சன்மார்க்க பிரசங்கம் - ஐந்தாவது நாள்.
இன்புறலாம் எவ்வுலகும்
ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி
இறைமைமும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மினிங்கே
சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங்
கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிரோளியே
புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின்
பொருள்முடிமேற்ப் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம்
மணியே சிற்சபையின்
மாமருந்தே என்ருரைமின்
தீமையெல்லாம் தவிர்ந்தே
அன்புடையீர் வாருங்கள் இங்கே!
வந்து சமரசசன்மார்க்கம் அடைந்திடுவீர்!
அப்போது அன்பால் நிறைந்த உங்கள் அகவடிவம்
பொன்வடிவமாகி இன்புறலாம்.
எவ்வுலகும் போற்றிட வாழ்ந்திடலாம்.
எல்லாம் செய்யவல்ல சித்தியையும் சக்தியையும்
பெறுவது மட்டுமின்றி
இறைத்தன்மையையும் பெற்றிடலாம்.
இறைத்தன்மை தந்த அந்த நிறை ஒளியை,
"நெருப்பிலிட்டுப் புடம் போட்ட பொன்னாய் ஒளிரும் ஒளியே,
பழமையடையாது புதிதாய் என்றும் இருக்கும் அமுதமே,
முழுமையை முற்றிலும் உணர்த்திடும் முழுஅறிவே,
வேதங்கள் உணர்த்தும் பொருளுக்கும் மேலான மெய்ப்பொருளே,
வன்முறை பின்சென்றோர் பெறவியலா பெருமணியே,
சிற்சபையில் சிறந்தொழிர்ந்து மரணத்தை போக்கவல்ல
மாமருந்தே" என்று உரைப்போம்.
உரைத்த கணமே உடன் உறைந்த தீமை யாவும் தீர்ந்து போயின!
என்று ஜோதியில் கலந்த ஜோதி அருட் பிரகாசர்
நம் எல்லோரையும் கூப்பிட்டுச் சொன்னார்.
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!
பாலு குருசுவாமி