சன்மார்க்க பிரசங்கம்!
பிரசித்தமான பிரசங்கம்கள் எத்தனையோ நிகழ்ந்துள்ளன.
அத்தனையும் அதனதன் கொள்கைகளைப் பிரசங்கம் செய்தன.
ஞான சரியை மூலம்தான்,வள்ளல் பெருமானார் சன்மார்க்கப் பிரசங்கம் செய்தார்.
சன்மார்கிகளாகிய நாம் அவரது பிரசங்கத்தை முழுவதும் அறிந்து, புரிந்து,
பொன்மார்க்கப் பயணம் முயல்வது அவசியம். அந்நோக்கில் தினம் ஒரு பாடலை
வள்ளல் பெருமானாரின் அருளால் பிரசங்கம் செய்து பிரசன்னமடைவோம்.
சன்மார்க்கப் பிரசங்கம் - இரண்டாம் நாள்.
புகுந்தருண மிதுகண்டீர்
நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழியோர்
பொய்மொழி என்னாதீர்.
உகுந்தருண முற்றவரும்
பெற்றவரும் பிறரும்
உடைமைகளு முலகியலு
முற்றதுனை அன்றே
முகுந்தசுவைக் கரும்பேசெங்
கனியேகொற்றேனே
மெய்ப்பயனே கைப்பொருளே
விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே
தயாநிதியே கதியே
சத்தியமே என்ருரைமின்
பக்தியோடு பணிந்தே.
சன்மார்க்கம் புகுதற்கு உற்ற சமயம் இதுவே என்ற
எனது மொழியினை பொய் என்று நினைக்க வேண்டாம்.
நீங்கள் யாவரும் எனக்கு உற்றவர் ஆனதனால்,
உற்ற சமயம் உரைக்கலானேன்.
அருட் பெரும் ஜோதி ஆண்டவர் அல்லால்
நமக்கு வேறு உற்ற துணை இல்லை என அறிதற்கும்
இதுவே உற்ற சமயம் என அறிவீர்.
உலகியலில் முயன்று நிலையான வாழ்வை உணராமலே
உடலை விடுக்கத் தருண முற்றவரும், நம்மைப் பெற்றவரும்
பிறரும் நமக்கு உற்ற துணை என்று தவறாகக் கருத வேண்டாம்.
அருட் பெரும் ஜோதி ஆண்டவரே நமது உண்மையான துணையாம்.
அத்தகைய சத்திய ஆண்டவரை மிகுந்த பக்தியுடன் பணிந்து
போற்றுவோமாக.
அருட் பெரும் ஜோதி ஆண்டவர் கரும்பாக இனிப்பவர்.
பழுத்த பழமாக சுவை மிகுந்தவர். கொம்புத் தேனினும்
இனியவர். உண்மை வழியின் உன்னத உணர்வு.
வாழ்க்கையில் வேறு எப்பொருளும் நிலையான
பதத்தில் சேர்க்காததால்,
அருட் பெரும் ஜோதி ஆண்டவரே நம் (வாழ்)கையில்
கிடைத்த மெய்ப்பொருள் என நாம் யாவரும் அறிய வேண்டும்.
அவரே விலை மதிப்பில்லாத மணியினும் மேம்பட்ட
தகுதியற்ற மற்ற எவற்றிலிருந்தும் தனிப்பட்ட பேரிறைவன்,
தயவே ஆன நிதியாகி நமக்கு உற்ற கதியானவர்.
நம் அருட் பெரும் ஜோதி ஆண்டவர்.
எனவே சன்மார்க்கம் புகுதற்கு இதுவே உற்ற சமயம் என்றார்
அருட் பிரகாச வள்ளல் பெருமானார்.
பாலு குருசுவாமி.