சன்மார்க்க பிரசங்கம் - மூன்றாவது நாள்
பணிந்துபணிந் தணிந்துதணிந்
பாடுமினோ வுலகீர்
பரம்பரமே சிதம்பரமே
பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த
சுத்தவனுபவமே
துரியமுடி யனுபவமே
சுத்தசித்தாந் தமதாய்த்
தனிந்தநிலைப் பெருஞ்சுகமே
சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்க்கயுன்மைத்
தனிப்பதியே என்று
கனிந்துளத்தே கனிந்துநினைந்
துறைதிடிலப் பொழுதே
காணாத காட்சியெல்லாம்
கண்டுகொள லாமே.
கண்களால் காண்பவை யாவும் "கண்ட காட்சிகள்" ஆகும்.
கண்ட காட்சிகள் யாவும் விரைவில் நினைவை விட்டு நீங்கும்.
நினைவை விட்டு நீங்காதவை எவைஎன்றால்
"காணாத காட்சிகளே". காணாத காட்சிகள் என்று
வள்ளல் பெருமானார் எதைக் குறிக்கிறார்?
அருட் பெரும் ஜோதி ஆண்டவரை நினைந்து, நெகிழ்ந்து,
உருகிக் கண்ணீர் விட்டோம். போற்றிப் புகழ்ந்தோம்.
புகுந்தருணம் உணர்ந்தோம். பக்தியுடன் பணிந்தோம்.
பணிந்து பணிந்து பாடுங்கள் உலகீரே என்றார் வள்ளல்.
பணிந்து பாடுதற்கிடையில் அருள் ஜோதி ஆண்டவரை
அகத்திலே அணிந்து கொள்ளுங்கள். அப்போது துணிந்து
வரும் அனுபவம் ஒன்றைக் காணவியலும்.
மற்ற எந்த அனுபவமும் இத்தனை சுத்தமானது அல்ல.
துரிய முடிவில் விரியும் அனுபவம் அது என்று சொல்லும்
அருட் பிரகாசர், சிரநடுவே நின்று சிருங்காரம் காட்டும்
அனுபவம் என்பதைத்தான் உணர்த்துகிறார்.
அவ்வனுபவத்தில் கிட்டும் சுகம் தனிந்த நிலைப் பெரும் சுகமாம்.
தனிந்த நிலை ஒரு கனிந்த நிலை. பிரிவற்று ஒன்றாகிவிட்ட
நிலை. ஒன்றாகி விட்டால் தனிமைதானே! அப்படித்
துணிந்து வந்த "சுத்த சுகந்தம்"தான்
சமரச சன்மார்க்க சத்தியம் ஆகும்.
அதுவே பரம்பரம் என்றும் சித்தமிசை நடம் புரியும்
சிதம்பரம் என்றும் வரமெல்லாம் தரவல்ல பராபரம்
என்றும் அறியப்படும். அவ்வாறு அறிதற்கிடையில்
உயர்ந்தவற்றிர்கெல்லாம் உயர்ந்ததான பராபரக்
காட்சியை அதாவது கண்களால் காணாத காட்சியை
காணலாம் என்றார் வள்ளல் பெருந்தகை.
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!
பாலு குருசுவாமி