விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
Write a comment