Vallalar Universal Mission Trust   ramnad......
பெரியரில் பெரியர்போல் பேசி நடித்தனன் எனினும் நின்னடித் துணையே நம்பினேன் கைவிடேல் எனையே.
படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.