Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தமிழகமும் தெய்வ தத்துவமும்-கந்தழி வழிபாடு அருட்பெருஞ்சோதி வழிபாடாக மாறுகின்றது.

தமிழகமும் தெய்வ தத்துவமும்.
சுவாமி சரவணானந்தா.
கந்தழி வழிபாடு அருட்பெருஞ்சோதி வழிபாடாக மாறுகின்றது.
ஆதித் தமிழன் கண்ட அகப்பெருஞ்ஜோதி, ஆன்ம அணுவில் தோன்றி மலர்ந்து ஜீவ ஜோதி பிரபஞ்சமும் முற்றும் நிறைந்துள்ளதை அறிந்தான். அந்தக் கடவுட் ஜோதியை அனுபவத்தில் பெற்று அதுவாகி என்றும் நிலவுவதற்கு அந்த ஒளியில் மனதை நாட்டி சிறிது பொழுது இருந்து வியத்தகு சக்தியும், சித்தியும் கொண்டு ஆடி மகிழ்ந்தும், முற்றிலும் அதிலே மூழ்கி, உணர்வும் அழிந்து, உடலும் ஒழிந்து நஷ்டப்பட்டும் போனான். இப்பொழுது திருவருள் வலத்தால் மறுபடியும் நமது அகப்பெருஞ்ஜோதி உதயமாகியுள்ளது. இந்த ஜோதி பெருஞ்ஜோதி மட்டுமல்ல, அருட்பெருஞ்ஜோதியாம்.
கந்தழி ஜோதி கருணை ஜோதியாக காட்சியளிக்கின்றது. ஒருமையினால் இதனோடொன்றி அற்புத சக்திக்கும் சித்திக்கும் மயங்கி அடிமைப்படாதும், சதா நிஷ்டா சமாதியில் மூழ்கிச் சிதைவுறாதும் அவ்வகத்தேயிருந்து அருட்ஜோதியைப் பெருக்கிக் கொண்டு வாழ்வது சுத்த சன்மார்க்கம் வழங்குவதாம்.
மேற்படி சுத்த சன்மார்க்க அருட்பெருஞ்ஜோதி வழிபாடு தமிழனுக்கு முதல் உரிமை உடையது. உலகில் மற்ற எல்லோருக்கும் இதுவே உரியதாகும். இந்த ஜோதி நெறி, நமக்கு வடலூர் வள்ளல் திருவருட் பிரகாசர் மூலமாகக் கிடைக்கப் பெற்றுள்ளோம்.அகப் பெருஞ் ஜோதிக் காட்சியை அருள் வள்ளற் காட்சியாக கண்டகுறிப்பு:
“ஈற்றறியேன் இருந்திருந்திங்(கு) அதிசயிப்ப(து) என் நீ
என்கின்றாய் நீயெனைவிட் டேகுதொறு நான்தான்
காற்றறியாத் தீபம் போல் இருந்திடுமத் தருணம்
கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்ஜோதி மலைபரநா தத்தே
தோன்றியதாங் கதன்நடுவே தோன்றிய தொன்றதுதான்
மாற்றறியாப் பொன்னொளியோ அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல் அருள் ஒளியோ ஈததிசயிக்கும் வகையே”
என்ற திருவருட்பாவால் தெளிவாகும். அன்றியும், ஐந்நில அரும்பொருள் அனுபவமும் அகத்தில் கண்டு வடலூர்ப் பெருவெளியாம் உத்தர ஞான சிதம்பரத்தில் வெளிப்படுத்தின பாடல்:
“இணையென்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்கு நல்ல
துணையென்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணையென் றணைத்துக்கொண் டைந்தொழி லீந்த தருளுலகில்
திணையைந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே”
என்பதாகும்.
அகத்தே கண்ட அருட்பெருஞ்ஜோதியின் தத்துவம் ஐந்தில் பெருகி விரிவதால், அக்கடவுள் விளக்க ஜோதி மந்திர வடிவம்:-
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
என இருபத்தைந்து தனிச்சீர் அசை (25 syllables) என பொருந்தி ஐந்தின் சிறப்பைக் காட்டுகின்றது. இந்த தெய்வ தத்துவத்தையும் பூரணமாய் அறியவும், அறிந்து அடைந்து பயன் பெறவும் முதல் துணையாயிருப்பது திருவருள் ஒன்றே என்பதைக் காட்ட இம் மந்திர வடிவில் அருளே முதலிடம் பெற்றது. இந்த அருள் என்னும் தயவு நம்மில் ஜீவ தயவாக, ஜீவ காருண்யத் தொண்டாக வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தால், அருட்பெருஞ்ஜோதி அனுபவம் சிறிது சிறிதாக உள்ளிருந்தோங்கும். இதுவே யாவருக்கும் உரிய கடவுள் வழிபாடாகி விளங்கும். இத் தமிழகம் கண்ட உயர் தெய்வ தத்துவம் இனி உலகெலாம் பரவும் திருவருளாலே.