Vallalar Universal Mission Trust   ramnad......
உலகம்எலாம் களிக்கஉல வாத கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன்
பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.