும்... நமக்கு ஏற்படுகின்ற தடைகளை நோய்த் துன்பங்களை மூலிகை மற்றும் பஸ்பம், மூச்சுப் பயிற்சி, தியானம் செய்தல் உள்ளிட்ட ஞான அறிவால் நாம்... தவிர்த்துக்கொள்ள வேண்டும்)

16. சுக்கிலத்தை அக்கிரம அதிக்கரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம்.
(சுக்கிலத்தை வீணடிக்காமல் பாதுகாத்தல் வேண்டும்)

17. எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல் - தீவிரதரம்.
( எவ்வகையினாலும் சுக்கிலம் வெளியேறாமல் ... கண்டிப்பாக உள் நிறுத்த வேண்டும் - இது துறவிகளுக்கு என்று தோன்றுகின்றது)

18. இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல்.
( இடைவிடாது .... ஒவ்வொரு பொழுதும் நம் உடம்பை உடையினால் மறைத்துப் பாதுகாக்க வேண்டும்.)

19. இது போல் உச்சி, மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்.
(நம் தலையுச்சி, மார்பு பகுதி முதலிய உறுப்புகளையும் ஆடையினால் மறைக்க வேண்டும்..... ஆதலால் தான் பெருமானார் முக்காடிட்டு இருந்தார்களோ...?!)

20. சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்.
(வெளியில் நடந்து செல்கின்ற போது காலில் காலணிகளை அணிய வேண்டும்)

21. அழுக்காடை உடுத்தாதிருத்தல்....
(அழுக்காடைகளை உடுத்தாமல்… நன்கு துவைத்த தூய ஆடைகளை உடுத்த வேண்டும்.)

22... ...... "முதலியன இந்திரிய ஒழுக்கங்களாகும்" என்று பெருமானார் குறிப்பிடுகின்றார்கள்.

முதலியன... / ஆகியன ... என்ற இரு சொல்லாட்சிகளும் மிகுந்த பொருள் ஆழம் உடையவை.

முதலியன.... என்பதற்கு... மேற்கண்ட இவற்றை முதலாவதாகக் கொண்டு... மேலும் உள்ளவை என்று பொருள் கொள்ளலாம். (உதாரணம் : ’’குமார், செந்தில், முருகன் முதலியோர் விழாவிற்கு வந்தனர்’’ என்றால் இம்மூன்று பேருடன் மற்றும் பலர் விழாவிற்கு வந்தனர் என்று பொருள்கொள்ளலாம். ’’குமார், செந்தில், முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்’’ என்றால் இம்மூன்று பேர் மட்டுமே வீட்டிற்கு வந்தனர் என்று பொருள்கொள்ள வேண்டும்.)

ஆதலால்.... இந்திரிய ஒழுக்கங்கள் என்று பெருமானார் இருபத்தொரு புலனடக்கங்களைப் பட்டியலிடுகின்றார்கள். இவை மட்டுமே இந்திரிய ஒழுக்கமா என்று கேட்டால் இல்லை.... விரிக்கின் பெருகும் என்பதையே.... பெருமானார் ... "முதலிய!" என்ற சொல்லால் சுட்டுகின்றார்கள்.
வள்ளலாரியத்தைத் தாங்கிப் பிடிக்கும் முதல் தூண் புலனடக்கமாகும்.

வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சன்மார்க்கத்தைத் தாங்கி நிற்கும் இரண்டாம் தூணுக்குக் கரண ஒழுக்கம் என்று பெயர்.
கரணம் என்பதற்கு மனம் (மனசு) என்று பொருள் கொள்ளலாம்.

சென்ற இடத்தாற் செலவிடாது, தீது ஒரீஇ
நன்றியின் பால் உய்ப்பது அறிவு"
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப... ஐம்புலன்களையும் அதன்வழி மனத்தையும் தீய வழியில் போக விடாது நல்வழியில் செலுத்துவதே உண்மையான அறிவாகும்.

மனம் போன போக்கில் போகவிடாது நல்வழியில் செலுத்துவதே கரண ஒழுக்கமாகும்.

கரண ஒழுக்கம் என்பதற்கு வள்ளல் பெருமானார் தரும் விளக்கங்களை இனி பார்ப்போம்.

1. நமது மனதைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல். இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச் செய்தல்.

கிருதி என்றால் ஒன்றிணைத்தல் என்று பொருள். அறிவாகிருதி என்றால் அறிவினை ஒன்றிணைத்தல் எனலாம். நமது மனதை ஒன்றினைந்த அறிவாகிய சிற்சபை என மாற்றவேண்டும். பிறகு சிற்சபையின் முன்னே புருவமத்தியில் நமது மனதை நிற்கச் செய்யவேண்டும். (புருவமத்தி என்பது இருபுருவ நடுவாகிய நெற்றிக்கண்ணையே குறிக்கின்றது.
புருவ மத்தியில் சிந்தனையை ஒன்றிணைத்தல் பற்றி வள்ளல் பெருமானார் பல்வெறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றுள் ஒரு சில வருமாறு…

”சுத்த சன்மார்க்கத்திற்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்திற்கு மேல்”

“எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்த வேண்டும்.

பூர்வ ஞானம் என்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல்.

நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக்கொள்வது நலம்.

ஒருவன் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணைப் பெற்றுக் கொள்வானானால் அவனுக்கு எல்லாம் பட்டப் பகலைப் போல் தெரியும்.அவண்தான் சுத்த ஞானி.

இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன், மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது. லலாடஸ்தானம் இருப்பிடம்.

நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதனால் அதற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்தி மூலம் என்றும், முப்பாழ் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும், புருவமத்தி என்றும், கபாடஸ்தானம் என்றும், சபாத்துவாரம் என்றும், சிற்சபை என்றும்,…. பெயராம்.

புருவமத்தி பற்றி வள்ளல் பெருமானார் உரைநடைப் பகுதிகளில் கூறியுள்ள கருத்துகளை இதுவரைக் கண்டோம். புருவமத்தி பற்றிச் செய்யுள் பகுதியில் திருஅருட்பாவின் ஆறாம் திருமுறையில் ’’கண்புருவப் பூட்டு” எனும் பதிகத்தில் விரிவாகப் பாடியுள்ளார்கள். இப்பதிகத்தினுள் பதினொரு பாடல்கள் உள்ளன.

பதிகத்தின் முதல் பாடல் முழுமையாக வருமாறு..

"கையறவிலாது நடுக்கண் புருவப் பூட்டு
கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு
ஐயர் மிக உய்யும்வகை அப்பர் விளையாட்டு
ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு’’

இப்பாடலால் நாம் புரிந்து கொள்வதுதான் என்ன ?

"கையறவு" என்பதற்குச் செயலற்ற நிலை என்று பொருள் கொள்ளலாம்......

புருவ மத்தியில் காணும் பெருஞ்ஜோதியைச் சொல்லால் விளக்கமுடியாது என்பதை "சொல்லால் அளப்பரிய சோதி" என்று இப்பதிகத்தின் ஏழாம் பாடலில் பெருமனார் குறிப்பிடுகிறார்.

வள்ளல் பெருமனார் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்ததன் அடிப்படையும் இதுதான் ;

மனித தேகத்தில் புருவ மத்தியில் பெரும் ஜோதியாக இறை பேராற்றல் விளங்குகின்றது என்பதே ஞான சபையின் அடிப்படை தத்துவம்.

வள்ளல் பெருமனார் சன்மார்க்கக் கொடியை வடிவமைத்ததும் ; மனித தேகத்தில் புருவ மத்தியில் இறையாற்றல் விளங்குகிறது என்பதை விளக்கவே!

சன்மார்க்கக் கொடியின் வெண்மை- பொன்மை நிறம் நம் புருவ மத்தியில் உள்ள இறையாற்றல் சவ்வை விளக்குகின்றது

மேற்கண்ட கருத்துப் பதிவுகளின் மூலம், வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சன்மார்க்க வழியில் பயணிக்க விரும்பும் அன்பர்கள் புருவ மத்தி தியானத்தில் ஈடுபட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

வள்ளலாரியத்தின் இரண்டாம் தூணான கரன ஒழுக்கத்தின் முதல் நெறிமுறையான புருவமத்தி தியானம் பற்றி இதுவரை பார்த்தோம். இனி…. (இதனறி) கரன ஒழுக்கம் பற்றிப் பெருமானார் கூறியுள்ள பிற கருத்துகளைப் பார்ப்போம்.

2. துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்.
(தீயச் செய்திகள் & தீய செயல்கள் மீது எவ்வித பற்றும் இல்லாது வாழ வேண்டும்)

3. சீவதோஷம் விசாரியாது இருத்தல் வேண்டும்.
(பிறர் குற்றம் விசாரியாது இருத்தல் வேண்டும் – நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் குற்றம் குறைகளைப் பற்றி நாம் ஆராயாமல் வாழ வேண்டும்)

4. தன்னை மதியாது இருத்தல் வேண்டும்.
(நான் என்ற அகங்கார எண்ணம் அறவே வராமல் அடக்கத்துடன் பணிவாக வாழ வேண்டும்.)

5. இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல் வேண்டும்.
(தீய குணங்களால் ஏற்படும் கெடுதிகளை நீக்கி இயற்கையான சத்துவ குணமாக வாழ வேண்டும். மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்கள் உள்ளன என்று மெய்யியலார் கூறுவர். சத்துவ குணம் என்பது சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய நல்ல பண்புகளையுடையதாகும். இதுதான் மனிதர்களுக்குரிய இயற்கையான குணமாகும். ரஜோ குணம் என்பது கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை உடையதாகும். தமோ குணம் என்பது சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது. இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப் பிணம் போன்றவர்கள்.)

6. தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல் வேண்டும்
(நமது எண்ணங்களை நியாயமான வழியில் செலுத்தவேண்டும். தவறான வழியில் நமது எண்ணங்கள் சென்றால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.)

ஆக…. கரண ஒழுக்கம் என்பதற்கு மனதைத் தீய வழியில் செலுத்தாது நல்வழியில் செலுத்திப் புருவ மத்தியில் நிலைநிறுத்துதல் என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்.

வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சன்மார்க்கத்தைத் தாங்கி நிற்கும் மூன்றாம் தூணுக்குக் ஜீவ ஒழுக்கம் என்று பெயர்.

ஜீவன் என்பதற்கு உயிர் என்று பொருள்கொள்ளலாம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்….” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, எல்லா மனித உயிர்களும் பிறப்பின் அடிப்படையில் சமமே..!’’ ஜீவ ஒழுக்கம் எனப்படும்.

ஜீவ ஒழுக்கம் பற்றி வள்ளல் பெருமானார் கூறியுள்ள கருத்துகளை இனி பார்ப்போம்.

‘’ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாகும்.’’
மேற்கண்ட ஜீவ ஒழுக்க நெறியை விளக்கும் வகையில் வள்ளல் பெருமானார் திருஅருட்பா செய்யுள் பகுதியிலும் உரைநடைப் பகுதியிலும் பற்பல விளக்கங்களைத் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒருசில வருமாறு…

" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்...."- என்று வள்ளல் பெருமானார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் (349) பாடியுள்ளார்கள். இந்த உலகில் உயந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் எவ்வித வேறுபாடும் இல்லாமல்... அனைவரும் சமநிலையில் மதிக்கப்பட்டு.... ஒருமைப்பாட்டுடன் நடத்தப்படுவதே சன்மார்க்கத்தின் மூன்றாம் தூணாகும்.

வள்ளல் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து வைக்கும் வேண்டுகோளைக் கேளுங்களே.....!

"எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே...! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் , மதங்கள் , மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்... வருணம் , ஆசிரமம் , முதலிய உலகச்சார சங்கற்ப விகற்பங்களும்..... எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.... சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருள வேண்டும்...
-என்று வள்ளல்பெருமனார் உரைநடைப் பகுதியில் (பக்கம் 560 & 561) "சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் என்ற தலைப்பில் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட பகுதியைக் கசடறக் கற்பதோடு …. நம் வாழ்வில் கடைபிடித்தால் சன்மார்க்கத்தின் மூன்றாம் தூண் வலுவாக உள்ளது எனலாம்.

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே...
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் (நீங்கள்) அழிதல் அழகலவே

-என்று வள்ளல்பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் ( 1473 ) பாடியுள்ளார்கள்.

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை ... நீ விழித்து இது பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே...
-என்று *வள்ளல் பெருமனார்* ஆறாம் திருமுறையில் (621) பாடியுள்ளார்கள்.

இவ் அருட்பா வரிகளால் நாம் புரிந்துகொள்வதென்ன....?
வருணாச்சரம முறையிலான சாதிய வேறுபாடு , ஆச்சார முறைகள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டாகும்.

" இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புச் புன்செயில் எருவாக்கிப் போட்டு...
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்....
தெருட்சாறும் சுத்த சன்மார்க்க நன்னீதி சிறந்து விளங்க.....
- என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் (496) பாடியுள்ளார்கள்.

இப்பாடல் வரியால் நாம் புரிந்துகொள்வதென்ன....?
சாதியத்தை வலியுறுத்தும் சாத்திரக் குப்பைகளை எல்லாம் புன்செய் நிலத்தில் எருவாக - உரமாக போட்டு.....

★சாதி - சமயம் - மதம் - ஆச்சார வழக்கங்கள் எல்லாவற்றையும் குழிவெட்டி மண்ணுக்குள் புதைத்து... சுத்த சன்மார்க்கம் எனும் நல்ல நீதி சிறந்து விளங்க வேண்டும்... என்கின்றார் பெருமானார்.

" சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி...

"சாதியும் மதமும் சமயமும் காண ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி...

"சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் அருட்பெருஞ்ஜோதி ..."

"சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி..."

-என்றெல்லாம் வள்ளல்பெருமனார் திருஅருட்பாவில் அருட்பெருஞ்ஜோதி அகவலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இக்குறிப்புகளால் வள்ளலார் கண்ட சன்மார்க்கக் கொள்கையானது சமயம் - மதம் - சாதி - குலம் - இனம் என்ற குறுகிய வட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகின்றது.

"எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்.....”
என்று பெருமானார் பாடியுள்ளார்கள். அத்தெளிவு நமக்கும் இருந்தால் நமக்குள் சன்மார்க்கத்தின் மூன்றாம் தூண் வலுவாக உள்ளது என்று தெளியலாம்.

" சாதி சமய சழக்கை விட்டேன் அருட்பெருஞ்ஜோதி க் கண்டேன்..."
என்று ஆறாம் திருமுறையில் (2213) பெருமானார் பாடியுள்ளார்கள்.

" சாதி சமய சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபை நிலைபெற்றது...."
-என்று ஆறாம் திருமுறையில் (2177) பெருமானார் பாடியுள்ளார்கள்.

மேலும் .. "இது நல்ல தருணம் " (2111)எனும் பதிகத்தில்....
" மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது...
வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது..
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது....
என்றும்....

" குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று....
என்று வள்ளல் பெருமானார் பாடுகின்றார்....

சாதி - சமய - மத... பேதங்கள் நம் மனதில் இல்லாது போனால்....
அருள் செய்ய.... இறைவனை நாமே அழைக்கலாம்....
இது நல்ல தருணம் என்று....
சாதி சமய சழக்கை எல்லாம் நாம் விட்டுவிட்டால் நமக்கு அருள் செய்வதைத்தவிர கடவுளுக்கு வேறு வழியே கிடையாது ; அப்படிப்பட்ட நிலைக்கு கடவுளைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு நம்மிடம் இருக்கின்றது.

அதுவே சன்மார்க்கத்தின் வள்ளலாரியத்தின் மூன்றாம் தூணான ஜீவ ஒழுக்கம்.

"எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி..." - என்று வள்ளல் பெருமானார் அகவலில் பாடுவார்கள். .

எவ்வித பேதமும் வேறுபாடும் பார்க்காது... அனைவரும் ஒன்றாக... குழுமும் ... பொதுவான இடத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குகின்றார் என்பது பெருமானாரின் கருத்து.

ஆம்…. மனித இனத்தைச் சமமாக மதிப்பதே வள்ளலாரியத்தின் மூன்றாம் தூணான ஜீவ ஒழுக்கமாகும். நாமும் மூன்றாம் தூணை பலமாக்குவோம்…!

வள்ளல் பெருமானார் வகுத்தளித்த சன்மார்க்கத்தைத் தாங்கி நிற்கும் நான்காம் தூணுக்குக் ஆன்ம ஒழுக்கம் என்று பெயர். ஆன்மா என்பது உயிரை இயக்கும் உள் ஒளியாகும்.

ஆன்ம ஒழுக்கம் என்பது யாது…? என்பதற்கு வள்ளல் பெருமானார் தரும் விளக்கம் வருமாறு…

”ஆன்ம ஒழுக்கமாவது யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால், அவ்வச் சீவர்களின் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.”

”உயிரெல்லாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெல்லாம் விடுக…”

என்று வள்ளல் பெருமானார் அகவலில் பாடுவார்கள். இதனுள் வரும் செயிர் எனும் பழந்தமிழ்ச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். ஆம்… நம்முள் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்கி, உலகில் உள்ள உயிர்களையெல்லாம் சமமாக - பொதுவாகப் பார்க்க வேண்டும். இதுவே வள்ளலாரியத்தின் நான்காம் தூணின் அடிப்படை.

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக….!
என்று அகவலில் பெருமானார் பாடியுள்ளதும் ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது.

“எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே, இது அது என உரைப்பது அரிதாய்….” என்று அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எனும் பதிகத்தின் இறுதிப் பாடலில் பெருமானார் பாடியுள்ளார்கள்.

ஆம்….. இந்த உலகில் உள்ள உயிர்க்குலம் அனைத்தும் இறைவனின் சிற்சபை என்பதை உணர வேண்டும். இதுவே வள்ளலாரியத்தின் நான்காம் தூண்.

நிறைவுரை:
----------------------
எவ்விதமான பிரிவினைகளுக்கும் இடம் கொடுக்காது, உயிர்க்குலம் அனைத்தையும் ஒன்றாகச் சமமாகப் பாவித்து, தம் பொறிப் புலன்களை தீய வழியில் செல்லவிடாது புலனடக்கத்துடன் நல்வழிச் செலுத்தி, தத்தம் புருவ மத்தியில் மனதை ஒருமுகப் படுத்தி, பேரண்டத்தின் பேரொளியை இப் பிண்டத்தினுள் காண்பதே வள்ளலாரியமாகும்.

(கருத்துப் பதிவும் பகிர்வும் : அருள்பாவலர் சக்திவேல். வே)