அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
ஆங்காரி யப்பகுதியே
ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
அடியினொடு முடியும்அவையில்
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
கணித்தபுற நிலையும்மேன்மேல்
கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
கலந்துநிறை கின்றஒளியே
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
குறியே குறிக்கஒண்ணாக்
குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
கொண்டதனி ஞானவெளியே
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
சுகயோக அனுபோகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
Write a comment