Balu Guruswamy
சன்மார்க்க பிரசங்கம் - நான்காவது நாள்.

இறவாத வரம் பெறலாம்!


நமது அன்றாட செயல்வகைகள் அத்தனையும்

உண்மைக்குப் புறம்பாய் உள்ளன என்பதை

வள்ளல் பெருமானார் சொன்னார்.


"கண்டதெலா மநித்தியமே

கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யே நீர்

களித்த தெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட்

கொண்டதெலாம் குறையே

உலகியலீ ரிதுவரையும்

உண்மைய றின் தீலிரே!

விண்டதனா லென்னினிநீர்

சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து

மெய்ப் பொருணன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே

எந்தையருளடைமின்

இறவாத வரம் பெறலாம்

இன்பமுரலாமே. என்றார்.


அ நித்தியம் என்ற பதத்தால் நித்திய மற்றவை என்றும்

நித்திய மற்றவை என்ற வார்த்தைகளால்

நிரந்தரம் இல்லாதவை என்றும் நாம் அறியலாம்.

ஆனால்,

"கண்டதெலாம் அநித்தியமே" என்று உறைத்தது

ஓர் ஒப்பற்ற உண்மை என்று அறிதல் வேண்டும்.

நாம் இதுவரை கண்டது எதுவும் அல்லது

இப்போது காண்பது எதுவும் நிரந்தரமானவை அன்று .

நிரந்தர மற்றவற்றையே நாம் கண்டு கண்டு மகிழ்கிறோம்.

அல்லது மகிழ்ந்தோம்.


பழுது என்றால் தவறுகளால் ஆனது அல்லது

முழுமை அடையாதது என்று கொள்ளலாம்.

"கேட்டதெல்லாம் பழுதே" என்றால்

நாம் இதுவரை உண்மை அற்ற வற்றையே

கேட்டு கேட்டு உண்மை கேட்கா தன்மையினர் ஆனோம் என்கிறார்.


"கற்றது கைம்மண்ணளவு" என்றார்கள் முன்னோர்கள்.

ஆனால் அப்படிக் கற்றதெல்லாம் கூட பொய்யே என்றார்

அடிகளார். இது எப்படி சரியாகும்?

கற்றதெல்லாம் பொய் என்றால் மற்றதெல்லாம் எங்கே?

என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் உலகியல் அநித்தியம் என்று கருதப்படுவதால்,

உலகியல் போதிக்கும் எத்தனை வகைப்பட்ட கல்வியும்

தற்காலிக உலகின் தற்காலிக உண்மைகளை சொல்லலாமே

அன்றி நிரந்தர உண்மைகளை உணர்த்துபவை அல்ல என்பதுதான்

வள்ளல் பெருமானாரின் உள்ளக் கருத்து.


இன்று மனிதன் இருபத்து நான்கு மணிநேரமும் களிப்புற்றிக்க

எண்ணற்ற ஊடகங்கள் வந்து விட்டன. மனிதன் அளவற்ற

கேளிக்கைகளில் தன்னை மறந்து இன்புற்று இருக்கிறான்.

எத்துணை காலம் துய்த்தாலும் முடிந்த நிலை காணாது

களித்த தெல்லாம் கானல் நீர் போன்றது என்றும் வீண் என்றும்

மிக மிகத் தாமதமாக முடிவில்தான் அறிகிறான்.


நாளும் பொழுதும் அறுசுவை உணவு வகைகளை

உண்டு வாழும் மனிதன்

உண்ட உணவு கொண்ட சிறிது நேரத்துக்கு பசிபோக்கி

பின்னர் மலமாய் மாறுகிறது.

வேறு ஒரு பயனை உணவு தருவதில்லை.


உண்டு களித்திருப்பதற்கு இடையில்

ஓராயிரம் பாவனைகளையும்,

நல்வினைகளையும் தீவினைகளையும்

உள்ளத்தில் கொள்கிறோம்.

இங்ஙனம் நாம் கொண்டதைஎல்லாம் உற்றுப் பார்த்தால்....

மேலும் சற்று சமநோக்கில் நின்று ஆராய்ந்தால்

"கொண்டதெல்லாம் குறையன்றி வேறில்லை" என்று புரிகிறது.


இப்படியே எல்லாச் செயலிலும் செல்லாக் காசாய்

பொல்லாத வினையில் இல்லாத அவதியை அடைந்தோமே

அன்றி

உண்மை என்ன என்று உள்ளத்தால் உணர்ந்தறியோம்.

உலகியலில் உண்மை மறந்து நம் தன்மை அறியோம்

என்கிறார் வள்ளல் பெருமானார்.


இத்தகைய தருணத்தில் சமரச சன்மார்க்க மெய் நெறியைக்

கடைப்பிடித்தால் மெய்ப்பொருள் அங்கு உணரலாம்.

எண்ணத்தகுந்த சிற்றம்பலத்தே நமது தந்தை பரமாத்மனின்

அருளை அடைந்து இறவாத வரம் பெற்று இன்புறலாம்

என்று வள்ளல் உலகத்தார் நம்மை உளமார அழைக்கிறார்.


அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!

தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!

பாலு குருசுவாமி.