Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்
சுவாமி சரவணானந்தா.
3. ஆகமம் ஆரணம்
4. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
5. ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஆரணம் என்பது வேதம், மறை என்னும் கடவுள் உண்மையைத் தன் அகம் கொண்டு விளங்கும் கற்பனா நூல் ஆகும். ஆகமமாவது அவ்வேத மறைப் பொருளைத் தெளிந்து புற வழிபாட்டுத் துணையால் இறை நிலை எய்த வழி வகை கூறும் நூலாகும்.
வேதமும், மறையும் பொதுவாக ஒன்றெனக் கருதுவர் சிலர்:அஃது அறிவுடைமையாகாது. வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கைக் குறிக்கும். மறையோ, அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். வேத மேய்ப் பொருள் புற நிலை நின்றே பிரம்மானுபவத்தைப் பற்றிப் பேசுகின்றது. மறை, தற்போத ஒழிவில், பதியோடு ஒன்றச் செய்கின்றது. இவையே வேதாந்த சித்தாந்த முடிவாம். வேதாந்த நெறி பிரம்மம் ஒன்றே உண்மையில் இருக்கின்றது; ஜெக ஜீவ, பரம் மாயா தோற்றம் என்கின்றது. ஆகையால் பிரம்மானுபவம் பெற மாயா தேகாதி பிரபஞ்சத்தை விட்டொழித்துச் செல்ல வேண்டுமென்கின்றது. இப்படிச் சென்று அடைகின்ற அனுபவம் சூனியமேயாம்! நம் திருமறை நெறியோ, பதி பசு பாசத்தை வலியுறுத்துகின்றது. தற்சுதந்தரமற்ற பசுவானது பதி அருளைக் கொண்டு பாசத்தை யொழித்துவிட்டு, அப்பதியோடு கலந்து மறைய உள்ளதாம். இம்முறையான சிவானுபவம் பெறத்தான் சைவாகமம் விரித்து வழங்கப்பட்டுள்ளதாம். இப்படிப்பட்ட மறைந்தொழியும் முடிவைத்தான் அந்த ஆரணமும் ஆகமும் வழங்குவனவாயுள்ளனவாம். மனிதனுக்கு இந்த பிரம்மானுபவமும் சிவானுபவமும் இவ்வுலக வாழ்வு நிலைத்து விளங்கச் செய்யவில்லை. இந்த வேதாகம முடிவுக்குமேல், இவற்றிற்கு எட்டாத ஒன்றாய்த் திகழ்ந்து கொண்டிருப்பதுதான், உலகமெல்லாம் விளங்கச் செய்து கொண்டிருப்பதாகும். அந்த மேனிலைப் பரம்பொருளே தான் இன்று நமது அருட்பெருஞ்ஜோதி ஆக இருக்கின்றதாம்.
நம் அருட்பெருஞ் ஜோதி பதியைத்தான் அவ்வேதாகமங்கள் பிரம்மம் என்றும், சிவம் என்றும் கற்பித்து லட்சியப் பொருளாய்க் கொண்டிருந்தன; எனினும், மருளறிவால் மருவிக் கொள்ளக் கருதி மடிவுறு முடிவே வழங்கிவிட்டனவாம். இப்பொழுது தான் அருளறிவால் இயல்பாகவே ஒன்றான அருட்பெருஞ்ஜோதியே ‘ஓடும் உலகுயிராகி நின்றானே’ என்ற திருமந்திர வாசக உண்மையால் தெளிந்து கொள்ளப்படுகின்றது. வேதாந்தி எந்தப் பிரம்மத்தை அடைந்து மறைய முனைந்தானோ, சித்தாந்தி எந்தச் சிவத்தைக் கலந்து ஒழியக் கருதினானோ, அதுவதுவான ஒன்றை அருட்பெருஞ் ஜோதியாகவும், அதுவே மனிதனின் இயல் உண்மையாகவும் கண்டு அருளின்ப வாழ்வில் தழைக்கத் தொடங்குகின்றான் சுத்தசன்மார்க்கி.
“பரமதனோ(டு) உலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர்சிவமே என்றறிந்தோம் ஆதலினால் நாமே
பிரமமெனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரிய மதம் பிடியேல்
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவை காரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளன இல் லனவே
தரமிகுபேர் அருளொளியால் சிவமயமே எல்லாம்
தாமெனவே உணர்வது சன் மார்க்க நெறி பிடியே.”
என்றதால், அருள் ஒளிநிலை நின்று சூழ்ந்து நோக்கும்போது, அகத்திலுள்ள ஒன்றான அருட்பெருஞ் ஜோதிபதியே உண்மைச் சிவமாய் இருக்க, அப்பதி உண்மை அனுபவத்தில் வெளிப்பட வேண்டியே தன் புற வண்ணத்தையே உலகுயிர்களாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றதாம். ஆகையால் அகநின்று அருளால் யாவையும் ஏற்று வாழவேண்டுமே யல்லாது, தேகாதி பிரபஞ்சத்தை விவகாரிக சத்தென விட்டொழித்துப் பரமார்த்திக சத்தாம் பிரம்மத்தில் மறைந்து விடுவது முறையன்றாம். இது போல் சிவபதி நிலையில் இருந்து கொண்டு, அப்பதி வண்ணமாகப் பசு பாசத்தையும் அருள்மயமாய் விளங்கச் செய்து கொண்டு வாழ்தல் முறையாம். “முப்பொருளும் ஒன்றதென்பார் வெண்ணிலாவே,” என்றதால் பதி, பசு, பாசம் மூன்றும் ஒன்றன் முந்நிலைத் தோற்றமாய்க் கொள்ள வேண்டுமே யல்லாது, முத்தனிப் பொருட்களாய்க் கொண்டு ஒழிவது வாழ்க்கை முறையாகாது. ஆகவே, பழமையான வேதாகம முடிவை அருட்பெருஞ் ஜோதியால் நிறைவு படுத்திக் கொண்டு வாழ்விக்க வந்தது நமது சுத்த நெறி.
*****
4. இக பர நிலை
7. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
8. அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இகநிலை என்பது, இவ்வுலக அமைப்பு, இம்மை வாழ்வு, இப்பிறப்புமாம். பர நிலை என்பது, மேலுலக அமைப்பு, மறுமை வாழ்வு, வரும் பிறவியுமாம். இன்று விளங்கிக் கொண்டிருக்கிற இந்த அகண்ட பெரும் பிரபஞ்சமானது எண்ணற்ற பொருள்களைக் கொண்டு திகழ்கின்றதைக் காண்கின்றோம். இவ்வளவு பொருள்களும், தோற்றமும் மாற்றமும் மறைவும் கொண்டனவாய் அறிகின்றோம். இவை எல்லாம் இப்படி வெளிப்பட்டுத் தோற்ற நிலைக்கு வருவதற்கு முன் எப்படி என்னவாய் இருந்தன என்றும், இவற்றின் மறைவு நிலைக்குப்பின் எங்ஙனமிருக்கும் என்றும் ஆழ்ந்து சிந்தித்து நோக்கும்போது வெளியாவது இது:யாதெனில், இப்பேருலகப் பொருள்கள் யாவும் தோற்ற நிலைக்கு முன்னும், மறைவு நிலைக்குப் பின்னும் மிக நுண்ணிய சூக்கும நிலையில் அருகிக் கிடப்பதாய் உணர்த்தப்படுகின்றோம். இந் நுண்ணிலையே பரநிலையாகப் பகரப்படுகின்றதாம்.
மேற்குறித்த பருப்பொருள் தோற்ற நிலையும், நுண்பொருள் சூக்கும நிலையும், மனிதனின் அனுபவத்தில், சூழுலக அமைப்பாயும், இம்மை வாழ்வு இயலாயும், இப்பிறப்பின் விளைபயனாகவும் உள்ளனவாம். இவைகளை எல்லாம் கண்டு துய்க்கின்ற இவன் புற நிலையிலிருந்து காண்பதை விட்டு, சுத்த சத் விசாரத்தால் அக நிலையுற்று அறியத்தொடங்கினால் தான் உண்மை வெளியாம். ஆம், அவ்வக நிலைதான், மனிதனின் ஆன்மக்கடவுள் நிலையாக இருக்கின்றது. இவ்வகநிலைக் கண்ணின்றே யாவும் வெளியாகி யுள்ளனவாம். இந்த அக ஆன்மக் கடவுள் நிலையையே அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு போற்றிக் கொள்ளப்படும். இவை எல்லாம் அகம் அறப் பொருந்தியுள்ளனவாம். ‘அற’ என்ற சொற்பகுதி மிக நன்றாக என்ற பொருள் தருவதாகையால், யாவும் இந்த அக அருட்பெருஞ் ஜோதியில் மிக நன்றாகப் பொருந்தி நின்று காலத்தே வெளியாகி விளங்குகின்னவாய்த் திருவருளால் உணர்த்தப்படுகின்றோம். மேலும் இவ்வருளனுபவமுறும் போது, அந்த அருட்பெருஞ் ஜோதியே யாவுமாய், நாம் ஒவ்வொருவருமாய்க் கூட விளங்குவதாய் உணரப்படுவதால், உண்மையில் உள்ளது அவ்வருட் பெருஞ்ஜோதி; ‘நாம்’என்ற வேறு இல்லையாம். இதனால் இந்த அருட் பெரும் பதி உண்மை மனிதனுக்கு அகம் அற, அதாவது அகங்காரமாகிய தற்போதம் ஒழிய வெளியப்படுகின்றதாம். ஆகவே, ‘அற’ என்றதற்கு நீங்குதல் அல்லது ஒழிதல் என்ற பொருளும் பொருந்தும்.
எனவே, நம் அருட்பெருஞ் ஜோதியே இகநிலைப் பொருளுக்கும், பரநிலைப் பொருளுக்கும் நிலைக்களனாய் நம்முடைய ஆன்மா லயமாம் சத்திய ஞான சபையின் கண் அகமறப் பொருந்தியுள்ளதை அருளாற் கண்டு போற்றிக் கொள்வோமாக.
*****
5. இகபரத்தின் மேற்பொருள்
9. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
10.ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தூல, சூக்குமநிலை கொண்டிலங்கும் இக பரப் பொருள்கள் யாவும் என்றும் ஈனமின்றி, அதாவது குறைவில்லாது நிறைநிலையாகவே பொருந்தியுள்ள ஒரு முதல் நிலைதான் நம் அருட்பெருஞ் ஜோதி நிலையாம். இந்த உயர் நிலையையே முன் குறித்தத் தூல சூக்குமமாம் இருநிலைக்கும் காரணமாயுள்ளதால், இதனை மேற்பொருளாய், பரம்பொருளாய் உணர்கின்றோம். இப்பரம்பொருள் நிலையில்தானே யாவும் செறிந்து நின்று மேல் விளைவு கொண்டு இலங்குகின்றனவாம்.
பரம்பொருள் நிலையே பரமாகாச இறைநிலை என்றும் இயம்பப்படும். இவ்வாகாச நிலையே இங்கு ஆனல் என்று குறிக்கப்படுகின்றது. அகண்டவெளி நிறை ஆகாசநிலை என்றே எப்பொருளும் உதித்திலங்கக் காண்கின்றோம். திருவருள் ஞானத்தால் இன்று நாம் பரமாகாசப் பரம்பொருளுண்மையை நம் ஆன்ம சிதாகாசத்தில் இருந்து கண்டு கொள்ளுகிறோம். ஆகவே இந்த அகண்ட பரமாகாச நிலையைத்தான் ஆனல் என ஓதியுள்ளார் நம் வள்ளற் பெருமான். இவ்வாகாச நிலையே யாவற்றிற்கும் முழு முதற் காரணமாய் அமைந்து என்றென்றும் இக பரப் பொருள்களை எல்லாம் தோற்றுவிக்கின்றது என்பது தெளிவு.
இன்றைய உலகில் எத்தனை வித உயிரினங்களை, பொருள் வகைகளை ஆற்றல் இயக்கங்களை, மற்றும் பலவற்றை எல்லாம் காண்கின்றோம்! இவ்வளவும் முதலில் எப்படித் தோன்றின என்பதைத் தெரிந்து கொண்டால், விதை முந்தியா மரம் முந்தியா? முட்டை முந்தியா- குஞ்சு முந்தியா? ஆண் முந்தியா பெண் முந்தியா? உயிர் முந்தியா உடல் முந்தியா? என்பன போன்ற புதிர் வினாக்களுக்குச் சரியான விடை காண முடியும். ஆதி அந்தம் இல்லா அனாதி பரம்பொருள் தான் எல்லாத் தோற்றங்களுக்கும் முதற் காரணமாயுள்ளது என்று அறிதல் வேண்டும். அந்தப் பரம்பொருள் ஒன்றே எல்லாமாம் அருட்பெருஞ்ஜோதி ஆக, அகண்ட வெளி நிலை சிற்றணு தோறும் பரிபூரணமாகவே பொருந்தி நின்று, தனது உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றதாம். இதனால் தான், அந்தக் காரண சரமாகாச நிலையில் கரந்து நின்ற இறையுண்மைய வெளிப்படுத்துகின்றபோது முதலில் சூக்கும நிலையும், பின்னர் தூல தோற்ற நிலையுமுறுகின்றதாம். இந்நிலை ஒவ்வொரு சிற்றணுவிலும் அமைந்திருப்பது. இவ் அணு அக இறையுண்மை அனகமுறுவதால், புறத்தே பொருட்சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, அருட் சக்தி வெளியாகின்றனவாம். இவற்றில் பொருட்சக்தியால் பூத அணுத்தோற்றமும், அணுக்களால் ஆம் பொருட்களின் தோற்றமும் அமைகின்றன. அப்பூத அணுவினின்று கிரியா சக்தி வெளியாவதால் எல்லா இயக்கங்களும், உயிர் ஆற்றலும் வெளியாகின்றன. உயிருணர்வினுள் அறிவு விளக்கம் ஏற்பட்டு அகத்தே தெளிவு ஏற்படுகின்றது. அகத் தெளிவிலே பக்குவ ஞானம் உண்டாக உண்டாகக் கரும, பக்தி, ஞான, யோகப்பயன் விளைகின்றது. அந்த யோக நிலைக்கப்பால் தான் அருள் உண்மை வெளிப்பட்டு கடவுட் பேரின்பம் அடையப் பெறுவதாம். இவ்வருட் பெருநிலை அடைவின் பொருட்டே இவ்வுலகில் சகலமும் ஒரு நியதிப்படி வெளியாக்கப்படுகின்றன. இந்த உலகம் முதலில் சடபூதப் பொருள்மயமாய்த் தோற்றி உயிராற்றல் வெளியாய தருணம் அவ்வுயிர்ச்சக்தியைச் சூழப் பலவாகிய உயிரின வடிவ தோற்றங்கள் ஏற்படுகின்றன. இது, உயிரினங்களின் முதல் தோற்ற நிலை, பின்னர் உயிரினவிருத்தி, சேர்க்கை முறையால் பல்கிப் பெருகிக்கொண்டுள்ளனவாம். வேறு விதமாகக் குறிப்பதாயின், சூக்குமமாயிருந்த அணுவகத் தோற்ற நிலை குறிப்பிட்ட உயிர்ச்சக்தியாகக் காரியப்படும்போது புறத்தே அவ்வுயிர் விளக்கத்துக்குரிய தேக வடிவம் உருவாகிப் பின்னர் ஒவ்வொரு உயிரினத்தில் பிற்சந்ததியும் விருத்தியாகியுள்ளனவாம். ஆகையால் முதலில், சூக்கும நிலையில் விதைதரு மரமும், முட்டையின் உயிரும், மக்களைப் பெறும் தாயும், ஞானானந்த அனுபவத்தைத் தரும். இச்சிறந்த மனிதப் பிறப்புத் தேகமும் உண்டாயினவாக அறியலாகும். இம்முறையே எல்லாத் தோற்றமும் வளர்ச்சியுமாம். இதன் நிறை விளக்கம், சிறந்த நாள் என்ற நூலில் காண் II உயிர்களின் வரலாறு பக்கம் 5-20.
அக நின்று செயல்படுத்துகின்ற இறையருள் உண்மையை உள்ளவாறு அறியாக் காரணத்தால் இந்த உலக உயிர்களின் தோற்ற காரணத்தைப் பலவாறு கற்பனை செய்து கூறிக் கொண்டுள்ளனர் மக்கள். உயிருக்கு உடல் வருவது ஆணவ மாயா கன்ம மலத்தால் என்கிறார்கள்; கடவுள் சங்கல்பம் என்கிறார்கள்; உண்மை யாதெனில் எல்லாமாம் அருட்பெரும்பதியே தன் உண்மை வெளிப்பட்டு இயற்கை இன்பானுபவ நிலை விளங்கவே தனது பேரருளைத் தானே இவ்வுயிருடம்பாய் விரித்து விளங்கச் செய்கின்றார் என்பதுதான் உண்மை. இவ்வுண்மையறியாது, தேகானுபவநிலையினின்று தன்னையும், கடவுளையும், உலகையும் தனித்தனியாகக் கொண்டு நோக்கித் தடுமாற்றம் அடைந்து கொண்டுள்ளான் அபக்குவி. ஆனல் ஆகிய அருளம்பரத்தே நித்தநிறைவாகி, ஈனமின்றி விளங்கிக் கொண்டு, இகபரத்தை எல்லாம் தோற்றி விளங்கச் செய்து கொண்டிருப்பவர் நம் அருட்பெருஞ் ஜோதிபதியே என்பதை அறிந்து போற்றி அடைந்து மகிழ்வோம்.
*****
6. உரைமனம் கடந்த வெளி
11. உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்
12. அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகண்டமாயுள்ள, உலகெல்லாம் அடங்கிய, பெரு வெளியிடமே கடவுளரின் நிறையியல் செயல்படுகின்ற நிலையமாகும். அக்கடவுட் பெருவெளியின் எல்லை இவ்வளவு அவ்வளவு என்று எவராலும், எக்காலும் கணக்கிட்டுக் கூறமுடியாதாம். இந்தப் பிரபஞ்ச வெளியைப்பற்றி மனிதன், கண்ணாலும், அறிவியற் கருவிகளாலும் காண்கின்றது மிகச் சிற்றளவினதேயாம். இக்கருவி கரணக் காட்சியைவிட ஜீவமனோகரணக் காட்சியால் காணும் வெளியிடம் பெரிதாகும். இதற்குமேல் மனோபகுத்தறிவு எல்லைக்கு அப்பால் மனிதனின் யூகம் செல்லுகின்றதில்லை. அவ்வறிவு நிலைக்கு அப்பால்தான் மனதுக்கு எவ்வாற்றாலும் விஷயமாகாத நமது பிரபஞ்ச வெளி போன்று அனந்தவெளி அடங்கிய பெருவெளியிருக்கின்றது. இதன் இருப்பைக் கற்பனை செய்து பாவிப்பதன்று, திருவருள் உணர்வால் உண்மையாகவே உணர்தலாகும். இந்த அருளுண்மை விளங்கும் அளப்பரும் நிலையே கடவுளரின் நிறைநிலையாக இருக்கின்றதாம்.
அண்டகோடிகள் எல்லாம் விளங்குகின்ற அகண்ட வெளியைப் பற்றி மெய்யருள் உணர்வால் உணர முடிவதேயன்றி மனவறிவால் அறிந்துகொள்ள முடியாதாம். ஆதலின் அந்தப் பெருவெளிநிலையை ஒரு, ஒப்பற்ற அருட்பெருவெளியாகக் குறிக்கப்படுகின்றது. இந்த அருட்பெரு நிலையை நமது ஆன்ம அகத்தினின்று காணவேண்டியிருக்கின்றது. அன்பு நிறைந்து, அருள் மயமாகி அகநின்று அருளால் உணரும் அப்பெருவெளிநிலை மனவாக்கிற்குச் சற்றும் எட்டாததாகும். இவ்வருள் வெளிநிலையில் பரிபூரணமாய் இருந்து கொண்டு புற உலகுயிர் அனைத்தையும் ஆண்டு அருள்கின்றவர் நம் அருளம்பலத்தரசர். இந்த அருளம்பல மன்னிய மாமன்னர், எந்த ஒரு ஆன்மாவின்கண் வெளிப்பட்டு அருளாலே கண்டு கொள்ளப்படுகின்றாரோ, அந்த சிற்றம்பலத்தில் எழுந்தருளி அருள் மபாலிக்கின்றதோடு, சூழுற்றிலங்கும் பெருவெளியில் உள்ள யாவற்றையும் அவற்றின் அகத்திருந்து ஆள்கின்றதையும் அந்தக் குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அனுபவப்படச் செய்கின்றார். ஆகவே உண்மையில் உரைமனங்கடந்த பெருவெளியில் விளங்கும் அம்பலத்தரசர் அகத்திருந்தும் புறத்தே தோன்றாதவராய் அனக ஆட்சியை எங்கெங்கும் புரிந்து கொண்டுள்ளாராம்.
அரைசு-அரசு என்பதன் விளக்கம்: ‘சு’ என்ற எழுத்து, சகர மெய்யும் உகரவுயிரும் கொண்டு சத்தான நம்பதி உண்மையையும் அவர் தம் அருளைந்தொழிற் செயல் உண்மையையும் சுட்டி நிற்பதாம். நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அகத்தே அருள் வண்ணமாயும், புறத்தே ஜோதியாலான உலகெல்லாமாயும் விளங்குகின்றார். இவ்விரு நிலை கொண்ட பதியின் முழு உண்மை, வெளிப்பட விளங்குகின்றதில்லை; புறக்காரியப்பாட்டு உலகநிலையே காணப்படுகின்றது. ஆகவே இக்காரிய உலகம் ஒரு பாதியாகவும், தோற்றரிய அருள்நிலை மறுபாதியாகவும் கொள்ளப்படும். இதனால் அரைசுவாம் கடவுள் ஆட்சியை மட்டும் புறத்தே காணும் ஒருவன் அக்கடவுளரின் மறுபாதி அருள்நிலையைக் காணாதிருக்கின்றான். திருவருளால் அகமுற்று நின்று நோக்கின் அருள் ஆட்சியின் மாண்பு விளங்கும். மேலும், அர என்ற சொல் ஒளியைச் சுட்டுவதால், ஒளி செய் உலகெல்லாம் ஆண்டவரின் அரைசுதானாம். உலக வழக்கில் அரைசு, அரசு என்பதன் மருவுநிலையெனக் கொள்ளுகின்றனர். உலகியல் அரசன், (ரசம்-சத்தாகிய அருள்) உண்மை அற்றவனே என்பதைக் குறிப்பதாக அமைந்து விட்டிருக்கின்றதாம். மேலும் ‘ஐ’ என்பது கடவுளையே குறிப்பதாயும் உள்ளதால் அரைசு என்பதின் உயர் பொருள் விளங்கும். “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.” என்பது பழமொழி. இதன் உண்மை யாதெனில், ஆயிரம் என்பது கடவுள் உண்மை விளங்கும் அக ஆன்மநிலையமே ஆயிரம் இதழ்க் கமலாலயமாக இருக்கின்றது. இதில் உறைபவன், தான் என்றும் தன் பதி என்றும் இரண்டு படாது விளங்குகிறான். இந்நிலையே கடவுளரின் இரு பாதியாம் உண்மை கொண்டதாம். இங்கு அரைநிமிஷ தியானமயமானால் இறையனுபவமுண்டாம். இறைவனே அருட்பெரும் முழு வைத்தியனாவான். ஆதலின், அவ்விறைவனின் கலப்பெய்தி தனது நாம ரூபப்பற்று அற்றவனே, ஆயிரம் பேரைக் கொன்றவன், அரை வைத்தியன் ஆவான் என்பது உண்மை.
ஆகவே நமது அருட்பெருஞ்ஜோதி பதியை மனமொழிக்கு அப்பால், அகண்டமாயுள்ள அருட்பெருவெளியில் திருவருளால் கண்டு நின்று அவரது அருளாட்சியின் பெருமையை வியந்து வியந்து போற்றுவோமாக.
*****
7. ஊக்கம் முதலியன அருள்வது
13. ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
14. ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) மனிதன் உயிரும் உடம்பும் கொண்டு விளங்குகின்றான். பரு உடல் புறத்தே திகழ்கின்றதைக் காண்கின்றோம். இப்புற வடிவுக்கு ஆதாரமாக, அகத்தே நுண்ணிய ஆற்றல் வண்ணமாய் இருந்து செயல்படுத்திக் கொண்டு மனிதனை இலங்கச் செய்து கொண்டுள்ளது உயிராகும். இந்த அகவுயிருக்கும் புற உடலுக்கும் உதவியாயிருந்து அருள்கின்றது நம் அருட்பெருஞ் ஜோதியே ஆம்.
அகத்தில் உயிர் சக்தி நன்கு விளங்கும்போது உள்ளத்தில் ஊக்கம் அல்லது தைரியம் அதிகமாக இருக்கும். இதனால் மனோகரணத்திலும் திட ஆற்றல் திகழும். இந்த ஊக்கமும் உணர்ச்சியும் கொண்டு புறவாழ்வு சிறப்புற அமைவதாம். இத் தேகம் பூத முதலிய தத்துவங்களால் ஆக்கப்பட்டது. நாடி நரம்பாகிய ஆக்கையினால் பிணைக்கப்பட்டது. ஆகையால் ஆக்கை எனப்படுவதாம். இவ் ஆக்கை இளமையும் வலிவும், பொலிவும் கொண்டு விளங்கும்போது போற்றப்படுகின்றது. ஆனால் இந்த இளமையும் வனப்பும் நிலையாவெனக் கண்டு இழிவுரை கூறித் தூற்றினர் துறவறத்தார். சுத்த சன்மார்க்கத்தில் பயிலும் நாமோ இத்தேகத்தை அருள் ஒளியுருவாக மாற்றிடப்பெற்று, ஆக்கத்தோடு நல்ல செயல் திறனோடு, அருட்சித்தாம் அழியாச் செல்வத்துடன் வாழும்படி ஆணை செய்யப்பட்டுள்ளோம். இவ்வுண்மையைத்தான் நம் வள்ளற்பெருமான் தம் அனுபவத்திற் கண்டடைந்து தான் ஊக்கமும், உணர்ச்சியும், ஒளி தரும் ஆக்கையும், ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி என வழுத்தியுள்ளார்.
*****
8. பிறவித் தொல்லை நீங்கியது
15. எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
16. அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அருள் உண்மையைக் கண்டடைந்து, ஆனந்த வாழ்வு பெறவே மனிதனுக்கு இறையாணை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மை அறியப்படாதவரை, உயிருக்கு இந்த மெய்ஞ்ஞானம் விளங்காதவரை பிறவிச்சூழல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றதாம். ஒவ்வொரு பிறவியிலும் உயிருக்குப் பலப்பலவாகிய துன்பங்கள் நேர்ந்து, அறிவு விளக்கமும், அனுபவமும் சிறிது சிறிதாக விளைகின்றன. ஓர் உயிருக்கு ஏற்படுகின்ற பிறவி இவ்வளவு தான் என்று கணக்கிட்டுச் சொல்லிவிட முடியாது! இதனால் இந்தப் பிறவியைப் பெருங்கடலுக்கு ஒப்பிடுகின்றனர். கடல் பெரிதாகத் தோற்றலாம்: நடுக்கடலில் இருப்பவருக்குக் கரையே தென்படுவதில்லைதான்; எனினும் அக்கடலுக்கு ஒரு கரையிருக்கும் என்பதும், அக்கரையேறி வாழ்வுறலாம் என்பதும் மனிதனின் எண்ணம். ஆனால் இந்தப் பிறவிக்கடல் இருக்கிறதே இதற்கு எல்லையே இல்லை! கரையே இல்லை என்பது இங்கு குறிக்கப்படுகின்றது. அப்படியானால் இந்த எல்லையில்லாத பிறவிப் பெருங்கடலிலிருந்து மீள்வது எப்படி?
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.”
என்பது வள்ளுவர் கண்டதும் முன்னோர் முடிவுமாம். இறைவன் திருவடியை அறிந்து பற்றிக்கொண்டுவிட்டால் போதும், அதுவே ஒருவனுக்குப் பிறவாத, பிறவிக்கடலைக் கடந்த பெருநிலையாம் என்பது கருத்து. இப்படி இறைநிலையுற்று, மேல் பிறவாமையெய்தி விடுவதால் ஒருவன் பிறவிக்கடலைக் கடந்துவிட்டான் என்றால், அவனுக்கு இந்த இறையனுபவம் விளங்கும் மனிதவுடல் இல்லையாகிவிடுகின்றது. ஆகையால் கடவுளின்பானுபவத்திற்கு வழியில்லாது, உலகில் வாழ்வற்றுப் போய்விடுவதுதான் இப்பிறவியைப் பெற்றதின் பயனோ? ஓர் ஆன்மாவுக்கு இந்த இறை ஞானானுபவ தேகம் வருமுன்னும், தேக நீக்கத்தின் பின்னும் இருக்கும் நிலை எதுவோ அதுவே நீடிக்கின்றது உண்மையாம். ஆகையால் பிறவா நிலையை அடைந்துவிட்டதால் ஏதோ கடவுள் நிலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளுதல் பொருந்தாது. அப்படிப் பிறவாநிலையில் எவ்வளவு காலம் அருகிக்கிடந்தும் பேரின்பப்பயன் விளங்காது. ஆகையால் அப்பெரும்பயன் உண்டாக மறுபடியும் அவ் ஆன்மாவுக்கு மனிதப்பிறப்பு வழங்கப்படவேண்டியது அவசியமாம். இறைவனும் அந்தப் பக்குவ ஆன்மாவுக்கு உரிய காலத்தே மனிதப் பிறப்புத் தேகம் வழங்கி விடுவது உண்மை. எனவே, பிறவாநிலை பிறவிக்கடலைக் கடந்து விட்டதாகாது: அது பிறவிக் கடலின் எல்லை, அல்லது கரையாகக் கொள்ளமுடியாது. நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையோடு என்றென்றும் விளங்குகின்றவராவர். அவரது எல்லையற்ற கருணையின் ஐந்தொழில் எப்பொழுதும் விளங்கிக்கொண்டே யிருப்பது. அப்பெருங் கருணையின் தோற்றமே இத்தேகாதி பிரபஞ்சக் காரியப்பாடுகள் யாவுமாம். இந்த இறையருட் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள மனிதப் பிறவியில்தான் கடவுள் உண்மை விளக்கம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நித்தியமான அருட்பெருங் கடவுளே, ஓர் ஆன்ம சிற்றணுவினின்று இவ்வுண்மை விளக்க அறிவு கொண்டு மனிதனாய்த் தோற்றி நின்று உணர்கின்றதாம். இதுவே மனிதனின் உண்மையான, இயற்கையான கடவுள் நிலையா யுள்ளது. ஆதலின், இவனது பிறவிச் சூழல், அக்கடவுள் நிலையில் அருள் ஐந்தொழில் நிலைக்களனாகவே யுள்ளதாம். இவ்வுண்மை கொண்டு அக நின்று அருள் நிறைவோடு, கடவுள் மயமாகி அருளின்ப வாழ்வில் வாழ்கின்றவனே என்றும் மறையாது, இறவாது, மேற்பிறவாது விளங்குகின்றவனாவான். இவ்விறவாநிலை பெறாதவரை, தன்னை உடல் வடிவினனாகக் கருதி, அல்லல் பிறவியை யொழிக்க முயன்று புறத்தே அலையுறுவதாலும், அகத்தே அடங்கியொடுங்குவதாலும், பிறவாமை எய்தினாலும் கூடப் பயனின்றாம்.
கடவுளான்ம உண்மையுடன் விளங்குகின்ற மனிதன் அகத்தே அல்லலில்லா ஆனந்தபதி மயமாய் இருக்கின்றான்; அதே சமயம் புறத்தே அல்லல் நிறை தேக வாழ்விலும் உழல்கின்றான். இவன் தேக வாழ்வில் விருப்பு வெறுப்பு கொண்டு அவத்தைப்படுகின்றதை விட்டு, அகமிருந்து அருள் வாழ்வு வாழத் தொடங்கினால் அந்த அருளே இவனைச் சுத்த உடம்பு கொண்டு சுகானந்தமோடு விளங்கச் செய்து விடுவதாம். இதனால், அல்லல் பிறவி முற்றும் ஒழிந்து போகின்றது. இவனைச் சூழ்ந்திலங்கும் எல்லையில்லாத பிறவிப் பெருங்கடல், முடிவில்லாத அருள் ஐந்தொழில் விளங்கிக்கொண்டேயிருக்கும் எல்லையற்ற அருட் பெருங்கடலுக்குக் கங்குகரை இல்லை என்பது உண்மையே! இதில் வாழ வந்த சுத்த சன்மார்க்கியை அருள் அம்பலமாகிய தீண்டரிய வெளிநிலைக்குத் தூக்கிக் கொண்டு, என்றென்றும் தன்மயமாய் வாழச்செய்து விட்டார் நம்பதி. இந்த நிறை இன்ப இறை நிலையே பிறவிப் பெருங்கடல் கடந்த பெருநிலையாம் நம் திருவருட்பிரகாச வள்ளலுக்கு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையால், எல்லையில் இருங்கடல் அல்லது பெருங்கடல் நிலையைக் கடத்திவிட்டு, அல்லல் செய் பிறவியை நீக்கிவிட்டு ஆனந்த நிலையில் ஏற்றி வைத்துள்ளார் என்பதை உலகுக்கு உணர்த்துவன இவ் அகவல் அடிகள்.
*****
9. ஏறா நிலைமிசை ஏற்றியது
17. ஏறா நிலைமிசை ஏற்றியென் றனக்கே
18. ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) கடவுள் விளங்கும் நிலையை நேரடியாகக் காண்பது என்பது மனித தரத்திற்கு அப்பாற்பட்டதாம். சாதாரண மனிதனின் அறிவாராய்ச்சிகளும், தவ ஞான பண்டிதர்களின் அறிவனுபவமும் சென்றடையப் பெறாத உயர்நிலையே அருட்பெருங் கடவுள் உண்மை ஓங்கும் இடமாம். அருமறைக்கும் எட்டாதது பரம்பொருள் எனப்படுவது உண்மையே. ஏனெனில் அந்த மறையாகமம் எல்லாம் மனித மனமாகிய நிலத்தில் அற்புதமாக விளைந்த விளைச்சலேயாம். அந்த மனநிலைக்கு வெளிப்படாதது பேரருள் இறையுண்மையாம். அம் மனோ எல்லைமேற் செல்ல வகையறியாது மோனமாகி விடுகின்றான் மௌன ஞானயோகி! இந்த மனோ வெளிக்கு அப்பால் விரிவுற்றுக் கிடக்கும் பெருவெளி நிலையைக் கடவுள் விளங்கிடமாய்க் கொண்டு அதிற் புகுந்து மறைந்தனர் கடவுளைக்காண முனைந்தோர் பலர். மற்றும் பலர் பலவான வழிமுறைகளைக் கற்பனை செய்து கொண்டு, அக்கடவுணிலையை எய்த முயன்றுள்ளனர். அப்படி முயற்சித்த எவரும் அவ்விறை நிலையுற்று, கடவுள் மயமாய் வாழ்ந்துகொண்டு தாமே சான்றுதர விளங்காது போயினர்.
இப்பொழுது நம் மாண்புறு வள்ளற் பெருமானே அருட்பெருஞ் ஜோதிக் கடவுளைச் சுத்த அருள் ஞானத்தால் உள்ளவாறு கண்டுகொண்டுள்ளார். இவர் கண்டுகொண்டுள்ள கடவுள் நிலை உயர்வற வுயர்ந்த அரும்பெரும் நிலையாகும். இவ்வுயர் நிலைக்கு ஏறிச் செல்ல எவராலும் எக்காலும் இயலாதாம். எவராலும் எக்காலும் இவ்வுயர் நிலைக்கு ஏறிச் செல்லவே முடியாது என்றால், பின்னர் இவர் மட்டும் எப்படி அந்நிலையை அடையமுடியும்? ஆம், இவராலும் அந்நிலைமிசை ஏறிவிட முடியாதுதான்! எனினும் அத்தீண்டரிய உயர்நிலைமிசை யொளிரும் அருட்பெருஞ் ஜோதிபதியே, தன் அருளையே உலகத்துற்ற யாவுமாய் விளங்கச் செய்துள்ள உண்மையை இவரது மெய்யறிவில் கண்டபோது, இவர் உள்ளுற்ற அருளிறை உண்மையை அவ் அக நிலையிலேயே இருந்து காண்பதாக உணர்ந்து கொண்டார். அதாவது, கடவுளே அகநிலையிலிருந்து, தன் அருளை வள்ளலாரின் அறிவுணர்வாக்கி இந் நிலையை உணர்ந்து கொள்ளச் செய்திருக்கின்றார் என்பதாம். எனவே தீண்டரிய கடவுள் நிலையில் விளங்கும் அருள் உணர்வு மயமான வள்ளலும் அவ்வுயர் நிலையிலிருந்துதான் விளங்குகின்றார் என்பது உண்மையாம்! இதனால் இவர் அம்மேனிலையில் திகழ்கின்றது பழமையான இயல் உண்மையே ஆம். ஆகையால், இவரும் புறத்திருந்து அந்த மேனிலைக்கு ஏறவில்லை என்பதும், இயற்கையாக அந் நிலையிற்றானே இருந்து தன்னைக் கண்டு கொண்டிருக்கிறார் என்பதும் மெய்யே. இதனால், ஏறாநிலை மிசை ஏற்றி என்றனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி என்கின்றார்.
இனி, அம்மேனிலை நின்று கண்ட ஆறாறு என்பது, பூத முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்கள் என்று கூறுவர் ஒரு சாரார். ஆறு, ஆறு அல்லது ஆறு மார்க்கம், ஆறு அத்துவா, ஆறு அந்தம், ஆறு ஆதாரம், ஷண் மதம் என்றெல்லாம் கூறுவர் புறநெறியாளர் எல்லாம். இவைகள் யாவும் மக்களுக்கு உலகியலில் ஒரு ஒரு வகையில் சிறிது சிறிது பயன்பட்டொழிவனவேயாம். நம் சுத்த நெறியோ, மேனிலை நின்று வாழ்விப்பதா யுள்ளதாம். ஆகையால் இந்த ஆறாறுக்குரிய மெய்ப்பொருள் அம்மேனிலை நின்றே கண்டடைய வேண்டியுள்ளதாம். ஆகவே இங்கு விளங்குகின்ற “அருட்பெருஞ்ஜோதி” யே நமக்கு அருள் விளக்க ஆறெழுத்து மந்திர மொழியாகத் தோற்றி, அதுவே அதனை அடையும் பெரும் நெறியாம் ஆறாகவும் உள்ளதை யுணர்த்துவதாம். எனவே, இந்த உயர்நிலைநின்று அருள் வாழ்வு பெற அருட்பெருஞ் ஜோதியைப் போற்றிக் கொள்வோம்.
*****
10. ஐயமும் திரிபும் ஐயமும் நீக்கியது
19. ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்
20. ஐயமு நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நாம் போற்றிக்கொள்ளுகின்ற நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், நமக்கு உயிரிலும், உடலிலும் உண்டாகின்ற குறைபாடுகளை எல்லாம் தீர்த்து அருள் பாலிக்கின்றவராவார். உயிரின் குறைபாடு யாதெனில், அபக்குவ காலத்தே ஏற்படுகின்ற அறியாமையாம். இவ்வறியாமையினால் உண்மை விளங்காது, ஒன்றை மாறுபாடாகக் கருதிக்கொண்டு இடர்ப்பட நேருகின்றதாம். இவையே முதலடியில் ஐயமும் திரிபுமாகக் குறிக்கப்பட்டன. ஐயம் என்றால் சந்தேகம், தெளிவின்மை, மருள் உணர்வுமாம். திரிபு என்றால் மாறுபாடு, தெளிவின்மையால் ஒன்றைப் பிறிதொன்றாகக் கொள்ளல். வேறுபாடாகக் காண்டலை திரிசியக் காட்சி என்பர். இவை எல்லாம் ஆன்மாவாகிய உயிரின்கண் அருள் அறிவு ஏற்படாதபோது உள்ள மலபாச மறைப்பு நிலையாம்; இதுவே, ஆணவம், மாயை, கன்மம் ஆக மொழியப்படும். அருள் ஞானமே ஆணவமாதி மலபாச ஆணிவேரை அறுத்துவிடுகின்றதாம். அவ்வருள் ஞானத்தால் உண்மைக்காட்சி உள்ளபடி விளங்கும் தருணம், ஐயத்திற்கும், திரிபிற்கும் இடமில்லையாம்.
இனி, இரண்டாம் அடியில் குறிக்கப்படும் ஐயம், உடலினுள் தோன்றும் கபம் அல்லது கோழை ஆகும். இக்கப தோஷத்தால் இரத்தம் முதலிய ஜீவதாதுக்கள் கெட்டு, உயிர்ப்பு ஆற்றல் தடைபட்டு மரணத்தையே வருவித்து விடும். நம் சுத்த சன்மார்க்க பதி நம் அசுத்த மாயா தேகத்தையே சுத்த நித்திய உடம்பாக ஆக்கி வாழ்விக்க எழுந்தருளுகின்றார். ஆதலால் இவ்வுடலில் கபம் சேர்ந்து தொல்லை செய்யா வண்ணம், தன் அருளொளி அமுதால் அக்கபத்தை யொழித்து விடுகின்றார். இவ்வனுபவ சாத்திய முறவே, சன்மார்க்க சாதகர் கரிசலாங்கண்ணியைத் தினமும் உட்கொள்ளல் வேண்டுமென்பது நம் வள்ளல் ஆணை.
“காறிக் காறிக் கரிசாலையிலேயிடு கபமாறும்,” என்பது ஆன்றோர் அனுபவ வாசகம். ஆகவே உயிரினிடத்தே மெய்யருள் ஒளியைக் காட்டி, அதனை உணர்விலும், உடலிலும் நிரப்பி ஐயமெலாம் போக்கிச் சுத்தப்பிரணவ ஞானதேக சித்தியோடு வாழ வைக்கும் நம் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றுவோமாக.
*****
11. ஒன்று இரண்டு அன்றெனல்
21. ஒன்றென இரண்டென ஒன்றிரண் டென விவை
22. அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) உள்ளத்தில் அருள் ஒளியைக்கண்டு கொள்ளுகின்ற போது, எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உள்ளது உள்ளபடி காணமுடிகின்றதாம். அவ்வுள்ளொளியைக் காணாது மருளறிவாகிய மங்கொளியில் கடவுள் உண்மையைப் பற்றி அறிந்து கொண்டிருந்த தெல்லாம் திரிசியக் காட்சியே என்பது இன்று தெளிவாகின்றது. முன்னர், கடவுள் ஒன்றே உண்மையில் உள்ளதென்றும், ‘ஏகம் சத்’ என்றும், அதுவன்றிப் பிரிது எதுவும் உண்மையில் இல்லை எனவும், பிரிதாகத் தோற்றும் அவை பொய் மாயா தோற்றமே எனவும் கூறினர். அடுத்து, சத்தாம் பரம்பொருள் ஒன்றே உண்மையில் இருக்கின்றது என்பது சரியன்று; அப்படியுள்ள அப்பரம்பொருளை அறிகின்ற ஒருவனாம் ஓர் ஆன்மாவும் இருந்துதான் இந்த உண்மையைக் காண்கின்றதால், அந்தப் பரமான்மாவும் இந்த ஜீவான்மாவும் ஆகிய இரண்டும் இருத்தலே உண்மை என்றனர். பின்னர் உண்மையானது எப்போதும் ஒன்றாகவே, அதற்கு ஒப்புவமையான பிறிதொன்றும் எக்காலும் இல்லாததாகவே இருக்க வேண்டும்; ஆகையால் இரு தனிப்பொருளாக இருத்தல் முடியாது. ஆனால், கடவுளும் மனிதனும் இரண்டற்ற ஒன்றாய், அத்துவிதமாய் இருக்கின்றதுதான் உண்மையாம். இவ்வத்துவித உண்மையைக் குறிக்கவே ஒன்றிரண்டு என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாம். ஒன்று என்ற சொல்லே ஒன்றி இணைந்து இருத்தலையே சுட்டுவதாம். சங்கர நாராயணன், உமையொருபாகன் என்பவை ஒருவடிவில் இரு தெய்வ இயல் உண்மையைக் காண்பது கொண்டு இந்த ஒன்றிரண்டு என்ற குறிப்புச் சொல் வழங்கப்பட்டுள்ளதாம். ஆகவே, கடவுளை ஒன்றாகவும், இரண்டாகவும், ஒன்றிரண்டாகவும் படிப்படியாகக் கண்டு தேறின நிலையில் இருந்து வந்த நமக்கு, இதற்கும் மேலான பேருண்மையை நேருறக் காட்டிக் கூட்டி வைக்கின்றார்.
நம் இறை காட்டிக் கொடுக்கின்ற அதீத உண்மை யாதெனில், அருட்பெருஞ் ஜோதியேயாம். இந்த அருட்பெருஞ் ஜோதிக் காட்சியால் தெரியப்படுகின்ற உண்மை விளக்கம் இதுவாகும்; அகண்ட வெளி நிறை இயற்கையுண்மைப் பேரொளி நிலையே கடவுளரின் பேருருவாகும். இவ்விறையொளியின் அருள் இயல் உண்மை வெளிப்பட்டு விளங்கும் சிற்றணுவே நித்திய ஆன்மாவாம். இந்த ஆன்ம அணுவேதான் அனாதி நித்திய மனிதனின் இயற்கை நிலையாம். ஆகவே ஒன்றான அருட்பெருஞ் ஜோதிக் கடவுளைத் தவிர வேறாக மனிதன் இல்லையாம். இது அந்த அருட்பெருஞ் ஜோதி நிலை நின்று உணரும்போதுதான் உண்மையாய் விளங்குகின்றது. மற்றபடி அகம் பொருந்தாது, புறமிருந்து உள்நோக்கியவரைதான், கடவுள் ஒன்றாகவும், இரண்டாகவும், ஒன்றிரண்டாகவும் தோற்றி மறைகின்றதாம். மனிதன் தன்னைத் தேக வடிவினனாகக் கருதியிருந்தபோதும், சற்று பக்குவமுற்று தன்னை ஆன்ம வடிவினனாகப் பாவித்திருந்தபோதும், தான் வேறு கடவுள் வேறு என எண்ணி வந்தான். அப்போது கடவுளை அடைவதற்கு ஏற்படுத்தின மார்க்கங்கள் எல்லாம் புறத்தனவேயாம். யோக ஞானியரும், ஜீவான்மா பரமான்ம அத்துவிதானுபவமுறப் புறத்திருந்து உட்பொருந்தி சமாதி கூடி உடலை விட்டு ஒழிந்தே போயினர். இது சமயம் தான் மனிதன் அக நின்று அருட்பெருஞ்ஜோதி வண்ணமாக இருக்கும் தனது இயல் உண்மையை உணர்ந்து அருள்நிறை அனக வாழ்வால் நித்தியமாய் விளங்கக்கூடியவனாகின்றான். இந்த அனக அருள் நெறிதான் நம் வள்ளல் கண்ட சுத்த சன்மார்க்கம். இவ் இறையுண்மை வழங்கி வாழ்விக்கும் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றுவோம்.
*****
12. ஓதாது உணர்தல்
23. ஓதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே
24. ஆதார மாகிய அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) கடவுள் உண்மையை அறிந்து அடையும் உயர் சிறப்பு கொண்டு விளங்குவது இம்மனிதப் பிறப்பு. ஆனால், உண்மை அறிவு, சாதாரண பொறிபுலன் அறிவுக்கும், மனோகரண அறிவுக்கும், ஜீவபோதப் பகுத்தறிவுக்கும் வெளிப்படாது. அவற்றிற்கெல்லாம் மேற்பட்டு உள்ளத்தொருமையில் ஆன்மபோதத்தில் ஒருவாறு வெளிப்பட்டு, மேல்தயவினால், அன்பினால் நெகிழ்ந்து உருகுகின்ற தருணம்தான் அவ் இறையருள் ஒளி சிறிது சிறிதாக வெளிப்படவுள்ளதாம். இதனால்தான் இதுகாறும் மக்கள் அறிவு பல துறைகளிலும் எவ்வளவோ தூரம் கடந்து சென்றும் கூட, இன்றளவும் இறையுண்மையைக் கண்டுகொள்ளவில்லையாம்.
ஓதுவது ஒழியேல் என்றும், ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்றும் முன்னோர் கூறிவைத்தனர். ஓதல் என்றால் படித்தல் என்பர். அதாவது பிறர் உள்ளக் கருத்தைப் புரிந்து கொள்ளற்கு உபாயமாக ஏற்பட்ட மொழியைப் பயின்று அறிந்து கொள்ளலாம். அப்படிப் பயின்று பெறும் அறிவு, படித்தறியும் விளக்கம் மேற்குறித்த அருள் உண்மையை எவ்விதத்தும் எவ்வளவும் உணர்த்தக்கூடியதாயில்லை. பன்னெடுங்காலம் முயன்று பயின்றும் அறிதற்கரியது அருட்பெரும்பதி உண்மை. படித்தறியக் கூடியதெல்லாம் வாச்சியப் பொருளேயன்றி இலட்சியப் பொருளல்லவாம். வாச்சியம் என்பது சொல்லினால் உரைக்கப்படுவது. இலட்சியம் என்பது முடிந்த குறிக்கோள் அனுபவப் பொருளாய் விளங்குவது. கடவுளின் அருட்பேருண்மையைக் கருவி கரண இந்திரியங்களால், வாயுரையால், சொற்பொருளால் வெளிப்படுத்த முடியாதாம். ஆகையால்தான் அவ்வுண்மை வாச்சியப் பொருளல்ல எனப்பட்டது. வாச்சியமே ஓதப்படுவது; இலட்சியம் ஓதப்படாதது. ஆனால் அந்த ஓதப்படாத மெய்ப்பொருளிலிருந்துதான் ஓதப்படுபொருள் யாவும் தோன்றுகின்றன. ஓதப்படாத அம்மெய்ப்பொருள்தான் உள்ளிருக்கும் அருட் ஜோதியாய், ஊமை எழுத்தாய், ஓங்காரத் துட் பொருளாய் விளங்குகின்றதாம். ஓங்காரத்துள்ளிருக்கும் இறையருட் சக்தியின் நாத ஒலி வெளிப்பட்டு ஓதல் செயலாய் விளங்குகின்றது. இப்போது ஓதல் என்றால் உள்வளர் ஊமை எழுத்தாம் ஓங்கார ஜோதியின் புறக் காரியப்பாடான ஒலிமொழியாக அறிவோம். இதனால் அவ்வோங்கார உண்மை கொண்டு விளங்கும் நூலுக்கு ‘ஓத்து’ என்ற சொல் வழங்கப்பட்டுள்ளதாம். ஓத்து என்றால் வேதம் என்பர். இதனை ஓதல், ஓதுவித்தல் முறையால், கர்ண பரம்பரையாக செவி வழி புகட்டப்பட வேண்டுமென்பது ஆன்றோர் கொள்கையாம்.
மேற்குறித்த ஓதல் முறையால் மட்டும் அருள் இறை உண்மையைக் கண்டு கொள்ள முடியாது என்பது அனுபவம். ஆகையால் வேதங்களும் இறைவனை அறிய மாட்டா என மொழிந்துள்ளனர். அருள் ஒளி ஒன்றினால் தான் அவ் இறைவனை அறியவும் அடையவும் முடியும். இதனைத்தான் நம் வள்ளற் பெருமான் உள்ளொளியாகப் பெற்று விளங்கினார் என்று உணர்த்தப் பெறுகின்றோம்.
“தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்(து) அருளாம் பெருஞ்ஜோதி கொண்டறிதல் கூடும்.
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா(து)
என்னாணை என்மகனே அருட்பெருஞ் ஜோதியைத்தான்
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே!
சபையினத் தரசேயென் சாற்றுமணிந் தருளே.”
என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தால், அகம் ஓங்கு சுத்த சிவ சன்மார்க்க நிலையிலிருந்து, அருட்பெரும் ஜோதியைக் கொண்டு தான் கடவுள் உண்மையைக் கண்டடையக் கூடும் என்பது குறிப்பு.
ஓதாதுணர்தல் என்றால் இப்படித் திருவருள் சார்பால் உள்ளொளி கண்டு ஒருமையில் திகழ்வதேயாகும். அப்படி நிற்பவர்களுக்கு, கலையறிவுக்கு எட்டாத இறையுண்மை உள்ளபடி வெளிப்பட்டிலங்குவதாம். உள்ளொளி நிலைபெறாத வெற்று மனோ ஒருமை கொண்ட கன்ம சித்தர்களும், தற்கால மேனாட்டு விசேட உளநூல் விற்பன்னர்களும் (Para Psychologists) கூட எவ்வளவோ மறைபொருள்களைக் கண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர் என்றால், நம் வள்ளல் பெற்ற கடவுள் ஆன்ம அருட்ஜோதி நிலையினின்று எம்மறை பொருளைத் தான் உள்ளவாறு கண்டு வெளியிடலாகாதோ! எதையும் ஓதாது உணர்ந்து உரைத்தல் சாத்தியமே என்பது தெளிவாம். ஆகவே நம் பெருமானார் அருள் ஒளி அனுபவத்தில் காணாதவெல்லாம் கண்டும், கேளாதவெல்லாம் கேட்டும், அறியாதனவெல்லாம் அறிந்தும் வெளியாக்கினது உண்மையே. முன்னர் இருந்த ஆன்ம ஞானிகளின் அனுபவங்களும் கூட வெளியாயினவாம். மறைபொருள் உண்மையைக் காத்து வந்த மகான்கள், சூக்கும வடிவினராய் இருக்கின்றவர்கள் கூட வள்ளலாரை அணுகிவந்து தம் அனுபவங்களை வெளிப்படுத்தினார்கள் என்பதும் மெய்யே. மேலும் இந்த அருட்பெருங் கடவுட் ஜோதி நிலையில் தாமே பூரணமாய்த் திகழ்வதைக் கண்டதோடு, தாமே ஒவ்வொருவரின் உள்ளொளியாயிருந்து அவரவர் வண்ணமாய் விளங்குவதையும் உணர்ந்திருந்தார். ஆகையினால் எவர் உள்ளத்தினையும் ஓதாதுணரும் மாண்பு பெற்றிருந்தார் என்பதும் உண்மையே. இந்த உள்ளொளியை வழங்கி முழு ஆதரவாய் நிரம்பி நின்ற உண்மையை, “எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி” என்று குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் முழு முதற் காரணமாயிருக்கின்ற அருள் ஒளியைக் கொண்டதோடு அதுவே தானாக, தானே அதுவாக ஆக்கப்பெற்ற பெருநிலையே இங்கு தமது ஆதாரமாகப் பேசப்படுகின்றதாம். இம்மனித உடலில் அருட்பெருஞ் ஜோதி இறையொளி முழுமையாக, சிரநடுவுள் நிராதார நிலையில் திகழ்வது. அதுவே முழு ஆதாரமாய் உள்ளது. அனுபவத்தின் பொருட்டு அதுவே ஆறாய்ப்பிரிந்து கீழ் ஆதாரங்கள் ஆறில் கிளர்ந்து ஒளிவீசி விளங்கலை யோகியர் அறிவர். அன்னார் கீழிருந்து மேனிலைக்கு ஏறிச்சென்று ஒடுங்கி விடுதல் கூடுமேயல்லாது, அம்மேனிலை நின்று வாழ்வது அமையாததாம். நம் சுத்த சன்மார்க்கமாம் அருள் நெறியில் அந்த மேலாதாரத்தே நிலை கொண்டு வாழ, அருள் ஒளியே ஆதாரமாகி விளங்குகின்றதாம். ஆகவே அந்த அருட்பெருஞ் ஜோதி ஆதாரத்தின் பேரில் நம் பெருமான் நித்தியானந்த வாழ்வு கொண்டு விளங்குகின்றார் என்பது தெளிவாம். எனவே இவ்வருள் ஒளியைப் போற்றி ஏற்று உண்மையினை ஓதாதுணர்ந்து ஆதாரமாய்க் கொண்டு அருள் இன்பில் ஓங்குவோமாக!
*****
13. ஒளவிய மாதி தவிர்த்த இயல்
25. ஒளவிய மாதியோர் ஆறுந் தவிர்த்த பேர்
26. அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) திருவருளால் மனம் என்னும் பகுத்தறியும் ஆற்றல் பெற்றது மக்களினம். இதனால் மனிதன் தன்னைச் சூழ இருக்கும் உலகுயிர்ப் பொருள்களைப் பற்றியும், ஆற்றல் இயக்கங்களைப் பற்றியும், அகப்புற இயல்புகளைப் பற்றியும் பலகாலமாக ஆராய்ந்து அரும்பெரும் உண்மைகளை அறிகின்றான். அப்படி அறியலான உண்மைகளில் சிறந்தது தான் ஆன்மக்கடவுள் ஞானமாம். ஆதியில் இந்த ஞானம் முழுமையாக வெளிப்படவில்லை. மன உணர்வு புலன்வாயில் சென்று புற ஆராய்ச்சியில் இறங்கி, உண்மை காண வழி துறை தெரியாது மருட்கற்பனைகளில் உழன்று கொண்டிருந்தது. உழலும் மனம் ஒருமையுற்று, சலனமற்று உள்ளொடுங்கி நிற்கும்போது, அதுவரை காணாத, அகமறைந்து கிடந்த உண்மை பல வெளிப்பட்டன. அவ்வெளிப்பாடுகளின் விளைவே ஆன்மக்கடவுள் தத்துவம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது வெளியாகி விட்டது.
ஒருமை மனத்தால் உட்கூடி உலைவற்றிருந்த மனிதனுக்குப் பேராற்றல் கிடைத்தது. அவ்வாற்றல் சாதாரண மனித தரத்திற்கு மேற்பட்ட தெய்வீகத்தன்மை கொண்டதாயுணர்ந்து அதனை அக ஆன்ம சக்தி என்றும், கடவுள் அருள் விசேட சக்தி என்றும் போற்றிக் கொண்டனர் ஆன்றோர். அவ்வகப் பெருஞ்சக்தியின் உண்மையை மனத்தூய்மையின் அளவுக்குத்தகவே கண்டு கொள்ளப்பட்டது. மனத்தூய்மை என்பது மாசு நீங்கி, தேசு என்னும் இறையருட்டன்மை சார்ந்த நிலையாம். அருள் ஒளியாம் கடவுள் தேசை மறைத்துள்ளது மருள் இயல் அவா முதலிய மாசாம். சுத்த அன்பு அல்லது தயவு பெருகப் பெருகத்தான் ஆண்டவரின் அருளியல் உண்மை வெளிப்பட்டு நிறைவு பெற உள்ளது.
நிறை யன்பு சேரா இறை ஞானம் குறை ஞானமாகவே இருந்து வந்தது. இப்பொழுது அன்பால் அருள் உண்மை வெளிப்பட்டு, ஆண்டவர் விளக்கம் அருட்பெருஞ்ஜோதி ஆகக் கண்டு போற்றிக் கொள்ளப்படுகின்றது. இதனையே அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி எனப்படுகின்றது. அவ்வியல் என்றால், அகர உண்மை கொண்ட கடவுளின் மெய்யறிவின்ப அருட்பெருந் தன்மையாகும். இப்படி அருட்பெருங் கடவுளைக் கண்டு போற்றுகின்றவர்கள் யார் என்றால், அவர்கள் தாம் ஒளவியம் ஆதி ஆறும் தவிர்த்தபேர்களாம். ஒளவியமாவது பொறாமை என்ப; இது மாச்சரியமாகவும் உரைக்கப்படும். இது காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனப்படும் ஆறின் ஈற்றில் உள்ளது. இவை ஆறும் மருள்நிலையில் உட்பகையாக, உண்மை கண்டுகொள்ளத் தடையாக, அருள் உண்மை ஞானத்திற்கு இடையூறாக இருப்பனவாம். இந்த அகப்பகை ஆறையும் வெல்லற்கு, ஆறியல் இறையைச் சாருதல் வேண்டும். அவ்வறு குண இறைவனைப் பகவன் அல்லது பகவான் என்பர். பகவனின் இயல் ஆறாவன; வீரியம், ஞானம், செல்வம், புகழ், ஈசுரத் தன்மை, அவாவின்மை ஆம். இவை ஆறும் மூலமுதல் ஆறு ஆதாரத்தெழும் சக்திகளாம். இவற்றின் பயன் யோகானுபவ சித்தியில் ஏகதேசம் விளங்குவதேயாம். சுத்த சன்மார்க்கியின் அனுபவம் மேனிலையில் ஆறியல் அருட்பெருஞ்ஜோதியினால் மட்டும் கைகூடும். நம் சுத்த நெறிக்கு ஜீவதயவே அடிநிலையாய் இருக்கின்றதால், அந்தத் தயவினால் ஞானக்கண்ணைத் திறப்பித்துக் கொள்ள வேண்டியது முதன்மையாம். தயா ஞானம் உண்டாகிச் செயல்படும்போது பொறாமை என்னும் ஒளவியமாதி ஆறும் அகல்வது அனுபவமே. முன் ஞானியர்க்கு இந்த அருளனுபவம் மேனிலை நின்று உண்டாகாததால், மருட்போத கீழாதார அனுபவத்தால் ஆறியல் கடவுள் உண்மை உள்ளவாறு கண்டடைய முடியாதிருந்தது. அனுபவமெல்லாம் சமயமத யோகானுபவ எல்லையுட் குறுகிக்கிடந்ததாம். இத்தருணம் தான் சுத்த சன்மார்க்கத்தால் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் பெரும் பயன் அடைகின்றோம்.
*****
14. தனிவெளி - சிவவெளி - அருள்வெளி
27. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
28. அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) இதற்கு முன் குறிக்கப்பட்ட பன்னிரெண்டு இணை அடிகள் அகரம் முதல் ஒளகாரம் முடியவுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துக்களை முதலாகக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வமைப்பு உயிர்வர்க்க முறை எனப்படும். அடுத்து பதின்மூன்றாம் நிலையைச் சுட்ட, திருநிலைத்தனிவெளி என்ற சொற்றொடர் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம். இவ்வமைப்பு அருள் அனுபவத்தின் பொருட்டாம்.
நம் தமிழ் நெடுங்கணக்கில் பன்னீருயிருக்கு அடுத்துவருவது, ஃ- என்னும் ஆய்த எழுத்தாகும். இது, தனிநிலை என்றும், முப்பாற் புள்ளி என்றும் கூறப்படும். உயிர் நிலைக்குப் பின்னும், மெய்ந்நிலைக்கு முன்னும் வைக்கப்பட்டுள்ளது இந்த ஆய்தம். தமிழ்ச் சொற்களில் இந்த ஆய்தமும், மெய்யாம் புள்ளி எழுத்துக்களும் மற்றுஞ் சில உயிர்மெய் எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரமாட்டா. ஆகவே இங்கு இந்தப் பதின்மூன்றாவது இணையடியை ஒரு வேறுபாட்டுத் தோற்றத்தோடு அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். அதாவது, தனிநிலை என்ற ஆய்தத்தைக் குறிக்கும் சொல்லை முதலாகக் கொண்டதோடு திரு என்னும் தெய்வப்பண்பு உணர்த்தும் அடை மொழியுஞ் சேர்த்து ஓதப்பெற்றுள்ளதாம். திருநிலைத் தனி என்றதைத் தனிநிலைத் திரு எனக் கொண்டு பொருள் காணவேண்டும். மேலும் இது பன்னிரண்டாம் உயிர்நிலைக்குமேல் பதின்மூன்றாவதாகக் கொள்ளப்படுவதின் காரணம் அனுபவக்குறிப்பேயாம். “உயிரனுபவ முற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருளனுபவமுறும்”, என்பது வள்ளல் வாசகம். அன்றியும் இவ்வனுபவ நிலைகளைக் குறித்து நம் அடிகளார் விளக்கியுள்ளது இதுவாகும். அனுபவத்திற் பெறப்படும் நிலைகளாவன: -
  1. பூத நிலை
  2. கரண நிலை
  3. பிரகிருதி நிலை
  4. மோகினி நிலை
  5. அசுத்த மாயா நிலை
  6. அசுத்தமகா மாயா நிலை
  7. சுத்த மாயா நிலை
  8. சுத்த மகா மாயா நிலை
  9. சர்வ மகாமாயா நிலை
  10. குண்டலி நிலை
  11. பிரணவ நிலை
  12. பரிக்கிரக நிலை
இப்பன்னிரு நிலைக்கப்பால் அனுபவப்படுவது பதின்மூன்றாவதாகிய அருள்நிலையாம். இந்த அருள் அனுபவ நிலையில்தான் கடவுள் உண்மை கண்டு அடைதல் கூடும். அக்கடவுள் அனுபவமே சுத்த சிவானுபவமாகக் குறிக்கப்படுகின்றது.